Monday, December 10, 2018

PHOTOS




        தாயின் ஆசை  J.K. SIVAN 












உலகமெங்கும் எங்கெல்லாம்  மனித இனம் இருக்கிறதோ அங்கே  தாய் பாசம் என்றால் என்ன என்பது விளங்கும். இதற்கு  மொழியோ,  வயதோ, இனமோ, நிறமோ, படிப்போ, குலமோ  தடையில்லை. உலகில்  பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம்  தாயும் தந்தையும் தான் இரு கண் என்று ஒப்புக்கொள்வோம். ஆனால் தாயின் ஆசை அரவணைப்பு தான் சேயை வளர்க்கும். அவள் மீது  சேய்களுக்கும்  பற்றும் பாசமும் சற்று அதிகம் தான்.   நூலில்லாமல் சேலை இல்லை, தாயில்லாமல் சேயில்லை.   

தந்தையை விட தாய்க்கு தான்  தனது குழந்தையை தனது கற்பனையில் தோன்றிய  உருவம் கொடுத்து சிங்காரித்து அலங்கரித்து பார்ப்பதில் கொள்ளை சந்தோஷம். ஆசை. 

எங்கோ சில தாய்கள் இவ்வாறு தமது குழந்தைகளுக்கு சில உருவங்கள் கொடுத்து படமாக்கி அதை உலகில் உலவ விட்டிருக்கிறார்கள். என்னிடம் சில வந்தது. அதில் கொஞ்சம்  விண்டு  கொடுக்கிறேன்.  இந்த  சில  அழகிய குழந்தைகளை படத்தில் பார்த்து பரவசமானேன்.

ஒரு குழந்தை மூன்று நான்கு வயதிருக்குமா?  ரொட்டி இடுகிறது. அடுப்பில் ஒரு ரொட்டி  சூடாக   வாட்டிக்  கொண்டு இருப்பது போல் ஒரு படம். அந்த குழந்தையின் முகத்தில்  ''என்ன விஷயம் ஏன் கூப்பிடுகிறாய். இன்னும் இருபது ரொட்டி இட்டுவிட்டு சுடவேண்டும். அப்புறம் வருகிறேன் '' என்பது போல் ஒரு உணர்ச்சி.

பட்டுக்  கன்னத்தில் மெத்து மெத்து என்று பவுடர் ஒற்றிக்கொள்ளும் பெண்ணாக ஒரு குட்டி. அவள் கண்ணை பாருங்கள் என்ன உணர்ச்சி.  

கல்யாணம் கார்த்தி, விழா, விசேஷம்  என்றால் பெண்கள் வருவது அலங்காரத்தோடு அணிகலன்களோடு. அதனால் தான் கத்திரிக்கோல்களுக்கு கொண்டாட்டம்.  ஒரு சிறு குட்டி அழகான அலங்கார பூஷிதையாக சேலையோடு ஒரு நாற்காலியில் ஒரு விழாவில் அமர்ந்து காதணியை தொடும் இயற்கையான படம். குழந்தை நன்றாகவே ஒத்துழைத்திருக்கிறது.

சரியாக இன்னும் நிற்க கூட தெரியாத ஒன்று - இரண்டு வயதானவன்  மொட்டைத்தலை, குடுமி, பூணல், பஞ்சகச்சம், கண்ணாடி சகிதம் ஒரு ''வாத்தியாராக'' காட்சி தருவது 

குழந்தைகள்  தூங்க டிவி  பார்க்க வைப்பார்கள். ஆனால்  இவன் விவரமானவன்.  டிவி தொந்தரவு இருக்கக்கூடாதென்றால் அதன் மீது  தூங்குவது  தான்  உசிதம் என்று   அறிந்து  இவனுக்கு  எல்லா இடத்தையும் விட்டு  டிவியின்  மீது ஆனந்த சயனம்.
ஒரு வேடிக்கையான படம்.

எங்கு  உடை இருக்கவேண்டுமோ அங்கு அதிகமில்லாமல் தலையை மட்டும் குல்லாவினால் மறைத்து கன்னத்தில் கையேந்தி கவலையோடு இந்த ''உலகம் போற போக்கை பாத்தா  கொஞ்சமும் நல்லால்லே ''  என்று கவலைப்படும் ஒருவருஷம் கூட நிறையாதவன். கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கையை வைக்காதே என்பார்கள்.  என் ஆபிசில் யாரவது கன்னத்தில் காய் வைத்தால்  கன்னா  பின்னா  என்று திட்டுவார்கள். நான் வேலைபார்த்தது ஒரு பெரிய கப்பல் கம்பெனி ஆயிற்றே.!  இந்த பயல்  என்னை மயக்கினான். அவன் முக வாட்டம் அவனது  லோக க்ஷேம விசாரத்தை காட்டுகிறதே.

 பேண்ட் டிஷர்ட்  போட்ட  குட்டி ராவணனை இன்று தான் முதலில் பார்க்க உதவினான் ஒரு பையன்.  பத்து தலையோடு பள்ளிக்கூடம் போவதில் ஒரு வசதி. வாத்தியார்  கேள்விகளுக்கு  பத்து வித  பதில் சொல்லலாம்.  ஏதாவது ஒன்று சரியான  விடையாக இருக்காதா?   தப்புக்காக   ஒரு தலையில் தான் குட்டுவார் . சாப்பிடும்போது மட்டும் பத்து தலைகளின் வாய்களும் உதவுமே.

ஒரு குட்டிமாமி  தேசத்தின் வளர்ச்சியில் பாசம் கொண்டவள்.  இனிமேல் யாரும் பிளாஸ்டிக் உபயோகிக்காதீர்கள். என்னைப்போல  கடைக்கு போக பின்னல் கூடை, துணிப்பை எடுத்து கொண்டு போங்கோ.  ஜீன்ஸ், சல்வார் வேண்டாம். பாரம்பரிய புடவை ரவிக்கையையே கட்டிக்கோங்கோ. என்னைமாதிரி அழகா இருப்பீங்க... என்கிறாளே . கொள்ளை அழகி .

பத்து மாதத்திற்குள்ளேயே  பிழைக்க தெரிந்தவன் உடல் முழுதும்  விளம்பரம் பண்ணிக்கொண்டு காசு பண்ணப்போகிறான். விளையும் பயிர் முளையிலே. ஒரு பில் கேட்ஸ் உருவாகிறான்.

கடைசியாக  மாடிப்படியில் அமர்ந்த கோலத்தில் காத்துக்கொண்டிருக்கும்  பட்டு மாமி.  இன்னும் நீங்க ரெடியாகல்லியா?  ரிசெப்ஷன்  7மணிக்காவது போகவேண்டாமா . ஜென்டிலாக  பேசும் புன்னகை தவழும் சாந்த மாமி.  வேறு யாராவது இருந்தால் பொரிந்து தள்ளுவார்கள். இந்த மாமியை எனக்கு ரொம்பவே பிடித்தது.

கடைசியில் ஒரு போட்டோ.  பழைய படம்  என்னோடு இருப்பது.    இது இப்போது எடுத்ததல்ல.  75 வருஷங்களுக்கு முன்னால் எடுத்த ரெண்டு குழந்தைகள் போட்டோ. அழகிய பெண்கள். ஒருத்தி இப்போது இல்லை. தெய்வம். மற்றவளுக்கு 86 வயது.  அந்த காலத்து திருவல்லிக்கேணி போட்டோக்ராபர்  படமெடுக்க  அரைமணி நேரம் எடுத்துக்  கொள்வார்.புலித்தோல் ஒரு மேஜைமேல் போட்டு உட்காரவைக்க முயற்சியில் சின்னவளிடம் தோல்வி. புலி கடிக்கும் என்று  பயந்து முள்ளின் மேல் உட்கார்ந்துகொண்டு பயமும் கோபமுமாக பார்க்கிறாள். இயற்கையில் கோபம் ஜாஸ்தி.  கடைசிவரையிலும் இந்த கோபம் இருந்தது.  . இந்த இரு பெண்களையும் சிங்காரித்தது என் தாய் ஜம்பாவதி அம்மாள்.  அவளுக்கு  பெண்குழந்தைகள் தக்கவில்லை.  பெண் வேண்டும் என்று ஆசையில்   ஆணைப் பெண்ணாக்கிப்பார்க்க  விருப்பம்.   பெரிய பெண்ணுக்கு இப்போது பெயர்  ரத்னம் ஐயர், 86 வயது.  என் மூத்த சகோதரன். அடுத்தது   ஜம்புலிங்கேஸ்வர  ஐயர் காலமாகி பத்துவருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நான் படத்தில் இல்லை.    ரெண்டு மூன்று வயதிலேயே  எங்கே போய் தொலைந்தேனோ? 







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...