புளியோதரையும் கத்திரிக்காயும் - J.K SIVAN
ஒரு நண்பர். அவரை எப்போது டெலிபோனில் தொடர்பு கொண்டாலும் முதலில் திருச்சி லோகநாதன் தான் பேசுவார். இல்லை பாடுவார்....''புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு '' என்று பாடும் அப்புறம் தான் ஹல்லோ...
புளியோதரை எப்பொழுதுமே தூக்கம் தரும் வஸ்து என்று கும்பகர்ணர்கள் சொல்வார்கள். புளியோதரை என்று நாங்கள் வீட்டில் அதிகம் சொல்லி கேட்டதில்லை. புளியஞ்சாதம் என்று தான் அறிமுகம். ஸ்ரீ பெரும்புதூர் என்று சொல்லும்போதே நாக்கில் ஜலம் ஊறுகிறது. வாசலில் குழாய் பக்கத்தில் ஒருவர் பெஞ்சில் சின்ன தொன்னையில் தருவார். தேவாம்ருதமாக இருக்கும். சும்மா இல்லை. அவர்கள் நிச்சயித்த விலைக்கு தான். ரெண்டு மூன்று தொன்னை வாங்கி சாப்பிடுவேன். காஞ்சிபுரம் இட்லிக்கு என்று மிளகாய் பொடி எண்ணெய் கலந்து தருவார்கள்... அதற்கு இன்னொரு பேர் தான் தேவாம்ருதம். வெகுநாளாச்சு போய் ராமானுஜரை போய் பார்க்கவேண்டும் என்று தூண்டுவதற்காகவே இந்த தேவாம்ருதமா?
சில புளியோதரைகள் மொத்தையாக கொச கொசவென்றிருக்கும். பிடிக்காது. அப்படியே வைத்து விடுவேன். ஒருவேளை இலவச விநியோகத்துக்கு தனி ப்ரிபரேஷனோ?
பழங்காலத்தில் பிரயாணத்துக்கு புளியோதரை தயிர் சாதம் தான். மூன்று நாள் இருக்கும். தயிர் சாதத்துக்கு மோர் மிளகாய் வறுத்து எடுத்துக் கொண்டு போவோம். யாரும் நோய் வாய் படவில்லை. இன்றும் எங்கள் கோவில் யாத்திரைகளுக்கு இந்த ரெண்டும் தான் மெனு.
யார் யாருக்கோ பாரத ரத்னம் கொடுக்கலாமா என்று சமீபத்தில் யோசித்தார்கள். நல்லவேளை கொடுக்கவில்லை. புளியோதரை கண்டுபிடித்தவனுக்கும் பாரதிக்கும் அல்லவோ முதலில் கொடுக்க வேண்டும்.
திருச்சி லோகநாதன் அறிவுறையின் படி சாம்பார் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டபோது சாம்பாரின் கெட்ட சகவாசத்தால் நல்ல புளியோதரை ருசி இழந்தது. அதற்காக தான் முன்னோர்கள் சேரிடம் அறிந்து சேர் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் புளியோதரை உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல கூட்டணி. எங்கள் வீட்டில் குட்டி தோட்டத்து காத்திரிக்காய் ஒரே சைஸ் (SIZE ) பொருக்கி பறித்து தூக்கு (ஒரு மரக்கோலில் ஒரு முனை தராசு மற்றொரு பக்கம் எடைக்கு கல் தொங்க விட்டிருப்பார்கள். அந்த எடை கல்லை நகர்த்தினால் தராசில் எவ்வளவு எடை கத்திரிக்காய் என்று காட்டும்). இப்போதைய எடையில் ரெண்டு கிலோ அப்போது தூக்கு காத்திரிக்காய்க்கு ஒரு ரூபாய். அதுவே விலை அக்கிரமம் என்று தோட்டத்து நாய்டுவை திட்டுவோம். நாயுடு அப்போதே வயதானவர். இடுப்பில் துண்டா வேஷ்டியா என்று புரிபடாத அழுக்கு வஸ்திரம் மட்டும் முழங்காலுக்கு சற்று கீழே வரை. தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கையில் குச்சியோடு அந்த பரந்த காய்கறி தோட்டத்தில் மாடு, ஆடு, பறவைகள் வராமல் காத்து விரட்டியவர். இப்போது தோட்டம் இல்லை. பல மாடி கட்டிடங்கள். வாசலில் கூர்க்கா ஆளை விரட்டுகிறான்.
என் அம்மா கத்திரிக்காயை நாலாக பிளந்து காரம் அடைத்து எண்ணையில் வதக்கி பிரமாதமாக ருசியாக பண்ணுவாள். முழுசாக உள்ளே.தள்ளுவோம். தலைகள் ஜாஸ்தி என்பதால் ரெண்டு கிலோ குட்டி கத்திரிக்காய் தலா ஒரு ஆளுக்கு ஐந்து ஆறு கிடைத்தால் அதிர்ஷ்டம். என் பழங்கால அத்தை எண்ணெய் ''கத்தாரிக்கா'' என்று சொல்லி தான் கேட்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment