பாண்டுரங்க ராவின் ஆதங்கம். J.K. SIVAN
எனக்கு வயசாயிடுத்துங்கறதாலே, மூளை முன்னே மாதிரி வேலை செய்யலே. என்னை மாதிரியே என் மூளைக்கும் எண்பதாயிடுத்து. என்னோட தானே அதுவும் பொறந்தது. அதுக்கு மட்டும் தள்ளாமை, இருக்காதா?இன்னொரு விஷயம் சொல்லட்டா. ஒரு கிளையில் நெறைய பழம் கொத்து கொத்தாக காய்ச்சு தொங்கினா அந்த கிளை தரையை நோக்கி குனியாதா. மத்த வெத்து கிளைமாதிரி காத்திலே டான்ஸ் ஆடுமா? நிறைய விஷயங்களை இந்த எண்பது வருஷத்திலே மூளை உள்ளே வாங்கிண்டுடுத்து. மூட்டை கனம் தாங்கமுடியலே. மூட்டையை தூக்கிண்டு வேகமாக போகமுடியுமா? மூளை அதனாலே ஸ்லோவா நகருது.
அதுக்காக மூளை வேலை செய்யலேன்னு பைத்தியம் பட்டம் கட்டிடாதேங்கோ. மூளை ஸ்லோவா வேலை செய்யறதுன்னு அழுத்தி சொல்றேன். வேகம் குறைஞ்சு போச்சு. அவ்வளவு தான். ஏதாவது ஞாபகம் படுத்தி சொல்றதுக்கு நிறைய மூட்டைலே தேடி வெளியே எடுக்க வேண்டி இருக்கு. அதுக்கு நேரமாகாதா?
ஆமாம் என்று சொல்றா விஞ்ஞானிகள் கூட.
நீஙக வச்சிருக்கேளே கம்ப்யூட்டர் நிறைய விஷயம் லோட் பண்ணா, ஹார்ட் டிரைவ் (hard drive ) மெதுவா நகரலியா? என் மூளை அதைவிட பெரிய கம்பியூட்டர். பெரிய ஹார்ட் டிரைவ். ரொம்பி வழியறது விஷயம் அதிலே.
அதனாலே என்னுடைய மூளை சக்தி இழந்துட்டுது என்று தப்பு கணக்கு போட்டுடாதேங்கோ. நன்னா வேலை செய்யறது. ஆனா ஸ்லோவா. நிறைய உள்ளே போயிருக்கு இல்லையா. வெளியே வராது க்யூவிலே தானே வரணும். சர்க்கரை உளுத்தம்பருப்பு ரேஷனிலே வாங்க வரிசையிலே பையோடு நிக்கறதா நினைச்சுக்கணும். லேட்டாகும்.
அடிக்கடி என் வீடு எங்கே இருக்கு என்பதே மறந்து எங்கோ ஒரு தெருவிலே போய் நிக்கறேன். அட போகும்போது வீட்டு வாசல் வெறும் கேட் மட்டும். பேங்க் போய் திரும்பி வரதுக்குள்ளே எப்படி ரெண்டு தென்னை மரம் என்று யோசித்தப்பறம் வீட்டு வாசலில் நின்றபோது தான் இது நம்ப வீடு இல்லையே லென்று தெரியறது. யோவ் இது உன் வீடு இல்லை என் வீடு என்று ஏதோ நாய் மண்டை வெடிக்க உள்ளே இருந்து கத்தறது. என் வீட்டிலே நாய் கிடையாதே. எதுக்கு இப்போ இந்த ரூமுக்கு வந்தேன். எதை மறந்துட்டேன். கண்ணாடியா, புஸ்தகமா. செல் போன் எங்கே வைச்சேன்.? எப்படி யார் செருப்போ போட்டுண்டு வந்துட்டேன்? என் ஸ்கூட்டர் னு யார் ஸ்கூட்டரையோ ஸ்டார்ட் பண்ண கஷ்டப்படறேன். வேறே சாவி போட்டா இன்னொருத்தர் ஸ்கூட்டர் எப்படி ஒத்துக்கொள்ளும். அந்த ஸ்கூட்டர் ஓனர் என்னை பார்த்து சிரிக்கும்போது அசடு நாலு கிலோ மூஞ்சிலே எனக்கு வழியறதே.
அது ஞாபக மறதி வியாதி இல்லை. நிறைய பிரயாசை பட வேண்டியிருக்கு. அவ்வளவே.
இதை யாரு யாருக்கோ அனுப்பணும் னு தோணித்து. யோசிச்சேன். எழுதறதுக்குள்ளே அந்த பேர் எல்லாம் ஞாபகம் வரலே..!! நீங்களே யார் யாருக்கு அனுப்பணும்னு தோணறதோ அனுப்பிடுங்கோ. அவர்களும் என் பிரெண்ட்ஸ் தானே.
No comments:
Post a Comment