ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மகா பாரதம்
எதிர்பார்ப்பை விட அதிகம்
ஓட்டுவாரொட்டி என்று சில வியாதிகளை சொல்கிறோம். ஒருவருக்கு அரித்து அவர் சுகமாக சொறிந்து கொள்வதைப் பார்த்தால் நமக்கும் கை எட்டாத முதுகில் எங்கோ நம நமவென்று அரிப்பது போல் இருக்கும்.அருகில் தூணிலோ சுவற்றிலோ முதுகை தேய்த்து வீட்டுக் கொள்வோம். ஒருவர் கொட்டாவி விட்டால் அடுத்து கூட்டத்தில் குறைந்தது பத்து பதினைந்து கொட்டாவிகள் வாயை பிளக்கும். சிலது விதவித சப்தத்துடன்.
நல்ல விஷயங்களும் இப்படித்தான் ஒருவரிடமிருந்து பல பேருக்கு பரவ வேண்டும். மஹாபாரதத்தில் பல ரிஷிகள் ஒருவரை ஒருவர் போட்டுக்கொண்டு கதைகள் சொல்கிறார்கள். யுதிஷ்டிரனுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் அவற்றை மறப்பதற்கு இந்த கதைகள் பெரிதும் உதவின.
இதோ மார்க்கண்டேய ரிஷி ஒரு கதையை யுதிஷ்டிரனுக்கு சொல்வதை நாமும் கேட்போம்.
இந்திரன் ஒருமுறை வாகர் என்கிற நூறு வயதுக்கு மேற்பட்ட ரிஷியை சந்தித்து '' மகரிஷி, மரணமற்ற
வர்கள் படும் துக்கம் என்ன என்று சொல்ல முடியுமா? என்கிறான்.
''தேவேந்திரா, ''ஒத்துப் போகாதவர்களோடு வாழ்வது, ஒத்த மனதோடு வாழக்கூடியவர்களிடமிருந்து விலகி இருப்பது, தீயவர்களின் நட்பு, இவை மரணமற்று இருப்பவனை சங்கடப் படுத்தும். மனைவி மக்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் இவர்கள் மரணமடையும்போது வெறுமையாக இருப்பது வாட்டும். மற்றவர்
களை நம்பி வாழும்போது இவை துக்கத்தை தரும்''
ஏழ்மையில் வாடுபவனை, மற்றவர் நடத்தும் உதாசீனம் இருக்கிறதே அப்பப்பா, கொடுமையிலும் கொடுமை. குலப்பெருமை, குடும்ப பெருமை இல்லாதவன் அதைப் பெறுவதும், இருப்பவன் அதை இழப்பதும், மரணமற்று நீண்டகாலம் வாழ்ந்து இதெல்லாம் பார்ப்பவனுக்கு அதிர்ச்சியை அளிக்கும். குடும்பப் பெருமை இல்லாதவன் திடீர் செல்வம் அடைவது, பெருமை வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தும், ஏழ்மையில் தவிப்பவனை, பணமிருப்பதால் மட்டுமே உயர்ந்தவனாக கருதுபவர் இகழ்வது, அவமதித்து நடத்துவது தாங்கமுடியாத அனுபவம்.
உலகத்தில் இது போன்ற அநேக விஷயங்கள் இருக்கிறதே. மூடனும், முட்டாளும், சந்தோஷமாக இருக்க, கற்றோர் சான்றோர் அவர்களிடம் படும் துன்பம் சொல்லொணாதது. மாறும் உலகத்தில், மரணமற்று நீண்ட நாள் வாழ்பவன் இதெல்லாம் கண்டு சகித்துக் கொள்கிறான்.
தனித்து வாழ்ந்து, தன்னுடைய எளிய தாவர உணவை தானே சமைத்து, உண்பவன் நிம்மதி பெறுகிறான். பிறரிடம் எதையும் வேண்டாதவன் மதிக்கப் படுகிறான். அதிதிகளுக்கும், முன்னோர்க்கும் படைத்து விட்டு மீதியை உண்பவன் ஆரோக்யமாக இருப்பவன்.
''எளிய வாழ்க்கை மட்டும் போதாது யுதிஷ்டிரா. விட்டுக்கொடுக்கும் தன்மை, பணிந்து போவதும் கூட பெருமை சேர்க்கும். அதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்'' என்று கதை மன்னர் மார்க்கண்டேய ரிஷி இன்னொரு கதையை அவிழ்த்து விடுகிறார்.
வழக்கம்போல் நான் அதைச் சுருக்கித் தானே தர வேண்டும்:
குரு வம்ச ராஜா சுஹோத்ரா ஒரு நாள் ரிஷிகளை தரிசனம் செய்ய கிளம்பி, திரும்பி வரும் வழியில், உசினரர் என்கிற ராஜாவின் புத்திரன் சிபி எதிரே தேரில் வருவதை பார்த்து நிற்கிறான். குறுகல் தெரு. ஒரு தேர் தான் போகமுடியும். மற்றது ஒதுங்கி நின்று வழிவிட வேண்டும். யார் முன்னே போவது, யார் நின்று வழி விடுவது?
இருவருமே ராஜாக்கள், பெருமை வாய்ந்தவர்கள், ஒருவர் மற்றவருக்காக வழிவிடுவார் என்று இருவருமே நிற்கிறார்கள். நாரதர் அங்கே வந்து விஷயம் புரிந்து கொண்டு, ''அடடா உசினரன் பிள்ளை மிகவும் கருணை உள்ளம் கொண்டவன், சிறந்த அரசன், அவன் மற்ற அரசனுக்காக வழிவிட்டு ஒதுங்குவது அவனுக்கு இன்னமும் பெருமை சேர்க்குமே என்று சொன்னது சிபியின் காதில் விழுந்து அவன் வழி விடுகிறான். சுஹோத்ரா மேலே செல்கிறான்.. இது நாரதரின் சமயோசிதம் என்று எடுத்துக் கொள்வதைவிட, பெருமையும் பலமும் உள்ளவன் பணிந்து போவது அவனுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்ற உண்மை வெளிப்படுகிறது.
''விட்டுக்கொடுத்தால் மட்டும் போதாது. தான தர்மம் செய்யும்போது முடியாததை ஏற்கக்கூடாது என்றும் தெரியவேண்டும். உன் முன்னோர்களில் ஒருவன் இதை அழகாக தெரியப்படுத்தினான் '' என்றார் மார்கண்டேயர்.
'' மகரிஷி , என் முன்னோரில் யார் அவர்? என்று ஆர்வமாக கேட்டான் யுதிஷ்டிரன். நஹுஷனின் மகன் யயாதி அரசனாக இருந்தபோது ஒரு பிராமணன் தானம் கேட்டு வந்தான்.
'பிராமணரே, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கருதி என்னிடம் வந்தீர்கள்?''
'மகாராஜா என் குருவிற்கு செல்வம் அளிக்கவேண்டும். என்னிடம் எதுவும் இல்லை. வித்யா தானம் செய்த வருக்கு தக்க குரு தக்ஷிணை கொடுக்க ஆவல். தாங்கள் உதவ வேண்டும் ''
''ஆஹா அதற்கென்ன. நீங்கள் என்ன குரு தக்ஷிணை தருவதாக ஒப்புக்கொண்டீர்கள்?''
''மகாராஜா, இந்த உலகில் எவனாவது தானம் வேண்டினால் அவனை இழிவாக பார்ப்பது அல்லவோ வழக்க
மாக போய் விட்டது.. நான் தானம் கேட்பதை பற்றி உங்கள் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது ?''
''பிராமணரே, என்னைப் பொறுத்தவரை நான் ஏதாவது கொடுத்தால் அதைப் பற்றி எவரிடமும் பேசுவதில்லை, மறந்துவிடுவேன்.. என்னால் முடியாததை யாரவது கேட்டாலும் அதை நான் காது கொடுத்து கேட்பதுமில்லை. என்னால் முடிந்ததை தான தர்மம் செய்ய தயங்குவதுமில்லை. இதனால் என் சந்தோஷம் குறைவதில்லை. உங்கள் குருவிற்கு நான் 1000 பசுக்கள் தருகிறேன் ' என்றான் யயாதி.
பிராமணன் அசந்து போனான். அவன் எதிர் பார்த்ததற்கு மேலாகவே அல்லவோ யயாதி தானம் செய்து
விட்டான்.''
No comments:
Post a Comment