Thursday, December 20, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்                        J.K. SIVAN 

                     
மார்க்கண்டேயர் சொன்ன கதை.

ஹைஹய வம்சத்தில் ஒரு ராஜகுமாரன்.  அவனது  போதாத காலம்,  ஒரு அந்தி மயங்கும் அரை இருட்டில்,  காட்டில்  வேட்டையாடி விட்டு திரும்பும் சமயம்  எதிரே  ஒரு ரிஷி  தனது  கருப்பு மான் தோலை போர்த்திக்கொண்டு  அரை  இருட்டில்    ஆடை அசைந்து நடந்து வருகிறார்.   ராஜ குமாரன்  கண்ணுக்கு  அவர் ஒரு  பெரிய  காட்டுமானாக   தோன்றவே, யோசிக்க நேரமில்லாமல்  அவரை  ஒரு கூரான அம்பு விட்டு  அவரை வீழ்த்துகிறான்.  விழுந்து கிடந்த அவர்  அருகில் சென்று பார்த்தபோது தான்   மானில்லை , அவர்  ஒரு ரிஷி என அறிந்து  விஷயம்   பெரிய ராஜாவுக்கு  தெரிகிறது.

பெரிய ராஜா  அந்த ரிஷி  யார் என்று விசாரித்து   அந்த காட்டில் இருந்த   அரிஷ்டநேமி ரிஷி ஆஸ்ரமத்திற்கு செல்கிறான்.   ரிஷி உபசாரம் செய்கிறார்.
 ''மகரிஷி  எனக்கு உபசாரம் செய்யவேண்டாம்.  நான்  பாபி.   என் மகன் ஒரு பிராமண ரிஷியை கொன்றவன்.'' என்கிறான்.

'' உன் மகன்  எப்படி  ஒரு  பிராமண ரிஷியை கொல்லமுடியும். அதுவும் நாங்கள்  இங்குள்ளவரை. போய் சரியாக பார்த்துவிட்டு வந்து சொல்''  என்கிறார் அரிஷ்ட  நேமி .

ராஜா காட்டுக்கு மீண்டும் ஓடி  ராஜகுமாரன்  தான் கொன்ற  ரிஷி உடல் இருந்த இடத்தில் அதைக் காணாமல் தேடி அதிசயிக்கிறான். அரிஷ்டநேமி ரிஷியிடம் ஓடி வருகிறான். அப்போது அவரருகில் அவன் கொன்ற அந்த  மான் தோல் போர்த்திய  ரிஷி  நிற்கிறார்.

 ''மகரிஷி  என்னால்  நம்ப முடியவில்லை.  என் மகன் இந்த ரிஷியைக்  கொன்றதை  அவனும் அருகில் இருந்தோர்களும் அறிவார்கள். அவருடைய உடல் கீழே கிடந்ததே... அவர் எப்படி இங்கே,.......??''

'ஹே  ராஜன்,  நாங்கள்  மரணத்தை வென்றவர்கள். எங்களுக்கு எப்போது காலம் முடியவேண்டுமோ அப்போது தான் முடியும். நீ  கொன்றதாக சொன்ன இந்த ரிஷி என் மகன் தான் ''  என்கிறார்  அரிஷ்டநேமி ' எங்கள் தவ வலிமையை நாங்கள்  எங்கள் கடமையைச்  செய்வதற்காகவே  வளர்த்துக் கொள்வதால் எங்களை மரணம் தீண்டாது. நீயோ  உன் மகனோ, எந்த ரிஷியையும் கொல்லவில்லை,  எந்த பாபமும் செய்யவில்லை'' என்றார்  அரிஷ்டநேமி .  எல்லோரும் சிலையாக நின்றார்கள்.

''யுதிஷ்டிரா, உனக்கு  எதற்காக இதை சொல்கிறேன் என்றால், நீ  ஒரு  நீதி, நேர்மை தவறாத அரசன், தவறு செய்ய நினைக்காதவன் . உனக்கு  தெய்வ பலம் உண்டு என்று அறிவுறுத்தவே''

''இதையும்  கேள்,  அத்ரி ரிஷி தனியே  தவம் செய்யப் போவதாக சொன்னபோது அவர் மனைவி, எங்களுக்கு சிறிது செல்வம் பசு ஏதாவது  ஏற்பாடு செய்யுங்கள்,  குழந்தையை வளர்த்து அவனுக்கு பொறுப்பு வரும் வரை  நாங்கள்  வாழவேண்டாமா, உங்களுக்கு தான்  ராஜா  வைணியனைத் தெரியுமே. அவன் அஸ்வமேத யாகம் பண்ணுகிறானே. அவனிடம் கேட்டால் தருவானே'' என்கிறாள்.

''நான்  செல்வமே ஒருவரும் ஆசைப்படக்கூடாத,  தேடக் கூடாத ஒன்று''   என்று  அந்த  அரசனுக்கே  உபதேசித்து விட்டு 'எனக்கே  செல்வம் தா' என்று  அவனிடம் கேட்பது  முரண்பாடானது.  என்னால்  உங்களுக்குச்  செல்வம்  பெற்றுத்  தர  வேறு வழியில்லை என்பதால்  அரசனைக் கண்டு கேட்கிறேன். பிறகு  தவம் செய்யப் புறப்படுகிறேன்'' என்று  அத்ரி  கிளம்பினார். ராஜா வைணியனின்  அஸ்வமேத யாக சாலைக்கு சென்ற அத்ரி,  

''ராஜா, நீயே  எல்லோரிலும்  முதன்மையானவன்''   என  புகழ, அங்கிருந்த கௌதம ரிஷி    

''அத்ரி  நீ சொல்வது தவறு, இந்த்ரனிருக்கும்போது  வேறு யாருக்கும் அந்தத் தகுதி கிடையாதே' என தடுக்க,
'
' இந்திரன் தேவராஜன் அவனைப் போலவே  வைணியனும் பூமிராஜன் என்பதால் நம்மை காப்பவன் என்பதில்  என்ன தவறு?''

 என்று அத்ரி பதில் சொல்ல, வாக்கு வாதம் தொடர, அங்கே  காச்யபரிஷி குறுக்கிட்டு சனத்குமாரரையே கேட்போம் என்று அவரிடம் செல்கிறார்கள்.

''ஒரு காட்டை  அக்னி எப்படி காற்றின் உதவியால் அழிக்கிறதோ அது போல் பிராமணனின் சக்தி க்ஷத்ரியன் பலத்துடன் சேர்ந்து  பிரஜைகளின்  வாழ்வை நிர்ணயிக்கிறது. என்பதால்  அரசன் இந்திரனுக்கு சமானம் என்று சொல்வதில் தவறில்லை''
 என்கிறார்  சனத்குமாரர். 

 ராஜா வைணியன்  தன்னைப் பற்றி அத்ரி புகழ்ந்ததை ரிஷிகளில் சிறந்த சனத்குமாரரே சம்மதிக்க  அத்ரிக்கு  வேண்டிய திரவியம் எல்லாம் அளிக்கிறான். அவற்றை அவரது மனைவி புத்ரர் வசம் ஒப்படைத்துவிட்டு  அத்ரி தவம் செய்ய  சென்றார் '

'யுதிஷ்டிரா  நீயும் இந்திரன் போன்ற  தர்ம நியாயங்களுக்குட்பட்டு  நிர்வாகம் செய்யும்  ஒரு    பிரஜாபதி '' என்கிறார்  மார்கண்டேயர்.
''மார்கண்டேய  மகரிஷி,  எனக்கு  உங்களை ஒரு  விஷயம் கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது.   சரஸ்வதி தேவியிடம், தர்க்ஷியர்  என்கிற பிராமண ரிஷி  ஒவ்வொருவனும் கடைப்பிடிக்க வேண்டிய  தர்ம நியாயத்தைப்பற்றி விளக்கம் கேட்டாராம். அதற்கு  சரஸ்வதி தேவி என்ன உபதேசம்  செய்தாள்?

''யுதிஷ்டிரா, சரஸ்வதி தேவி  வேதங்களை பூரணமாக  கற்று  அதன் வழியில் எல்லோரிடம் அன்பாக நடப்பது மோக்ஷ பதவி கொடுக்கும் என்றும், தான் தர்மங்களின், முக்யமாக  கோ தான, வஸ்த்ரதான, அன்னதான  பலனையும் விவரித்து  சொன்னாள். அக்னி ஹோம பலன்களையும் உபதேசிக்கிறாள்.

இந்த  உபதேசத்துக்கு இடையே  நமக்கும்   பிரளயம்  பற்றிய  ஒரு  குட்டிக் கதை கிடைக்கிறது.
அதைக் கேட்போமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...