திருவெம்பாவை - 6 J.K. SIVAN
மணிவாசகர்
இன்று மணிவாசகரும் சாமவேதீஸ்வரரும்
மானே, நீ நென்னலை "நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன்" என்றலும், நாணாமே
போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வானே நிலனே பிறவே அறிவரியான்,
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்,
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்,
ஊனே உருகாய், உனக்கே உறும், எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடு, ஏலோர் எம்பாவாய்.
கூசாமல் பொய் சொல்வது என்பது ஒரு அரிய கலை. எல்லோராலும் நடக்காத ஒன்றை நடந்தது போல் கால நேரத்தோடு சொல்வது முடியாது. மணிவாசகர் ஒரு தூங்கும் பெண்ணை மற்ற பெண்கள் எழுப்பியதை நேற்று கண்டார். அப்போது அந்த தூங்குகின்ற பெண் ''இன்று உடம்பு அசதி அதனால் சற்று அதிக நேரம் படுக்கையில் புரண்டு விட்டேன். நாளை பாருங்கள் நீங்கள் எழுவதற்கு முன்பே நானே உங்களை உங்கள் வீட்டில் வந்து எழுப்புவேன் என்று சொன்னபோது. அப்படி ஒன்றும் அவளுக்கு எண்ணமே இல்லை. இதோ இன்று காலையும் அவள் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறாள்.
மற்ற பெண்கள் அவள் சொன்னதை நினைவு படுத்துகிறார்கள்.
மான் போன்ற மருண்ட பார்வையையுடைய பெண்ணே! "நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்", என்று நீதானே நேற்று சொன்னாய்? நீ சொன்ன அந்தச் சொல் எந்தத் திசைக்குப் போயிற்று என்று வெட்கப்படாமல் சொல்லேன்! இன்னும் உனக்கு விடியவில்லையா? விண்ணில் வசிக்கும் தேவர்களும், மண்ணில் வசிக்கும் மாந்தர்களும், இன்னும் மற்றவரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான், தானாகவே இவ்வுலகில் எழுந்தருளி, நம்மைக் கருணையுடன் ஏற்றுக் கொண்டு அருள் புரிந்தாரே! அப்பேர்ப்பட்ட இறைவனின் பெருமை பொருந்திய திருவடிகளைப் பாடிக் கொண்டு வந்த எங்களுடன் எதுவும் பேசாமல் உறங்குகிறாயே! எங்கள் பாடல் கேட்டு உன் உடல் உருகவில்லையா? அதைக் கேட்டும், இப்படிக் கிடப்பது உன்னால்தான் முடியும். எங்களுக்காகவும், பிறருக்காகவும், நம் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக!
16.12.2018 அன்று ஒரு அற்புத சிவனை நான் வாளாடி யாத்திரையின் போது பார்த்ததை சொல்லட்டுமா? திருச்சி யிலிருந்து லால்குடி வழியாக திருமங்கலம் என்று ஒரு ஊர். வாளாடியிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரம் முதுகு வலிக்க பிரயாணம் செய்ய தேவையில்லாத அற்புத சாம வேதிகள் வாழ்ந்த, வாழும் ஊர். சிவனுக்கு சாமவேதீஸ்வரர் என்று பெயர். அம்பாள். லோகநாயகி. காவேரிக்கு வடக்கே இன்றும் செழிப்பான ஊர். எனக்கு முன்பே இங்கு சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் எல்லோருமே பஸ், கார் எதுவும் இல்லாமலே நடந்து வந்திருக்கிறார்கள். பச்சை பசேலென்ற வயல், செடிகொடிகள், நிறைய ஆறுகள் ஓடும் சோலைவனத்தில் நடக்க கொடுத்து வைத்திருக்கிறார்கள்.
சுருக்கமாக திருமங்கல சாமவேதீஸ்வரர் ஆலய அதிசயங்கள்:
இந்த சாமவேதீஸ்வரர் தான் ஜைமினி ரஷியை சாமவேதத்தை 1000 சாகைகளாக பிரித்து இங்கேயே எழுத வைத்தவர். எங்கும் சின் முத்திரை காட்டும் தக்ஷிணாமூர்த்தி இங்கே அபய ஹஸ்தம் காட்டி அருள்வது விசேஷம். சுப்ரமணியரும் தேவசேனாவும் நிற்க வள்ளி மயில் மீது அற்புதமாக இங்கு காண்கிறார்கள். ஆறுமுகத்திற்கு இங்கு நான்கு கரங்கள் மட்டுமே! விஷ்ணு துர்க்கை மகிஷாசுரனை விட்டு சிம்ம வாஹினி.சனீஸ்வர பகவானின் காக வாஹனம் வழக்கத்திற்கு மாறாக வடக்கு நோக்கி பார்க்கிறது. இந்த ஆலயத்தில் மாட்டும் தான் பைரவரும் காலபைரவரும் அருகருகே நின்று அருள்பாலிக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் குட்டி குட்டியாக கோவில் கோஷ்டத்தில் தரையிலிருந்து ஒன்றிரண்டு அடி உயரத்தில் இடுப்பு வரை வரிசையாக இராமாயண காட்சிகளை சிற்பங்களாக வடித்த சிற்பிக்கு நமது அனைத்து ஹிந்துக்களின் வணக்கத்தை உங்கள் சார்பாக செலுத்துகிறேன். சில சிற்பங்களை மட்டும் குனிந்து உட்கார்ந்து படமெடுக்க முடிந்தது. இன்னும் எத்தனையோ இருக்கிறது. நீங்களே நேரில் சென்று பார்த்து எனக்கும் போட்டோ அனுப்புங்கள்.
இந்த ஊரில் தான் 63 நாயன்மாரில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்தார். அவரைப் பற்றி எழுதி இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை இங்கே தருகிறேன்:
'அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்''
''சாம வேதம் என்றால் என்ன என்று எடுத்துரைத்த ஸ்தலம், ஆலயம் ஒன்று இருக்கிறது. அரசாங்கமோ, மற்றும் தனவான்களோ கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன. நாமே ஒன்று சேர்ந்து எழுப்புவோம் என்று சில பக்தர்களின் முயற்சியால் அந்த ஆலயம் உருவானதா, உருவாகிறதா?. இப்படி தேனீ போல் உழைத்து கோவிலை வளரச்செய்யும் இரு நபர்கள் பெயர்கள் : ஸ்ரீ R. Chandrasekar, 37/2, Third Main Road, Gandhinagar, Adyar, Chennai-600020. (Ph: 24416336) and Kittu Josyar, Thirumangalam, Lalgudi-621703. (Ph: 2541020).
திருச்சி லால்குடி பெருவழியில் 3 கி.மீ. வடக்கே உள்ள சிவன் கோவில் அது. ராஜகோபுரம் தலை தூக்கிவிட்டது. அந்த கிராமத்தின் பெயர் திருமங்கலம், நல்ல பெயர். மழ நாடு. சிவன் அங்கே சாமவேதீஸ்வரர். எண்ணற்ற பக்தர்கள் மஹான்கள் தரிசித்த ஆலயம். ரிஷி ஜைமினி சாமவேதத்தை விளக்கி பதம் உரைத்த ஊர். கோவிலில் உள்ள கல்வெட்டில் பரசுராமேஸ்வரம் என்று இதற்கு பெயர் என்று தெரிகிறது. பரசுராமனின் பாவங்கள் விலகிய இடம். லக்ஷ்மி சிவனை உபாசித்த ஸ்தலம். பலாமரம் ஸ்தல விருக்ஷம். சிற்றாறுகள் பொழில்கள் சூழ்ந்த இயற்கை வளம் மிக்க அமைதியான கிராமம். மூன்று பிராஹாரங்கள். வசந்த வாகன மண்டபங்கள். 200 ஏக்கரா நிலம் கொண்ட ஆலயம். மரத்தேர் செப்பம் செய்தாகிவிட்டதா? அப்பர் சேக்கிழார் ஆகியோர் தரிசித்த சிவன். இனிமேல் தான் விஷயத்துக்கு வருகிறேன். இது சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கோவிலாக இருக்க இன்னொரு முக்கிய காரணம் இங்கே ஒரு நாயனார் பிறந்து வாழ்ந்தார். யாதவ குலத்தவரான ஆனாய நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.
பலவிஷயங்களில் ஆனாயர் கிருஷ்ணனை போலவே இருக்கிறார். யாதவர். பசுக்களை மேய்ப்பவர். புல்லாங்குழலில் இனிய மதுர கானம் புரிந்தவர். அசையும் அசையா சகல ஜீவன்களையும் ஜீவநாதத்தால் கவர்ந்த கலியுக கிருஷ்ணன். பட்டை பட்டையாக திருநீறணிந்து ருத்ராக்ஷமாலைகளோடு காணும் சிவ பக்தர்.
விடிகாலை விடிந்தவுடனேயே பசுக்கள், கன்றுகள் ரெடியாக நாயனாருக்கு காத்திருக்கும். அவருடன் மேய்ச்சல் காடுகளுக்கு சென்று பொழுதுசாய்ந்து அஸ்தமன நேரத்தில் அவற்றோடு திரும்புவார். அதுவரை அவரது நேரம் சிவனை நினைந்து பாடுவதிலேயே கழிந்து விடும்.
வழக்கமான ஒரு கொன்றை மரம் அவரிடம் ஒரு புல்லாங்குழல் இணைபிரியாமல் இடுப்பிலே இருக்கும். அதில் கான வெள்ளம் காட்டை நிரப்பும். காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு துகள்களைப் போல பக்ஷிகள், மிருகங்கள், சகல ஜீவராசிகளும் மயங்கி அவரருகில் வந்து மெய்ம்மறந்து நிற்கும். இசையின்பத்தில் மூழ்கும்.
இப்படியே நாட்கள் நகர்ந்தது. இசையும் தொடர்ந்தது. ஒரு நாள் பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுதது மந்திரத்தை அழகாக சிவநாம சுகத்தில் புல்லாங்குழல் ஒலித்தது. சகல ஜீவராசிகளும் மயங்கி சுகானுபவம் பெற்றன. நீர் குடிக்க மறந்த, உண்ண மறந்து நின்றன. எதிரி என்ற நினைப்பே இல்லாமல் அருகருகே புலியும் மானும் தலையசைத்து ரசித்தன.பயமே இல்லாமல் பாம்பின் நடனத்துக்கு தவளை தாளம் போட்டது. நேரம் வந்துவிட்டது ஆனாயருக்கு, என்பதால், சிவனே உமாசகிதம் அவரை அணுகி அணைத்து கைலாசம் கூட்டி சென்றான்.
No comments:
Post a Comment