திருவெம்பாவை. 3 J.K. SIVAN
மணி வாசகர்.
''முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப்பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட் கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோரெம்பாவாய்.''
வெற்றிலை பாக்கு புகையிலை அதிகம் உபயோகிப்பவர்களை தவிர மற்றவர்கள் பற்கள் காவி நிறத்திலோ, கறுப்பாகவோ பழுப்பாகவோ இருக்க வாய்ப்பில்லை. பற்கள் என்றால் வெண்மை நிறமே கவனத்துக்கு வரும். அதுவும் அழகிய பெண்களின் பற்களை முத்து கோத்தது போல் இருக்கிறது என்கிறார் மணி வாசகர். அவர் பாண்டிய நாட்டுக்காரர். முத்துகுளித்து வாரி வழங்கிய நாடு. அப்படிப்பட்ட பற்களை உடைய ஒரு பெண் விடிகாலை எல்லோருக்கும் முன்பாக எழுந்து சிவ பிரான் நினைவாக வாய் மணக்க நெஞ்சினிக்க என் அப்பனே, என் ஆனந்தமே, என் அமிர்தமே, என் இனிப்பே, என்று அவனைப் பலவாறாக புகழ்ந்து பாடினால் எப்படி இருக்கும்? அவளது வார்த்தைகள் இனிமையோடு இனிப்பை அல்லவோ எங்கும் காற்றில் பரவச் செய்யும். பரவசமாக்கும்,.
இப்படிச் சில பெண்கள் சேர்ந்து பாடிக்கொண்டு மற்றொரு பெண்ணின் வீட்டு வாசலில் கதவை தட்டுகிறார்கள்.
அழகிய பெண்ணே, இன்னுமொரு முத்துப் பல் அழகி, எங்களை போலவே சிவனின் மேல் தீராத ஆறாத பற்று கொண்டவளே, அவனைப் புகழ்ந்து அற்புதமாக பாடக்கூடியவளே, உனக்காக தான் காத்திருக்கிறோம், வா, நீயும் எழுந்து வா, உன் வீட்டு கதவைத் திற , வாசலில் உனக்காக காத்திருக்கிறோம்.
உள்ளே இருக்கும் அழகிக்கு, அந்த கெட்டிக்காரிக்கு இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவள் என்ன பதில் சொல்கிறாள்?
''ஆஹா, நீங்கள் என்ன புதியவர்களா. அந்த பழமனாதி யின் பக்தைகள் அல்லவோ. நான் சிறிது காலமாகத்தான் உங்களை அறிந்தவள். இருந்தாலும் நானும் உங்களில் ஒருவள் அல்லவா? எங்களை போன்ற புதியவர்களை உங்கள் பக்திக்குழுவில் சேர்த்துக்கொண்டால் நீங்கள் என்ன குறைந்தா போய்விடுவீர்கள். என் குறைகள் நீங்கி, என் கீழ்மை குணம் என்னை விட்டு நீங்கும். இதை அல்லவோ சத் சங்கம் என்கிறார்கள். ஆகவே தானே நீங்களே வந்து என் கதவை த்தட்டி அந்த சிவனைப் போலவே என்னையும் தடுத்தாட்கொள்ள வந்துள்ளீர்கள்'' உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பெண் இவ்வாறு உற்சாக பேசுகிறாள்.
வெளியே இருந்தவர்கள், '' ஆஹா நீ அழகி மட்டுமல்ல, அருமையானவளும் கூட, உன் அன்பு அந்த சிவனின் பேரன்பை நினைவூட்டுகிறதம்மா. எங்களுக்கு உன்னைப் பற்றி நன்றாகவே தெரியும். மனத்தூய்மை கொண்டவர்களால் அல்லவோ இப்படி சித்தத்தைச் சிவன் பால் வைத்து நா மணக்க பாடமுடியும். வா நீ சரியான ஜோடி எங்களுக்கு. வெளியே வா எங்களுடன் சேர்ந்து கொள். நாம் அனைவருமே ஆதி சிவன் நாமங்களை இந்த மார்கழி நன்னாளில் சேர்ந்தே பாடுவோம்.'' என்கிறார்கள்.
No comments:
Post a Comment