ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
விடோபா மஹராஜ்
ஒரு சக்திமானின் சித்தி
ஒரு அன்பர் ''ஐயா, நீங்கள் சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி எழுதும்போது வேறு எவரையோ பற்றி எழுதுகிறீர்களே'' என்று கேட்டிருந்தார். வாஸ்தவம். ஒரு மஹானைப்பற்றி எழுதும்போது அவரது சம காலத்தவர் பற்றி எழுத வேண்டி வரலாம். மஹான்களுக்குள் இவர் பெரியவர் இவர் சாதாரணம் என்று வித்யாசம் நமது கண்ணுக்கு வேண்டுமானால் படலாம். உண்மையில் அது அவ்வாறு இல்லை. ரமணர் காலத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்தார் என்பதால் ரமணர் உயர்ந்தவர் சேஷாத்திரி ஸ்வாமிகள் சாதாரணமானவர் என்று எவராவது சொல்லலாமா? ரமணரை உலகுக்கு கொண்டுவந்ததே சேஷாத்திரி ஸ்வாமிகள் தானே. விடோபா என்ற ஒரு மஹான் ரமணர் காலத்தில், சேஷாத்திரி ஸ்வாமிகள் காலத்தில் திருவண்ணா
மலைக்கு அருகே போளூரில் வாழ்ந்தவர். அவரைப்பற்றி சில கட்டுரைகள் எழுதினேன். அதோடு இந்த ஒரு விஷயமும் சேரும்
சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி எழுதியபோது இருந்த வாசகர்கள் பக்தர்களின் வரவேற்பு ஸ்ரீ விடோபா ஸ்வாமிகளை பற்றி ஒன்றிரண்டு கட்டுரைகள் எழுதியபோதும் இருக்கிறது என்று அறிகிறேன். மஹான்களைப் பற்றிய விஷயங்கள் எல்லாமே சிறந்தவை தான். கட்டுக் கதைகள் இல்லை. நமது சினிமாக்களில் விறுவிறுப்புக்காக சேர்க்கப்படும் காட்சிகள் போல் இல்லை. ,இப்படிப் பட்ட மகான்களை நேரில் பார்த்தவர்கள், அறிந்தவர்கள், எழுதி வைத்தவர்கள் ஆகியோரது நம்பக செயதிகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மீண்டும் உங்களுக்கு எளிமையாக தருவதால் தான் ரசிக்கிறது ருசிக்கிறது என்பது தான் உண்மை. என் எழுத்து எந்த விதத்திலும் சிறந்த ஒன்று இல்லை.
மஹான்கள் சிலர் சப்தமின்றி இப்படியும் இருந்திருக்கிறார்கள் நமது தேசத்தில். பலரோ சிலரோ இன்னும் எங்கெங்கோ அதிகம் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். வெளியே அதிகம் தெரியாத மஹான்கள் என்பது பொருத்தமான பெயர் தானே.
விடோபா ஸ்வாமிகளை ஒரு செட்டியார் குல பெண் பக்தியோடு வழிபட்டு வந்தாள் . அவளுக்கு மேகநோய் என்னும் தீராத வியாதி. முகமே பார்க்க முடியாத படி இருந்தது. பாவம் அவள் அதை லக்ஷியம் பண்ணாமல் தினமும் விடோபாவுக்கு பிரசாதம் செயது வந்து அவருக்கு அளித்தாள் . சுவாமி அதை தொடவே இல்லை. அவளும் விடவில்லை. என்றோ ஒருநாள் அவர் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் பக்தியோடு பிரசாதம் செயது கொண்டு வருவாள். இப்படியே 48 நாள் ஓடிவிட்டது. அதற்கு அடுத்த நாள் காலையில் அவள் பிரசாதம் வழக்கம் போல் கொண்டுவந்து அவர் முன் வைத்தபோது அதில் ரெண்டு பருக்கை எடுத்து கொண்டு அதை எச்சிலோடு காரி அவள் முகத்தில் இரண்டு முறை உமிழ்ந்தார். அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இரண்டே நாளில் அவளது மேகநோய் காணமால் போய் விட்டது. முகம் சூரிய ஒளி போன்ற காந்தியுடன் பளிச்சென்று ஆகிவிட்டது. இதற்கு என்ன சொல்வது??
ஒரு சோகமான விஷயம் சொல்லப் போகிறேன். விடோபாவின் பக்தர்களில் ஒருவர் ஒரு போளூரில் வாழ்ந்த ப்ரோகிதர். அவர் மனைவிக்கு பிரசவ காலம் வந்ததால் அவள் தாய்வீட்டுக்கு சென்றாள் . தானும் அந்த நேரத்தில் அவளோடு இருக்க வேண்டும்.
ஆகவே போளூரை விட்டு போகுமுன் விடோபா ஸ்வாமிகள் முன் சென்று
''சுவாமி, நான் என் மனைவியின் ஊர் செல்லவேண்டும். எல்லாம் நல்லபடியாக முடிய ஆசி தர வேண்டும். நான் போக
அனுமதி வேண்டும் என்று வேண்டினார். சுவாமி முகம் கொடுத்து பேசவில்லை. திரும்பி உட்கார்ந்து கொண்டார்.
எவ்வளவோ முறையிட்டு பார்த்தார் புரோகிதர். சுவாமி மசியவில்லை. இரவு முழுதும் அங்கே உட்கார்ந்தார். மறுநாள் காலையிலாவது ஊர் செல்ல அனுமதி கேட்டார். விடோபா அவரை உற்று பார்த்தார். ஸ்வாமிகளின் கண்களில் ஆறாக
கண்ணீர். ஸ்வாமிகளிடம் உத்தரவு பெறாமலே அந்த பக்தர் தனது மனைவியின் ஊர் சென்றுவிட்டார். அங்கே தான் முதல் நாள் மாலை சுவாமி எப்போது பதிலே சொல்லாமல் திரும்பி உட்கார்ந்தாரோ அந்த நேரம் அவர் மனைவி இறந்த விஷயம் அறிந்தார்.
சில நாள் கழிந்தபின் புரோகிதர் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது சுவாமி வடகிழக்கு மூலையை காட்டினார். அந்த பக்கம் இருந்த ஊரிலிருந்து அடுத்த நாளே ஒரு பெண் அவருக்கு மனைவியாக அமைந்தாள் .
இப்படி பல விநோதங்களை, அதிசயங்களை, சப்தமில்லாமல், 25 வருஷங்கள் போளூரில் வாழ்ந்து நிகழ்த்திய விடோபா ஸ்வாமிகளுக்கு ஒரு நாள் ஜுரம் வந்தது. கை கால் வீங்கியது. அவர் சிறிதும் இதைப் பற்றி கவலையின்றி வழக்கம் போலவே இருந்தார். ஜுரம் நிற்கவில்லை. வைத்தியர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க நெருங்கியபோது அனுமதிக்க வில்லை.
ஒரு பக்தர் வேலு முதலியார். அவருக்கு தெரிந்த ஹிந்தி/மராத்தி பாஷையில் ''சுவாமி நீங்கள் ஜுரத்திலும் உடல் வீக்கத்திலும் அவஸ்தை படுவதை பார்க்க வேதனையாக இருக்கிறதே. யாரையும் சிகிச்சை செய்ய அனுமதிப்பதில்லை. நீங்கள் எங்கள் வியாதியை போக்குகிறீர்கள், உங்கள் வியாகியை போக்கிக் கொள்ளக்கூடாதா? இன்னும் எத்தனை நாள் இப்படி அவஸ்தை படுவது? கவலையாக இருக்கிறது'' என்று அழுதார்.
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டு அதே பாஷையில் ''இந்த பூலோக வாழ்க்கை எனக்கு இன்னும் மூன்றே நாள் தான். மூன்று இரவு கழிந்து அடுத்த விடிகாலையில் நான் புறப்பட்டு விடுவேன்'' என்கிறார்.
செய்தி பரவியது. ஊர்கள் திரண்டு வந்தன. மூன்று இரவு கழிந்தது. பக்தர்கள் ஸ்வாமிகளை ஒரு பழைய கட்டிடத்துக்கு தூக்கிக் கொண்டு சென்றார்கள். ஒரு சிறிய விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் தூங்காமல் கவலையோடு விழித்துக் கொண்டு நின்றார்கள். விடிகாலை எதோ சத்தம் கேட்டது. பார்த்தால் மெதுவாக சுவாமி விடோபா எழுந்து உட்கார்ந்து கொண்டு நடந்து வாசல் சுவற்றுக் கருகே போய் நின்று கொண்டார். மேலே பார்த்தவர் அங்கேயே பத்மாசனம் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். கண்கள் அரை மூடி த்யானம். நேரம் நழுவியது. ஸ்வாமிகள் சொன்ன படியே ப்ரம்மமுகூர்த்தத்தில் வெளிச்சம் ஒன்று. நேரம் மணி காலை ஐந்தாகிவிட்டது. பளிச்சென்று ஒரு ஒளி திடீர் என்று அவர் அமர்ந்த இடத்திலிருந்து புறப்பட்டது மேலே பாய்ந்தது. சாதாரண வருஷம், ஐப்பசி, 8ம் நாள், புதன், திருவாதிரை நக்ஷத்திரம் --- விடோபா புறப்பட்டு விட்டார்.
இதை பார்த்து விட்டு தானே எங்கோ திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் ''விடோபா அதோ போறாரே. ஜம்மென்று போகிறார் பாருங்கோ'' என்று கூவினார்.
No comments:
Post a Comment