காமு பாட்டி உபதேசம் J.K. SIVAN .
காமு பாட்டிக்கு அடிக்கடி குதிகால் அரிப்பு. ஒரு விசேஷ நிவாரணி அதற்கு கண்டு பிடித்து வைத்திருந்தாள் . தாழ்வாரத்தில் வழவழ வென்று பிரவுன் கலரில் அடி பெருத்து மேலே சூம்பிய மரத்தூண்கள் உண்டு. அதில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கீழே ஒரு படி பள்ளமான முற்றத்தில் இடது காலை தொங்கவிட்டுக்கொண்டு ஒரு மரப்பலகையில் அமர்வாள் . அது அவள் சிம்மாசனம். பழங்கதைகளை அள்ளி வீசுவதால் அவளை சுற்றி சில ஜீவன்கள் எப்போதும் இருக்கும். கால் அரித்தால் தரையில் பரபர வென்று வண்டி ஸ்டார்ட் பண்ணுவதுபோல தேய்த்துக்கொள்வாள்.
என்ன சொல்லிண்டிருக்கே பாட்டி.
என்னத்தைடா சொல்றது. காலம் கெட்டு போச்சு. கலி முத்திண்டு வரது.
எப்படி கண்டுபிடிச்சே சொல்லேன்.
உனக்கு எல்லாத்திலேயே கேலியாடா. அக்கிரமம் நடக்கிறது கண்ணுக்கு தெரியலையா. கண்ணா மாடப் பிரையா?
அப்படியே வச்சுண்டு இன்னொருதடவை தான் நீயே சொல்லேன்.
''எனக்கு 90 ஆயிடுத்தே. அப்போ எல்லாம் பாத்ததில்லே. இப்போ எந்த வீட்டிலே அலம்பாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் மணிக்கணக்காக இருக்கோ அங்கே லட்சுமி இருக்க மாட்டா. மறுநாள் அதுக்கடுத்த நாள் பத்து பாத்திரம் அலம்பறவ வர வரைக்கும் போட்டு வைக்கிற குடும்பம் அதிகம் ஆயிடுத்து.
''வேறே எதெல்லாம் பண்ணா லட்சுமி வரமாட்டா. வந்திருந்தா ஓடிப்போயிடுவா. அதையும் சொல்லு.
வீட்டில் பெண்கள் விளக்கேத்திர வழக்கம் குறைஞ்சு. ''கொஞ்சம் சுவாமி விளக்கேத்தறேளா'' என்று ஆண்களை ஏற்ற சொல்வது.
எங்கே எதிலே பார்த்தாலும் தலைமுடி பேன் fan காத்திலே பறக்கிறது. நிறைய பேர் தலை விரிச்சிதானே போட்டுக்கிறா. யார் அள்ளி முடியறா?
சுவத்திலே ஒட்டடை சேரப்படாது. மூணு நாலு மாசத்திற்கு யாரோ வரான் . வருஷாந்திர காண்ட்ராக்ட். அங்கே இங்கே ஏதோ தொடைச்சுட்டு போறான். .
விளக்கு வைச்சப்புறம் வீட்டை பெறுக்க கூடாது. துடைக்கறது. அந்தி நேரத்திலே தூங்கறது இதெல்லாம் கூடவே கூடாது. லட்சுமி இருக்கவே மாட்டா. பெறுக்குவது,
வீடு முழுக்க எங்கே பார்த்தாலும் நேத்திக்கு குடிச்ச காப்பி டி கப், டம்பளர் கரை பதிஞ்சு கிடக்கிறது.
பெண்கள் தினமும் தலைக்கு குளிக்கணும். முடியாதவா செவ்வாய் வெள்ளியை தவிர மற்ற சில நாளாவது முடிஞ்சா தலைக்கு ஜலம் விட்டுக்கணும் . ஆண்கள் தினமுமே தலைக்கு குளிக்கணும்.
ஜலம் வீணாக்கப்படாது. குழாய் சொட்டிண்டே இருக்கப்படாது . சுவற்றில் ஈரம் தங்க கூடாது.
வீட்டிலே கரையான், பூரான் போல ஜந்துக்கள் கண்ணிலே படக்கூடாது. ஈரத்துணியை ரொம்ப நேரம் போட்டு வைக்க கூடாது. வெயிலில் உலத்தணும்.
சாப்பிடற பொருள்கள் வீணடிக்க கூடாது.
வீட்டிலே எப்போவும் உப்பு ,பால் ,சர்க்கரை,அரிசி இதெல்லாம் வற்றாமல் இருக்கவேண்டும். தீரும் வரை காத்திருந்து அப்புறம் வாங்காம நிரப்பணும்
கரெண்ட் பில் bill ஏறறதுன்னு எங்கேயும் இருட்டடிக்க கூடாது. வெளிச்சம் இருக்கணும்
இந்த பாழாப்போன டிவி லே அழுகை, ஒப்பாரி, சண்டை, சத்தம் இதெல்லாம் இருக்கக்கூடாது. டீவியை மூடிடணும் . இதெல்லாம் வீட்டிலேயே கேட்டாலே அபசகுனம்.
இல்லே, வராது, நஷ்டம் வரும், பாழா போயிடும், சாவு வரும்,
கிடைக்காது, வேண்டாம் இந்த வார்த்தையெல்லாம் அடிக்கடி யூஸ் பண்ணக்கூடாது.
படுக்கையை, பூஜை சாமானை வேலையாட்கள் சுத்தம் பண்ணக்கூடாது.
வீட்டிலே நுழைய இடத்திலே செருப்பு, துடைப்பம், விரட்டி இதெல்லாம் கண்லே படக்கூடாது. கோலம் மட்டும் தான் தெரியணும்.
பாட்டிக்கும் மீண்டும் காலை அரித்து வண்டி ஸ்டார்ட் பண்ணிவிட்டாள் .
No comments:
Post a Comment