Friday, December 21, 2018

NAVA THIRUPPADHI



யாத்ரா விபரம்
வரகுண மங்கை                    J.K. SIVAN

​             




நவ திருப்பதியில் ரெண்டாவது 


இது 16.12.16 அன்று  ரெண்டு வருஷம் முந்தி எழுதியது.  முக நூல் இன்று  ஏனோ ஞாபகப்படுத்தி மறுபடியும் அங்கே செல்லவேண்டும் என்ற ஆசையை கிளப்பி விட்டதே என் செய்வேன்.? 
++
''எனக்கு ஒரு பழக்கம். என் ஞாபகசக்தியை அதிகமாக நம்புவது. அது என்னை அடிக்கடி காலை வாரி விட்டு விடுகிறது. ஆகவே ஒரு காகிதத்தில் குறிப்பு அவசியமாகிறது. ஆனால் இதனாலும் ப்ரயோஜனம் இல்லையே. எப்படியா?  சொல்கிறேன்.
காகிதத்தில் குறிப்பு எழுதி இதை ஜாக்கிரதையாக ஒரு இடத்தில் வைக்க யோசித்து ஒரு இடம் தேர்வு செய்வேன். ஆனால் அந்த இடம் எனது அருமை ஞாபக சக்த்தியால் மறந்து போய் வேறே எங்கெல்லாமோ தேடி வேண்டும்போது கிடைக்காது. சரி, இனி அது தேவையில்லை என்ற ஒரு நிலை வந்தவுடன், அதாவது சில நாட்களுக்கு, மாதத்திற்கு, அப்புறம், திடீரென்று ஒருநாள் கண்ணெதிரே காட்சி தரும். அடடா, இங்கேயா வைத்தோம் என்று கோபம் கோபமாக வரும். அதை எடுத்து கிழித்து போடுவேன் அப்புறம எதற்கு இந்த குறிப்பு ?

அடுத்து எங்கே ஸ்ரீ சடகோப ராமானுஜம் அழைத்துக் கொண்டு போனார்?? ஒருவழியாக இன்று காலை எனக்கு குறிப்பு கிடைத்தது.

ஆஹா வரகுணமங்கை என்ற திவ்யதேசத்துக்கு அல்லவோ சென்றோம். மிக அழகான பெயர் கொண்ட இந்த ஆலயம் 108ல் ஒரு திவ்யதேசமாக வைணவர்களால் நேசிக்கப்ப டுவது.

திருவைகுண்டம்-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ வைகுண்டம் மற்றும் ஏரலில் இருந்து பேருந்து வசதி உள்ளது.பெருமாள் பெயர் விஜயாசனர். (பரம பத நாதன்.) தாயார் வரகுண வள்ளி,   ஊரின் பெயரே வரகுண மங்கை.   இந்த கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது தள வரிசை கொண்ட அழகிய கோபுரம்.

வரகுணமங்கை பற்றியும் ஒரு ஸ்தல புராணம் உண்டு. இங்கே ரோமசர் என்ற ஒரு முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்கு சத்தியவான் என்று ஒரு சீடன் . ஒருநாள் இந்த சீடன் இந்த திருத்தலத்திலுள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடித் திரும்பிக் கொண்டிருந்தார்.  அந்தக் குளத்தில் சிராதன் என்ற செம்படவன் வலை வீசி மீன்பிடித்துக் கரையில் உலர்த்திக் கொண்டிருந்தான . அச்சமயம் ஒரு நாகம் தீண்டி அந்த சிராதன் மரணமடைந்துவிட்டான். நாகமும் மறைந்து விட்டது. கந்தர்வர்களால் கொண்டுவரப்பட்ட விமானத்திலேறி சிராதன் ஜம்மென்று சுவர்க்கம் அடைந்துவிட்டான்.

இதைக் கண்ட சத்தியவான் ஆச்சர்யமடைந்தான். தன் குருவான ரோமசரிடம் சென்று நடந்தவைகளைக் கூறி செம்படவன் செய்த புண்ணியத்தை விளக்கும்படி வேண்டினான். குரு ரோமசர் ''அப்பனே, நீ பார்த்த சிராதன் என்ற செம்படவன் எத்தனையோ உயிர்களை வதைத்த பாவியாக இருப்பினும் இத்தீர்த்தத்தில் உயிர் விட்டதால் சுவர்க்கம் செல்லும் பாக்கியம் அடைந்தான்'' எனக் கூறினார்.

மேலும் குரு என்ன சொன்னார் தெரியுமா? முன் காலத்தில் ரேவா நதிக்கரையில் வசித்த ஒருவன் மாதா, பிதா, குரு மூவரையும் வணங்கி தன் கடமையைச் சரிவர செய்து வந்து பிறகு பகவானை நினைத்து தவம் செய்ய முற்பட்டான் . அவனது தவத்தை மெச்சி நாராயணன் அவன் முன் ஒரு அந்தணர் வடிவத்தில் தோன்றி 'நீ இங்கிருந்து சென்று திருநெல்வேலி பக்கம் இருக்கும் வரகுணமங்கை என்ற ஒரு க்ஷேத்திரத்துக்கு சென்று அங்கே தவம் செய்'' என்று கூறினார்.

''சுவாமி அங்கே தாங்கள் விஜயாசனர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருக்க வரம் வேண்டும் '' என்று கேட்க ஸ்ரீமன் ராராயணனும்  அவ்வாறே அருள் புரிந்தார். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள ராஜகோபுர சிற்பங்களின் அழகும் வடிவமைப்பும் வியக்கத்தக்கதாகும். கோபுரத்தின் முன்புறத்தில் தசாவதாரச் சிற்பங்களும், காளிங்க நர்த்தனச் சிற்பமும் வடமேற்கு பகுதியில் வாசுதேவர்   குழந்தை கிருஷ்ணனை ஒரு  கூடையில் வைத்து தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு யமுனை நதியை கடக்கும் சிற்பங்களும் கிழக்கே திருமுக மண்டலத்தோடு  ஆதி சேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த திருக்கோலம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

இத்திருத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது.
வரகுண மங்கை  நவ திருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியாகவும் சந்திரனுக்குறிய தலமாகவும் விளங்குகிறது. நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது. அருள்மிகு யோக நரசிம்மருக்கு பிரதோஷ காலத்தில் அனைத்து வகையான திருமஞ்சனம் நடைபெறுகிறது

தீர்த்தம்: தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம், அகநாச தீர்த்தம்
தல விருட்சம்: புளிய மரம்
ஆகமம்: வைகாநச ஆகமம்
விமானம்: விஜயகோடி விமானம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...