Friday, May 18, 2018

SITHTHARGAL


சித்தர்கள்: 


                                                  பூண்டி சாமியார்.. 2

சித்தன் போக்கு சிவன் போக்கு  என்பார்கள்.  சில சமயங்களில்  நம்மைப்போலவே அவர்களும் பழகுவார்கள். பேசுவது கூட நன்றாக நமக்கு புரியும்படியாக இருக்கும். 

பூண்டி சாமியார் ஒருவரோடு பேசுகையில்  ''தர்மம் போயிட்டுது ப்பா இந்த உலகத்திலே. அதாலே தான் ஜனங்களுக்குள்ளே ஒத்துமையே இல்லை.''   என்கிறார்.   ஏதோ மேலெழுந்தவாரியாக  பேசுவது போல தோன்றினாலும்  உள்ளர்த்தம் ரொம்பவே தெரியும்.  சித்தர்கள்  பெரிய விஷயங்களை  சர்வ சாதாரணமாக சொல்லிவிடுவார்கள்..

பரணீதரனிடம் ஒருநாள்  ''உனக்கு  காஞ்சி சங்கராச்சார்யரை தெரியுமோ?''என்று கேட்டார்  சாமியார். 
''தெரியும் சுவாமி''
''இந்த மோட்டார், பம்ப்செட், கரண்ட்  எல்லாத்தையுமே அவர் தான்  தன் கையில் வச்சுண்டு கண்ட்ரோல் பண்ணுகிறார் னு உனக்கு தெரியுமா ?''
கேட்பதற்கு ஏதோ பேத்தலாக தெரிந்தாலும் அதன் உள்ளர்த்தம் அந்த மகானின் சர்வ ஞான, தபோ சக்தி யை பிரதிபலிக்கும். 

காமகோடி மட  ஜகத்குரு  மகா பெரியவா பக்தி,  வேதம்,  பண்பாடு,ஒழுக்கம், ஆன்மீக ஈடுபாடு மக்களிடையே பெருக ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியுமல்லவா?  இதை தான்  ஜாடையாக தனது எளிய மொழியில் பூண்டி சாமியார் சொல்லியிருக்கிறார் என்பது சிந்தித்தால் புரியும்.

இன்னொரு சம்பவம்.  

 ஒரு நாள் இரவு சில பக்தர்கள் அவரை தேடிச்  சென்றபோது இரவு ஒன்பது மணியாகி விட்டது.  எங்கும் இருட்டு. அந்த கிராமம் முழுதுமாக உறங்கிவிட்டது.  நிசப்தமாக அமைதி.  சாமியார் தனது வழக்கமான அந்த திண்ணையில் காலை நீட்டி படுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு சிலர் அருகே நின்றுகொண்டிருக்கிறார்கள். தங்களுக்குள்  சப்தமில்லாமல் கிசுகிசுவென்று பேசுகிறார்கள். 

திண்ணையில் கூரையில் ஒரு மின் விசிறி சுழல்கிறது.  யாரோ ஒரு பக்தர் செய்த ஏற்பாடு.  சாமியார் கண் இமைகள் மூடி இருக்கிறது. ஆனால்  கால் விரல்கள் அசைகிறது. சுப்பிரமணி ஒரு போர்வையை இழுத்து அவர் மேல் போர்த்தி விடுகிறார். 

''சாமியார் காலையில் எப்போது எழுந்திருப்பார்?''

சுப்ரமணியன் பதில்:  ''தூங்கினாத்தானே  எழுப்பணும். சாமி  ன்னு  எப்போ குரல் கொடுத்தாலும் அடுத்த கணமே எழுந்து உக்காருவார். ரெண்டு மூணு நாளைக்கு முன்னாலே  நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேலே கோயம்புத்தூர் காரங்க சில பேர் வந்தபோது  சாமி சப்தம் கேட்டு உடனே எழுந்து உட்கார்ந்து அவர்களோடு பேசினார். அவங்க கொடுத்த பழம் எல்லாம் கூட சாப்பிட்டாரு. இப்போ உங்களுக்கு அவரை பாக்கணுமா.  சாமின்னு குரல் கொடுத்தா எழுந்துடுவார். ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்க வேண்டாமே ன்னுட்டு  நாங்க படுக்க வைக்கிறோம். அவ்வளவு தான்''

''வேண்டாம் வேண்டாம் அவரை எழுப்ப்பாதீங்க.காலையிலேயே பார்க்கலாம் ''

பரணீதரன் இரவு அங்கே காத்திருந்தார். விடிகாலை நாலுமணிக்கு  ஏதோ கடை திறக்கும் சப்தம் எங்கோ கேட்க சாமியார் எழுந்து உட்கார்ந்தார்.

ஒரு பூனைக்குட்டி சுதந்தரமாக  சாமியார் இருந்த திண்ணையில் தாவி ஏறியது. அவர் மடியில் விளையாடி உட்கார்ந்தது. அப்படியே தூங்கி போயிற்று. அவர் பக்கத்தில் ஒரு அலுமினிய கிண்ணத்தில் அதற்கு பால் இருக்கும். குடிக்கும்.  அவர் அது தன்மேல் ஏறி விளையாடுவது கூட தெரியாதபடி இருப்பவர்.

பூனைக்குட்டி அவர் காதருகே சென்று ''மியாவ்''  .  ஓஹோ  அது தான் சுப்ரபாதமோ?  சாமியார்  கை  விரல்களை  மடக்கி ஒவ்வொன்றாக சொடுக்ககு எடூத்தார். 

 அருகே இருந்த டீ கடைக்கார பையன் சூடாக அவருக்கு ஒரு டம்பளரில்  தேநீர் கொண்டுவந்து ''சாமி இந்தாங்க '' என்றான். அதை வாங்கி குடித்த சாமியார் பலமாக ஒரு இருமுறை   இருமினார் .

சுப்பிரமணி ஒரு ஈரத்துண்டால் அவர் முகத்தை துடைத்து விட்டார். அவரது சட்டையை கழட்டி  உடை மாற்றினார். நெற்றியில் விபூதி குழைத்து பூசினார். சந்தனம் குங்குமம்  இட்டு விட்டார் . ஒரு மாலையை  கழுத்தில் மாட்டினார்.  தினசரி அவருக்கு செய்யும் பூஜை நடந்தது.  காத்திருந்த மக்கள் ஒவ்வொருவராக அருகில் வந்தார்கள்.   [பொழுது விடிந்தது.  பூண்டி சாமியாரும் ''கடை'' திறந்தார்.கடைவழிக்கு உபதேசம் தரிசனம் கடாக்ஷம் துவங்கியது. 

திடீரென்று எழுந்து எங்கோ நடப்பார். அண்டை அயல் கிராமங்களில் மக்கள் அவர் தரிசனத்தில்  மகிழ்வார்கள். முப்பது வருஷங்களுக்கு மேலாக இந்த பாக்யம் அவர்களுக்கு கிடைத்தது. 

பூண்டி சாமியார் விஜயம் செய்து  தரிசிக்காத ஒரு கோவில் கூட அந்த பக்க ஊர்களில் கிடையாது  என்று சொல்லலாம். அவர் படுக்காத மரத்தடி  கூட இல்லை.  எங்கு சென்றாலும்  ''இங்கே தான் சாமியார்  உட்காருவார், படுப்பார்', அதோ அந்த வீட்டில் சாப்பாடு கொடுப்பாங்க, இந்த டீக்கடையில்   டீ கொண்டு வந்து தருவாங்க  ' என்றும்  அவர் நினைவு கூரப்படுவார். .

கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்பு   செய்யாறு நதிக்கு  கிழக்கே  மேட்டுப்பாளையம் சிற்றாறு ஓடும் இடத்தில் அவரை யாரோ பார்த்திருக்கிறார்கள். அருகே புதிதாக அங்கே யாரோ வீடு கட்ட கூரை போட்டிருந்தது. அங்கே அழைத்து அமர வைத்தார்கள்.  எங்கெல்லாமோ சுற்றி அலைவார். இரவு அந்த குடிசையில் தங்குவார். சிலநாள் அதன் பக்கம் இருந்த சுடுகாட்டில் சௌகர்யமாக படுத்திருப்பார். தலையில் ஒரு மூட்டை, கையில் ஒரு மூட்டை சில சமயங்களில் இருக்கும். அவரை அணுகி தமது காரியங்களுக்கு  அனுகூலம் தேடியவர்கள் ஏமாந்து கூட  போயிருக்கிறார்கள்.  சாமியாருக்கு தெரியும் யாருக்கு எப்போது என்ன செய்யவேண்டும் என்று.  இப்படி ஏமாந்தவர்களில் ஒருவன் அவரை தாக்கி இருக்கிறான். அதையும் அவர் லக்ஷியம்  செய்யவில்லை.  

அங்கிருந்து ஒருநாள் அருகில் இருந்த இன்னொரு  கிராமமாகிய  பில்லூர்  சென்றுவிட்டார்.
அங்கே ஒரு முள் புதர், கள்ளிச்செடி காடு  அதை சௌகர்யமாக தேர்ந்தெடுத்து தங்கிவிட்டார். அருகே சிறியதாக ஒரு ஓடையில் நீர்   ஓடியது. அதில் தான் குளுகுளு வாசம்.  மழை கொட்டினாலும் கூட அந்த ஓடையை விட்டு வெளியே வராததை நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். 

ஓடையில் நீர் பெருகி வெள்ளமாக ஓடியபோது  ஊர்மக்கள் மூங்கில் வேலி, கூண்டு மாதிரி அவரை சுற்றி  பாதுகாப்பு அளித்தார்கள்.   அப்படியும் ஒரு பெரிய வெள்ளத்தில் அவர் மூழ்கும் அளவு தண்ணீர்  அடித்துக்கொண்டு  ஓடியது.  கிராம பக்தர்கள் அவரை வெள்ளத்திலிருந்து  வெளியே இழுத்துக்கொண்டு வந்தார்கள். வைக்கோலை கொளுத்தி அவர் அருகே  கண கணப்பு   உண்டாக்கி அவரை வெதுவெதுப்பாக இருக்க வைத்தார்கள். அந்த வீடு பச்சையப்ப நயினார் வீடு.....

''சாமியார்  ஒரு கடவுள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லைங்க  என்று இப்படி நடந்ததை  கூறியவர் பூண்டி பஞ்சாயத்து தலைவர்  பொன்னுசாமி நயினார் .  

இன்னும் தெரிந்து கொள்வோம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...