Wednesday, May 16, 2018

aindham vedham



ஐந்தாம் வேதம் 
                                                   
                                              32.   ''பிராமண குடும்பத்துக்கு உதவி''

 யுதிஷ்டிரன் மகிழ்ந்தான். விதுரரின்  பாசம் அறிவுரை எல்லாமே  பாண்டவர்களுக்கு  தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்தது.

விதுரர்  அனுப்பிய  சேவகன் ஒரு  படகுடன்  காத்திருந்தவன்   ''மகாராஜா, விதுரர்  உங்களை எதிர் நோக்கியிருக்கும்  ஆபத்தை உணர்ந்தவர். உங்களை  எப்போதும் சர்வ ஜாக்ரதையோடு இருக்கும்படி  கேட்டுக்கொள்கிறார். நான்  விடை பெறுகிறேன் ஐயா''

படகை பாண்டவர்களிடம் ஒப்படைத்து விட்டு விதுரனின் சேவகன்  மறைந்தான்.
அவர்கள் படகைச் செலுத்திக்கொண்டு  கங்கையின் அக்கரையில் படகை  விட்டுவிட்டு இருளில்  நுழைந்தனர்.

இதற்கிடையில்  வாரணவதத்தில்  தீப்பற்றி எறிந்த  மாளிகையைப் பார்வையிட்ட மக்கள் அது வேண்டுமென்றே  எளிதில் தீப் பற்றிக்கொள்ளும்  பொருள்களால் அமைக்கப்பட்டி
ருந்ததையும்,  புரோசனன் உடலையும்  கண்டு  அது பாண்டவர்களை அழிக்க  மேற்கொண்ட ஒரு சதி என்று புரிந்து கொண்டனர்.   பாண்டவர்களோடு  துரியோதனனின் மந்திரி புரோச்சனனும் தீயில் மரணமடைந்த செய்தியை  ஹஸ்தினாபுரத்தில்  ராஜா  திருதராஷ்ட்ரனுக்கு அனுப்பினர்.

திருதராஷ்டிரன் பாண்டவர்களின் மறைவிற்கு  வெளிப்படையாக வருந்தினான். அவர்களுக்கும்  சகோதரன் மனைவி  குந்திக்கும்   ஈமக்கடன்களை  சாஸ்திரப் பிரகாரம் செய்வித்தான். நாட்டு மக்கள்  எல்லோரும் துக்கத்தில்  ஆழ்ந்தனர்.  விதுரர்  கலங்கவில்லை..

அடர்ந்த காட்டில்  பீமன்  தாயையும், சகோதரர்களையும் சுமந்தவாறு  நடந்து ஒரு  பெரிய ஆலமரத்தின் அடியில் அவர்களை தங்க வைத்தான்.   அவர்கள் களைத்து  உறங்கின  போது காவலிருந்தான்.   அவர்கள் தங்கிய கானகத்தில்   இடும்பன்  என்று பெயர் கொண்ட ஒரு ராக்ஷசன் இருந்தான்..

அவனோடு அவன் சகோதரி  இடும்பியும்  அங்கு இரை  தேடி வந்தபோது உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களைக்கண்டு  சரியான உணவு இன்று நமக்கு'' என்று  இடும்பன் மகிழ்ந்தான். இடும்பியை அனுப்பி  அவர்களைக்  கொன்று  தானும் தின்று அவனுக்கும் கொண்டுவர அனுப்பினான்.

இடும்பி  பாண்டவர்கள் தங்கி இருந்த மரத்தடிக்கு வந்தாள் . அருகே  வந்து, அங்கு அமர்ந்திருந்த பீமனைக் கண்டு  மையல் கொண்டாள். ஒரு அழகிய பெண்ணாக உருவெடுத்தவள்  பீமன் அருகே வந்தாள், வணங்கினாள்

''யாரம்மா நீ?'' என்றான் பீமன்.

''ஐயா,   நான்  இந்த  காட்டில் வசிப்பவள் .  என் சகோதரன்  ஒரு கொடிய ராக்ஷசன்  இங்கு உங்களைக் கொன்று தின்பதற்கு வந்து கொண்டிருக்கிறான்.  என்னை  உங்களைக் கொல்ல   அனுப்பினான்.   உங்களைப்பார்த்த பிறகு எனக்கு  அந்த எண்ணம் இல்லை.  அவனிடமிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள,  காப்பாற்றிக்கொள்ள,   நானும் உதவுகிறேன். பிறகு  நாம் இருவரும் மணந்து கொண்டு  சந்தோஷமாக இங்கு வாழலாம்''  என்றாள் இடும்பி.

பீமன் சிரித்தான்.

''மிக்க  சந்தோஷம் பெண்ணே. நீ  கவலைப்படவேண்டாம். நீ  இங்கு இருப்பதானால் இருக்கலாம்,  இல்லையேல் உன் ராக்ஷச சகோதரனோடு நீ  செல்லலாம்.  நான்  அவனை எதிர்கொண்டு வெல்வேன். உன் உதவி எனக்கு  தேவையில்லை'' என்றான் பீமன்.

வெகுநேரமாக காத்திருந்த  இடும்பன் தனது சகோதரி  ஏன்  இன்னும்  அந்த மானிடர்களைக் கொன்று எடுத்துக்கொண்டு வரவில்லை?, ஏதாவது அவளுக்கு ஆபத்தோ?   என்று  தானே அங்கு  வந்தான்.

 பீமன் அருகே  மானிடப் பெண் உருவில் தனது சகோதரியைக் கண்டதும்  அவள் எண்ணம்  புரிந்து,  இடும்பன் கோபம் அதிகரித்து  அவளைக் கொல்ல  முயன்றபோது, பீமன் அவனைத் தடுத்தான்.

 'ஏ, ராக்ஷஸா, தூங்கும் எனது சகோதரர்களையோ, தாயையோ உன் சப்தத்தால்  எழுப்பாதே. அவர்கள் உறங்கட்டும். பாவம் உன் சகோதரி ஒரு பெண். அவளை ஏன் கொல்கிறாய்.  என்னை முதலில் கொன்று விட்டு  பிறகு அதை எல்லாம்  வைத்துக்கொள்'' என்று  அவனை நெருங்கினான்.  

பீமனுக்கும் இடும்பனுக்கு  கடுமையான  துவந்த யுத்தம்  நடந்தபோது  குந்தியும் பாண்டவர்
களும் உறக்கம் கலைந்து விழித்தனர்.  குந்தி  அழகாக அமர்ந்திருந்த  இடும்பியை யாரென்று விசாரித்து விஷயம் அறிந்தாள் .

இடும்பனை  வெகு விரைவில்  பீமன்  அடித்துக் கொன்றான்.  பொழுது விடிந்தது.  காட்டைத் தொடர்ந்து  ஒரு  ஊர் தெரிந்தது.  இடும்பி  பீமனை மணக்க   குந்தியின்  அனுமதி வேண்டினாள்.  பெற்றாள்.

இடும்பியோடு  சில காலம்  பீமன் தங்கி அவள் அந்த காட்டுக்கு அரசியானாள் . பிற்காலத்தில் அவளுக்கும் பீமனுக்கும்  பிறந்த மகன் தான்  கடோத்கஜன்  என்கிற மாவீர  மாயாவி. பாரதப்போரில் பாண்டவர்களுக்காக  உதவி மஹா சாகசங்கள் புரிந்து  தன்னுயிரையும்  தியாகம் செய்தவன்.

காட்டு  வழியில்  வியாசரைப்  பார்க்கிறார்கள் பாண்டவர்கள்.  அவர் அவர்களை  ஏக சக்ரபுரம் என்ற   ஊருக்கு அழைத்துச்  செல்கிறார்.

 ''குந்தி கவலை  கொள்ளாதே.உன்  மகன்  யுதிஷ்டிரன் இந்த மூவுலகும்  ஆளும் பேரரசனா
வான். பீமார்ஜுனர்கள் உலகம் போற்றும் மாவீரர்கள்.  அவனுக்கு துணையாக  நகுல சஹாதேவர்களோடு  உதவப் போகிறார்கள். அஸ்வமேத யாகம், ராஜசூய யாகம்  ஆகியவை நிறைவேறப் போகிறது'' என்று தைர்யம் சொல்கிறார்.

ஏக  சக்ரபுரம்  என்ற  அந்த  ஊரில்  ஒரு  பிராமணர் வீட்டில் அவர்களை  அறிமுகம் செய்விக்கிறார்  வியாசர்.

'யுதிஷ்டிரா, இந்த ஊர் உங்களை ஆதரிக்கும், சந்தோஷமாக வாழ்வீர்,  தக்க நேரத்தில்  நானும்  வந்து சந்திப்பேன்'' என  சொல்லி விடைபெறுகிறார்.
''வைசம்பாயன மகரிஷி,  ஏக சக்ரபுரத்தில் பாண்டவர்கள் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என  அறிய விரும்புகிறேன்'' என்றான் ஜனமேஜயன்.

 ''தங்கள்  நற் குணத்தால், சேவை மனப்பான்மையால்,  பாண்டவர்கள்  ஏக சக்ரபுர   மக்களின் அன்பை பூரணமாக பெற்றனர். அங்கே  அருவிகள்,  காடுகள்  இருந்ததால்  கனி  வர்க்கத்துக்கு பஞ்சமேயில்லை.

 காலம்   நகர்ந்தது.ஒரு நாள்   மற்றவர்கள்  வெளியே  அன்றாட  வேலைகளுக்கும்  உணவு தேடவும் சென்றபோது பீமன் மட்டும்  தாயோடு  அந்த பிராமணர் தந்த  இல்லத்தில் இருந்தான். திடீரென்று  அந்த  பிராமணன் வீட்டிலிருந்து  அவலக்குரல்  ஒன்று அழுகையோடு காற்றில் வந்து அவர்கள் காதில் விழுந்தது. குந்தி  தளர்ந்து போனாள் .

'' நமக்கு உதவிய  பிராமணர் குடும்பத்தில் ஏதோ  துயரம்.  இந்த நேரம்  நாம் அவர்களுக்கு   நன்றிக்கடன்  புரிய வேண்டாமா?.  என்ன  என்று  அறிந்து நம்மாலான  உதவி செய்வோம்''  என்றாள் பீமனிடம் குந்தி.

''அப்படியே  அம்மா.  நீ  போய்  விசாரித்து வா''  என்றான் பீமன்.

அந்த  பிராமணர் வீட்டில் அவர், அவரது   மனைவி  மகன் மகள்   ஆகியோர்  ஒருவரை ஒருவர் தழுவி  மீளாத் துயரத்தில்  அழுதுகொண்டிருந்தனர். ஒருவரோடு ஒருவர் பேசி ஆறுதல் சொல்லியும்,  தேற்றிக்கொண்டும்  இருந்தனர்.  எனினும் துக்கம் அவர்களை  ஆட்கொண்டிருந்தது.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...