Wednesday, May 16, 2018

ACHARYA2




வைணவ ஆச்சார்யர்கள் 2 - J.K. SIVAN:

''இன்றே இங்கேயே இப்போதே பஞ்ச சம்ஸ்காரம் ''
சென்னையிலிருந்து 77 கி.மீ. தூரத்தில் மதுராந்தகம் எனும் புகழ்பெற்ற வைணவஸ்தலம் உள்ளது. மதுராந்தகம் ஏரி பிரசித்தி பெற்றது. வெள்ளைக்கார கலெக்டருக்கு ராம லக்ஷ்மணர்கள் தரிசனம் கொடுத்து ஏரி காத்த கதை சொல்லி இருக்கிறேனே. ஆதிகாலத்தில் அந்த ஊரில் எங்கும் மகிழமரங்கள் சூழ்ந்து பகுளாரண்யம் என்று பெயர் இருந்தது. பெருமாள் கருணாகரன். விபாண்டக ரிஷி தவம் செய்து ராமனுக்கு பூஜை செய்த க்ஷேத்ரம். ஏரிகாத்த ராமன், கோதண்டராமன் என்றும் மூலவருக்கு பெயர் . வெள்ளைக்காரன் கட்டிக் கொடுத்த தாயார் சன்னதி சரித்திர புகழ் வாய்ந்தது. நான் சமீபத்தில் சென்றபோது அங்கே ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை சந்திக்கும் பாக்யம் கிடைத்து ஆனந்தித்தேன். தாயார் ஜனகவல்லி எனும் சீதை.

ஸ்ரீ ராமர் லக்ஷ்மணரோடு விபாண்டகர் ஆஸ்ரமம் சென்று சில நாள் தங்கி, ''திரும்பி சீதாவோடு அயோத்தி திரும்பும் போது இங்கே வருகிறேன்'' என்று சொன்ன இடம்.

ராமருக்கு சொன்னது மறந்து போனாலும் புஷ்பக விமானம் இலங்கையிலிருந்து திரும்பும்போது மதுராந்தகம் வந்தவுடன், மேலே நகராமல் நின்றுவிட்டது. உடனே ராமருக்கு தான் ரிஷிக்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்து அவர்கள் எல்லோரும் விபாண்டகர் ஆஸ்ரமம் சென்று அவருக்கு தரிசனம் தருகிறார்கள். இந்த தெய்வீக தம்பதிகள் ஸ்ரீ ராமரும் சீதையும் வந்ததால் அந்த ஊர் ''மதுரம்'' (இனிய அம்ரிதம்) நிறைந்த இடம் என்று பெயர் வந்தது. இது எனது கற்பனையில் தோன்றிய, இட்டுக்கட்டிய கதை அல்ல. ப்ரம்ம வைவர்த்த புராணத்தில் முக்தி க்ஷேத்ர பரமார்சம் பகுதியில் வரும் விஷயம் .

இன்னொரு முக்கிய விஷயம், இங்கே ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமியில் சுவாமி ராமானுஜருக்கு ஸ்ரீ பெரிய நம்பியால் த்வய மந்திரம் உபதேசிக்கப்பட்டு பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப்பட்டது. அதனால் மதுராந்தகத்தை ''த்வயம் விளைந்த திருப்பதி'' என ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்வார்கள்.

வைணவ குரு பரம்பரையில் ஒரு ஸ்லோகம்: அற்புத அர்த்தம் கொண்டது: அதை ரசிப்போம்:

Lakshmi Naathaakya sinthau sadaribu jalathahaa praapya kaarunya neeram I
Naathaa thraavap Kshinjan thathanu raguvaraam boja shaksur jalaabyaamII
Gathvathaam yaamunaagyam saridamath yatheenthragya bathmaagaraenthraam I
Sampoorya praani sasyae pravahatha bahoothaa desikenthra pramegaihi.II

அதாவது லட்சுமிநாதன் ஒரு பெரிய கருணை நிறைந்த கார்மேகம், அதிலிருந்து ஞானம் என்கிற ஜலம் பெருகி அதை நம்மாழ்வார் எடுத்து நாதமுனி என்ற மலை சிகரத்தில் பொழியச் செய்து, அந்த ஜலதாரை அகண்டமாக பெருகி இரு நீர் வீழ்ச்சிகளாகியது. அந்த ரெண்டு நீர்வீழ்ச்சிகள் தான் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி ஆகியோர். நீர்வீழ்ச்சிகளின் ஜலம் பிரவாகமாக ஓடி ஒரு ஆறாகியது. அந்த ஆறு தான் ஆளவந்தார். அந்த ஆறு அப்புறம் ஐந்து 'பெரிய'' கால்வாய்களாக பிரிந்து ஓடும் என்று ' நம்பி' னார்கள். அவையே ஸ்ரீ பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்க பெருமாள் அரையர், திருமாலை ஆண்டான் ஆகியோர். அதோடு மட்டும் இல்லை. ஆற்றின் நீர் ஒரு பெரிய ஏரியாக உருமாறியது. அதுவே ஸ்ரீ ராமானுஜர். அந்த பெரிய ஏரிக்கு 74 கணவாய்கள், கண்மாய்கள், அவர்கள் தான் சிம்ஹாசனாதிபதிகள். ஒருவரைப் பற்றி சொன்னேன். நடாதூர் அம்மாள் அல்லவா? ஸ்ரீ வைணவம் பெருகி இவர்கள் மூலம் எங்கும் பரவியது.

மதுராந்தகம் ஏரி பற்றி சொல்லும்போது மேலே சொன்ன ராமானுஜ ஏரி தெரியவேண்டாமா? இந்த ஏரி காத்தவர் ஸ்ரீ ராமன் ஆகிய விஷ்ணு.


''பெரிய நம்பி, எனக்கு விருத்தாப்பியம். முடியவில்லை நீங்கள் உடனே காஞ்சிபுரம் சென்று அங்கே அற்புத வைஷ்ணவர் ராமானுஜர் இருக்கிறார். அவரை சந்தித்து, தரிசன நிர்வாகம் இனி உமதே என்று அங்கீகரித்து ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வாருங்கள். இது சீக்கிரம் நடைபெறவேண்டியது. நான் அதற்குள் இருக்கிறேனோ இல்லையோ'' என்று உரைத்தார் ஸ்ரீ ஆளவந்தார்.

காரோ, விமானமோ தெரியாத காலம். நடையாக நடந்தார் பெரியநம்பி. மதுராந்தகத்திலேயே அதிர்ஷ்ட வசமாக ராமானுஜரை சந்திக்கிறார். ஸ்ரீ ரங்கம் செல்கிறார்கள் இருவரும்.

ராமானுஜர் பெரிய நம்பியை காஞ்சி வரதராஜன், தேவ பெருமாள் ஆக்கினைப்படி குருவாக ஆச்சார்யனாக ஏற்கிறார். அதற்கு முன்பு ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செயது வைக்க வேண்டுமே.

உமது பஞ்ச ஸம்ஸ்காரத்தை காஞ்சிபுரத்தில் வரதராஜன் சந்நிதியில் வைத்துக் கொள்ளலாமே என்று பெரிய நம்பி சொல்லியும் ,

'' சுவாமி அப்படியில்லை, திருவாய் மொழியில் சொல்லியிருக்கிறபடி “மின்னின் நிலையிலே மன்னுயிர் யாக்கைகள்” அதாவது பூமியில் உதித்த நாம் சாஸ்வதம் இல்லை, கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போய்விடுபவர்கள், க்ஷண காலத்தில் தோன்றி ஒளிவிடும் மின்னலைப் போல''

ஆகவே இங்கேயே, இப்போதே, எனக்கு தாங்கள் அடியேனுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்தருளவேண்டும். ஆச்சார்ய சம்பந்தம் உண்டாக வேண்டும்'' என வேண்டுகிறார் ஸ்ரீ ராமானுஜர். அவருக்கு மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலுக்குள் பஞ்ச சம்ஸ்காரம் நடந்த மகிழ மரம் இன்றும் இருக்கிறது. எதிரே அவருக்கு ஒரு சிறு சந்நிதி. மதுராந்தகம் செல்பவர்கள் கண்டிப்பாக இதை தரிசிக்க வேண்டும் . எதிரே கோபுர விமானத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்யும் சிற்பம் செதுக்கி இருப்பதை பார்த்த ஞாபகம். .
குறிப்பாக பஞ்ச சம்ஸ்காரம் என்பது என்ன?

முதலாவது : தாப சம்ஸ்காரம் என்பது தோளுக்கு அருகே கீழே புஜத்தில் சங்கம் சக்ரம் முத்திரை வைப்பது எதற்காக என்றால் சரீர சுத்திக்காக.

ரெண்டாவது: புண்ட்ர சம்ஸ்காரம் என்பது தேகத்தில் பன்னிரண்டு திருமண் காப்பு ஸ்ரீ சூர்ணம் தரிப்பது. த்வாதச ஊர்த்வ புண்ட்ரம் என்று பெயர். இந்த பன்னிரண்டு நாமங்களை ஸ்ரீ விஷ்ணுவின் பன்னிரண்டு திருப்பெயர்கள், நாமங்கள், ஸ்ரீ கேசவ, மாதவ.......

மூன்றாவது: நாம சம்ஸ்காரம் - பஞ்ச சம்ஸ்காரம் செய்தவுடன் பெயர் ஆச்சர்ய சம்பந்தததோடு சேரும். இயற் பெயர் மாறும். ''தாசன்''சேரும். இனி நீ நாராயண தாசன், அவன் அடிமை என்று பொருள்.

நான்காவது: மந்த்ர சம்ஸ்காரம் - மந்த்ர உபதேசம், ரஹஸ்ய த்ரய மந்திரம். -(அஷ்டாக்ஷரம் எட்டெழுத்து, த்வயம், சரம ஸ்லோகம் )

ஐந்தாவது: யாக சம்ஸ்காரம்: ஸ்ரீமன் நாராயணனை தக்க முறைப்படி வழிபடுவது. - இதை பகவத் திருவாராதனம் என்பார்கள்.

அப்பனே தேவரீர் ஸ்ரீ ராமாநுஜரே , இதையெல்லாம் நான் உமக்கு செய்வித்தேன். எப்படி ஸ்ரீ ராமன் தனது பாதுகைகளை, பரதாழ்வானிடம் அளித்து, இனி நீ நாடாளவேண்டும் என்று கூறி காடு ஏகினாரோ, அவ்வாறு ஸ்வாமி ஆளவந்தார் தனது பாதுகைகளை (நிர்வாக பொறுப்பை) உம்மிடம் அளித்து இனி நீவிர் தரிசன நிர்வாகம் செலுத்தவேண்டும் என கூறிவிட்டு ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டார். அடியேன் சுவாமி ஆளவந்தாரின் கட்டளையை நிறைவேற்றினேன். இனி தாங்கள் பொறுப்பேற்று அவர் விருப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் '' என்கிறார் பெரிய நம்பி.



இனி மேற்கொண்டு மற்ற விவரங்களை அறிவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...