எளிதில் புரியும் ஒரு சித்தர் - J.K. SIVAN
குதம்பை சித்தரை சினிமாக்காரர்கள் கூட விடுவதில்லை. சின்னவயதில் தெருவெல்லாம் சிதம்பரம் ஜெயராமன் பாடிய குதம்பாய், காசுக்கு முன் நில்லாதடி என்று கூம்பு போன்ற ஒலிபெருக்கி காதை பிளக்கும்.
குதம்பை சித்தர் அற்புதமான எளிய தமிழில் தத்துவங்களை ரெண்டு வரிகளில் அள்ளி வீசும் ஞானி. கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும்.
நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயா மத்தை பின்பற்றும் ஒருவருக்கு எந்த யோகமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார்.
வேகமடக்கி விளங்கு மெய்ஞ்ஞானிக்கு
யோகந் தானேதுக் கடி” - என்று அவர் கேட்பது நியாயமாகத்தானே படுகிறது.
உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும்
இலகும் கடவுளை ஏத்தி - நலமார்
குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு
நிதம்பார்த்து நெஞ்சில் நினை.
அஞ்ஞானம் ஒழியவேண்டுமா? எல்லோருக்கும் பொதுவான அந்த பகவானை வேண்டு. கடவுள் பக்தி இருந்தாலே கொஞ்சம் கொஞ்சமாக ஆன்ம ஞானம் வளரும்; குதம்பாய், நீ இதை தினமும் அனுசரி என்கிறார் சித்தர்.
பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி.
சர்வமும் அறிந்த ப்ரம்ம ஞானிக்கு இங்கே பூமியில் பிறக்கவேண்டிய அவசியமே இல்லை.
போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்
சாங்காலம் இல்லையடி குதம்பாய்
சாங்காலம் இல்லையடி.2
ஜனன மரண உபாதைகளுக்கு அப்பாற்பட்டவன் ஜீவன் முக்தன்.
செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
முத்திதான் இல்லையடி குதம்பாய்
முத்திதான் இல்லையடி.3
பரமாத்மாவை தொழாமல் மற்ற ஈடுபாடுகள் கொண்டவனுக்கு முக்தி ஏது? செத்து செத்து மீண்டும் ரேஷன் கடையில் உளுத்தம்பருப்புக்கு நாளெல்லாம் க்யூவில் நிற்கவேண்டியது தான்.
பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி.5
இது எவ்வளவு அற்புதமான வார்த்தை அனுபவியுங்கள். பற்றற்றான் பற்றினை பற்றுக என்று வள்ளுவர் சொன்னதை தான் சித்தர் இங்கே சொல்கிறார். பற்றுகள் ஒன்று மில்லாத பரந்தாமனை பந்த பாசங்கள் ஆசை நேசங்களை விட்டு தேடு. கிடைப்பான். விடாதே பிடித்துக்கொள்ள. உனக்கு எந்த குறையும் இல்லை. .குற்றமும் இல்லை. கர்மங்கள் தொலையுமே.
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி.6
மாயையிலிருந்து விடுபட்டு சத்ய ஸ்வரூபமாக இருக்கும் பிரமத்தை மனதில் பிடித்தவனுக்கு பேரானந்தம்.
வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக இருக்கும் பரம்பொருளை சந்தோஷமாக மனதில் உணர்வாய். வேறென்ன வேண்டும். மனதே அப்படிப்பட்ட பெருவெளி.
எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.
அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்திலும். பிரபஞ்சம் பூரா மிளிர்கின்ற பரமனை உன்னுள் உன் மனதில், உன் என்று நீ உணர்கிறாயோ அன்று தான் நீ ஞானி.
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.9
அர்த்தம் வேண்டாம். மேலே சொன்னது தான்.
ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச்
சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி.10
நமது ஆத்மா ஜீவன். அதில் உறுதுணையாக கலந்திருப்பவன் பரமாத்மா.. உள்ளமெனும் கோவிலில் அவனை ஆனந்தமாக சேவித்து பயனடைவாயாக.
தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.11
அவன் ஸ்வயம்ஜோதி. யாரும் எண்ணெய் ஊற்றி திரி இட்டு ஏற்றவேண்டாம். அவனை உன் மனதில் காண்பாய். அந்த தெய்வம் உன்னை மரண ஜனனம் தாண்டி என்றும் காக்கும்.
அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே.12
அர்த்தம் தேவையில்லை
விந்தை பராபர வத்தின் இணையடி
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய்
சிந்தையில் கொள்வாயடி.13
தெய்வத்தின் திருவடிகளை சரணடைவாய் மனமே.
அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
ReplyDeleteதெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே
meaning for this please (Idhan Artham Vendum)
தெண்டனிட்டு Meaning please