ராஜா ஏன் துறவியானான் ?- J.K. SIVAN
நாம் நிறைய இப்போது ராஜா பர்த்ருஹரியின் நீதி சதகம் அறிந்து மகிழ்கிறோம். அவரே பிற்காலத்தில் தமிழகம் வந்து பட்டினத்தார் சீடனாகி தமிழ் கற்று பத்திரகிரியானார் என்றும் செயதி அறிந்தோம். ரெண்டு பேரும் ஒன்றா, வெவ்வேறா என்ற பிரச்னை நமதில்லை. நமக்கு நல்ல விஷயங்கள் யார் மூலமாகவேனும் வரட்டும். பெயரா முக்கியம். முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலிகான், எர்னஸ்டோ குவாரா, கெய்சர் வில்லியம், பெனிட்டோ முசோலினி இந்த பெயர்கள் நமக்கு தெரியும். அதற்குமேல் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? பெயர் முக்கியமில்லை.
இந்த பர்த்ருஹரி சில அருமையான விஷயம் தரும் நல்லவனாக இருக்கிறார். மனதுக்கு இதமாக சுபாஷிதம் தந்தவர் என்பதனால் தலை வணங்குகிறேன்.
இவரைப் பற்றி இன்று சில விஷயம் அறிந்தேன். ராஜா பர்த்ருஹரி ராஜா கந்தர்வசேனனின் முத்த மகனாம். உஜ்ஜயினி ராஜ்யத்தை ''இந்த நீ தான் இனி அரசன் இதற்கு'' என்று தந்தவன் இந்திரன். தாரா என்ற தேச அரசனும் சேர்ந்து தந்தது தான்.
உஜ்ஜயினி ராஜாவாக பர்த்ருஹரி ஆண்டு கொண்டிருந்தபோது ஒருநாள் ஒரு பிராமணன் அவனைப் பார்க்க வருகிறார். அவர் கையில் ஒரு பழம்.
''மஹாராஜா இந்தாருங்கள், இது ஒரு தேவலோக பழம். கற்பக விருக்ஷத்தில் இருந்து கிடைத்தது. கேட்டதெல்லாம் கொடுக்கும் விருக்ஷம் கற்பக விருக்ஷம் அல்லவா? அதன் இந்த பழத்தை நீங்கள் உண்டால் நீண்டகாலம் மரணமின்றி உயிர் வாழ்வீர்கள்''. பழம் அந்த ப்ராமணரிடமிருந்து பர்த்ருஹரி இடம் கை மாறியது. அநங்கசேனா, என்றும் பிங்கள ராணி என்றும் பெயர் கொண்ட தனது ஆசை மனைவிக்கு ராஜா பர்த்ருஹரி அந்த பழத்தை கொடுத்து '' நீ சாப்பிடு, நீ சாப்பிட்டால் நான் சாப்பிட்ட மாதிரி'' என்கிறான்.
ஆனால் இங்கே கொஞ்சம் இடிக்கிறது. அந்த இளைய ராணிக்கு அரண்மனை குதிரைபடை நாயகன் மஹிபாலன் என்பவன் மேல் ஆர்வம். அவள் அவனை சந்தித்து ''என் அன்பே இது உனக்கு சேரவேண்டிய பழம்'' என்று அதை கொடுக்கிறாள். இதோடு முடியவில்லை பழக்கதை . பழங்கதை யாக இருந்தாலும் இதில் இன்னும் சுவை தொடர்கிறது.
மஹிபாலன் தனது மனதை எப்போதோ லேகா என்கிற அரண்மனை தாதிஇடம் இழந்துவிட்டான் . அவள் காதலைபெற இந்த பழத்தோடு அவளை சந்தித்து அவளிடம் அதை கொடுக்கிறான்.
லேகா என்ற அந்த தேதிக்கு நீண்டகாலமாக ஒரு கனவு. தாதியாகவே நமது வாழ்வு முடியாமல் ஒருநாள் அந்த உஜ்ஜயினி தேசத்துக்கே ராணியாகவேண்டும் என்று ஆசை. அவள் நேரம் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பர்த்ருஹரியை நெருங்கி சிசுருஷைகள் செய்வாள். எப்படியாவது ராஜாவின் மனதில் இடம்பிடித்து அவன் சிம்மாசனத்தில் ஒரு இடம் பிடிக்க திட்டம். எனவே இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் ராஜாவை சந்திக்கிறாள்.
''என்ன விஷயம் எதற்கு என்னை தேடினாய்?''
''மஹாராஜா, உங்கள் மேல் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் ப்ரேமையும் கொண்டவள் என்று நிரூபிக்க இன்று எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது?
''என்ன அது ?''
''இந்தாருங்கள், இது ஒரு தேவலோக பழம், கற்பக விருக்ஷம் தந்தது. நீங்கள் மனதில் நினைத்ததெல்லாம் இதய உண்டால் நிறைவேறும், நீண்ட ஆயுளும் சம்பவிக்கும்''
''ஓஹோ. இதை யார் உனக்கு கொடுத்தது?''
''இது எனக்கு தானாகவே பூஜையில் கிடைத்தது?''
பர்த்ருஹரிக்கு புரிந்துவிட்டது. தலை சுற்றியது. கோபம், அருவருப்பு, வெறுப்பு, ஏமாற்றம் எல்லாமே அவன் மனதை நிரப்பியது. ராணியை கூப்பிட்டு அனுப்பினான்''
அநங்கசேனையை விசாரிக்கும் விதத்தில் ராஜா விசாரித்து , அவளைத் தொடர்ந்து, மஹிபாலன், தாதி என்று அனைவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்கள்.
ராணிக்கு சிரச்சேதம் தண்டனை. மஹிபாலனுக்கும் அவ்வாறே, ராஜா துரோகம் செய்த மனைவி, அரசாங்கம், ஆட்சி, ராஜயம் எல்லாம் வெறுத்தான். துறவறம் பூண்டான். தனது தம்பி விக்ரமாதித்தியனை ராஜாவாக்கினான். (விக்ரமாதித்தன் வேதாளம் கதை இன்னொருநாள் படிக்கலாம்)
அவன் வாயிலிருந்து நிறைய நீதி வாக்கியங்கள் கவிதையாக வந்தன. அவையே சுபாஷிதம், இதில் நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்று முன்னூறு ஸ்லோகங்கள் மொத்தம். தெற்கே வருகிறான், பட்டினத்தார் சிஷ்யனாகிறான், திருவிடைமருதூர் ஆலய வாசலில் அமர்கிறான். கையில் ஒரு திருவோடு, அருகே ஒரு நாய். இது தான் அவன் மனைவி அநங்கசேனா, அடுத்த பிறவியில் நாயானவள் பர்த்ருஹரியின் பின்னே அலைகிறாள்.
ஒரு நாள் ஒரு ஆண்டி பட்டினத்தாரிடம் யாசகம் கேட்க அவர் ''நானே ஒரு ஆண்டி என்னிடம் என்ன இருக்கிறது கொடுக்க. நேராக அடுத்த வாசலுக்கு போனால் அங்கே ஒரு செல்வந்தன் அமர்ந்திருப்பார் அவனிடம் கேள் '' என்று அனுப்ப அந்த பிச்சைக்காரன் பத்ரகிரியாரிடம் வந்து யாசகம் கேட்கிறான்
''அப்பனே நானும் உன்னைபோல ஒரு பிச்சைக்காரன் தான். இங்கேயே இரு எனக்கு கிடைப்பதை உனக்கு தருகிறேன்''
''இல்லையே சுவாமி, அடுத்த வாசலில் பட்டினத்தார் நீங்கள் ஒரு செல்வந்தர் என்று சொன்னாரே ''
''என்னையா என் குருநாதர் பட்டினத்தார் செல்வந்தன் என்று சொன்னார்.? என்ன காரணம்?
பத்ரகிரி யோசித்தார். ஓஹோ என்னிடம் இந்த உலகத்தில் இணைந்திருப்பது,இருப்பது இந்த திருவோடும் என்னை தொடர்ந்துவரும் இந்த நாயும் தானே. இப்போதே அந்த செல்வங்களையும் விட்டு விலகுகிறேன்''
பத்திரகிரியார் திருவோட்டை வீசி நாயின் மீது எறிகிறார். அது நாயின் மண்டையில் பட்டு நாயும் இறக்கிறது. திருவோடும் உடைந்து சில்லாகி பத்திரகிரியார் ஒரு வித பந்தமும் இல்லாமல் சுதந்திரமாகிறார்.
No comments:
Post a Comment