என் தாய் வழி முன்னோர்கள் - J.K. SIVAN
ஒரு 86 வயது அழைப்பிதழ்
எல்லோருடைய வாழ்விலும் சில நேரங்களில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகின்றன.
கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகிவிட்டது. ஒருநாள் எனது 90+ வயதாகிய எனது இரண்டாவது தாய் மாமா ஸ்ரீ வசிஷ்டபாரதி. சுப்ரமணிய ஐயரை அவரது புரசவாக்கம் இல்லத்தில் தரிசித்தேன். ஒரே இடத்தில் பழகுவதால் கண் பார்வை இழந்தாலும் அவரால் வீட்டுக்குளேயே சற்று நடமாட முடிந்தது. என்னை பற்றி விசாரித்து மகிழ்ந்தார். பழைய விஷயங்கள் பல பேசினோம். மணி மாமாவை வெள்ளை பேண்ட் அரைக் கை ஷர்ட், அலை அலையாக கருப்பு முடியோடு, நடுவில் வகிடு எடுத்த கிராப், நெற்றியில் குடும்ப அடையாளமான பிறைச் சந்திர சந்தனத்தோடு, அவருக்கே உரித்தான வசீகர புன் சிரிப்போடு பார்த்தது நினைவுக்கு வந்தது. அப்போது எனக்கு 18-19 வயது. அவர் நான் ஆரம்ப கால பணி புரிந்த மின்சார வாரியம் கட்டிடத்துக்கு அடுத்த அட்டிசன் குரூப் கம்பெனியில் உத்யோகமாக இருந்தார். பகல் உணவு எங்கள் மின்சார வாரிய கேன்டீனில். அப்போது சந்திப்போம்.
காலச்சக்கரம் சுழலும்போது அவரவர் பிழைக்கும் வழி தேடி எங்கெங்கோ வெளிநாடுகள் உட்பட , சென்று விடுகிறோம். வருஷங்கள் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஓடி விட்டது. உறவுகள் சில இந்த காலச்சுழற்சியில் தொடர்பு அறுந்து காணாமல் போகிறது. மீண்டும் அவர்களைத் தேடி அலைய விருப்பம் இருந்தாலும் விட்டுப்போன தொடர்புகள் எளிதில் மீண்டும் கிடை ப்பது சிரமம். சில ஒட்டுவதில்லை. காரணம் குடும்ப நிலை, உடல் நிலை, அறுந்த நூல் ஒன்று சேர சிரமம் தான். இப்படி ஒரு நிர்பந்தம் இருக்கும்போது.
எனது முன்னோர்கள் பற்றி நான் எழுத தூண்டுகோலாக இருந்தவர்களில் என் மணி மாமா முக்கியமானவர். மற்றொருவர் என்னைவிட ரெண்டு மூன்று வயது மூத்தவரான என் கடைசி மாமா சதாசிவ அய்யர் என்கிற மகாலிங்க மாமா. உற்சாகமான ஒரு சுறுசுறுப்பு மாமா. . மணி மாமா வீட்டில் அவர் மூத்த மகன் அடுத்த தலைமுறை ''வசிஷ்ட பாரதி'' என் தாத்தா அந்த காலத்தில் இந்து நேசன் பத்திரிகையில் அளித்த தம் முன்னோர் பற்றிய கட்டுரைகளின் பிரதிகளை கொடுத்தார். வீட்டிற்கு வந்து படித்த பின் நான் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி தஞ்சாவூர் சென்றுவிட்டேன். என் கற்பனையில் உங்களையும் அங்கெல்லாம் என்னோடு அழைத்து சென்றேன்.
புரசைவாக்கத்தில் மணி மாமாவின் வீட்டில் நான் ஒரு அற்புத மான பழைய ''ஷஷ்டி அப்த பூர்த்தி அழைப்பிதழை'' பார்த்தேன். என் தாத்தாவிற்கு அறுபது பூர்த்தி ஆன விழா. அதை ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். அதை இத்துடன் இணைத்துள்ளேன்.
எண்பத்து ஐந்து வருஷங்களுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட ஒரு மஞ்சள் நிற அட்டை. அடுத்த வாரம் அதன்வயது 86 பூர்த்தி ஆகிறது. என்னைவிட ஆறு வயது மூத்தது. அந்த கால அழைப்பிதழ் எப்படி இருந்தது என்று பார்த்து ரசிக்க உதவலாமே என்ற எண்ணத்துடன் தான் அதை இணைத்துள்ளேன்.
என் தாத்தா காஞ்சி பெரியவா அளித்த விருதான ''புராண சாகரம்'' சொந்தக்காரர், ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதிகள் 19.5.1932 ல் அவர் தனது ஷஷ்டி அப்த பூர்த்தி கல்யாண விழாவுக்கு அனுப்பிய அழைப்பிதழ். நான் என் மாமாவை சந்தித்த அதே புரசைவாக்கம் இல்லத்தில், அதன் பெயர் '' ராம மந்திரம் ''. அதில் விமரிசையாக சஷ்டி அப்த பூர்த்தி கல்யாண விழா நடந்திருக்கிறது. எத்தனை பிரமுகர்கள், தமிழறிஞர்கள், மஹான்கள் வந்திருப்பார்களோ. இன்றும் தான் பிறந்த அந்த வீட்டில் தான் என் மணி மாமா வசிக்கிறார். காலத்தின் மாறுதல்கள் வெளியே எதையும் மாற்றினாலும் உள்ளத்தில் உணர்வுகள் அதால் தொடப்படுவதில்லை.
No comments:
Post a Comment