இது வாஸ்தவம் தானே! J.K. SIVAN
இதை எழுதும் வரை எனக்கு பணம் வேண்டாம் என்று யாருமே சொன்னதில்லை?
பணம் வேண்டும் என்று சொல்பவர்கள் நிச்சயம் எவ்வளவு என்பதை சொல்ல முடியாதவர்கள்? விடை தெரியாத கேள்வி இது? இன்னும், இன்னும், ...... முடிவற்றது.
அமெரிக்காவில் வேலையை தேடி சென்ற குப்புசாமி சுறுசுறுப்பான அழகன் மட்டுமல்ல புத்திசாலியும் கூட. அவன் வேலை செய்த கம்பெனி முதலாளிக்கு அவனை பிடித்தது. அந்த கோடீஸ்வர அமெரிக்க முதலாளி ஜார்ஜ் திடீரென்று ஒருநாள் மூச்சு விட மறந்து போனான். அவனுக்கு காரியம் எல்லாம் ஆகிவிட்டது. ஜார்ஜின் மனைவி கம்பெனி நிர்வாக பொறுப்பை ஏறறாள். குப்புசாமியின் சாதுரியம், கெட்டிக்காரத்தனம், திறமை, இதெல்லாம் விட அவன் அழகு, இளமை பிடித்துவிட்டது அப்பறம் என்ன. குப்புசாமி ஜார்ஜ் ஆகிவிட்டான்.
குப்புசாமியின் நண்பன் ஒருநாள் அவனை சந்தித்து அசந்து போனான். எப்படிடா ஒரே ராத்திரி நீ பெரும் பணக்காரனாகி விட்டாய்?
'''நான் என் எஜமானனுக்கு உழைத்தேன். அவர் எனக்காக உழைத்து சேர்த்து வைத்தார் என்று எனக்கு எப்படி தெரியும்?'' என்றான்.
பணம் அவசியம். அதை உபயோகிக்காவிட்டால் என்ன பயன்? நிறைய பேர் சேர்த்த பணம் அவர்களுக்கு அப்புறம் வேறே யாருக்கோ கூட இருந்த வேலைக்காரிக்கு கூட சொந்தமாகலாம். நமக்கு தெரிந்த விஷயம் தான் இது. சம்பந்தமில்லாத யார் யாரோ அந்த ஆளில்லாத சொத்துக்கு சொந்தம் கொண்டாடலாம்.
நிறைய பணமா, நீண்ட ஆரோக்கிய வாழ்வா என்றால் ரெண்டாவது தான் அத்தியாவசியம். ரெண்டாவதுக்கு நல்ல ஆரோக்கிய தேகம் வேண்டும். விலை உயர்ந்த மொபைல் போனில் முக்கால் வாசி என்னென்ன அதால் உபயோகம் என்றே தெரியாது. விலை உயர்ந்த கார் வேகமாக பறக்கும் என்று வாங்குவான். அந்த வேகம், அதிக வேகம் அவனுக்கு தேவைப்படுவதே இல்லை. அந்த வண்டியை ஒட்டி அதன் அதிக வேகத்தை தேடினால் அவனை எங்கே தேடுவது !
ராஜ் பவன்,, ஜனாதிபதி மாளிகை போன்ற பெரிய ஐஸ்வர்ய வீடுகளில் எது எங்கே இருக்கிறது என்பதே அதில் வசிப்பவருக்கு தெரியாது. அப்துல் கலாமுக்கு ஜனாபதி மாளிகையில் அவரது அறையைத்தவிர மற்ற அறைகள் எங்கே இருக்கிறது எங்கு கூட தெரியாது. சுற்றிப்பார்க்க நேரம் இருந்ததில்லை என்பார்கள்.
பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் ஆடைகளில் நிறைய கண்ணால் பார்த்ததோடு சரி. சிலவற்றை என்று எப்போது உடுத்தினோம்?
நிறைய பணம் சம்பாதிப்பவன், இரவு பகலாய் உழைத்து, அதை சேமித்து எவனுக்கோ கடைசியில் அது போகிறது.
அதே போல தான் நிறைய பேருடைய திறமை அவர்களுக்கே தெரியாமல் கண்ணை மூடிவிடுகிறார்கள். சரி இப்படி முக்கால் வாசி உபயோகமாகாமல் உதவாமல் போகிறதே, மீதியை, அதாவது, இருக்கும் கால்வாசியையாவது உபயோகமாக்கி, உதவலாமே என்று தான் எனக்கு தோன்றுகிறது.
• உடம்பு சரியாக இருப்பதாக தோன்றினாலும் வருடம் ஒரு முறையோ, ஆறுமாதத்துக்கு ஒரு முறையோ நல்ல டாக்டரிடம் காட்டி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்..
• தாகம் இல்லாவிட்டாலும் எதிரே ஒரு பாட்டிலில் தண்ணீர் வைத்துக் கொண்டு அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்..
• அகம்பாவம், கர்வம் இல்லாமல் பண்போடு பழகலாம்.. குத்தலாக புண் படும்படி பேசவேண்டாம்.
• நமக்கும் கீழே உள்ளவர்களோடு சரி நிகர் சமமாக பழகலாம். வித்தியாசம் காணாமல் போகும்.
• இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடையலாம்.
முடியுமா? முடியும் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment