போனவனுக்கு போகப்போகிறவன் செய்வது - J.K. SIVAN
காலப்போக்கில் எல்லாமே மாறிவிட்டது என்பது உண்மை தான் என்றாலும் நாம் மனதளவில் அதிகமாகவே மாறி விட்டோம். வெளியுலகம் சிறிது சிறிதாக நமது குறுக்கீட்டால் தான் மாறுகிறது. நமது மனமோ அடேயப்பா தலைகீழாக வெகுசீக்கிரத்தில் மாறிவிடுகிறதே.
நமது முன்னோர்கள் வாழ்க்கை நிலை நமக்கு கேலிக்கிடமாகி விட்டது. அவர்களது ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு, பக்தி, குடும்ப பாசம், ஒற்றுமை எதுவுமே இப்போது அப்படி இல்லையே. மனல் உறுதி அடியோடு போய்விட்டது.
விஷயத்துக்கு வருகிறேன். குடும்பங்களில் தீட்டுக்காலம் மனதில் துயரத்தை நீக்குவதற்காக உருவானது. இதற்கும் விஞ்ஞானத்துக்கும் எனக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் இருக்கும் சம்பந்தம் தான். செய்யவேண்டிய சடங்குகளை சாஸ்திரங்கள் விளக்குகிறது. சடங்குகளை சாஸ்திரம் மூலம் நிறைவேற்றுவதை விட சாஸ்திரம் கற்றவர்களாக நாம் நம்புபவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செயது வரும் வழக்கமாகி விட்டது. சாஸ்திரங்களை அறிய பொறுமையோ, ஆர்வமோ இல்லை. ஏதோ செய்யவேண்டுமே என்ற எண்ணம் உருவாகி விட்டது. இப்போது அதற்கு ஆகும் செலவினம் தான் முக்கியமாக போய்விட்டது. எதை குறைக்கலாம் என்று நாமே தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விட்டோம். இந்த நிலைக்கு சில அந்தணர்களும் காரணம் என்பதை மறுக்க முடியாது. அவர்களது சட்ட திட்டங்கள் சக்திக்கு மீறிய செலவினத்தை உண்டு பண்ணினால் வசதி இல்லாதவன் என்ன செய்வான்? இதற்காகவாவது நாம் சாஸ்திரம் என்ன சொல்கிறது எது அவசியம் என்று தெரிந்து கொள்ளவேண்டாமா?
தீட்டு விஞ்ஞான சம்பந்தமாக இருந்தால் எல்லோருக்கும் சமமாக அல்லவோ இருக்கவேண்டும். ஒரு வேலை இடைச்செறுகளில் வர்ணாசிரமம் உள்ளே தலை காட்டி விட்டதோ? பாருங்களேன், ஒருகுடும்பத்தில்ஒருவர்இறந்தால்அதனால்ஏற்படும்தீட்டுபிராமணர்களுக்கு பத்துநாட்கள், க்ஷத்திரியர்களுக்கு பதினைந்துநாட்கள், வைசியர்களுக்கு இருபதுநாட்கள்மற்றும் சூத்திரருக்கு முப்பது நாட்கள்.....இதில் விஞ்ஞான அடிப்படை எங்கிருக்கிறது? சரியான ஒப்புக்கொள்ள முடிந்த காரணம் தரும் வரையில் இது எவருடைய விஷமமோ என்று கருத வாய்ப்பு இருக்கிறதே. சாஸ்திரங்கள் சர்ச்சையில் முடியக்கூடாதல்லவா.
இன்னொரு விஷயம். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கிடையே கூட தீட்டு காலம் வேறுபடுகிறது. இறந்தவன் பங்காளிகளுக்கு பத்து நாள், சிலருக்கு மூன்றே நாள், இன்னும் யாருக்கோ ஒரு நாள் தீட்டு மட்டும்!! விஞ்ஞான உடல் நலத்தை பாதுகாக்கும் ரீதியில் இந்த தீட்டு கால வித்யாசம் இடிக்கிறதே. நமக்கு தெரியாத ஏதோ ஒரு காரணம் இருக்குமானால் அதை தெரிந்து கொள்வது உத்தமம்.
அகால மரணம் எய்தியவர் (தற்கொலை, விபத்து, யுத்தத்தில் மரணம் ) விஷயத்தில் கொஞ்சம் நெருடல். இங்கு தீட்டு காலம் வேறே.
ஆகவே தீட்டு விஷயத்தில் பொதுவாக என்ன சொல்கிறேன் என்றால் அவரவர் நம்பிக்கையில் அதை பின்பற்றட்டும். காரணம் தேடவேண்டாம். கிடைக்காது. எனக்கு கிடைக்கவில்லை.
இறந்தபிறகு அடுத்த பன்னிரண்டு நாட்கள் செய்கிற காரியங்கள், சடங்குகள் பற்றி கொஞ்சகம் இனிமேல் பார்ப்போம்.
No comments:
Post a Comment