சிறுவயதில் செய்த ஆர்வக்கோளாறினால் பெரும் ஆபத்துகள் நடக்க ஏதுவாகலாம். இதற்கு உதாரணம் மஹாபாரதத்தில் வரும் குந்தியின் பாத்திரம். குந்தி தேவி பஞ்ச பாண்டவர்களின் தாய். குந்தி போஜனிடம் வளர்ந்தவள். மஹாராஜா பாண்டுவின் மனைவி. கிருஷ்ணனின் தந்தை வாசுதேவனின் தங்கை என்பதால் கிருஷ்ணனின் அத்தை.
அவள் செய்த தவறு என்ன?
குந்தி போஜனின் அரண்மனைக்கு மிகவும் கோபக்கார ரிஷி துர்வாசர் ஒருமுறை வந்து '' சிலநாள் இங்கே தங்கப்போகிறேன்'' என்று தானாகவே முடிவெடுத்து விஜயம் செய்கிறார். அவரை உபசரித்து, அவர் தேவைகளை குறிப்பறிந்து அவருக்கு மனம் கோணாமல் சிச்ருஷை செய்ய தனது வளர்ப்பு மகள் சிறுமி குந்தியே பொறுப்பானவள், சிறந்தவள் என அவளை அரசன் நியமிக்கிறான்.
''குந்தி. எக்காரணத்தைக் கொண்டும் இந்த துர்வாச ரிஷியின் மனம் வருத்தமோ, கோபமோ அடையாமல் அவரை திருப்திப்படுத்தவேண்டியது உன் கடமை. ஜாக்கிரதை'' என்று அப்பா குந்தி போஜன் சொல்லிவிட்டான்.
இரவும் பகலும் அந்த ரிஷி சிறுமி குந்தியை படாத பாடு படுத்துகிறார். கோபம் கொள்ளாமல் பொறுமையாக அவர் கேட்பதை எல்லாம் அளித்து, அவர் சொல்வதை தவறில்லாமல் நிறைவேற்றி குந்தி ரிஷி துர்வாசரின் நன் மதிப்பையும் அன்பையும் பெறுகிறாள். அரண்மனையை விட்டு செல்லுமுன் அந்த ரிஷி குந்தியை அழைத்து
'பெண்ணே குந்தி, நீ மிக அற்புதமான பெண். நான் உன்னை வேண்டுமென்றே கடும் சோதனைகளுக்கு ஆளாக்கியும் நீ சற்றும் அயராமல், இரவும் பகலும் எனக்கு முகம் சுளிக்காமல் சேவை செய்ததற்கு பரிசாக மிக உன்னதமான ஒரு மந்திரத்தை உனக்கு உபதேசிக்கப்போகிறேன். சிறு பெண்ணான நீ ஒரு நாள் தாயாகப் போகிறவள். அப்போது உனக்கு சிறந்த புத்திரனாக கிடைக்க தேவ சந்தானம் என்ற இந்த மந்திரத்தை உச்சரித்தால் அதி உன்னத தேவ புத்ரன் உனக்கு ஜனிப்பான்.''
துர்வாச ரிஷி அரண்மனையை விட்டு புறப்பட்டுவிட்டார்.
குந்திக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. அதற்குள் ரிஷி உபதேசித்த மந்திரம் எப்படி பயனளிக்கும் என்று பரீக்ஷித்து பார்க்க ஆர்வம் மேலிட்டது. யாரிடமும் கேட்கவில்லை, ஓர்நாள் அந்த இளம் பெண் குந்தி விடிகாலையில் நதியில் ஸ்நானம் செய்தவள் அந்த மந்திரத்தை உச்சரிக்க தீர்மானித்து விட்டாள் .
காலை நேரம். இளம் சூரியன் கிழக்கே ரத்த சிவப்புடன் பெரிய அக்னி கோளமாக நதியின் மேலே எழும்பிக் கொண்டிருந்ததை பார்த்த குந்தி அந்த சூரியனை நோக்கி வணங்கினாள் . சூரியனின் அழகில் மனதை பறி கொடுத்தாள் . துர்வாசர் உபதேசித்த தேவ சந்தான மந்திரத்தை உச்சரித்து விட்டாள் .
அடுத்த கணம் அவள் எதிரே பிரகாசம் பொருந்திய சூர்ய தேவன் வந்து நின்றான்
''நீ தானா என்னை அழைத்தது. எதற்காக இந்த மந்திரத்தால் என்னை இங்கே வரவழைத்தாய்?.''
''ஐயோ'' என்று கதறினாள் குந்தி. பயம் அவளை மூர்ச்சை அடைய வைத்தது. உடல் வியர்க்க நடுங்கியவாறு ''சூரிய பகவானே, நான் தெரியாமல் தங்களை அழைத்து விட்டேன்.என்னை மன்னியுங்கள் . எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் தவறை மன்னித்து உடனே இங்கிருந்து நீங்கள் போய் விடுங்கள்'' 'என்று கெஞ்சினாள்.
''பெண்ணே, அறிந்தோ அறியாமலோ நடந்தாலும், நீ உச்சரித்த மந்திரத்தின் சக்தி வீண் போகாது. அந்த பலனை நான் உனக்கு அளித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் பாபம் துர்வாச ரிஷியின் சாபம் என்னை சேரும். இந்த மந்த்ர சக்தியால் என் அம்சம் கொண்ட மஹா வீரன் ஒருவன் உனக்கு மகனாக பிறக்க போகிறான். உலகம் புகழும் வீரமும் பலமும், பேரும் பெருமையும் பெற்றவனாக என் மகன் உன்மகனாக திகழ்வான்.''
''ஐயோ நான் என்ன செய்வேன். சூரிய பகவானே, எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே. அதற்குள் நான் எப்படி தாயாக முடியும். நான் செய்த தவறை புறக்கணிக்க முடியாதா?''
'' பெண்ணே குந்தி, உன் தவறும், நிலைமையும் எனக்கு தெரிகிறது. ஆகவே இந்த புத்ரன் உனக்கு இந்த கணத்திலேயே பிறக்கவும், அவன் பிறந்த பிறகும் உனது கன்னித்தன்மை உன்னை வந்தடையவும் நான் வரமளிக்கிறேன்.இதற்கு மேல் வேறு வழியில்லை. சூரியன் அவளுக்கு வரமளித்துவிட்டு திரும்புகிறான்.
அடுத்த கணமே குந்தி ஒரு அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகிறாள். நடுங்குகிறாள். தனது அரண்மனைத் தோழிகள், சேடிகள் அறியா வண்ணம், நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு மூதாட்டியின் அறிவுரையின் படி அந்த பிறந்த குழந்தையை ஒரு பேழையில் வைத்து தனது ஆடையை அதன் மேல் சுற்றி கண்களில் கண்ணீரோடு அந்த நதியில் விட்டு விடுகிறாள். அரண்மனை திரும்புகிறாள்.
அந்த மரப்பெட்டி நீரில் மிதந்தவாறு ஹஸ்தினாபுரம் நோக்கி ஆற்றில் செல்கிறது. அதற்குள் குழந்தை ஜாக்கிரதையாக தூங்குகிறது. எங்கோ அந்த வளைந்து வளைந்து ஓடும் நதியில் ஹஸ்தினாபுரம் அருகே நீராடிக்கொண்டிருந்த அதிரதன் எனும் திருதராஷ் டிரன் அரண்மனையில் தேர் ஓட்டும் ஒருவன் கண்ணில் படுகிறது. அவனுக்கும் அவன் மனைவி ராதைக்கும் வெகு நாட்களாக புத்ர பாக்யம் இன்றி இறைவனை வேண்டிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு தெய்வீக குழந்தை எதிரே ஆற்றில் மிதந்து வந்த மரப்பேழையில் கிடைத்ததைக் கண்டு தெய்வங்களை போற்றுகிறான். ஆனந்தமாக அதிரதனும் ராதையும் அந்த குழந்தையை தமதாக வளர்க்கிறார்கள். பிறவியிலேயே காதில் கர்ண குண்டலங்களோடும் மார்பில் கவசத்தோடும் பிறந்த குழந்தையை கர்ணன் என்று . பெயரிட அவன் வீரனாக வில்வித்தையில் நிபுணனாக கௌரவர்கள் அரண்மனையில் திருதராஷ்டிரன் மக்களோடு பாண்டவ எதிரியாக வளர்கிறான்
இதற்கிடையே வெகு சீக்கிரத்திலேயே பாண்டு மகாராஜாவுக்கு நல்ல வரன் பார்த்துக்கொண்டிருந்த பீஷ்மர் போஜராஜனின் பெண் குந்தியை அவனுக்கு மணமுடிக்க தீர்மானம் முடிவாகியது. பாண்டு குந்தியின் கணவனானான்.
மாத்ரி என்னு ம் ராஜகுமாரியும் அவன் மனைவியாகிறாள்.
விதி பாண்டுவின் வாழ்வில் ஒரு ரிஷி ரூபமாக வந்து விளையாடிவிட்டது. தனது ரிஷி பத்தினியோடு மான் உருவில் சல்லாபித்துக்கொண்டிருந்த அவர்களை ஒரு நாள் பாண்டு வேட்டையாட அந்த காட்டில் வந்தவன் தனது கூரான அம்பினால் பெண்மானை கொன்றுவிடுகிறான்.
மனைவியை இழந்த ரிஷி துயரத்தோடும் கோபத்தோடும் பாண்டுவிற்கு சாபமிடுகிறார்: ''இனி எந்த பெண்ணோடாவது நீ உடலுறவு கொள்ள முயன்றால் அந்த கணமே நீ மரணமடைவாய்.''. பாண்டு தனது வேட்டை இந்த விபரீதத்தில் கொண்டு விட்டதே என்று வருந்தினான். வாழ்க்கையை வெறுத்தான். அரசைத்துறந்து மனைவிகளோடு காட்டுக்கு சென்றான்.
அவனுக்கு புத்ர பாக்யம் இல்லாததால் நரகம் நிச்சயம் என்று அறிந்தான். இந்த நேரத்தில் தான் குந்தி துர்வாசரிடம் பெற்ற தேவ சந்தான மந்திரம் கை கொடுத்தது. எல்லாவற்றையும் விட்டு ஏன் துர்வாசர் இந்த மந்திரத்தை குந்திக்கு உபதேசம் செய்தார் என்பது இங்கே இப்போது தான் புரிகிறது. முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் அல்லவா உன்னத ரிஷிகள்.
துன்பத்திலும் சிறிது மகிழ்ச்சியை பாண்டுவுக்கு இந்த விஷயம் அளித்தது. மாத்ரிக்கும் இந்த மந்திரத்தை குந்தி உச்சரிக்க உபதேசிக்கிறாள். இதற்கிடையே, ரிஷி சாபத்தை மறந்து பாண்டு ஒருநாள் மாத்ரியுடன் உறவு கொள்ள முயன்று மரணம் எய்துகிறான். தேவ சந்தான மந்திரம் குந்திக்கு மூன்று குழந்தைகளையும் மாத்ரிக்கு ரெண்டு குழந்தைகளையும் அளிக்க மாத்ரி அந்த ஐந்து குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை குந்தியிடம் நம்பிக்கையோடு அளித்து விட்டு பாண்டுவின் உடலோடு சிதையில் உடன்கட்டை ஏறுகிறாள் என்கிறது பாரதம்.
குழந்தைகளை வளர்க்கும் பொறுப்போடு குந்தி வனத்திலிருந்து மீண்டும் ஹஸ்தினாபுரம் அரண்மனை செல்கிறாள். பாண்டு அரசைத் துறந்த பின் அவன் சகோதரன் கண்ணிழந்த திருதராஷ்டிரன் அரசனாகி அவனது நூறு பிள்ளைகளும் அரண்மனையில் வசிக்கும் நிலையில் பாண்டுவின் ஐந்து பிள்ளைகளோடு குந்தி அங்கே செல்கிறாள். பாண்டு புத்திரர்களை திருதராஷ்டிரனின் நூறு பிள்ளைகளும் அறவே வெறுத்தனர். எதிர்த்தனர். பீஷ்மர் நிலைமையை புரிந்து கொள்கிறார். பாண்டவர்களையும் வளர்க்கும் பொறுப்பு அவருக்கும் உண்டல்லவா?
குந்தி எண்ணற்ற சோதனைகளை பிறகு சந்திப்பதை இங்கே விவரித்தால் நான் மீண்டும் மஹா பாரதம் எழுத நேரிடும். எல்லா சோதனைகளிலும் கிருஷ்ணன் அவளுக்கு உதவுகிறார். பாண்டவர்கள் கௌரவர்களை வென்று ஹஸ்தினாபுரத்தில் சக்ரவர்த்தியாக யுதிஷ்டிரன் முடி சூட்டி கொள்கிறான். பாரத யுத்தம் முடிந்து தனது கடமையை துவாரகையில் முடிக்க கிருஷ்ணன் ஹஸ்தினாபுர அரண்மனையில் யுத்தத்தில் எஞ்சி இருப்பவர்களிடம் விடை பெறுகிறார். அப்போது குந்தியிடமும் ''நான் போய் வரட்டுமா அ த்தை என்று கேட்கும்போது இத்தனை காலம் அவளுக்குள் புதைந்திருந்த சோகம் பொங்கி எழுந்து வெளிப்படுகிறது. கிருஷ்ணனை ''போகாதே'' என்று சொல்லி வேண்டுகிறாள். அந்த சுலோகங்ள் குந்தியின் பிரார்த்தனை என்று அற்புதமாக ஸ்ரீமத் பாகவதத்தில் படித்து உங்களிடம் ஏற்கனவே இங்கே வெளியிட்டிருக்கிறேன். குந்தி ஒரு ஹிந்து குலத்தாய் என்னென்ன தியாகங்கள் செயகிறாள் என்பதற்கு சரியான உதாரணம். பக்தி எப்படி இறைவனை கட்டிப்போடும் என்பதற்கும் தான்.
குந்தி எண்ணற்ற சோதனைகளை பிறகு சந்திப்பதை இங்கே விவரித்தால் நான் மீண்டும் மஹா பாரதம் எழுத நேரிடும். எல்லா சோதனைகளிலும் கிருஷ்ணன் அவளுக்கு உதவுகிறார். பாண்டவர்கள் கௌரவர்களை வென்று ஹஸ்தினாபுரத்தில் சக்ரவர்த்தியாக யுதிஷ்டிரன் முடி சூட்டி கொள்கிறான். பாரத யுத்தம் முடிந்து தனது கடமையை துவாரகையில் முடிக்க கிருஷ்ணன் ஹஸ்தினாபுர அரண்மனையில் யுத்தத்தில் எஞ்சி இருப்பவர்களிடம் விடை பெறுகிறார். அப்போது குந்தியிடமும் ''நான் போய் வரட்டுமா அ த்தை என்று கேட்கும்போது இத்தனை காலம் அவளுக்குள் புதைந்திருந்த சோகம் பொங்கி எழுந்து வெளிப்படுகிறது. கிருஷ்ணனை ''போகாதே'' என்று சொல்லி வேண்டுகிறாள். அந்த சுலோகங்ள் குந்தியின் பிரார்த்தனை என்று அற்புதமாக ஸ்ரீமத் பாகவதத்தில் படித்து உங்களிடம் ஏற்கனவே இங்கே வெளியிட்டிருக்கிறேன். குந்தி ஒரு ஹிந்து குலத்தாய் என்னென்ன தியாகங்கள் செயகிறாள் என்பதற்கு சரியான உதாரணம். பக்தி எப்படி இறைவனை கட்டிப்போடும் என்பதற்கும் தான்.
No comments:
Post a Comment