Wednesday, May 23, 2018

MAHA PERIYAVA



பேசும் தெய்வம்:  J.K. SIVAN 


                     
 வைத்தியன் சீட்டு.

மஹா  பெரியவாளை பற்றி  கடல் மாதிரி விஷயங்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் வந்து குவிகிறது. இதெல்லாம்  ஏன்  அவர் காலத்தில்  தெரியலே?  ஏன் யாரும் நிறைய இது பற்றி பேசவில்லை.  மறைவிற்கு பிறகு தான் ஒருவருக்கு மதிப்பு  என்பது நம் போன்ற சாதாரண மக்களுக்கு தானே. மகான்களை அவர்கள் வாழ்நாளிலேயே நிறைய அறிவோமே . அவரை மலரின் தேனுக்கு அலையும் வண்டுகள் போல் நாம் அவர் அருளாசி பெற நிறைய கூட்டமாக ஓடுவோமே.


இதில் ஒரு விஷயம் இருக்கிறது.  மறைவிற்கு பிறகு ஒரு பெரிய வெற்றிடத்தை  மஹான்கள் ஏற்படுத்தி விடுகிறார்கள். அதை நிரப்ப எண்ண அலைகள் எழுத்தாக பாட்டாக, பேச்சாக  எங்கும் நிறைந்து காணப்படுகிறது.  புதிதாக  இனி காண அனுபவிக்க இயலாததை  பழைய நினைவுகளைக்  கொண்டு ஈடு கட்டுவது.  அதனால் தான் எண்ணற்ற கட்டுரைகள் பேச்சுகள், உபன்யாசங்கள், பாட்டுகள், படங்கள் எல்லாமே  ஆனால் அதில் எத்தனை உண்மையானவை என்று அறிவது மிக அரிது. உண்மையான பக்தர்கள் நடந்ததை மட்டுமே நினைவு கூறுவார்கள். சிலர் நடக்காததை நடந்தது போல் காட்டுவது சங்கடத்தை அளிக்கும்.

நான் படித்த ஒரு  சம்பவ கட்டுரை அற்புதமாக இருந்தது. அதை சுருக்கி எளிதாக்கி தருகிறேன்.

காஞ்சி மகா பெரியவா  பற்றி நினைக்கும் போதெல்லாம் நம் அனைவருக்குமே ஒரு புத்துணர்ச்சி, உற்சாகம், பக்தி பரவசம் ஏற்படும்.  ஒரு அன்பர்  சொல்வதை காது கொடுத்து கேட்போம்.

காஞ்சி பெரியவா ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள  ஒரு குடும்பம். அக்குடும்பத்தின் தலைவருக்கு, வயோதிகருக்கு பாரிச வாயு .  வலது பக்கம் பிரயோஜனம் இல்லை.  இங்கிலிஷ் மருந்து எதிர்பார்த்த பலனை அளிக்காமல் பணத்தை மட்டும் காலி செய்தது.  கிழவருக்கு பேச்சு கிடையாது.  ஞாபக சக்தி  குறைந்துவிட்டது.  

கிழவரின் குடும்பமே பெரியவா பக்தர்கள். மாமி  காஞ்சிபுரம் சென்று மடத்தில் காத்திருந்து பெரியகவா தரிசனம் பண்ணினாள். கண்களில் கண்ணீர் வெள்ளம். அருகில் சென்றபோது நமஸ்காரம் பண்ணினாள். கதறினாள்.

"பெரியவாதான் அனுக்ரஹம்  பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்".

பெரியவா  மெளனம் . அவர் கவனம் எங்கோ சென்றது. கண்கள்  அரை இமைகள் மூடின. சில நிமிஷங்கள் சென்றதும் மிருதுவான குரலில் 

" சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா.......என்ன வேணா செய்வியா?"

"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா"
"  நான் செலவை சொல்லலை. நான் சொல்லறதை வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே?" அப்படின்னா சொல்றேன்.''

"மாட்டேன் பெரியவா.  நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்" 

"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. .......கொஞ்சம் கொஞ்சமா
 நெனவு திரும்பிடும்"
'' என்ன சொல்றா  பெரியவா?  அருகில் நின்றிருந்த எல்லோருமே  ஆச்சரியத்தில்  ஆழ்ந்தனர்.
விநோதமாக அல்லவோ இருக்கிறது பெரியவா சொல்வது.  விளையாடுபவர் அல்லவே.  அந்த மாமிக்கு ஆச்சர்யம்  தூக்கி வாரி போட்டது.  

மாமியின் கணவர், நோயாளி, இப்போது,  எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா? இதுவும் ஒரு வைத்யமா? சீட்டுக்கட்டு  மருந்தா?? வாய் மூடாமல் ஆச்சர்யமாக கைகூப்பியவாறே பெரியவா முகத்தை பார்த்து சிலையாக நின்றாள் .

''என்ன  என்னையே பார்க்கறே . நான் சொன்னதை செய்வியா?''

''அப்படியே செய்றேன் பெரியவா''.

வீடு திரும்பிய மாமி பெரியவா சொன்னபடி செய்தாள். கிழவர் கண்ணெதிரே  ரெண்டு புது சீட்டு கட்டு. கிழவர் அவ்வப்போது திரும்பி திரும்பி அதை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு  சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு, ஞாபகம் திரும்பியது. கை மெதுவாக சீட்டுக்கட்டை தொட்டது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அதை பிரித்து பார்க்க முயற்சி. கொஞ்ச நாளில் வலது கையும் கொஞ்சம் ஒத்துழைத்தது. பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது.  அப்புறம் சில நாட்களில் எழுந்து உட்கார்ந்தார். வலது கை  ஊன்ற முடிந்தது. சீட்டு கட்டை எடுத்தது கலைத்தது. போட்டது.
சீட்டாட்டக்கார  கிழவருக்கு  முழு  நினைவு திரும்பியது! பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள்

 "இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா!!!!" என்று பேரனை அதட்டினார்!  ஆம். பேச்சும் வந்துவிட்டது!

இந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது "வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"
எப்படி "துருப்பு" சீட்டை கையில் எடுத்தார்......  இது அவருக்கு மட்டுமே தெரியும்....

இந்த நிகழ்ச்சி நடந்ததாக இருந்தாலும், கற்பனையாக இருந்தாலும் மகா பெரியவாளுக்கு நம்முடைய நமஸ்காரங்கள் அநேக கோடி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...