Thursday, May 10, 2018

OLDEN DAYS GAMES



நாங்கள் ஆடிய ஆட்டம்..... J.K. SIVAN இப்போது 80+ ஓடி ஆட விரும்பினாலும் முடியாது. நடப்பதே நாராயணன் செயல். நங்கநல்லூருக்குள் மட்டுமே ஸ்கூட்டர் ஓட்டுவது பித்ருக்கள் ஆசிர்வாதம். டாக்டர்கள் தரிசனம் அடிக்கடி இல்லாதிருப்பது உங்கள் அன்பு. இருபது மணி நேரத்துக்கு கிட்டத்தட்ட கண்ணனை நினைத்து எழுதுவது பேசுவது சாக்ஷாத் கிருஷ்ணனின் அனுக்கிரஹம். அவ்வளவே. வெளியே வெயில் உஷ்ணமானியின் உச்ச அளவை தொட்டு வெடித்து மேலே கிளம்ப முயற்சிக்கிறது. காற்றில் அனல். ஈரத்துண்டை மேலே போர்த்திக்கொண்டு வழக்கம் பிலால் தெருவை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். ஜன நடமாட்டம் இல்லை. ஈ காக்கா உண்மையாகவே எங்கோ நிழலில் அடைந்து தண்ணீரை தேடிக்கொண்டிருக்கும். நினைவு பின்னோக்கி போகிறது. அப்போதெல்லாம். விளையாட நிறைய இடம் இருந்தது. பையன்களும் நிறைய பேர் அண்டை அசலில் இருந்தார்கள். வீட்டிலும் யாரும் தடுக்கவில்லை. எல்லோருமே முக்கால் வாசிபேர் அரை நிஜார் சட்டையில்லாமல் தான் சுற்றினோம். காலில் செருப்பு யாருக்குமே இருந்ததில்லை. எங்கள் விளையாட்டு, ஓடிப்பிடிப்பது. கில்லி தண்டு, பச்சை குதிரை தாவுவது. ஒளிந்து கொண்டு பிடிபடும் ''டீயாண்டோர்'' (இன்று வரை இதற்கு அர்த்தம் தெரியாது. ஆனால் விளையாட்டு விதிகள் நினைவிருக்கிறது). நெருப்பு பெட்டிகளுக்கிடையே நீண்ட கம்பியையோ, காற்றாடி மாஞ்சா நூலோ இணைத்து, தூர ஒரூ முனையில் ஒருவன் மற்றொரு முனையில் மற்றொருவனோடு பேசுவோம். நாங்கள் கண்டுபிடித்த டெலிபோன் இது. கில்லி தாண்டு விளையாட்டில் ஜான் பாஷா கூரான இரு முனைகளை கொண்ட குண்டு மரத்துண்டு ஒன்றை வேப்பமரத்துக் கிளையில் செதுக்கிக் கொண்டு வருவான் அதுவே கில்லி. ஒரு சிறு குழி தோண்டி அதில் கில்லியை படுக்க போட்டு, குச்சியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் வேகமாக கில்லியை குழியை விட்டு நெம்பி தள்ளி யார் அதிக தூரம் தள்ளுகிறார்களோ. அவர்கள் தப்பினார்கள். அருகிலேயே விழுந்தால் அவ்வளவு தான். அந்த துரதிர்ஷ்ட சாலி ''காஞ்சி காய்ச்சப்' படுவான். குழியை சுற்றி ஒரு வட்டம். அதற்குள் கில்லியை போடவேண்டும். குச்சியாளன் அதை தடுக்கவேண்டும். வட்டத்துக்குள் விழுந்தால் அவன் அவுட். வெளியே விழுந்தால். அங்கிருந்து கில்லியை அடித்து தூர அனுப்புவார்கள். கில்லியை அடிக்க ஒரு தடிமனான ஒன்றரை அடி நீள குச்சி தான் தண்டு. இந்த விளையாட்டில் சமரபுரி முதலியார் வீட்டு பையன் பாலன் டெண்டுல்கார். கில்லியின் ஒரு முனையை கீழே வேகமாக தட்டி மறு முனையோடு அது மேலே எழும்பும்போது குறிபார்த்து லாகவமாக அதை குச்சியால் அடிப்பான்.விர்ரென்று பறக்கும். பல வீரர்கள் அதை பிடிக்க முயல அவர்கள் தலைக்கு மேல் அது சிக்ஸர் பிரயாணம் செய்யும். அது விழுந்த இடத்தில் இருந்து கில்லியை எதிர் கட்சியாளன் குழியை நோக்கி வீசுவான். வட்டத்தை விட்டு வெளியே எங்கோ விழுந்த கில்லி மீண்டும் அடி பட்டு பறக்கும். இப்படியே வெகு தூரம் கில்லி செல்ல செல்ல, தோற்றவன் ''கத்திக் காவடி நவாப்பு சாவடி'' என்று கத்திக்கொண்டே தலைக்கு மேல் குச்சியை பிடித்துக்கொண்டு நொண்டிகொண்டே வர வேண்டும். . சும்மா சொல்ல கூடாது. நுரை தள்ளிவிடும் ஓடி ஓடி. பச்சை குதிரை விளையாட்டில் முதலில் சின்ன பையன்கள், குள்ளமானவர்கள் குனிந்து முழங்காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு நிற்பார்கள். மற்றவர்கள் ஓடி வந்து அவர்கள் முதுகில் கைகளை ஊன்றி அவர்களை தாவ வேண்டும். கால்கள் குனிந்தவன் உடலில் படக்கூடாது. தாவும் போது தவறி விழுந்தால் அவுட். சின்ன பையன்களை தாண்டி விட்டு அடுத்து பெரிய பையன்களை தாவுவது சிரமம். கொஞ்சம் கொஞ்சமாக குனிந்தவன் நிமிர்ந்து கொண்டே வருவான். அவனை அப்போது தாண்டுவது முடியாத காரியம்.. கபடி ஆடுவோம். அனால் அதன் பெயர் ''பலீங்கிச்சு'' . பலீங்கிடுகிடு என்று மூச்சைப் பிடித்து சொல்லிக்கொண்டே நடுக் கோட்டுக்கு அந்த புறம் இருப்பவர்களை தொட்டுவிட்டு ஓடிவந்து பூமத்திய ரேகையை தொடவேண்டும். அதற்குள் தொடப்பட்ட கோஷ்டி அவன் காலை வாரி அவனை இரும்புப் பிடியாக அமுக்கி விடுவார்கள். மூச்சு நிற்கும் அவன் அவுட் . ;இல்லையென்றால் அவன் யாரைத்தொட்டானோ ஆவேன் வெளியே போகவேண்டும். காற்றாடி சீசனில் கலர் கலராக காற்றாடிகள் பறந்து மரங்களில் சிக்கும். யார் வீட்டு மொட்டை மாடியிலாவது அறுந்து விழுந்து அவர்கள் வீட்டிற்குள் மாடி ஏறி திட்டு வாங்குவது வழக்கம். இருட்டு வேளைகளில் விளையாட்டை நிறுத்திவிட்டு எல்லோரும் கூட்டமாக அமர்ந்து கதை கேட்போம். மொபைல், எலக்ட்ரானிக் கேம்ஸ், டிவி ரேடியோ, பத்திரிகை, வண்ணப் புத்தகங்கள் இல்லாத காலம், குறைந்த பக்தன் கேரம் போர்டு கூட தெரியாத கூட்டம். மீதியை அப்புறம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...