Thursday, May 3, 2018

AINDHAM VEDHAM




ஐந்தாம் வேதம் J.K. SIVAN 30 வாரணவதத்தில் வேட்டையாடலாமே. ஒருநாள் துரோணர் அனைவர் முன்னிலையிலும் தான் பரசுராமரிடம் பெற்ற பிரம்மாஸ் திரத்தை எப்படி பிரயோகிக்க வேண்டும் என்று தக்க சிஷ்யனான அர்ஜுனனுக்கு மீண்டும் உபதேசித்து, '' எனக்கு ஒரு விருப்பம் அடி மனதில் இருக்கிறதே, அதை நிறைவேற்றுவாயா அர்ஜுனா ?'' என்றார் ''குருநாதா, தாங்கள் கட்டளையிடுங்கள்'' ''என்னோடு நீ எப்போதாவது ஒரு முறை போர் புரிய நேர்ந்தால் முழுமனதோடு என்னை எதிர்ப்பாயா? எதிர்க்கவேண்டும் நீ. செய்வாயா?'' ''எனக்கு அப்படி ஒரு விதி நேர்ந்தால், குருவே, தங்கள் விருப்பப்படியே தங்கள் ஆசியுடன் கட்டளையை நிறைவேற்றுகிறேன்'' என்றான் அர்ஜுனன். தொற்று நோய், வெகு வேகமாக ஒருவரிடமிருந்து மற்றவரை அடைவது போல் துரியோதனன் கொதித்துக் கொண்டிருந்தான். பாண்டவர்களின் பெருமையையும் வளர்ச்சியையும் அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. முதலில் பீமனை ஒழிக்க வேண்டும் என்று எண்ணியவன் இப்போது பாண்டவர்கள் ஐவரையும் தீர்த்துக் கட்ட முயன்றான். துன்மதி, தீய ஆலோசனைக்குத் தான் எங்கிருந்தாலும் வலியவே உதவி வருமே. விரைவில் ஒரு அரக்கு மாளிகை தயாரானது. அது பாண்டவர்கள் தங்கி எரிக்கப்பட்டு கூண்டோடு மாள்வதற்காகவே பிரத்யேகமாக உருவாகியது.. எப்படியாவது பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, தான் அரசனாக வேண்டும் என்று கண்ணில்லாத தந்தை திருதராஷ்டிரனை வதைத்துக் கொண்டிருந்தான் துரியோதனன்.அவன் மனதில் அவர்களை அனுப்ப வாரணவதம் சிறந்த இடம் என தோன்றியது. திருதராஷ்டிரன் இதற்கு முழு சம்மதம் அளிக்கவில்லை. அவன் மனதில் தனது குமாரன் அரசனாக வேண்டும் என்ற விருப்பத்தை விட, பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரன் ஆகியோர் நடுநிலை வகித்து பாண்டவர்களையும் கௌரவர்களையும் ஒன்றாகவே கருதுவார்கள் என்றும் யுதிஷ்டிரன் அவன் சகோதரர்களில் ஆட்சியில் நாடு சிறக்கும் என்ற நம்பிக்கை உடையவர்கள் என்பதால் இத்தகைய சதித் திட்டத்துக்கு உடன்பட மாட்டார்கள் என்ற அச்சமும் இருந்தது. பாரதத்தில் ஜாதூ க்ரஹ பர்வம் என்ற அத்தியாயம் இந்த அரக்கு மாளிகை திட்டத்தையெல்லாம் விவரிக்கிறது. ஒருநாள் திருதராஷ்டிரன் ''யுதிஷ்டிரா உனக்கு வாரணவதம் கிராமம் தெரியுமா? அங்கு பசுபதீஸ்வரருக்கு விழா நடக்கிறது. அழகான ஊர் அது. எல்லா கேளிக்கைகள்,நிகழ்ச்சிகள் எல்லாம் ஊரே திரண்டு வரும் நீங்கள் ஐவரும் பார்த்து சில நாள் அங்கு தங்கி நிறைய தான தர்மம் எல்லாம் செய்துவிட்டும் பசுபதீஸ்வரர் அருள் பெற்று ஹஸ்தினாபுரம் வாருங்கள். இது சிறந்த ஓய்வாகவும் உற்சாகமூட்டும் அனுபவமாகவும் உங்களுக்கு இருக்கட்டுமே. அங்கே வேட்டையாடவும் சிறந்த விலங்குகள் காட்டில் இருக்கின்றன. பொழுது போக்கவும் சிறந்த இடம்.'' ''ஆஹா, அப்படியே அரசே. நாங்கள் உற்சாகமாக வாரணவதம் செல்கிறோம்'' என்றான் யுதிஷ்டிரன். பீஷ்மர் மற்றும் அனைவரிடமும் ஆசி பெற்று பாண்டவர்கள் வாரணவதம் செல்ல ஆயத்தமானார்கள். துரியோதனன் புரோசனன் என்ற மந்திரியை அழைத்து '' எல்லா ஏற்பாடுகளையும் காதும் காதும் வைத்தாற்போல் செய்து விடு. இனி நானே அரசன், எனவே உனக்கும் என் சந்தோஷத்திலும் செல்வத்திலும் பங்கு உண்டு என்பது நினைவிருக்கட்டும். நீ அமைக்கும் அந்த அரக்கு வீடு எளிதில் தீப்பற்றி ஏரியவேண்டும். ஆனால் எந்த சந்தேகமும் பாண்டவர்க ளுக்கோ மற்றவர்களுக்கோ எழாமல் அவர்கள் மரணம் ஏதோ துரதிர்ஷ்டவசமாக நடந்ததாக இயற்கையானதாக இருக்கவேண்டும். பாண்டவர்கள் ஒருவரும் உயிர் தப்பக்கூடாது. ஜாக்ரதை.'' யுதிஷ்டிரனும் சகோதரர்களும் பீஷ்மர் முதலானோரை வணங்கிவிட்டு வாரணவதம் நோக்கி சென்றார்கள் விதுரர் ''யுதிஷ்டிரா, நீ அறிஞன். புத்திசாலி. என்னமோ எனக்கு தோன்றிய சில அறிவுரை மட்டும் சொல்கிறேன். அரசியலில் சூது உண்டு. எதிரிகளின் நோக்கம் புரிந்துகொண்டு வருமுன் காப்போனாக இருப்பவனே தன்னையும் மற்றோரையும் காப்பாற்றிக் கொள்வான். கத்தி ஈட்டி, அம்பை விட கூரான இயற்கை ஆயுதங்கள் ஒருவனை தாக்கக்கூடும். அதை சமயோசிதமாக அறிந்துகொண்டு தற்காப்பாக இருப்பவனே பிழைக்க முடியும். எதிர்பாராத நேரத்தில் தாக்க எதிரி முனைவான் என விழிப்புடன் இருப்பவனை ஆபத்து நெருங்காது. நரி தந்திரமாக சுட்டெரிக்கும். காட்டுத் தீயிலிருந்தும் தப்பிக்கும். இரவில் நடப்பவன் நக்ஷத் திரங்களின் நிலையிலிருந்தும் வழி கண்டு கொள்வான். மனதில் அச்சம் கொள்ள மாட்டான். இதை கவனத்தில் வைத்துக்கொள்'' ''சித்தப்பா உங்கள் அறிவுரை எனக்கு நன்றாக புரிகிறது. கவனத்தோடு இருப்பேன்.'' குந்தி தருமனைக் கேட்டாள் .'' என்னடா மகனே விதுரர் உன்னிடம் ஏதோ சொன்னார், நீயும் ஏதோ பூடகமாக பதிலளித்தாய். என்ன விஷயம் சொல்கிறாயா ?'' ''ஒன்று மில்லையம்மா, புதிதாக அமைத்த மாளிகை, எளிதில் ஏதாவது ஆபத்து கவனக் குறைவால் ஏற்பட்டாலும் ஜாக்ரதையுடன் அனைவரும் மீள வேண்டிய கடமை உனக்கிருக்கிறது என்று உணர்த்தினார்'' வாரணவதத்தில் புரோசனன் பாண்டவர்களை நன்றாக உபச்சரித்து சகல வசதிகளையும் அளித்தான். பத்து இரவுகள் கழிந்தது. புரோசனன் ஒருநாள் பாண்டவர்களை சந்திக்க வந்தான்.........

1 comment:

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...