Saturday, October 15, 2022

VIVEKA CHINTAMANI

 விவேக சிந்தாமணி    நங்கநல்லூர்  J K SIVAN


யாரையா  இந்த வினோத கவிஞர்?       

  

ஒரு சின்ன  கேள்வி.  'விவேக சூடாமணி தெரியுமா?"

'எங்கோ  கேள்விப்பட்டமாதிரி இருக்கிறதே. MKT   பாகவதர் நடித்த படமா?'

'இல்லை சுவாமி.  இது   ஆதி சங்கரர் ஸம்ஸ்க்ரிதத்தில் எழுதிய வேதாந்த நூல். அது ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டு  வெளி வந்துள்ளது.
''
அப்படியா.  ஓஹோ '

''சரி இன்னொரு கேள்வி  கேட்கலாமா?''

.' ம்ம்ம்  '.

''சீவக சிந்தாமணி'' தெரியுமா?'

' சத்தியமாக  தெரியாது.  ஸார்   நான்  உ.வே சாமிநாதையர் இல்லை.  R .கோபால சாமி,  சொல்லுங்கள். கேட்கிறேன்''

''இது திருத்தக்க தேவர் என்பவர் எழுதிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று.''

''இது தெரிந்ததால் எண்ணில் எந்த மாற்றமுமில்லை ஸார்' 

''சரி  ஒரே ஒரு கடைசி கேள்வியோடு நிறுத்திக் கொள்கிறேன்.'விவேக சிந்தாமணி''  தெரியுமா ?

''இல்லை ஸார்,   தெரியாது''என்னோடு பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் சிந்தாமணி என்ற  செட்டியார் வீட்டுப் பெண்ணை த்தான் சின்ன வயசில் தெரியும்.''


 ' என்ன ஸார்  இது? அற்புதமான பாடல்கள் எளிய தமிழில் இருக்கும் இந்த  விவேக சிந்தாமணி என்ற நூலை   யார் எழுதியது. என்ற கேள்விக்கு  பதில்  ஏன் யாருக்குமே  இன்னும் தெரியவில்லை?'

 

  சரி. யாராக இருந்தால் என்ன.  எழுதிய ஆசாமி நன்றாகவே எழுதி இருக்கிறார். அதில் சில பாடல்களை இனிமேல் சொல்வதாக இருக்கிறேன்.

 

 பெண்களை உயர்வாக மதித்து போற்றி எழுதிய பாடல்கள் நிறைய  தமிழில் இருக்கிறது.   இந்த விவேக சிந்தாமணி ஆசிரியர் தான் யார் என்று காட்டிக்கொள்ளாததால் ஏதோ  ஒரு  தைரியத்தோடு ''பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே''..... என்று அல்லவோ பாடுகிறார். பாடல் எழுதிய விதத்தை மட்டும் நாம் ரசிப்போம்.  நிச்சயம் நாம் பெண்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் தயவு இல்லாமல் ஒன்றுமே நடக்காது. அடுத்த வேளை  நாம்  வீட்டில் சாப்பிட வேண்டாமா?   இன்னும் கொரோனா முழுமையாக   விலகாத   சமயத்தில் வெளியேயும் எதுவும் கிடைக்காதே.   வாங்கும் விலையிலும் எதுவும் இல்லை. யானை விலை, குதிரை விலை. 


இது தான் அந்த பாட்டு.

 

''மங்கை கைகை (கைகேயி) சொற்கேட்டு மன்னர்
புகழ் தசரதனும் மரணம் ஆனான்
செங்கமலச் சீதை சொல்லை ஸ்ரீராமன்
கேட்டவுடன் சென்றான் மான் பின்;
தங்கை அவள் சொல்லைக் கேட்டு இராவணனும்
கிளையோடும் தானும் மாண்டான்
நங்கையற் சொற் கேட்பதெல்லாம் கேடுதரும்
பேர் உலகோர் நகைப்பர்தாமே.''


''
ஆண்களே ஜாக்கிரதை , பெண்கள் ஏதாவது சொன்னால்  ''ஆஹாஇதோ''   என்று சொல்லி விட்டு ஓடிவிடுங்கள். அவர்கள் பேச்சைக்  கேட்டு எதையாவது செய்து எக்கச்சக்கமாக மாட்டிக்  கொள்ளாதீர்கள். உங்களுக்கு முன்னே இப்படி அகப்பட்ட சில அசடுகள் பெயர்கள் சொல்கிறேன். உங்களுக்கும் தெரிந்தவர்கள் தான். 

 

கைகேயி தனது கணவன்  தசரதனை பிடித்து   'நாதா எனக்கு ரெண்டு வரம் தருவதாக சொன்னீர்களே, கொடுக்கிறீர்களா என்றாள்  

''அதற்கென்ன கண்ணே, நீ கேட்டு நான் இல்லை என்பேனா''

அவள் கேட்ட வரத்தை  கொடுத்த தசரதன்  உயிரையே இழந்தான் .. 

 

''நாதா  அதோ அந்த அழகிய மான் குட்டியை பிடித்துத்  தாருங்கள்''  என்றாள் .

 மானைத்தேடி ஓடி, மனைவியை இழந்து,  மாநகரம்  இலங்கை எரிந்து,  நிறைய பேர் மடிந்து போனார்கள். பத்து தலையில் பத்து மூளை இருந்தும் முட்டாள் ராவணன். 


''அண்ணா உனக்கேற்றவள் அந்த சீதை, பேரழகி , அவளை யாரோ ஒரு மானுடன் மனைவியாக கொள்வது எவ்வளவு அநியாயம், உடனே சென்று அவளை உங்களவளாக்கிக் கொள்ளுங்கள் என்றதால் சாமியார் வேஷத்தில் சென்று சாம்ராஜ்யம், உயிர் எல்லாவற்றையும் இழந்தான். 


ஆகவே தான் சொல்கிறேன் பெண்ணின் பேச்சை கேட்காதே . ஊர் உலகமெல்லாம் உன்னை பார்த்து சிரிக்கும்'' (அம்மணிகளே , இது நான் சொல்லவில்லை... யாரோ பேர் தெரியாத விவேக சிந்தாமணி எழுதிய கவிஞர் சொன்னது என்று முன்பே சொல்லி இருக்கிறேன்).


பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரெனும்
குணம் மூடப் பேடி லோபர்
முண்** களுக்கு இணையில்லா முனை வீரர்
புருடரென மொழியொணாதே
உண்டுலகம் உதிர்ப்பாருள் கீர்த்தியறம்
இன்ன தென உணர்வே யில்லார்
அண்டினவர் தமைக் கொடுப்பா ர் அழிவழக்கே
செய்வதவர் அறிவுதானே

ஸாரி . இதை கொஞ்சம் ஸ்ட்ராங்காக, சற்று விரசமாக கூட எழுதியிருக்கிறார் கவிஞர்.
பெண்டாட்டி பேச்சுக்கு தலையாட்டுபவன் மனுசனா? குணம் கெட்டவன், முட்டாள், கருமி. விதவன்,(விதவைக்கு ஆப்போசிட் ஆக எடுத்துக் கொள்ளவும்) ஆம்பளையே இல்லை. அலி, உலகத்தில் வீரம் தர்மம் , கம்பீரம் எதுவென்று தெரியாத அறிவற்றவன். அநீதிக்கு துணை போகிறவன். அவனிடம் உதவிக்கு போகிறவனை ஆழமாக குழியில் தள்ளுபவன்..... (கவிஞருக்கு பெண்கள் மேல் என்ன கோபமோ, வார்த்தைகள் கடினமாக இருக்கிறது)

 

''ஆலகால விடத்தையும் நம்பலாம்
ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம்
கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடும் தூதரை நம்பலாம்
கள்ள வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே.''

ஐயா, நான் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள், இது அனுபவ அறிவுரை என்கிறார்  கவிஞர்.


''
ஆலகால கொடிய விஷத்தை கண்ணை மூடிக்கொண்டு நம்புங்கள். ஆழமான ஆற்றை நம்புங்கள், பெரும் சூறாவளி காற்றை தாராளமாக நம்புங்கள். மஹா பெரிய மதம் பிடித்த யானையை நம்புங்கள்,  இதில் எதுவுமே ஒன்றும் செய்யாது. அட,  யானையை விடுமய்யா. வரிப்புலி இருக்கிறதே அதை 'வாடா தம்பி'  என்று கொஞ்சி நம்புங்கள், கையில் பாசக்கயிற்றை எடுத்துக்கொண்டு நாய் பிடிப்பது போல் உங்களை பிடிக்க வருகிறானே  எம தூதன் அவனை முதலில் நம்புங்கள், திருடன் கொள்ளைக்காரன், குருவிக்காரன், போலீஸ் கார்ன்  எவனை வேணுமானாலும் நம்புங்கள், ஆனால் ஆனால் ஆனால் சேலை கட்டிக்கொண்டு உங்கள் முன் நிற்கிறாளே , தெருவில் போகிறாளே , கண்ணில் படுகிறாளே , சிரித்துக்கொண்டு... ஐயய்யோ , அவளை மட்டும் நம்பவே நம்பாதீர்கள். அவ்வளவு தான் நீங்கள்..... 

( இதை சினிமாவில் பழைய படத்தில் TMS பாடியிருக்கிறார். எந்த  சினிமா  கவிஞன் கண்ணில் இந்த பாட்டு பட்டதோ, காசு பண்ணி விட்டான்).

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...