பழங்கால கல்வி முறை -- நங்கநல்லூர் J K SIVAN
சுமார் 200 வருஷங்களுக்கு முன் நம் முன்னோர்கள் வெள்ளைக்காரன் காலத்தில் கூட கிராமங்களில் எப்படி படித்தார்கள்?
பள்ளிக்கூடங்கள் எங்காவது ஒரு வீட்டில் அல்லது ஒரு தெருப்பள்ளிக்கூடமாக, பொது இடத்தில் நடக்கும். சில மாணவர்களே அங்கே சென்று படித்தார்கள். என் தாத்தா ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதிகள் அப்படி ஒரு பள்ளிக்கூடத்தில் கருத்தட்டாங்குடி ( இப்போது கரந்தை) யில் படித்தார்.
தமிழ் ஆங்கிலம் ரெண்டுமே கற்று தந்தார்கள். லக்கம், நெல்லிலக்கம், கீழ்வாய் கணக்கு, எண் சுவடி, குழி மாத்து... இது தான் கணக்கு வகைகள் . அப்படி என்றால் என்ன என்று கேட்கவேண்டாம். எனக்கும் தெரியாதே.
தமிழ் பாடங்கள் என்ன தெரியுமா? ஆத்திச்சூடி, வேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி, வெற்றிவேற்கை, நீதி நெறி விளக்கம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, நளவெண்பா, சிறு பஞ்சமூலம் நாலடியார், குரள்,
சதகங்களும் கற்றுத்தந்தார்கள். குமரேச சதகம், அறப்பளீசுர சதகம், மணவாள நாராயண சதகம், தண்டலையார் சதகம், திருப்புகழில் நூறு பாடல்கள், இலக்கணத்தில் போப்பையர் இலக்கணம், இது அத்தனையும் ஒரு வருஷத்தில் முற்றிலும் மனப்பாடம் செய்து விட வேண்டும். அக்கால வாத்தியார் களை எவ்வளவு தான் கோவிலில் வைத்து கும்பிட்டாலும் தகும். தமிழ் அறிவை புகட்டிய புலவர்கள்.
என் தாத்தாவின் குடும்பம் பரசுராம அக்ரஹாரத்தில் வசித்தது. அக்ரஹாரத்திற்கு மேற் கே ஒரு ஜைன கோவில். அதைச் சுற்றி ஜைன குடும்பங்கள் வாழ்ந்தது. அங்கே தான் பாஹுபலி அப்பாண்டை முதலியார் என்ற ஜைன மதத்தை சேர்ந்த வித்வான் இருந்தார். அவரிடம் தாத்தா சமஸ்க்ரிதத்தில் பால சிக்ஷை, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டுவும், காரிகையும் கற்றுக் கொண்டார்.
கோவில்களில் நிறைய கல்வி ஞானம் பெரும்படியாக அக்காலத்தில் கட்டப்பட்டிருந்தது. இயல் இசை நாடகம் கோவில்களால் வளர்ந்தது. அறிவுக்கும் செவிக்கும், வயிற்றுக்கும் அங்கே உணவு எப்போதும் இருந்தது.
தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் வெளிப் ப்ரஹாரத்தில் அக்காலத்தில் திருவிளையாடல் புராணத்தை, மதுரையில் சொக்கநாதர் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களை பெரிய பெரிய வண்ணச் சித்திரங்களாக தலைப்பு போட்டு வரைந்திருந்தது. அதைப் பார்க்க எண்ணற்றோர் வருவார்கள்.
தாத்தா சிறுவனாக பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு அதையெல்லாம் பார்த்தார். பாட்டி இரட்டைப் பல்லவி தோடி சீதாராமய்யர் மனைவி. ஜானகி என்ற செல்லத்தம்மாள் . சகல புராணங்களும் அவளுக்கு மனப்பாடம். ஆகவே தாத்தா அதிர்ஷ்ட சாலியாக சிறுவயதிலேயே புராணங்களை அறிந்து பிற்காலத்தில் மஹா பெரியவாளால் புராண சாகரம் என்ற விருதைப் பெற்றதில் ஆச்சர்யம் இல்லை.
வீட்டில் திருவிளையாடல் புராணம் பழைய புத்தகம் ஒன்று இருந்தது. அதை மெதுவாக படித்து சித்திரத்தில் பார்த்ததை மனதில் பதித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment