Sunday, October 2, 2022

THEVITTADHA VITTAL A

 

தெவிட்டாத விட்டலா.  நங்கநல்லூர்  J K  SIVAN 


சேட்டு வந்தாரே .

பக்த விஜயம் படித்தவர்களுக்கு, பாண்டுரங்க பக்தர்களுக்கு  நாமதேவ், துக்காராம், ஏக்நாத், நார்ஸி மேத்தா, ,ஞானதேவ்  என்ற பெயர்கள் எல்லாம் அத்துபடி யாக  தெரியும்.  சிறந்த பக்தர்கள்.  பாண்டுரங்கனோடு உறவாடியவர்கள்.   அதில் நாம்தேவரைப் பற்றிய ஒரு சின்ன விஷயம் இந்த கட்டுரை.

''உத்தவா ,  நீ  பூ லோகத்தில்  மானுடனாகப்  பிறக்க வேண்டும்.' என்கிறான் கிருஷ்ணன்.  கிருஷ்ணனின் சிறந்த சீடன், பக்தன், உறவினன் உத்தவன். கிருஷ்ணனைப் போலவே உருவமும்  கொண்டவன். கிருஷ்ண அவதாரம் முடிந்து நாராயணனாக வைகுண்டத்தில் இருந்தபோது அங்கே அடைக்கலமானவன் உத்தவன்.  ஒருநாள் இப்படிக்கேட்டான் நாராயணானாகிய  கிருஷ்ணன்..

''ஸ்ரீ  கிருஷ்ணா,  நான்  உன்  வார்த்தை  தட்டுவேனா.  ஆனால்... ''

''என்ன  ஆனால்  என்று  இழுக்கிறாய்.  சொல்..?''

''எல்லா மானிடர் போலவும் எனக்குப் பிறக்க பிடிக்கவில்லை  ப்ரபோ''

சிரித்துக்கொண்டே  நாராயணன்  ஒரு  கிளிஞ்சலில்  உத்தவனை வானிலிருந்து  பீமாவதி ஆற்றில்  மிதக்க விட்டான்.  அவனும்  ''விட்டல  விட்டல''  என்று  உச்சரித்துக்கொண்டே  மிதந்தான்.  சிறந்த  பாண்டுரங்க  பக்தனானான்.   ஒரு  துணி தைப்பவர் அன்றாடம்  சந்திரபாகா நதியில் ஸ்நானம்  செய்து  விட்டல  தரிசனம்  செய்பவரால்  எடுத்து  வளர்க்கபட்டான்.  நாம தேவர்  என்று  பெயரும்  பெற்றான் . விட்டலன்  நிழலாகவே  வளர்ந்தான்  நாம்தேவ்.  விட்டலனும்   ஒருநாளும்  நாமதேவர் இன்றி  இருக்க முடியாது  என்ற  அளவுக்கு   மனதில்  நிறைந்திருந்தான்.   கிருஷ்ணனின் எத்தனையோ அம்சங்களில் ஒன்று விட்டலன் என்கிற விடோபா. 

  நாமதேவர்  பிறந்து  அவருக்கு  புண்யாஹவசனம்  நடநத  நாள் அன்று  விட்டலனே  நேரில்  வந்து  ஒரு  சொக்காயும்  குல்லாவும்  கொடுத்தான்.

நாமதேவ்  வளர்ந்தார்.   அவர்  சதா  சர்வ காலமும்  விட்டலன்  நினைவில் காலம்  கடத்துவது  அவரது  பெற்றோருக்கு  வருத்தத்தை அளித்தது.  பிழைப்புக்கு  வழி தேடவேண்டாமா.  வேலை  செய்ய வேண்டாமா? வறுமையிலிருந்து  மீள என்ன  வழி?  நாமதேவரிடம்  எவ்வளவோ  சொல்லி  மன்றாடினார்கள்  பெற்றோர்கள்.  

ஒருநாள் நாமதேவ்   அவர்கள்  தொல்லை பொறுக்க முடியாமல்  நேரே  பண்டரிநாதன் முன்  போய்  நின்றார்.

''விட்டலா  என்னை  ஏன்  இந்த  சம்சார  சாகரத்தில் தள்ளி வேடிக்கை  பார்க்கிறாய்?

''ஏன்  உனக்கு  என்ன  கஷ்டம்?''

''எல்லாம் என்  அம்மா தான்.  சதா   சர்வ  காலமும்  வேலைக்கு போ  சம்பாதி,  பணம்  கொண்டுவா' என்று என்னை பிடுங்குகிறாள்.  எனக்கோ  உன்னை  நினைப்பதிலும்  பாடுவதிலும்  தான்  மனம்  விழைகிறது.  இருதலைக்கொள்ளி என்பது  உண்மையில் நான்  தானோ?''

''நாமா,  நீ  எப்போதும்   என்னோடு  தான்  இருக்கவேண்டும்.   நாம்  இருவரும் வேறு வேறு  அல்ல.  கடலில்  நீரில்  கலந்த  உப்பும்  கரையில்  காய்ந்த உப்புக்கட்டியும்   ஒன்றா  வேறா?   உருவத்தால்  வேறு பட்டிருக் கிறோம் அவ்வளவே.''

''விட்டலா.  எனக்கு  நீ  வேண்டும்.  நீயே  என்  எண்ணம், செயல்  எல்லாம்.  வேறு  ஒன்றுக்கும்  என்னிடம்  இடம் இல்லை.  நீ  என்னோடு  வந்து  இரு.   உன் பக்தனாக  உன்னை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கும்  இந்த  இன்பம் ஒன்றே  எனக்கு போதுமே.

 விட்டலன்  சிரித்தான்.  அருகே  ருக்மணியிடம்  சொன்னான்: 

  ''ருக்மணி,  பார்த்தாயா நாமாவை. உருவத்தோடு  அவரிடம்  நான்  கண்களால்  பார்க்கும்படி  இருக்க வேண்டுமாம். ''
விட்டலன்   நாமதேவை  அணைத்தான். 
 ''நாமா, உன்  வீட்டு  நடப்பைப்  பற்றி   வெட்கப்படாமல்  சொல்  கேட்கிறேன்''
''விட்டலா,  உன்  அருளால்  எனக்கு  ஒரு  குறையும்  வீட்டில்  தோன்றவில்லை.  வீடு  என்று  பார்த்தால்  நாங்கள் இருப்பது ஒரு  தொத்தல்  குடிசை.  உன்  வைகுண்ட மாளிகையில்  அஷ்ட மா  சித்திகளும்  நிறைந்திருக்கலாம்.  என்  வீட்டில்  எலிகள்  அதைக்காட்டிலும்  அதிகம். நீ  பீதாம்பரம் அணிபவன். நாங்கள்  கந்தல்  கிழிசல் ஆடை ஒன்றே ஒன்றுடன்  காலம் தள்ளுபவர்கள்.  நீ  பாற்கடலில்  சேஷ நாக பாம்பணை  மேல்  மெத்து மெத்து  படுக்கை  கொண்டவன்.   ஒரு  வைக்கோல்   வைத்து தைத்த  கோணிப்பாய்   கூட  இல்லாதவர்கள்  நாங்கள்.   நீ தங்க  வட்டிலில் உண்பவன். நான்  சாப்பாடே  இல்லாததால்  இலையும் தட்டும் கூட   இல்லாதவர்கள். உன்னிடம்  நவ நிதியும் இருக்கலாம்.  எனக்கோ என் மனம்  பூரா  நீ  நிரம்பியவன்.  அவ்வளவு தான் என்  வீட்டு  விஷயம்''.

இவர்கள்  இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது  நாமதேவ்   வீட்டில்  அவர்  மனைவி ராஜாயையும்  நாமாவின்  தாய்  கோனையும்   சம்பாஷித்துக்கொண்டிருப்பது  காதில்  விழுகிறதா?

'' அம்மா, சரியான ஒரு  முத்தைப்  பெற்று என்னிடம்  கொடுத்தீர்கள். தெய்வ ஸ்வரூபம்.  சதா  அந்த  விட்டலன்
  நினைப்பே  தவிர  வீடு  வாசல், குடும்பம், குழந்தை  என்ற  எண்ணமே  இல்லையே.  எனக்கு  உடுத்த  இந்த  கிழிசலைத் தவிர  வேறு  துணிகூட  இல்லையே.  உண்ண   ஒரு  மணி  அரிசி வீட்டில் இல்லையே. எல்லோரும்  பட்டினியைத் தவிர  வேறு  ஒன்றும்  அறியோமே. என்னை  இப்படி  ஏன் சோதிக்க வேண்டும். இனி  இதிலிருந்து  மரணம்  ஒன்று  தான்  மீட்கும்  என்று  நினைக்க  தோன்றுகிறது''.

நாமாவின்  தாய்  தலை ஆட்டி ஒப்புதல்  தெரிவித்தாள் . ஒன்றும்  பேசவில்லை.  விடுவிடுவென்று  வெளியே சென்றாள் .  தெரிந்தவர்களிடம்  எல்லாம்  அரிசி, பருப்பு,  சர்க்கரை, எண்ணெய் , யாசகமாக கேட்டும்,  கடனாகக்  கேட்டும்  ஒன்றும்  தேறவில்லை. ''எல்லாம்   என்  மகன்  நாமா  இப்படி  பொறுப்பு இல்லாமல்  எப்போதும்  விட்டலா  விட்டலா''  என்று   அவனே  கதியாக  கிடப்பதால்  தானே . இதோ இப்போதே சென்று  அந்த  விட்டலனை   இதென்ன  ஞாயம்  என்று கேட்கிறேன்'' என  முடிவோடு,  நேரே  விட்டலன் ஆலயம்  சென்றாள் .  விட்டலனும் நாமாவும்  பேசிக்கொண்டிருந்த  நேரம்  அது. தன்  முன்னே  வந்து நின்ற   கோனையைப்  பார்த்ததும்  விட்டலன்  சிரித்துக்கொண்டே  நாமாவை  அவள் கண்ணில் படாமல்  தனக்கு  பின்னே  நிற்க  வைத்துக் கொண்டான்.  நாமதேவர் தாய் கொலையின்  கண்ணுக்குத்  தோன்றினான்.

''இதோ  பார்  விட்டலா,  என் மகன்  நாமா நீயே  எல்லாம்  என்று  பைத்தியமாக  அலைந்து கொண்டிருக்கிறான்.  வீட்டுக்கு  அவனால்  ஒரு  பிரயோசனமும்  இல்லை.  வீட்டிலோ வேறு  யாரும்  இல்லை.  நாங்கள்  எப்படி  வாழ்வது. நீயே  வழி சொல். நீ  ஏன்   அவனை  இப்படி உன்  மந்திரப்பிடியில் உலக  வாழ்க்கை சிந்தனையே  இல்லாமல் வைத்துக் கொண்டிருக்கிறாய். எங்களை  துன்ப நிலையில் நிறுத்தி  உன்னிடம்  அவன்  இன்பம் தேடுவது  ஞாயமா.  பிள்ளை, கணவன், தந்தை  என்ற  பொறுப்பு கொஞ்சமாவது  அவனிடம் வைக்கக் கூடாதா?  என்  குடும்பம்  வறுமையில் அழிவது தான்  உன்  விருப்பமா?  நீ  தானே   குசேலன் வறுமையைத்  துடைத்தவன்.  அவனைப்போல்  நாமாவும்  உன்  நண்பன்  இல்லையா? குசேலனுக்கு  வேறு  நாமாவுக்கு  வேறு  நியாயமா? இடுப்பில்  துணி  இல்லாத  நிலை வரக்கூடாது  என்று  தானே  திரௌபதிக்கு  உதவினாய். எங்கள்  வீட்டில்  ரெண்டு  திரௌபதிகள்  துணி  இல்லாமல்  நிற்கிறோமே  உன் கண்ணில்  படவில்லையா?''
பொரிந்து தள்ளிவிட்டாள் கோனை.
விட்டலன்  அமைதியாக   புன்முருவலித்தான் . 
'அம்மா,என் மேல்  எதற்கு  கோபப்படுகிறாய்?  உன் பிள்ளை  உங்கள்  நினைவே  இன்றி  என் மேல்  பாசம் கொண்டதற்கு  நான்  பொறுப்பா?  உனக்கு  உதவவில்லை என்பதற்காக  என்னிடம்  நட்பு  நேசம்  எல்லாம்  கொள்வது தவறா? நாமாவை  என்னிடம்  இருந்து பிரிக்கவேண்டும் என்கிறாயா.  சரி, உன்  மகனை  கூட்டிக்  கொண்டு போ.  நானா  தடுத்தேன். கனி  முற்றி  கிளையிலிருந்து  விடுபட்டால்  அது இயற்கை.  என்  மீது உண்மை பக்தி கொண்டதால்  நான்  நாமாவின் கண்ணுக்கு  தெரிகிறேன். பேசுகிறேன்.  அதனாலேயே  நாமாவின் பக்தியால்  உன்னிடமும்  பேசுகிறேன். நாமாவைப் பெற்றதற்கு  நீ  கொடுத்து வைத்தவள்.  கையில்  அமிர்தத்தை வைத்துக்கொண்டு  அடுத்த  வேளை  சோற்றுக்கு ஏனோ அலைகிறாய்.?''

''என்னவோ  விட்டலா.  நீ ரொம்ப ரொம்ப கெட்டிக்காரன். ஆனாலும்  உன்  பேச்சு  திருப்தியாக  இல்லை.  சிறுவயது முதல்  நாமாவை எடுத்து வளர்த்து  ஆளாக்கி  இன்று   நிர்கதியாக ஒரு உதவியுமின்றி  நிற்கிறோம்.  உனக்கே  இது  சம்மதம் என்கிறாயோ?''

நீ  செய்த  புண்ணியத்தின்  பலனாக  நாம்தேவ்  உன்  மகன்  என்பதைப் புரிந்துகொள். நீ  தான்  சகல  ஐஸ்வர்யமும் படைத்தவள்அதிர்ஷ்டசாலி. பக்குவப்படு.''

கோனை  பெருமூச்சு  விட்டாள் . அருகிலே  இருந்த  ருக்மணி  சத்யபாமாவிடம் முறையிட்டாள் .  ''நீங்களாவது  நான்  சொல்வதைப்  புரிந்துகொள்வீர்களா?   நாமா  எனது ஒரே  மகன்.  நாங்கள்  பரம  ஏழைகள்,  திக்கற்றவர்கள்.  உண்ண  உணவில்லை. படுக்க  பாயில்லை.  கட்ட  துணியில்லை.  விட்டலன்  என் மகனோடு  நேசமாக இருக்கிறானே. என்  நாமாவை என்னிடமிருந்து  பிரித்து, தனக்கு என்று எடுத்துக்கொண்டானே.   குடும்ப தெய்வமாக  இருப்பவன்  எங்களை  கஷ்டத்திலிருந்து  விடுபட  வைக்க வேண்டாமா?  நீங்களே  
விட்டலனோடு  என் வீட்டுக்கு   வந்து  நிலைமையைப் பார்த்து  நியாயம்  புரியவேண்டும்.''

அவள்  பார்வை  இப்போது  பேசாமல்  நின்றிருந்த  நாமாவின் மேல்  பாய்ந்தது. 
''நாமா,  எதற்கு  இங்கே  நிற்கிறாய்.  வா  என்னோடு  வீட்டுக்கு.  விட்டலன் இடுப்பில்  கையைக்கட்டிக்கொண்டு  செங்கல்  மீது  நின்று கொண்டிருக்கட்டும்.  நீ  கிளம்பு.  உன்னை  இங்கு  இனி  விட்டு  விட்டு நான்   வீடு  திரும்ப மாட்டேன்.''

ருக்மணி  பதில் சொன்னாள் :   ''கோனை,  உன்  மகன்  நாமாவோடு  வீடு  திரும்பு.  எங்களைக்  குறை சொல்லாதே.
புரிந்து கொள். நாமா   பந்த பாசம்  எல்லாம்  விட்டு,  கிருஷ்ணனாகிய பாண்டுரங்கனை  அணுகியது  தவறா  என்று  நீயே  உணர்வாய். உன் மகனை
க்  கையைப்  பிடித்து  கூட்டிக்கொண்டு போ;;

 கோனை  அவ்வாறே செய்தாள் .   நாமா  ஒன்றும்   பேசவில்லை.  அவரது  கண்களில்  நீர்  வழிந்தது.  அவர்கள்  வீடு  திரும்பி  உள்ளே  நுழையும்போது  கம  கம வென்று  நாமாவின் மனைவியின்  சமையல்  தயாராகிக் கொண்டிருந்தது.
''ராஜாய்  என்ன ஆச்சர்யம், எப்படி வீட்டில் சமையலுக்கு சாமான்கள் கிடைத்தது?'' என்று கேட்டாள்  கோனை மருமகளிடம்.

''அம்மா, சற்று நேரம் முன்பு  யாரோ ஒரு  பணக்கார சேட்டு வந்தார்.  உங்கள் மகன்  நாமாவின்  நண்பராம்,  வந்து  நிறைய  பொற்காசு, துணி மணி,மூட்டை மூட்டையாக குடும்பத்துக்கு தேவையான சாமான்கள்  எல்லாம்  கொடுத்துவிட்டுப்  போனார்'' என்றாள் 
யார் அந்த சேட்டு என்று உங்களுக்கே தெரிந்திருக்குமே 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...