நவ பாஷாணம். - நங்கநல்லூர் J K SIVAN
நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு வார்த்தை, நவபாஷாணம், ஆனால் அதன் விவரம் தெரியாது, தெரிந்து கொள்ள
முயற்சிப்பதும் இல்லை. இன்று உங்களைப் பிடித்து எனக்கு தெரிந்த கொஞ்ச விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும்.
நவம் என்றால் ஒன்பது. பாஷாணம் என்றால் விஷம்.அதென்ன ஒன்பது வகை விஷம்? இது கொல்வதற்கு அல்ல. சித்தர்கள் கெட்டியாக பலப்படுத்த, ஸ்திரப்படுத்த, உபயோகித்த மருந்து எனலாம். அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் என்று கோவில்களில் சொல்கிறோமே, பகவான் விக்ரஹங்களை கர்பகிரஹத்தில் ஸ்தாபனப் படுத்த உபயோகிப்பது நவபாஷாணம். 64 தினுசு பாஷாணங்கள் இருக்கிறதாம். அதில் நீலி என்ற பாஷாணம், மற்ற 63 ஐயும் காலி பண்ணிவிடுமாம். கெமிக்கல் என்று சொல்கிறோமே அது போல சித்தர்கள் கண்டுபிடித்த இந்த 9 நவ பாஷாணங்கள் பெயர் நமக்கு ரொம்ப புரியாது என்றாலும் சொல்லிவிடுகிறேன்.
1.சாதிலிங்கம். 2.மனோசிலை 3.காந்தம் 4.காரம் 5.கந்தகம் 6.பூரம் 7.வெள்ளை பாஷாணம் 8.கௌரி பாஷாணம் 9.தொட்டி பாஷாணம். எல்லாமே நவக்கிரஹ சக்தி கொண்டவை. ஆகவே விக்ரஹங்களுக்கு நவக்ரஹ சக்தி கூடுதலாகும்.
நவபாஷாண விக்ரஹங்கள் என்றால் நமக்கு ஞாபகத்துக்கு வருவது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், போகர் ஸ்தாபனம் செய்தது. பழனி முருகன். கொடைக்கானல் அருகே பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில் தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ள நவபாஷாண லிங்கங்கள். ,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. நவபாஷாண விக்ரஹ அபிஷேக தீர்த்தம் வியாதி நிவாரணி.
சித்தர்கள் இந்த பாஷாணங்களை தயாரிக்கும்போது, அவற்றை தனித்தனியாகவோ, ஒன்று சேர்த்தோ, அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிதார்கள். ஸ்புடம் போடுவது என்று பெயர். எரு, வறட்டி சிரா, எல்லாம் சேர்த்து அளவோடு எரிப்பதில் சில வகைகள் இருக்கிறது. . வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் அமையும்.
ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். காடைபுடம் 1; கவுதாரி 3; சேவல் 10; பன்றி 50; கனம் 700; கசம் 1000 என்று வறட்டி எண்ணிக்கை நமக்கு தலையைச் சுற்றும். வேண்டாம். போதும். மேலே சொன்ன பொருள்களோடு, மணல், தண்ணீர்,உமி, நெல், சூரியன் ஒளி, நிலவொளி, பௌர்ணமி நிலவு, அமாவாசை இரவு, பனி, மரத்தூள், வெளிச்சமே இல்லாத இருட்டு அறை இதெல்லாம் கூட ஸ்புடம் போட தேவையாம். போகர் என்கிற சித்தர் பல இடங்களில் கோவில்களில் மூல விக்ரஹங்களை நிறுவியவர்.
நிறைய இடங்களில் நவ பாஷாண லிங்கங்களை தரிசித்திருக்கிறேன். அர்ச்சகர்கள் சொல்லி கேள்விப்பட்டது தான்.
No comments:
Post a Comment