நல் வாழ்வுக்கு சில நல்வழிகள் - நங்கநல்லூர் J K SIVAN
கோவிலுக்கு செல்லும்போது உடலும் உள்ளமும் சுத்தமாக இருந்த அனுபவம் அதை பெற்றவர்களுக்கு மட்டும் தெரியும். உள்ளம் கெட்டுபோய், பொய் ,பித்தலாட்டம், வஞ்சகம், எல்லாம் குடிபுகுந்து மனசாட்சி மாண்டு போகிறது. பக்தியை உணரும் சக்தி தொலைந்து போய்விட்டது.
அடுத்த தலைமுறையையாவது நன்றாக வாழ சொல்லிக் கொடுக்கவேண்டும். இறையன்பு, தியாகம், சேவை, பொதுநலம் நட்பு இதெல்லாம் தெரிய பக்தி அவசியம், அதற்கு கோவில் முக்கிய ஸ்தலம்.
மிலிட்டரி போலீஸ் காரனுக்கு யூனிபார்ம் எனும் சீருடை ஏன்? அந்த உடை மற்றவர் மனதில் ஒரு மதிப்பு, பயம் உண்டாக்குகிறது. அதனால் அந்த உடையணிந்தவனுக்கு கௌரவம். அந்தஸ்து. அதுபோல் தான் நெற்றியில் சின்னம் அணிவது, விபூதி, சந்தனம், குங்குமம், நாமம், கழுத்தில் மாலைகள் மணிகள் அணிவது எல்லாம் உள்ளத்தூய்மைக்கு பெரிதும் உதவுவன .
ஒரு பித்தளை சொம்போ , தவலையோ , குடமோ கிணற்றில் விழுந்து விட்டால், பல வருஷங்கள் கழித்து அதை வெளியே எடுக்கும்போது எவ்வளவு கறை படித்து நிறம் மாறி கறுத்துப் போகிறது. அதை எத்தனை தடவை புளி சாம்பல் போட்டு தேய்க்கவேண்டும். அப்புறம் தானே பழைய நிறம் கிடைக்கும். அதுபோல் பல ஜென்மங்களாக நமது மனதில் படிந்த தீய எண்ணங்களை, வாசானாஸ் எனும் ஸம்ஸ்காரங்களை, நினைவுகளை, இந்த ஒரு ஜென்மத்தில் போக்க, அது பளிச்சென்று ஒளிவீச, நிறைய முயற்சிகள் எடுத்து நல்ல உபதேசங்களை பெற்று, பூஜைகள், உபவாசங்கள் விரதங்கள், புலன் கட்டுப்பாடுகளோடு இருந்து துலக்கிக் கொள்ளவேண்டும். ஆன்ம சுத்தி என்பது இது தான்.
விஷமம் பண்ணி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை பிடித்து, நேற்று விஜயதசமி அன்று பள்ளிக்கூடத்துக்கு தூக்கிக் கொண்டு போய் அழ அழ சேர்த்து விட்டாகியது. இனி அது நேரம் காலம் எப்போது என்ன பண்ண வேண்டும் என்று ஒரு வழக்கத்துக்கு வந்துவிடும்.அப்புறம் விஷமம் குறைந்தோ, மறந்தோ, மறைந்தோ போகும், அது போல் தான் உலக வாழ்வில் கெட்ட விஷயம், செயல்கள்,பாப காரியங்கள் செய்யாமல் தடுத்து ஒரு முறையாக நேர்மையாக நெறியோடு வாழ உதவும் பள்ளிக்கூடம் தான் வேத சாஸ்திரங்கள்.
எல்லோரிடத்திலும் அன்பு, நட்பு, தாராள மனம், பக்தி நிறைந்த மனம் உடையவனும் சங்கீதம் ஒரு வெளிப்பாடு. அற்புதமாக தன்னை இறைவனோடு இணைத்துக்கொண்டு அனுபவிப்பதை பிறரும் அனுபவிக்க உதவுவது தான் சங்கீதம்.
இன்னும் நிறைய சொல்ல விருப்பம். கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்.
No comments:
Post a Comment