அப்பிஸி வந்தாச்சு - #நங்கநல்லூர்_J_K_SIVAN
ஐப்பசி மாதம் பிறந்து அதற்குள் ரெண்டுநாள் ஓடிவிட்டதே. போனமாதம் புரட்டாசி, பெருமாளுக்கு ஸ்பெஷலாக அமைந்தது. அதே உற்சாகத்துடன் ஐப்பசி முருகனுக்கும் பரமேஸ்வரனுக்கும் உகந்ததோ?ஒவ்வொரு தமிழ் வருஷத்திலும் ஏழாவது மாதம் ஐப்பசி. சூரியன் துலா ராசியில் நுழைந்து காப்பி குடித்துவிட்டு சற்று உட்கார்ந்து விட்டு போய்ட்டு வரேன் என்று புறப்படுவதற்கு இந்த மாதம் 29 நாள் டைம் கொடுக்கிறது.
ஐப்பசி பற்றிய ஒரு பாடல்:
‘‘ஐப்பசியதனிலோடுந் நீர்வரத்து
குன்றுமதனோடு நீருக்கு அலைதலுஞ்
சேரும். தானியமெலாம் பொன்னுக்கு
நிகரொப்ப நிற்கும் மெய்யே’’
அடேடே , கொஞ்சம் தண்ணீருக்கு தட்டுப்பாடு என்கிறதே பாடல் ! ஆற்றில் நீர் போக்குவரத்து குறையுமாம். தானியங்கள் விலைவாசி எகிறுமாம்.
ஆற்றில் தண்ணீர் போனாலும் வந்தாலும் விலைவாசி ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு ஏறிக்கொண்டு தானே இருக்கிறது. இதைப்பற்றி யார் கவலைப்படு கிறார்கள்?
பழமொழி சொல்வதைப் பார்த்தால் ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் இல்லையோ?அடைமழை என்றால் நீர் போக்குவரத்து அதிகமாக அல்லவோ இருக்கவேண்டும். எங்கேயோ உதைக்கிறதே.
ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தருமாமே. ஐப்பசியை துலா மாதம் என்கிறோம். மிக முக்கிய ஹிந்து பண்டிகை தீபாவளி இந்த மாதம் தானே வரும்.
ஐப்பசி ஒரு புனித மாதம். இந்தியாவில் உள்ள எல்லா புண்ய நதிகளும், நமது தமிழகத்தில் ஓடும் காவேரி நதியைத் தேடி வந்து சங்கமமாகும் என்பதால் காவேரியில் துலா ஸ்னானம் ஒரு அற்புத நிகழ்ச்சி. நான் மாயவரத்தில் துலாஸ்நானம் செய்த அனுபவம் நினைவுக்கு வருகிறது. சரியான கும்பல்.
துலாம் ராசி நவகிரகங்களில் சுக்ரனின் ராசியாகும். காவிரியாற்றின் நடுவே பள்ளிகொண்ட ஸ்ரீ ரங்கநாதர் சுக்ரனின் அம்சம். அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அம்மும்.
தமிழ்க் கடவுள் கந்தவேளை வேண்டி, நினைத்து சஷ்டி விரதம் இருப்பது இந்த மாதம் தான்.
இம்மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் எல்லாம் பரமேஸ்வரனின் லிங்க ரூபத்திற்கு அற்புதமாக அன்னாபிஷேகம் செய்வார்கள். ஒரு சிவராத்திரியில் நள்ளிரவு தாண்டியும் பெரிய கூட்டத்தில் கங்கை கொண்ட சோழ புறம் ப்ரஹதீஸ்வரருக்கு அன்னாபி ஷேகம் நடக்கும்போது நான் தரிசனம் செய்தபோது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
கேதார கவுரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி --- இதெல்லாமும் ஐப்பசியில் தான்.
ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்வதால் நரம்பு தளர்ச்சி ப்ராப்ளம் போய்விடும். நோய்கள் விலகும். தேக பலத்துடன் ஆத்ம பலமும் கைகூடும். இதெல்லாம் நமது பாரம்பரிய நம்பிக்கை. பலர் அனுபவத்தால் பின்பற்றப்படுபவை.
No comments:
Post a Comment