Monday, October 31, 2022

MY ANCESTORS

என் முன்னோர் பழங்கதை   --   #நங்கநல்லூர்_j_k_SIVAN
 
தமிழ் பண்டிதர்  அறிமுகம் -  

என்  அம்மா வழி தாத்தாவுக்கு   ஏழு, எட்டு வயதிருக் கலாம்.  தஞ்சாவூர்  கருத்தட்டான் குடி (இப்போது கரந்தை)யில் வெள்ளைக்கார அரசாங்க  முனிசிபாலிடி பள்ளிக்கூடம் இருந்தது. அதில் ரெண்டாவது வகுப்பில்  சேர்த்து விட்டார்கள்.இங்கிலிஷ், தவிர  நன்னெறி, நல்வழி, போப்  ஐயர்  இலக்கணம் சொல்லிக்  கொடுத்தார்கள்.  மற்ற மாணவர்களுக்கு இது கடுமையாக இருந்தாலும் தாத்தாவுக்கு ஈசியாக இருந்தது. அவர் தான் ஏற்கனவே  தமிழ் நூல்கள் கற்றிருந்தாரே. பள்ளிக்கூடத்துக்கு எதிரே ஒரு வீடு. அதில் இருந்த பையன் தாத்தா நண்பன். 

ஒரு நாள்  அவன் வீட்டுத் திண்ணையில் அவனுக்கு தமிழ் இலக்கணம்  கஷ்டமாக இருந்ததால்  தாத்தா அவனுக்கு சொல்லிக்  கொடுத்துக் கொண்டிருந்தார். வாசலில் அப்போது ஒரு ஒற்றை மாட்டு வண்டி வந்து நின்றது. அதில் நிறைய  புத்தகங்கள். வீட்டுக்குள்ளே இருந்து  தடியாக, கருப்பாக,  வாட்ட சாட்டமாக,   நீளமான  கோட்டு , தலைப்பாகை  அணிந்து, நரைத்த மீசை,  கையில் சில புத்தகங்களுமாக ஒருவர்  வெளியே வந்தார்.  வாசலில் திண்ணையில்  தாத்தா  பாடம்  சொல்லிக்  கொடுப்பதை  சற்று நின்று கவனித்தார். முகத்தில் புன் சிரிப்பு.  தாத்தாவின் நண்பன்  பயபக்தியுடன், கையைக் கட்டிக்கொண்டு  வாய் பொத்தி அவரைக்  கண்டதும் எழுந்து நின்றான். 

''டேய் ,குமாரசாமி, அந்த  ஐயிரு  பையன் சொல்லிக் கொடுக்கிறதை கவனமாகக் கேள்'' என்றார்.   தாத்தா எழுந்து நின்றதை கவனித்து,  கை  ஜாடை காட்டி  உட்காரு என்றவர் , 

''நீ  எங்கே படிக்கிறே?'' என்று கேட்டார்.

''இதோ எதிர்த்த முனிசிபாலிடி பள்ளிக்கூடத்தில்  இந்த பையனோடு படிக்கிறேன்''

''நீ  நாளைக்கு காலை 7 மணிக்கு இங்கே வந்து  என்னைப் பார்''

அந்த பெரியமனிதர்  வாசலில் மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து, கையில் இருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார்.   வண்டி புறப்பட்டது.''நான் இவரை  கருத்தட்டான் குடி  தெருவில்   வரும்போது போகும் போதெல்லாம்  இந்த மாட்டு வண்டியில் போவதைப்  பார்த்திருக்கிறேனே , எப்போதும் கையில் ஏதோ ஒரு புத்தகத்தை பிரித்து படித்துக்கொண்டே வண்டியில் போவார்.  இவர் இந்த வீட்டில் இருப்பவர் என்று இப்போது தான் தெரிகிறது''   என்று தாத்தா நினைத்தார். நண்பனைக்  கேட்டார்.

''குமாரசாமி, இந்த பெரியவர் யார்?''
''எங்க   ஆஞா (தந்தையார் ) அப்பாரு,  கும்பகோணம் காலேஜிலே  இலக்கண வாத்யார்''  என்றான். 

எதிரில் பள்ளிக்கூட மணி  டாங் டாங்  என்று சப்தம் எழுப்ப ரெண்டு பேரும்  பள்ளிக்கூடத்துக்கு ஓடினார்கள். சாயந்திரம் பள்ளி விட்டதும் தாத்தா வீட்டுக்கு போய் அண்ணா சீதாராம பாகவதரிடம்  நடந்ததை சொன்னார்.

''உனக்கு எப்படி  காலேஜ்  தமிழ் வாத்யாரை தெரியும்?'

'''என் சிநேகிதன் குமாரசாமியின் அப்பா'

'''உன்னை  நாளை  காலை 7 மணிக்கு வரச்சொன்னார் என்றால் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கும். நானும் உன் கூட வருகிறேன்.  
அவர்   திரிசிரபுரம்  மஹா வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணாக்கர். காலேஜில் பிரதம தமிழ் பண்டிதர்.''வசிஷ்டா, நீ சொல்கிற  தமிழ்  பண்டிதர்   நம்ம வீடு பக்கம் இருக்கும்  காலேஜ் ப்ரபசர் ரங்கசாமி ஐயர் அம்மான்சேய்க்கு (அம்மாஞ்சி)  வேண்டியவர். ஐயாசாமி  பிள்ளை என்று பெயர்''  என்றார். 
தாத்தாவின் அண்ணா  சீதாராம பாகவதருக்கு  பிள்ளை  பரிச்சயமானவர்.  மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு அநேக  மாணாக்கர்கள் (ஒருவர்  உ.வே. சா)  அவர்களில் ஒருவர் மாயவரம் சுவாமிநாத கவிராயர்.

கவிராயர் தஞ்சாவூர்  கீழக்கோட்டை வாசல் வெள்ளைப் பிள்ளையார் கோவிலில்  கம்ப ராமாயணம் பிரசங்கம் செய்வார்.  எப்படியும் ஆயிரம் பேர் வருவார்கள். அவருக்கு நடுநடுவே  ராமாயண பாடல்களை ராகமாக பாட  சீதாராம பாகவதர் உதவுவார்.  இந்த பிரசங்கத்தை கேட்க வருபவர்களில் ஒருவர்  தான் மேலே சொன்ன  குமாரசாமியின் அப்பா ஐயாசாமி  பிள்ளை. அப்படி தான்  பாகவதருக்கு பழக்கம்.


ஆகவே மறுநாள்  வீட்டில் தாத்தாவோடு அவரைப் பார்த்ததும் பிள்ளைக்கு ஆச்சர்யம்.

''அட  பாகவதர் வாள்,  நீங்களா, இந்த பையன் யார்'' என்று தாத்தாவைப் பார்த்து பிள்ளை கேட்டார்

.''என் தம்பி'''

'இந்த பையன்  ரொம்ப கெட்டிக்காரனாக இருக்கிறான்.  இலக்கணம் நன்றாக தெரிகிறது. இலக்கியமும் கற்றுக்  கொள்ளவேண்டும்.  இவன் பேசுவதைக் கேட்டேன் நன்றாக  இயல்பாக இருக்கிறது.  பிள்ளை  ஒரு புத்தகத்தை எடுத்து தாத்தாவிடம் நீட்டினார்

'இந்தாடா,  இதைப் படித்துக் கொண்டு வா ''  

பிள்ளை கொடுத்த புத்தகம்  அதிவீர ராம பாண்டியன் எழுதிய நைடதம். தாத்தா அதை ஒரு மாச காலத்தில் படித்து மனப்பாடம் பண்ணிவிட்டார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...