ஒரு நேர்மையான நல்ல க்ரஹம் :
#நங்கநல்லூர்_j_k_SIVAN
இன்று சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்த நாள்.அவனைப்பற்றி சிறிது சிந்திப்போம்.
யாரையாவது பற்றி கோபமாகவோ, பிடிக்காமலோ பேசும்போது ''அது ஒரு சனி'' என்கிறோமே யார் அந்த சனி என்று தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கிறது.
சூர்ய பகவான் பிள்ளை தான் சனி. அம்மா சாயா. நிழல் என்ற பொருள். சனீஸ்வரன் ஒரு சாயா க்ரஹம் என்று நவகிரஹங்களில் அடையாளம் காண்கிறோம். நவகிரஹங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது நெடுநாள் நம்மை பாதிப்பது சனீஸ்வரன் தான். ஏழரை ஆண்டுகள். ஏழரை நாட்டு சனி அதனால் தான். இன்னொரு விஷயம், சனீஸ்வரனின் சகோதரன் தான் யமதர்மன். சிவ பக்தன். அவன் ஒருவனுக்கு தான் ஈஸ்வரன் என்ற பட்டப்பெயர். மற்ற நவகிரஹ தேவதைகளுக்கு இந்த பட்டம் கிடையாது. ஒருவனுடைய நல்ல காலம் கெட்ட காலம் ரெண்டுக்குமே பொறுப்பானவன் சனீஸ்வரன்.
நவகிரஹத்தில் எல்லாமே சூரியனைச் சுற்றி வருபவை தான். சிலது வேகமாக, சிலது மெதுவாக. சனீஸ்வரன் ஒரு தடவை சூரியனைச் சுற்றி வர 29.5 வருஷங்கள் என்றால் எவ்வளவு மெதுவாக என்று புரியும். சூரியன் அதற்குள் பல ராசிகளுக்கும் நுழைந்து வெளிப்படுகிறான். சனீஸ்வரன் சௌகர்யமாக ஒவ்வொரு ராசியிலும் ரெண்டரை வருஷம் தங்குகிறான்.மூன்று மடங்கு தங்குவதும் உண்டு அது தான் ஏழரை நாட்டான்.
சனீஸ்வரன் குழந்தைப் பருவத்தில் தாய் உணவு ஊட்டும்போது ஒரு காலால் உதைத்து சண்டித்தனம் பண்ணியதால் ஒரு கால் ஊனமாகியது என்று ஒரு கதை. அதன் விளைவாக நமது ஜாதகத்தில் சனி துரிதமாக நகரமாட்டேன் என்று ஏழரை வருஷம் உட்கார்ந்து கொள்கிறான். என்ன செய்வது? மந்த கிரஹம் என்று அவனுக்கு பெயராச்சே. சனீஸ்வரன் மனைவி பெயரும் மந்தா தேவி.
சனீஸ்வரனை தங்க நிறத்தில் பார்க்க முடியாது. கருப்பு. அவன் வாகனம் வேறு கருப்பு நிற காக்கை. காரணம்? சூரியன் அப்பா உஷ்ணமாச்சே. அப்பா அருகில் சனி அடிக்கடி சென்று சூடு அவன் மேனியை கருக்கி விட்டது.
சனீஸ்வரன் ஆடை, வஸ்திரம் கூட கருப்பு நிறம், அல்லது கரு நீல நிறம்.
சனி பாரபக்ஷம் அற்றவன். நாம் செய்யும் தவறுகளுக்கு தக்க தண்டனை தருபவன். நமது நல்ல செயல்கள் எண்ணங்கள் அவனை நமக்கு பொங்கு சனியாக அளிக்கிறது. எல்லோர் வாழ்க்கையிலும் இது சகஜம். சனீஸ்வரன் நல்லவர்களுக்கு நல்லவன், தீயவர்களுக்கு கொடியவன். தர்மராஜன் சகோதரன் அல்லவா. சனியின் பார்வையே நம் மேல் படக்கூடாது என்பார்கள். சனீஸ்வரன் சந்நிதியில் தரிசனம் பண்ணுபவர்கள் பக்கத்தில் நின்று தான் அவனை தரிசிக்கவேண்டும் நேரே நின்று பார்க்க கூடாது என்று சொல்வதுண்டு.
ராவணன் எல்லா தேவர்களையும் கிரஹங்களையும் சிறையில் அடித்தபோது சனீஸ்வரனையும் விடவில்லை. ஹனுமான் தான் சனீஸ்வரனை விடுவித்தான் என்று ஒரு கதை.
சனி தோஷம் நீங்க உச்சரிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம் இது: விடாமல் 108 தடவை சொல்வதால் சனீஸ்வரன் பாதிப்பு இருக்காது என்பது முன்னோர்கள் அனுபவம்.
ॐ नीलांजनसमाभासं रविपुत्रं यमाग्रजम।
छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् ||
Om Nilanjana Samabhasam Ravi Putram Yamagrajam |
Chhaya Martanda Samhubhutam Tama Namami Shanescharam ||
''கரு முகில், நீல மேகம் போன்றவனே, சூரிய குமாரனே, கட்டி ஆள்பவர்களில் முக்கியமானவனே , சூரியனையே தன்னுடைய நிழலால் மறைக்கக்கூடியவனே, ஹே, சர்வ வல்லமை கொண்ட சனீஸ்வரபகவானே, உன்னை பரம பக்தியோடு சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.''
சனீஸ்வரனுக்கு எள்ளை முடிந்து வைப்பதும், நல்லெண்ணெய் தீபம் ஏறுவதும் வழிபாடு. கருப்பு, கருநீல ஆடைகள் அணிவதும் ஒரு வித பக்தி. ஷீர்டி செல்லும் வழியில் சனி சிங்கணாபுர் என்கிற கிராமமே சனீஸ்வர க்ஷேத்திரம். தெற்கே பாண்டிச்சேரியில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் சனீஸ்வர நவகிரஹ க்ஷேத்திரம். இது பற்றி நிறைய எழுதி இருக்கிறேன்.
No comments:
Post a Comment