வேங்கடேசன் கிருபை - #நங்கநல்லூர்_J_K_SIVAN
இன்று புரட்டாசி சனிக்கிழமை. திருப்பதி வெங்கடேச பெருமாளை நினைத்து பிரார்த்தித்தேன். வாசலில் ரெண்டு பேர். ஒரு பெண்ணும் அவள் குழந்தையும். கோவிந்தா கோவிந்தா என்று மஞ்சள் ஆடையில் கையில் சொம்புடன். திருப்தியாக காசு போட்டேன்.
ரெண்டு நாள் முன்னாள் திருவள்ளூர் திருத்தணி போனேன். அப்போது வழியில் திருப்பதிக்கு வெறும் காலோடு நூற்றுக்கணக்கான பக்தர்கள், ஆணும் பெண்ணும் தலையில் பைகள், மூட்டைகளை சுமந்தவாறு, மஞ்சள் ஆடைகளுடன் கூட்டமாக நடப்பதை திருத்தணி சாலையில்பார்த்தேன்.
நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் நடந்து வருகிறார்கள். ஏன் திருப்பதி வெங்கடாசலப்பதியை மட்டும் தேடிக்கொண்டு எங்கிருந் தெல்லாமோ கோடானு கோடி பக்தர்கள் வருகிறார்கள். மணிக்கணக்காக நின்று ஒரு வினாடி தரிசனம் ரொம்ப தூரத்திலிருந்து பெறுகிறார்கள்.கிட்டே போகக்கூட முடியவில்லை... காரணம் அவன் ஒருவன் தான் கலியுக வரதன் என்று நிரூபிக்கிறவன் ''கோவிந்தா, கோவிந்தா, ஏடு கொண்டலவாடா'' என்று லக்ஷம் குரல்கள் கேட்கும்போது உடல் சிலிர்க்கிறது. தீராததை தீர்த்து, முடியாததை முடித்து, ஆபத்திலிருந்து காப்பாற்றி, வேண்டியதை தந்திடும் வெங்கடேசன். நமக்கு மட்டும் அல்ல ஹிந்து அல்லாத வெள்ளைக்காரனுக்கு கூட அருள் புரிந்தவர். எல்லாம் வேங்கடேசன் மேல் உள்ள பக்தியால் தான். அது பற்றி தான் இப்போது சொல்லப்போகிறேன்.
திருப்பதி என்றால் மனதில் தோன்றுவது லட்டு தான். இந்த லட்டு 1940ல் தான் பிரசாதமாக விநியோகப்பட்டது. அதற்கு முன் அங்கே பொங்கல் வடை தான் பிரசாதம். இன்றும் எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாக, நிவாரணமாக இந்த திருப்பதி பிரசாதம் இருந்துவருகிறது.
சென்னையில் தீவுத் திடல் சாலையில் அழகிய குதிரை மேல் அமர்ந்திருக்கும் வெள்ளைக்காரர் பெயர் தான் தாமஸ் மன்றோ. வெள்ளைக்காரன் காலத்தில் சென்னபட்டண கவர்னராக இருந்தவர். முந்தைய கட்டுரையில் இவர் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமியை நேரில் பார்த்து பேசியதை, அவரால் நமக்கு மந்த்ராலயம் கிடைத்ததையும் பற்றி எழுதி இருந்தேனே.
மன்றோ ஸ்காட்லாந்கில் க்ளாஸ்கோ GLASGO ஊரை சேர்ந்த ராணுவ வீரன். 1779ல் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்தான். மல்யுத்தம் குத்துச் சண்டை நிபுணன். ஹைதர் அலி திப்பு சுல்தானோடு கி.இ. கம்பெனி யுத்தங்களில் பங்கேற்றவன். 1799ல் திப்பு மரணமடைந்ததும், மன்றோ ஹைதராபாதில் நிஜாம் அரசாங்கத்தில் வடக்கு மாகாணங்களை நிர்வகித்தான். இங்கிலாந்து சென்று 1814ல் மீண்டும் திரும்பி வந்தான். 1820ல் மெட்ராஸ் கவர்னர் ஆனான். திருப்பதி அவன் ஆளுமையில் இருந்ததால் திருப்பதி பற்றி விசாரித்தான்.
''துரை , அங்கே ஒரு ஹிந்து கடவுள் இருக்கிறார். பெருமாள் என்று சொல்வார்கள். அவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர். எங்கிருந்தெல்லாமோ ஜனங்கள் நிறைய அவரை பார்க்க வருவாங்க. ''
''அப்படி என்ன அந்த கல் சிலைக்கு விசேஷம்?''
''கல் சிலைன்னு நீங்க நினைக்கறீங்க. அவங்க கடவுள் என்று நம்புறாங்க. தீராத வியாதி எல்லாம் அவரை வேண்டினா தீர்ந்திடும். வேண்டியதை எல்லாம் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் வேங்கடேசன் . தலைமுடியை காணிக்கையா அவருக்கு கொடுக்கிறாங்க. உண்டியல் லே வேண்டிக்கிட்டதெல்லாம் போடுவாங்க. கைமேல் பலன் தரும் கலியுக வரதன் என்கிறாங்க.''
கி இ. கம்பெனி நிர்வாகத்துக்கு கோவில்கள் பணம் பெரிய உதவியாக இருந்தது. மன்றோ ஒரு உண்மையான கிருஸ்துவன். திருப்பதி கோவில் கணக்குகளை வாங்கி பரிசோதித்தான். அதிகமாக பக்தர்கள் கொண்டுவ் அந்த கொட்டு பணம் , பொருள்கள் யாரும் அபகரிக்காமல் நேர்மையாக கணக்கு காட்டுகிறார்களா என்று கண்காணிப்பான். திடீர் திடீரென்று சோதனைக்கு வருவான். திருப்பதியில் நாள் தோறும் எவ்வளவு பணம் சேர்ந்து வெள்ளை அரசாங்கத்துக்கு செல்கிறது என்று தான் அவனுக்கு அக்கறை.
மன்றோ பெருமாளை ஒரு நாளும் பார்க்காதவன். மன்றோவின் பேர் சொன்னாலே கோவில் நிர்வாகிகள் பயந்தனர். ஈவிரக்கமில்லாமல் தண்டிப்பான். எல்லோரையும் சந்தேகிப்பான். திட்டுவான். தப்பு கண்டுபிடிப்பான். தண்டனை கொடுப்பான். பாவம், அந்த அர்ச்சகர்கள், கோவில் நிர்வாக அதிகாரிகள், தங்கள் தங்கள் வருத்தத்தை, ஏமாற்றத்தை வெங்கடேசா நீ தான் தீர்க்கவேண்டும் என்று வேண்டுவார்கள்.
ஒருநாள் திருப்பதி போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. கோவிலுக்கு சென்றவன் எண்ணற்ற பக்தர்கள் மொட்டையடித்துக்கொண்டு வெறும் கையில்பொங்கல் சாப்பிடுவதை பார்த்தான். கோவிலில் கண்ட இடத்தில் தரையில் உட்கார்ந்து அவர்கள் உண்பது அவனுக்கு அருவருப்பாக இருந்தது. '' சீ சீ உணவா இது. பார்க்கவே வாயிலெடுக்க வருகிறதே. இதை எப்படி சாப்பிடுறீங்க. வியாதி வரவழைச்சுக் காதீங்க. துப்புங்க உடனே '' என்றான்.
''என்னய்யா கோவில் நடத்துறீங்க? கொஞ்சம் கூட சுகாதாரமாக இல்லையே உங்க ஏற்பாடு'' என்று அதிகாரிகளிடம் கோபித்தான். பொங்கல் பிரசாதங்களை பக்தர்களிடமிருந்து பிடுங்கி தூர எறியுங்கள். அசுத்தமாக இருக்கிறது'' என்று கட்டளையிட்டான்.
பக்தர்களுக்கு பாலாஜியின் ப்ரசாதத்தை மன்றோ '' சாப்பிடாதீர்கள், அசுத்தம், வியாதி வரும்' என்று சொன்னது பக்தர்களையும், ஆலய நிர்வாகிகளையும், அர்ச்சர்களையும் மனம் நோக்கச் செய்தது. ''வேங்கடேசா நீயே கதி'' என்று மறைவாக எடுத்துச் சென்று சாப்பிட்டார்கள்.
என்ன நடந்ததோ தெரியவில்லை. அங்கிருந்து மன்றோ நடந்தான். திடீரென்று சில நிமிஷங்களில் மன்றோவிற்கு தீராத வயிற்று வலி. கோவிலைத் தாண்டவில்லை. அதற்குள் பொறுக்க முடியாமல் துடித்தான். கத்தினான். அவனுடன் இருந்த வெள்ளைக்கார அலுவலர்கள், ஆலய நிர்வாகிகள் பணியாட்கள் அவனை தூக்கிக் கொண்டு அவன் பங்களாவுக்கு அழைத்து சென்றார்கள். இரவு வரை வலி தாங்கமுடியாமல் திணறினான். கத்தினான். .ஆங்கிலேய டாக்டர்கள் மருந்து மாத்திரை கொடுத்தார்கள். வலி நிற்கவில்லை, வலிக்கு காரணமும் தெரியவில்லை. தூக்கத்துக்கு ஊசி போட்டார்கள். தூங்க முடியவில்லை அவனால். துடித்துக் கொண்டிருந்தான்.
நாட்கள் இப்படியே ஓடின. மெலிந்து போய்விட்டான் மன்றோ.
ஒருநாள் திருப்பதி ஆலய தலைமை அர்ச்சகர் மன்றோ வை அவன் கட்டளையிட்டபடி வேலை விஷய மாக பார்க்க வந்தார், அவரிடம் '' என்னால் எதையும் இப்போது பார்க்க முடியாது. நான் பலநாட்க ளாக வயிற்று வலியால் தவிக்கிறேன்'' என்று அழுதான் மன்றோ.
''ஐயா, மன்றோ துரை , நான் ஒரு வார்த்தை சொல்லலாமா? கோவிக்காமல் அனுமதி கொடுப்பீர்களா? என்கிறார் அர்ச்சகர் தயங்கி தயங்கி. பயமும் பக்தியும் சேர்ந்து பேச்சு விட்டு விட்டு தான் வந்தது.. .
'' உம்ம்.. என் வலி தீர ஏதாவது தெரிந்தால் வழி சொல்லுங்கள் உடனே.''
' சில தினங்களுக்கு முன்பு வேங்கடேச பெருமாள் பிரசாதத்தை நீங்கள் அவமதித்து கண்டபடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசியதால் தான் இந்த துன்பம் உங்களுக்கு. இதுக்கு ஒரே ஒரு நிவாரணம் நீங்கள் அந்த பிரசாதத்தை கொஞ்சம் மதித்து எனக்கு இது நல்லது செய்யட்டும் என் துன்பம் தீரட்டும்'' என்று வேண்டிக்கொண்டு ஒரு வாய் சாப்பிடுவது தான் பரிஹாரம். பெருமாள் பிரசாதம் சாப்பிட்டால் உங்கள் வலி குணமாகிவிடும்''
''எனக்கு கோபமில்லை. உடனே கொண்டுவாருங்கள் அந்த பிரசாதத்தை . சாப்பிடுகிறேன்'' என்றான் மன்றோ.
அர்ச்சகர் வெறுமே வரவில்லை.அவர் கைப் பையில் கொஞ்சம் அன்று காலை நைவேத்யம் செய்த வெங்கடேச பிரசாதம் வெண் பொங்கல் ஒரு பாத்திரத்தில் கொண்டுவந்திருந்தார்.
ஆர்வத்தோடு அதை வாங்கிக் கொண்டான் மன்றோ. கண்களை மூடினான். மனதில் என்னவோ வேண்டி னான். கையில் வாங்கிய பொங்கலை முழுவதும் ஆர்வத்தோடு மகிழ்ச்சியோடு சாப்பிட் டான்.கை கழுவிக்கொண்டு படுக்கையில் அமர்ந்தான். சாப்பிடும் முன் வரை இருந்த வயிற்று வலி எங்கே போயிற்று?
''ஆச்சர்யமாக இருக்கிறதே. எங்கள் வெள்ளைக்கார டாக்டர்கள் என்னென் னவோ மருந்து மாத்திரை ஊசி போட்டார்கள். பல நாளாக என்னை வாட்டிய வயிற்றுவலி எப்படி இந்த பிரசாதம் சாப்பிட்டவுடன் மட்டும் தீர்ந்தது. பிரசாதத்தை நான் குறை சொல்லிய குற்றம் வலியை தந்தது. அதே பிரசாதம் அந்த வலியை நீக்கி விட்டது. இந்த ஆச்சர்யம் என் உயிருள்ள வரை மறக்கமாட்டேன். எல்லோரிடமும் சொல்வேன்.. '' என்றான் மன்றோ. இது வெங்கடேசனின் கருணை என்றும் புரிந்து விட்டது.
''இனி நான் சும்மா இருக்கமாட்டேன். உடனே ஒரு வேலை செயகிறேன்'' என்றான். அதிகாரிகளை கூப்பிட்டான்.
''திருப்பதி திருமலையில் வேங்கடேசன் கோயிலில் வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நைவேத்யமாக அளிக்கப்பட்டு எண்ணற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட வேண்டும். இதற்காக திருப்பதி அருகே உள்ள வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ எனும் ஊரில் வசூலாகும் பணம் அத்தனையும் கணக்கு தவறாமல் திருப்பதி பெருமாள் ஆலயத்துக்கு பொங்கல் தயாரிக்க பயன்பட வேண்டும். இதை எவரும் மீறக்கூடாது '' என்று ஆணையிட்டான்.
பின்னர் மன்றோ வெங்கடேச பெருமாள் பக்தர்களில் ஒருவன் ஆகிவிட்டான்.நிறைய அந்த கோவில் நிர்வாகம் பண்டிகைகள் நடத்த உதவினான். இன்றைக்கும் கோடபாயல் கிராம வரி வசூல் வருமானம் பொங்கல் ப்ரசாதத்துக்கு ''மன்றோ கங்காளம்'' என்ற பெயரில் மானியமாக உதவுகிறதென்று கேள்விப்பட்டு ஆச்சர்யமாக இருக்கிறது. நல்ல நிர்வாகம். பொங்கலோடு கிராமத் தையும் சாப்பிடவில்லை.
உலகெங்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கட்டுகிறார்கள் . வெள்ளைக் காரர்கள் நம்மைவிட அதி பக்தியாக உழைக்கிறார்கள். எல்லாம் பெருமாள் செயல். கலியுக வரதன் என்று தான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே .
No comments:
Post a Comment