மனமெனும் கோவில் - நங்கநல்லூர் J K SIVAN
கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இதெல்லாம் நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். இருக்கும் நிலையில் இது ரெண்டு தலைமுறை
களோடு மறந்து, மறைந்து, போய்விடக்கூடாது. நம்மால் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லப்படவேண்டும். செயலில் கடைப்பிடிக்க வேண்டும்.
கோவிலுக்கு போகாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வரும் நேரத்தில் கோவிலை கட்டலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள், கட்டுபவர்கள், ஆஹா இந்த மனிதர் எவ்வளவு அற்புதானவர் கிருஷ்ணனுக்கு கோவில் கட்டி அதில் மீதி தெய்வங்களின் சந்நிதியும் உண்டாமே என்று மகிழ்பவர் களும் உண்டு. இதனால் என்ன பலன் என்று நானோ நீங்களோ சொல்லவே வேண்டாம். ஏற்கனவே அக்னி பகவான் அக்னி புராணத்தில் சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன்.
கோவிலைக் கட்டுபவனுக்கு 1000 பிறவிகளில் செய்த பாவங்கள் தொலைந்துவிடும். கோவில் கட்டலாம், கட்டவேண்டும் என்று நினைப்பவனுக்கு 100 பிறவி பாவங்கள் காலி. அடாடா அவர் கோவில் காட்டுகிறாராமே கட்டட்டும். சீக்கிரம் கட்டட்டும் என்று எண்ணுபவனுக்கு கிருஷ்ணனின் கோ லோகத்தில் இடம் ரிசர்வ் செய்யப்படுமாம். ஒரு விஷயம், தஞ்சாவூர் பெரிய கோவில் மாதிரி கட்டினாலும், தெரு முனையில் ஒரு 6அடிக்கு 6அடி கோவில் கட்டினாலும் ஒரே பலன் தான். அக்னிபகவான் காரண்டீ இது.
இப்படி ஒரு வசதி இருக்கும்போது நாம் என்ன செய்யவேண்டும்?
முதலில் கோவிலுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு போகலாம், அல்லது வீட்டிலே அமர்ந்து கொண்டு பூசலார் மாதிரி மனதிலே மன்னார்சாமி கோட்டை கட்டுவதை விட்டு மாதவனுக்கு ஒரு கோவில் கட்டலாம். மனமே முருகனின் மயில் வாகனம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை நினைத்தாலே முக்தி, புண்யம் கிடைக்கும் என்று நாம் அறிவோம். இதையே அக்னி பகவான் வேறு அக்னிபுராணத்தில் சொல்லிவிட்டாரே.
கோவிலை கட்டாவிட்டாலும் , கட்ட நினைக்காவிட்டாலும், இருக்கும் அற்புதமான கோவில்களை கண்ணால் கண்டு ரசித்து ஆனந்தம் எய்தி மனதார கட்டின மஹாநுபாவனை வாழ்த்துவோம், வணங்குவோம், அதில் கிடைக்கும் மன அமைதி மேலே சொன்ன பலன்களை விட சுலபமாய் நமக்கு நல்லது செய்யுமே.
நம்மிடையே நிறைய புராணங்கள் இருக்கிறது. அவை வெவ்வேறு விஷயங்களை பற்றி விலாவாரியாக சொல்கிறது. ரொம்ப ஸ்வாரஸ்யமான விஷயங்கள் அதில் இருப்பதை அவ்வப்போது ரசிக்கும்போது தனி ஆனந்தம்.
No comments:
Post a Comment