ஸ்கந்த புராண சுருக்கம் - #நங்கநல்லூர்_j_k_SIVAN
வியாசர் அளித்தது 18 புராணங்கள். அதில் ஒன்று ஸ்கந்த புராணம். காஸ்யப ரிஷி, அதிதி தம்பதியருக்கு பிறந்தவன் அசுரேந்திரன். அவன் மகள் சுரஸை எனும் மாயா. அவளுக்கு பிறந்தவர்கள், பத்மாசூரன் எனும் சூரபத்மன், சிங்கமுகன், யானைமுகம் கொண்ட கஜமுகன் எனும் தாரகாசுரன். அஜமுகி என்ற ஆடு முகம் கொண்ட பெண்.
மாயா முதல் மகன் சூரபத்மனை அழைத்து ''சூரா, நீ பரமேஸ்வரனை துதித்து தவமிருந்து யாகம் செய்ய வேண்டும். வடல்லே வாடா த்வீபம் எனும் தீவு நீ யாகம் செய்ய தகுந்தது. அங்கே போ. நான் உன் யாகத்துக் கான திரவியங்களை கொண்டு தருவேன். நீ யாகம் செயது ஈஸ்வரன் வரம் பெற்று மூவுலகும் ஆள வேண் டும். தேவர்கள் உன்னடிமையாகி அசுரர் குலம் தழைக்க வேண்டும்'' என்கிறாள்.
வழியில் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் ஆசி பெற்று, வட த்வீபத்தில் பிரம்மாண்டமான யாகசாலை அமைத்தான் சூரபத்மன். 10000 யோஜனை பரப்பளவு!(28000 சதுர கி.மீ!) அதன் நடுவே 1000 யோஜனை நீள அகல ஆழம் கொண்ட யாக குண்டம். 3000 யோஜனை பரப்பளவு ஹோம திரவியங்கள் மலை போல். யாகம் 10,000 வருஷங்கள் நடந்ததாம். யாக முடிவில் சூரன் தன் சிரத்தை கொய்து தானே பலிகொடுத்து ரத்தத்தை யாக குண்டத்தில் கொட்டினான். அப்படியே தாரகாசுரன், சிங்கமுகனும் செய்தார்கள். யாகத்தில் சூரா பத்மன் அவன் சகோதரர்கள் யாவரும் உயிர்பலி கொடுத்தார்கள்.
பரமசிவன் ப்ரத்யக்ஷமாகி சிரத்தில் இருந்த கங்கை யால் யாகத்தீயை அணைத்து '' சூரா பத்மா, நீ கேட்கும் வரம் என்ன சொல். அளிக்கிறேன்'' என்கிறார்
'பரமேசா, ஸகல அண்டங்களும் என் வசமாக வேண் டும். ப்ரம்மா விஷ்ணு தேவர்கள் எவராலும் எனக்கு தோல்வியோ அழிவோ கூடாது. தேவர்கள் ஆயுதங்கள் எதாலும் எங்களுக்கு மரணம் கூடாது.ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும்.
''சூரபத்மா, நீயும் உன் சகோதரர்களும் புரிந்த கடின தவத்தால், தியாகத்தால், யாகத்தால், நீ கேட்கும் வரம் பெற்றாய். ஆனால் நீ கேட்கும் அத்தனையும் 108 யுக காலம் தான். பிறகு நீ மரணம் எய்துவாய்'' என்று வரமளித்தார் சிவன்.
''ஈஸ்வரா, அப்படியென்றால் தங்களைத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது.''
''சூர பத்மா,என்னால் உனக்கு மரணமில்லை''. சிவன் மறைந்தார்.
அசுரர் குலம் தழைக்க சூரன் பெற்ற வரம் கேட்டு அசுரர் குரு சுக்ராச்சாரியார் மகிழ்ந்தார். சூரன் தனது பலத்தை, அதிகாரத்தை பிரயோகித்து குபேரனை அடிமையாக்கினான். ஈசானன் சரணடைந்தான். கிழக்கு திசையில் இந்திரலோகம் சென்று இந்திரன் அக்னி போன்றவர்களை வென்று சூரபத்மன் இந்திர லோக அரசனானான். தெற்கே எமலோகம் சூரன் வசமாயிற்று. யமதர்மன் அடிமையானான். இவ்வாறே நிருதி, வாயு, வருணன் அனைவரும் சூரன் கட்டளைப் படி இயங்கலானார்கள்.
சூரன் வைகுண்டத்தை நோக்கி நகர்ந்தான். நடந்தது அனைத்தும் நாராயணன் அறிவான். காக்கும் கடவுளாக இருந்தும் தன்னால் சூரனை எதிர்க்க முடியாதபடி சர்வேஸ்வரனிடம் வரம் பெற்றவன் என்றும் தெரியும். தனது சக்ராயுதத்தை தாரகனுக்கு அளித்து வைகுண்டத்துக்கும் சூரன் அதிபதியானான்.
சூரன் வீர மஹேந்திராபுரத்தை நிர்மாணித்து அங்கே பலமான ஒரு கோட்டை கட்டினான். ப்ரம்மா சூர பத்மனுக்கு முடி சூட்டினார். இந்திராதி தேவர்கள் சூரனின் பணியாட்களானார்கள். மஹேந்திர புரத்தை உருவாக்கிய விஸ்வகர்மாவின் மகள் பத்ம கோமளை யை சூரபத்மன் மணந்தான். அவர்களுக்கு பானு கோபன், அக்னிமுகன், இரண்யன், வஜ்ரபாகு என நான்கு மகன்கள்.
அஜமுகிக்கு வாதாபி, இல்வலன் எனும் அசுரர்கள் பிறந்து தேவர்கள், முனிவர்களை வதைத்தனர். எதிர்த்தவர்களை கொன்றனர், சிறையிலடைத்தனர். அவஸ்தியரை ஏமாற்றி கொல்ல வாதாபி முயன்ற போது அவரால் வாதாபி மாண்டான்.
அசுரர்களின் அக்கிரமத்தை, சூரனின் கொடிய செயல்களை தாங்கமுடியாத தேவர்கள் மஹாவிஷ்ணு வோடு சேர்ந்து பரமேஸ்வரனை சந்தித்து முறையிட் டனர். அசுரனின் கொடுமைக்கு முடிவு தேடினர்.
''விஷ்ணு முதலான தேவர்களே, என் சக்தியால் தான் சூரனுக்கு முடிவு. இதை நிறைவேற்றுகிறேன்''.
சிவனின் நெற்றியிலிருந்து திகு திகு வென்று உஷ்ணமயமாக ஒரு அக்னி பிழம்பு ஆறு நெருப்பு பந்தங்களாக, பெரும் பொறிகளாக, வெளிப்பட்டு ஹிமாலயத்தில் உள்ள சரவணப் பொய்கையில் இறங்கியது.
''ஆறு ரிஷி பத்னிகள் சரவணப் பொய்கைக்கு சென்று கார்த்திகைப் பெண்களாக அந்த ஆறு தீப்பிழம்பு, பொறிகளை ஆறு முகங்களாக கொண்ட என் மகனாக வளர்ப்பார்கள். அவன் மூலம் சூரனது வம்சம் முடிவு பெறும்'' என்று அருளினார் பரமேஸ்வரன்.
சிவனருளால் அந்த கார்திகைப் பெண்கள் ஒன்பது காளிகளை ஈன்றனர். அவர்களே நவகாளிகள். ரக்தவல்லி என்பவளுக்கு வீரபாகு என்ற வீரன் பிறந்தான்.
''வீரபாகு, நீயும் உன்னோடு பிறந்த மற்ற வீரர்களும் இனி சரவணன், ஆறுமுகனுக்கு உதவியாளர்களாக பணி புரிந்து தக்க சமயத்தில் சூரனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அழிப்பீர்களாக' என்று சிவன் ஆசிர்வதித்தார்.
பார்வதி தேவி ''கார்த்திகைப் பெண்களே,உங்களால் வளர்ந்த என் மகன் இந்த ஆறுமுகம் கொண்டவன் இனி கார்த்தி கேயன் என்ற பெயரோடு ஒருவனாக என்னி டம் வளர்வான். உங்கள் திருநக்ஷமான கார்த்தி கையில் இந்த ஸ்கந்தனை வணங்குவோர் கல்வி வீரம் முதலான சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்'' என்று அருளினாள் .
பால முருகன் ஆறு முகம், பன்னிரு கரம் கொண்ட எண்ணற்ற பலம் கொண்டவன், சர்வ சக்தி கொண்ட வன். அவனது பால்ய லீலைகள் கணக்கிலடங்காது. மேருமலையையே கிள்ளி எறிந்தவன்.
சிவன் அருளிய கால அளவு நெருங்கியது. ஆறுமுகன் எனும் ஷண்முகன், வீரபாகு முதலிய தேவ சேனை யோடுபுறப்பட்டான். சிக்கல் சிங்காரவேலனுக்கு அம்பாள் வேலாயுதம் அளித்தாள் . சக்தியின் ஆசியோடு வேலாயுதன் தேவ சேனாபதியாக சூரனை அழிக்கப் புறப்பட்டான். வழியில் கிரவுஞ்சமலையை பிளந்து அதன் அதிபதி தாரகாசுரனை வதம் செய்தார். திருச் செந்தூரில் ஷண்முகன் பாசறை அமைத்தான். ஆறுநாட்கள் யுத்தம் நடந்தது.
சூர பத்மன் மகன் பானுகோபன் ஷண்முகனை பெரும்படையுடன் எதிர்த்தான். மூன்று நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுகா சூரன் எதிர்த்தான். வேலாயுதம் அவனை பிளந்து கொன்றது. அவனைத் தொடர்ந்து சூரபத்மனின் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மன் மக்கள் மூவாயிரம் பேரும் அடுத்ததாக கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபத்மன் மட்டுமே.
சூரன் மாயை அம்சமாதலால் மறைந்து நின்று மாயப் போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி உருவெடுத்தான். முருகனின் சக்தி வேல் திருச்செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மாமரமாக மறைந்திருந்த சூரப த்மனை இருகூறாக பிளந்து சம்ஹாரம் செய் தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழி ந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகப்பெருமான் கொடியாகவும் வாகனமாகவும் மாறியது.சூரனை சம்ஹாரம் செய்த முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது.
அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் திருசெண்டூர் ஆலயத்தில் உள்ள நாழிக்கிணறு நீரானது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவ லிங்கம் செய்து முருகன் பூஜை செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் என்ற தலத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர் களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்ச னால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர். தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை கந்தனுக்கு மணமுடித்தான் .
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட்களிலும் சைவர்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிக்கிறது. ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர ஸம்ஹாரம் .
ஷண்முகனுக்கு பிரியமான ராகம் ஷண்முகப்ரியா. இதில் சதா நின் பாதமே... என்ற மஹாராஜபுரம் சந்தானம் இயற்றிய சொந்த சாஹித்யம் அற்புதமாக இருக்கிறது கேட்பதற்கு.செவிக்கு கந்தன் தரும் விருந்து. நான் கேட்டு அடைந்த மகிழ்ச்சியை நீங்களும் அனுபவியுங்கள்
https://youtu.be/s6BDueSF7Ug
No comments:
Post a Comment