மலை உச்சி முருகன் - #நங்கநல்லூர்_J_K_SIVAN
இது கந்தனுக்குகந்த சஷ்டி உள்ள ஐப்பசி மாதம். ஆகவே ஷண்முகனைப் பற்றிய இன்னொரு தகவல்.முருகன் மலை வாசஸ்தலம் செய்பவன். அவன் அறுபடை வீடுகளில் சில மலைகள், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி பழமுதிர் சோலை, சுவாமிமலை போன்றவை, மற்றது கடல் அருகே. திருச்செந்தூர்.
மேலே சொன்ன மலைகளை விட மிகவும், அதுவும், உலகிலேயே மிக உயரமான ஒரு மலையில் கந்தன் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. வடக்கே ஹிமாலய
குன்றுகளில் ருத்ரப்ரயாக் கிராமத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கார்திகேயனைக் காண எல்லா பக்தர்களாலும் முடியாது. 10000 அடி உயரம். என் போன்றோர் நினைத்துக் கூட பார்க்க முடியாத குமாரசாமி கோவில்.
இதில் அற்புதம் என்னவென்றால் கார்த்திகேயன் இருக்கும் ஆலயம் இயற்கையிலேயே அமைந்த சலவைக்கல், ஸ்படிக, பாறை மீது. அங்கிருந்து பார்த்தால் அரைவட்டமாக எங்கும் ஹிமாலய பனி சிகரங்கள்.
கனக சவுரி என்கிற மலைமேல் உள்ள அதிக ஆட்கள் இல்லாத குட்டியூண்டு கிராமத்தில் கார்த்திகேய
னின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலிருந்து 3 கி.மீ. பனி மலை மேலே ஏறவேண்டும் சிரமமில் லாமல் ரெண்டு மூணு மணி நேரத்தில் ஏறிவிடலாம். எங்கும் பூவரசம்பூ செக்கச் செவேலென்று கண்ணைப் பறிக்கும். சுற்றிலும் வெள்ளை வெளேரென்று ஹிமாலய பனி மலைத்தொடர்கள். மேகமில்லாத நீல வானம். மேகங்கள் கூட்டமாக சக்கரமில்லாத தேர்கள் போல் அசைந்து நகருவது அற்புதமான காட்சி.
இவ்வளவு உயரமான மலை மீது எப்படியோ சென்று ரெண்டு கோவில்கள் கட்டி இருக்கிறார்கள். தாய்க்கு ஒன்று, சேய்க்கு ஒன்று. அம்பாளை தரிசித்து விட்டு கார்த்திகேயனை தரிசிப்பது வழக்கம். அவ்வளவு உச்சியிலிருந்து விடிகாலை சூர்யா உதயம் பனிமலை சிகரங்களிலிருந்து எழும்புவது எழுத்தில் வர்ணிக்கமுடியாத ஆனந்த அனுபவம்.
ஹோட்டல்கள் அங்கே அந்த உயரத்தில் எதிர்பார்க்க முடியாது. பூசாரிகள் சிலர் வசிப்பதால் அவர்கள் வீட்டிலேயே இடம் கொடுக்கிறார்கள்.
No comments:
Post a Comment