Friday, October 14, 2022

govindhaa

 ''கோவிந்தா, கோவிந்தா,  கோவிந்தாஆஆ    -நங்கநல்லூர்  J K SIVAN


இன்று கோவிந்தனுக்கு உகந்த நாள்.   கடைசி புரட்டாசி சனிக்கிழமை.  பாராயணம், பஜனை சத்சங்கம், உபன்யாசம் தவிர  பல ஏழைகளுக்கு அன்ன தானம். திருப்பதியில் பல மணிகள்  காத்திருந்து ஒரு வினாடி கோவிந்தன் தூரத்தில் காட்சி தருகிறான். கோவிந்தா கோவிந்தா என்று கலியுக வரதனை நினைப்போம். கண்கண்ட தெய்வம் இல்லையா. அவனைத் தேடி போக வேண்டாம். அவன் நம்மை நோக்கி வருவான். இதற்கு ஒரு கதை சொல்கிறேன்.

வேங்கடேசன் ஆந்திரா பக்கம் அகஸ்திய ரிஷியின் ஆஸ்ரமம் செல்கிறான். ரிஷியோடு தெலுங்கில் தான் பேசுகிறான். அந்த பக்கம் எல்லோருமே பேசுவது தெலுங்கில் தானே. எல்லாமொழிகளும் உண்டாக்கியவன் தெலுங்கு பேசமாட்டானா?    தெலுங்கு என்கிற வார்த்தை  'த்ரி' லிங்கத்திலிருந்து வந்தது. த்ரி லிங்கங்கள்  எது தெரியுமா?தெலுங்கானாவில் உள்ள காளீஸ்வரர், ஆந்திராவில் பீமாவரத்தில் உள்ள பீமேஸ்வரர், ராயலசீமாவில் உள்ள ஸ்ரீசைலேஸ்வரர். திருப்பதி ஏழு மலைகள் இவற்றை சார்ந்தவை.

வேங்கடேசன் வாசலில் நிற்பதை பார்த்த  அகஸ்தியர்  ஆஸ்ரமத்திலுருந்து வெளியே வருகிறார். ஆஸ்ரமத்தில் கோசாலை. அதில் நிறைய  பசுக்கள் கன்றுக்குட்டிகள் கண்ணில் படுகிறது. 

'வாருங்கள் சுவாமி என்ன வேண்டும் உங்களுக்கு?''

''மகரிஷி எனக்கு பசுவும் அது தரும் பால், வெண்ணையும் பிடிக்கும் . உங்களிடம் கோசாலா இருக்கிறதே. ஒரு பசுவை எனக்கு தருவீர்களா?.

''ஸ்ரீநிவாஸா, நீங்கள் மஹாவிஷ்ணு என்று எனக்கு தெரியாதா, இதென்ன விளையாட்டு? பிரபஞ்சத்தையே படைத்தவர் என்னிடம் ஒரு பசு கேட்கிறீரா ? இது உங்கள் மாய லீலை. என் பக்தியை சோதிக்க வந்திருக் கிறீர்களோ? ஆனால் ஒரு நிபந்தனையை நான் சொல்லி ஆக வேண்டும். சொல்லி விடுகிறேன். புண்ய ஸ்வரூப மான பசுவை தானமாக கேட்பவர்கள் யாராக இருந்தாலும்  தம்பதி சமேதராக வரவேண்டும். அது தான் முறை. நீங்கள் போய் மஹாலக்ஷ்மி யையும் அழைத்துக் கொண்டு ரெண்டு பேரும்  தம்பதியாக வாருங்கள் பசு தானம் தருகிறேன். என்னை மன்னிக்கவும்'' என்கிறார் அகஸ்தியர்.

''ஓ அதற்கென்ன அப்படியே செய்கிறேன்''

 வேங்கடேசன் ஸ்ரீ யாகிய பத்மாவதியை மணந்து தம்பதியாக  இருவரும்  அகஸ்தியர் ஆஸ்ரமம் வருகிறார்கள். அகஸ்தியர்  ஆஸ்ரமத்தில் அப்போது இல்லை, சிஷ்யர்களுக்கு மனித ஸ்வரூபத்தில் வந்த ஸ்ரீனிவாசன் மஹாலக்ஷ்மியை  யாரென்று தெரியாது.

'யார் நீங்கள், என்ன வேண்டும் ?''

''நான் ஸ்ரீனிவாசன், இது என் மனைவி பத்மாவதி, உங்கள் குருவிடம் அவர் சொன்னபடியே தம்பதியாக வந்துள்ளோம். என்று சொல்லுங்கள். பசு தானம் தருவதாக சொன்னார். அவரிடம் விஷயம் சொல்கிறீர்களா?''

''எங்கள் குருநாதர் அகஸ்திய ரிஷி இங்கே இப்போது இல்லை. அவர் இருக்கும்போது வாருங்கள்''

''நான் இந்த  ஏழு மலைப் பகுதி எல்லாவற்றையுமே ஆள்பவன், பாதுகாப்பவன், வேலை அதிகம், மறுபடியும் வர இயலாதே''

''ஐயா, நீங்கள் ரொம்ப பெரிய மனிதராகவே இருக்கட்டுமே. எங்களைப் பொருத்தவரை எங்கள் குருநாதர் மட்டுமே ஆசார்யன், முதன்மையானவர், தலைவர், அவர் உத்தரவு இல்லாமல் எங்களால் பசு தானம் செய்ய முடியாது.''

''உங்கள் குருபக்தியை மெச்சுகிறேன். உங்கள் குருநாதர் வந்தால் ஸ்ரீனிவாசன் பசு தானம் பெற ஞானாத்ரி மலையிலி ருந்து தம்பதியோடு வந்ததாக சொல்லுங்கள்''.

ஏழு மலைகளை நோக்கி ஸ்ரீனிவாசன் மனைவியோடு சென்றான்.   சில நிமிஷங்கள் கூட ஆகவில்லை அகஸ்தியர் திரும்பிவிட்டார். சிஷ்யர்கள் விஷயம் சொன்னதும் திடுக்கிட்டார்.

''எவ்வளவு துரதிஷ்டசாலி நான். தெய்வமே தாயாரோடு என்னைத் தேடி வந்தபோது இல்லாமல் போனேனே. ஒரே ஓட்டமாக கோ சாலை பக்கம் ஓடினார் அகஸ்தியர். ஒரு பசுவை, அவிழ்த்து எடுத்துக் கொண்டார்.
தெலுங்கில் பசுவுக்கு ''கோவு'' என்று பெயர். ஸ்ரீனிவாசனை நோக்கி பசுவோடு ஓடுகிறார் .தூரத்தில்
 ஸ்ரீனிவாசன் தம்பதிகள் நடந்து போவது தெரிகிறது. தெலுங்கில் உரக்க கத்துகிறார்.

''ஸ்வாமி ''கோவு இந்தா'' . இதோ பசு எடுத்துக்கொள்ளுங்கள்..என்று தெலுங்கில் அர்த்தம். ஸ்ரீனிவாசன் திரும்பியே பார்க்கவில்லை.

''கோவு இந்தா, கோவு இந்தா.. விடாமல் கத்திக்கொண்டே ஓடுகிறார் அகஸ்தியர் ஏழுமலையை நோக்கி பசுவோடு ஓடுகிறார். கூப்பிடுகிறார்....

''கோவு இந்தா'' என்கிற சப்தம் தொடர்ந்து வேகமாக அதிகரிக்க ''கோவிந்தா கோவிந்தா''என்று இன்றும் ஏழுமலைகளிலும் பக்தர்கள் குரலை  எதிரொலிக்கிறது.

ஸ்ரீனிவாசன் திரும்பி பார்த்து புன்னகைக்கிறான். அகஸ்தியர் அளித்த பசுவை ஏற்றுக் கொள்கிறான்.
' என் பிரியமான 'அகஸ்திய முனிவரே, மகரிஷி, தெரிந்தோ தெரியாமலோ   ' கோவு இந்தா,  கோவிந்தா'' என்று 108 முறை அழைத்தீர்கள். நீங்கள் 'கோவிந்தா' என்று என்னை அழைத்த இந்த ஞானாத்ரி மலையில் பூலோகத்தில் இனிமேல்  ஒரு சிலையாக கலியுகத்தில் என்றும் நிற்பேன்.அங்கே ஒரு பெரிய ஆலயம் உருவாகும். என் பக்தர்கள் என்னை நாடி வருவார்கள். ஏழுமலை ஏறி ''கோவிந்தா கோவிந்தா'' என்று ஒலிப்பார்கள்.  என்னை மனமார அழைப்பார்கள். அப்படி என்னை அவர்கள் கோவிந்தா என்று அழைக்கும் போது அகஸ்தியரே , உங்களையும் நினைப்பார்கள். என்னைத்  தேடி நேரில் வரமுடியாமல் கோவிந்தா என்று மட்டும் அழைத்த பக்தனை நானே நேரில் சென்று பாதுகாப்பேன். கோவிந்தா என்றால் கோ தானம் பண்ணிய புண்ணியம் கிடைக்கும் என்பதால் முக்தி அளிப்பேன்.

'' முனீஸ்வரா, ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள்.
யுகபுருஷன் நியதிக்குட்பட்டு இந்த பிரபஞ்சம் இயங்குகிறது. த்ரேதா யுகம், துவாபர யுகத்தில் முதியோர் மதிக்கப்பட்டு மரியாதையோடு நடத்தப்பட்டார்கள். இளையவர்கள் அன்போடு நேசிக்கப்பட்டார்கள். பெண்கள் கெளரவிக்கப்பட்டு சமூகத்தில் மரியாதை பெற்றார்கள். ரிஷிகள் முனிவர்கள் கடவுளின் தூதர்களாக விளங்கினார்கள். செல்வம் எவரையும் ஏமாற்றாமல், கடின உழைப்பால், சம்பாதிக்கப்பட்டது.
வேதங்கள் சாஸ்திரங்கள் மதிக்கப்பட்டன. பிரஜைகள் பொறுப்போடு தர்ம நீதி நியாயத்தோடு ஆளப் பட்டார்கள். கல்விச்சாலைகள் பொறுப்போடு உண்மையாக கல்வியை அளித்தன. கடவுளுக்கு ரொம்ப வேலையில்லை.

ஆனால்  கலியுகத்தில் எல்லாம் புரட்டிப்  போடப்படும் . கல்விச்சாலைகள் பணம் சம்பாதிக்கவே. வாத்தியார்கள் ஏதோ உத்தியோகம் கிடைத்ததே என்று பணி புரிய, பெண்கள் பாதுகாப்புக்கு அலை கிறார்கள். ஆண் வர்க்க மிருகங்களுக்கு பலியாகாமல் தப்புவதே   பெண்களுக்கு மிகப் பெரிய கார்யம். பெற்றோர்கள், ஏழை வேலைக்காரர்கள்  மதிக்கப்படமாட்டார்கள்,  கால் தூசுக்கு சமானம்.    ஏதாவது காரியம் ஆக வேண்டுமானால் மட்டுமே உறவு. கூழைக் கும்பிடு.    சில  காவிகள்  தாங்கள் தான் கடவுள்கள், கடவுளுக்கும் மேலே என்று சொல்லிக் கொள்வார்கள். ஏமாறத் தயாராக இருந்தால் ஏமாற்றுவித்தைக்கு பஞ்சமே இல்லையே.

இதெல்லாம் போகட்டும். அப்படியும் கூட,  இன்னும் சிலர் தர்ம நியாயத்தை நீதியை மனசாட்சி யை மதித்து நேர்வழியில் நடப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் தான்  உலகம் எனும் வண்டி ஓடுகிறது. தம்மிடம் இருப்பது கொஞ்சம் என்றாலும் ஏழை எளியோர்க்கு அன்னமிட்டு உதவுகிறார்கள்.  அவர்கள் கஷ்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். உள்ளே இருக்கும் துன்பத்தை வெளிக்காட்டாமல் உதட்டில் அன்பான புன்னகை தெரிகிறது. இத்தகைய மக்கள் என் செல்லக்  குழந்தைகள். அவர்கள் என் கோவில்களுக்கு வராமல் போனாலும் நான் அவர்களை நாடிச்  செல்வேன். என் பெயரைச் சொல்லாமல் அவர்கள் பணியில் ஈடு பட்டாலும் நான் அவர்களை நான் மறக்கமாட்டேன். கூப்பிடாவிட்டாலும் நான் அவர்களிடம் செல்வேன். கலியுகம் முடியும் மட்டும் நான் அவர்களோடு இருப்பேன்.

கோவிந்தா என்று ஒரு சொல் யாரோ சொல்லி என் காதில் பட்டாலே போதும். ஒரே ஓட்டமாக ஓடி வந்து உதவுபவன் நான்.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...