Friday, October 21, 2022

THAYUMANAVAR

 ''பேசாதே   சும்மா இரு''  - நங்கநல்லூர்   J K  SIVAN

தாயுமானவர் 

தமிழ் தெரிந்தால்  தாயுமானவர்  என்கிற பெயர் தெரிந்திருக்கும்.  தெரியவில்லை என்றால் உடனே இப்போதே  தெரிந்து கொள்ளலாம்.   திருச்சி பக்கம் போனால் மலைக்கோட்டை  கண்ணில் படாமல் போகாது.  அந்த மலைக்கோட்டை மேல் உள்ள  ஓரு கோவில்  தான்   தாயுமானவ சுவாமி கோவில், அதற்கு  மேலே தான் உச்சி பிள்ளையார் இருக்கிறார்.  ரயிலில் போனாலும் பஸ்ஸில் போனாலும் மலைக்கோட்டை கோயிலை  கண் தேடி கை  கூப்பி வணங்குவேன்.   திருச்சி இருக்கிறவரை மலைக்கோட்டை இருக்கும், மலைக்கோட்டை என்றாலே தாயுமான சுவாமி கோயில், மாத்ரு பூதம் என்றால் தாயுருவில் பரமேஸ்வரன்.  திருச்சி ஜில்லாவைச் சேர்ந்த பலரின் பெயர் மாத்ருபூதம், தாயுமானவன்.  இந்த தாயுமான  ஸ்வாமியின்  பெயர்  கொண்ட ஒரு மஹான் தான்   தாயுமானவர் என்ற சித்தர். அருமையான பக்தி, தத்வ, பாடல்களை தமிழில் நமக்கு தந்தவர்.

தாயுமானவர் (1705–1744), சுமார் முன்னூறு வருஷங்களுக்கு முன்னாலே நம் பூமியில் இருந்த ஒரு மஹான். வேதாந்தி. சைவ சமய சித்தாந்த பாடல்கள் நிறைய எளிமையாக புரியும்படியாக எழுதியவர். 1454 பாடல்கள்.
மனசை உருக்கும் பக்தி கலந்த ஆன்மீக தேடல் அவர் பாட்டில் நிறைய இருக்கிறது. மௌனத்தின் சப்தம் எங்கும் எதிரொலிக்க அதன் மஹிமையைப்  பரப்பிய மஹான்.  

அவர் தந்தை  கேடிலியப்ப பிள்ளை, வேதாரண்யத்தை சேர்ந்தவர். பிள்ளை இல்லாததால் திருச்சி  தாயுமானவர் ஸ்வாமியை வேண்டி பிறந்த பிள்ளைக்கு  தாயுமானவன் என்று பெயர் வைத்தார். திருச்சி ராஜா  விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் மந்திரி. பிள்ளை  தாயுமானவனுக்கும்  ராஜா உத்யோகம் கொடுத்தார்.  கல்யாணம் ஆயிற்று,  கனகசபாபதி என்று ஒரு பிள்ளையும் பிறந்தது.  ஆனால் ஆரம்பத்திலிருந்தே  தாயுமானவனுக்கு  எப்போதும்  உலக வாழ்க்கையில் விருப்பமில்லாமல்  சன்யாசத்திலேயேயும்   ஆத்ம ஞானத்திலும் தான்  நாட்டம்.  தாயுமானவனுக்கு  தமிழ் சமஸ்க்ரிதம் தெரியும். மனசு சிவன் மேல் போனதும் ராஜாங்க வேலையையும் உதறி விட்டார்.  அவருடைய அற்புத மான ஒரு வாக்கியம் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டதால்  அடிக்கடி எழுதுவேனே:  '' பார்க்குமிட மெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர்ணானந்தமே '   எங்கும் எதிலும் இறைவனைக் காண்பது. இதை மனசில் அலசினால் ஒரு புத்தகமே எழுதலாம் போல் தோன்றுகிறது.  தாயுமானவர் எப்போ பிறந்தார் என்ன பெயர் என்றெல்லாம் விவரம் சரியாக தெரியவில்லை.

அருளானந்த சிவாச்சாரியார் என்ற ஒரு மௌன ஸ்வாமிகளை அணுகி பல முறை ''என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு அருள் புரியுங்கள்'' என்று வேண்டினார். தொந்தரவு தாங்கமுடியாமல் போய் விட்டது அந்த  குருவிற்கு. ஏற இறங்க ஒரு தடவை தாயுமானவரை பார்த்தார். பிறகு ஜாடையாக ''சும்மா இரு'' என்கிறார். அதுவே காட்டுத்தீயாக உபதேசமாக போய்விட்டது சீடன்  தாயுமானவனுக்கு.  சன்யாசம் பெற்று அவர் சீடரானார்.

தாயுமானவர் என்றால் மனசு சம்பந்தப் பட்டவை தான். மனசை அடக்கி, ஒடுக்கி,  மெளனமாக தியானம் பண்ணுவது. பகவான் ரமண ரிஷிக்கு மிகவும் பிடித்த சொல் ''பேசாமல் சும்மா இரு''

உலகத்திலே ரொம்பவும் கடினமான, முடியாத செயல் ஒன்று உண்டு என்றால் அது ''சும்மா'' இருப்பது. ஒரு ஐந்து நிமிஷம் நீங்கள் சும்மா இருப்பீர்களா. உடம்பு சும்மா இருந்தாலும் உள்ளே மெஷின் ஓடிக்கொண்டே இருக்குமே அதை சொல்கிறேன். ஒரு ஐந்து நிமிஷம் அதை ஓடாமல் நிறுத்தி வைக்க முடியுமா. முடிந்தால் நான் உங்கள் சிஷ்யன் மௌன குருவே.

தனது குருவை மௌன குரு என்று அழைக்கிறார் தாயுமானவர் : சும்மா இரு என்று போதித்ததை பற்றி ரொம்ப ரொம்ப  அழகாக எழுதுகிறார்.  அவரது பாடல்கள்  ஆரம்பத்திலேயே  எவ்வளவு ஞானபூர்வமாக இருக்கிறது:

''அங்கிங் கெனாதபடி  எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே  கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெ
ய்குவாம்.''

ஸத் ,சித், ஆனந்தமான  ''அது''  எங்கும்  ஒளிமயமாகி, எல்லாமுமாகி, அண்ட பகிரண்டத்தையும் தன்னுள் அடக்கி, மனம் வாக்கு காயம் எல்லாம் கடந்து,பலரும் தம்முடைய தெய்வம் என்று கொண்டாடப்பட்டு, ம், என்றும்  சாஸ்வதமாக , இரவு பகல் எப்போதும் உள்ள, எல்லையற்ற, மனதிற்கு இனியதாக  விளங்கும் ''ப்ரம்மம்'' ஆகிய  பகவானை வணங்குவோம்   என்கிறார்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...