ஒரு சம்பாஷணை. #நங்கநல்லூர்_ J_K_SIVAN
கோபாலசாமிக்கு மசாலா ஐட்டங்கள் ரொம்ப பிடிக்கும். மசாலா விரும்பியவன் கெட்டவன் அல்லவே. அவனுக்கு பணத்தின் மேல் கொஞ்சம் அதிக ஆசை. அதுவும் நிலம் வாங்குவதில் கொள்ளைப்பசி . எங்காவது நிலம் எவரிடமாவது அடாவடி அடித்து சாமர்த்தியமாக அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டே இருப்பான். நல்ல விலைக்கு சிலவற்றை விற்பான். வாங்கும்போது தனது அடாவடி சாமர்த்தியத்துக்காக தன்னைத் தானே மெச்சிக்கொள்வான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம்.கிருஷ்ண பவனில் அன்று வாசலில் ''இன்றைய ஸ்பெஷல் டபுள் மசாலா வெங்காய தோசை'' என்று பலகையில் எழுதப்பட்டு தொங்கியதைப் பார்த்ததும் உடனே சைக்கிளை விட்டு இறங்கி உள்ளே சென்று விட்டான்.
'ஒரு அர்ஜன்ட் வெங்காய ஸ்பெசல் டபுள் மசாலா''
சர்வர் உரக்க உள்ளே காது கேட்க கூவிவிட்டு அது வர ஐந்து நிமிஷம் ஆகும்.
'' வேறு என்ன அதற்குள் சாப்பிடறீங்க?'
' கோபால்சாமியின் கண்கள் எதிரே இருந்த கண்ணாடி அலமாரிக்குள் என்னென்ன பெரிய தட்டுகளில், பாத்திரங்களில் இருக்கிறது என்று மேய்ந்து கொண்டிருந்தது.
''அதோ அந்த இரண்டாவது வரிசை மூன்றாவது தட்டில் என்ன இருக்கு?''
''உருளைக்கிழக்கு மசாலா போண்டா''
''சூடா இருக்கா?''
''ஆறு நிமிஷம் 20 வினாடிக்கு முன்பு தான் அடுப்பில் இருந்து இறக்கியது''
''ரெண்டு கொண்டா'
'போண்டா மறைந்து ஸ்பெஷல் டபுள் மசாலா வெங்கா
ய தோசை வந்து அதுவும் பாதி குறைந்தபோது மார்பை அடைப்பது போல் இருந்தது.
''தண்ணி கொண்டாப்பா''
''ஒரு முடக்கு, ஒரு வாய் தண்ணீர் குடித்தகோபாலசாமிக்
கு ஹோட்டல் அலமாரி, சர்வர் எல்லாம் ஏன் சுழல்கிறது? ஏன் உட்காரமுடியாமல் தடுமாறுகிறேன்? மூச்சு சரியாக விடமுடியவில்லையே '' குப் என்று கோபால சாமி க்கு உடல் வியர்த்து அப்படியே தரையில் சாய்ந்தான்..
அவன் எதிரே எமதர்மன் நின்றான்.
''வா கோபாலசாமி நீ என்னிடம் வரவேண்டிய நேரம் வந்துவிட்டது''
''ஐயோ, என்னையா கூப்பிடறே? ஏன் இவ்வளவு சீக்கிரம்,, 46 வயது தானே எனக்கு? எங்கம்மா நீ நூறு வயது இருப்பே''என்று வாழ்த்துவாளே அடிக்கடி''
.
''அம்மாவின் ஆசை வேறு, எனக்கு உன்னைப்பற்றிய கொடுக்கப்பட்ட கணக்கு வேறு. உன்னுடைய லீஸ் LEASE பீரியட் முடிந்துவிட்டது. வா என்னோடு'''
'ப்ளீஸ் என்னை விட்டுடுப்பா. நான் செய்யவேண்டியது, திட்டங்கள் எல்லாம் நிறைய பாக்கி இருக்கே'
''ஸாரி டா, கோபாலசாமி, உனக்கு கொடுக்கப்பட்ட நேரம் எவ்வளவோ அது முடிந்துவிட்டது''.
''ஐயா, நான் ராப்பகலா உழைச்சு சேர்த்து வச்சது, என் ரியல் எஸ்டேட் வியாபாரம் எல்லாம் அப்படியே பாதியிலே வுட்டுட்டு எப்படிப்பா வருவேன்' எனதெல்லாவற்றையும் எப்படி விடுவது?
''டேய், கோபாலசாமி, குழந்தை மாதிரி பேசாதேடா. அதெல்லாம் உன்னுடைய து இல்லைடா. உனக்கு,நீ பூமியில் வாழும்போது இரவல் கொடுக்கப்பட்டவை. உன்னுடையது ஆகாது '
'''அப்படி சொல்லாதே, யமா, அவை எல்லாமே என்னுடைய திறமை, சாமர்த்தியத்தால் நான் பெற்றது'
'''மடையா, உன் திறமை சாமர்த்தியம் எல்லாமே நீ இருந்த சூழ்நிலையில் உனக்கு இயற்கையாக அமைந்தவை, நீ இல்லாமல் வேறு எந்த கந்தசாமி, பாலுசாமி இருந்தாலும் நிகழ்பவை'
'''என்ன யமா இது? என் மனைவி மக்கள், உறவுகள் நண்பர்கள் எல்லாருக்கும் நான் எவ்வளவு அவசியம்?''
இல்லையப்பா, அவர்கள் கொஞ்சகாலம் உன் இதயத்தோடு சம்பந்தப்பட்ட சிலர், உன் இதயம், மனத்தில் இடம் பெறாதவர்கள் பல கோடி''
''யமா, நீ புரிந்துகொள்ளவில்லை, எல்லாம் இந்த உடம்பால் நான் தேடி அடைந்தது. அதையுமா எனக்கில்லை என்கிறாய்?'
நீ ரொம்ப பேசுகிறாய். உன் உடம்பும் நீ கேட்டு பெற்றதில்லை. உனக்கு கொடுக்கப்பட்ட இரவல் பொருள். அது இந்த பூமிக்கும் பிரபஞ்சத்துக்கு சொந்தமானது. பஞ்சபூதத்திலிருந்து வந்தது''.
''என்ன இது யமா? இந்த உலகில் எனக்கு என்று எதுவுமே இல்லையா? எதையுமே நான் எடுத்துக் கொண்டு போகமுடியாதா?''
''உனக்கு கொடுக்கப்பட்ட 46 வருஷம், 7 மாதம் 2 நாள் 16நிமிஷம், 40 வினாடி மட்டுமே உனது. அதை எப்படி உபயோகித்தாய் என்பது தான் விஷயம்.அதில் நீ பிறருக்கு என்ன உதவினாய் , தர்மம் தானம் செயதாய், நன்மை புரிந்தாய், நல்லசெயல்கள் எண்ணங்கள் கொண்டாய், என்பதும் எவ்வளவு தீங்கு, தீமை, அக்கிரமம், அநியாயம், கெடுதல் செய்தாய் என்பதும் தான் உனது. அதை கர்மா என்பார்கள். அதை நான் கணக்கில் வைத்திருப்பவன். அதில் உன் புண்ய கர்மா, பாப கர்மா எவ்வளவு என்பது தான் நீ என்னிடம் கொண்டு வருவது''. அதை மட்டும் தான் நீ கடைசியில் கொண்டு போகமுடியும் என்று எவ்வளவு தடவை அடித்து சொல்லி இருக்கிறதே. மலைமலையாக புஸ்தகங்கள் சொல்கிறதே. முன்னோர்கள் உனக்கு அளித்த நூல்கள், பேச்சுக்கள் உபன்யாசங்கள் எழுத்துக்கள் எல்லாமே. திரும்ப திரும்ப சொல்கிறதே. நீ அதை ஏன் அறிந்துகொள்ளவில்லை. புரிந்து கொள்ள வில்லை? பாவம் நீ மட்டுமில்லை கோபாலசாமி, வேறு யாரும் கூட எவ்வளவோ சொல்லியும் இதையெல்லாம் காதில் ஏற்றுக் கொள்வ தில்லை.'
'யமன் தரதரவென்று கோபாலசாமியை இழுத்துக் கொண்டு போனான்.
கோபாலசாமி சம்பாஷணை நமக்கு புரிந்தால் இதை எழுதிய எனக்கு சந்தோஷம்''.
No comments:
Post a Comment