Saturday, October 22, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மஹா பெரியவா கிட்டே  100  கேள்விகள்.

5. ''பெரியவா,  நீங்க  சந்திர மௌலீஸ்வரர் பூஜை அனுதினமும் பண்ணுகிறவர். எங்களுக்கு  சிவஸ்வரூபம் பற்றி சொல்லணும் .''

'' பரமசிவனுக்கு  ஐந்து அடையாளங்கள் இருக்கு. அதில்  பஸ்மமாகிய விபூதி ஒன்று; அவனுக்குப் பிரியமான இன்னொரு   அடையாளம் ருத்ராக்ஷம். வில்வம் மூணாவது.  இதிலே பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்து பஸ்பமாகி விடுகிறது. பஸ்பத்தை எரித்தால் அது அழிவதில்லை. சிவ ஸ்வரூபமும் அத்தகையதே.

'6.  ''ஆஹா  அபூர்வம்.  ருத்ராக்ஷத்ரம் எப்படி விசேஷமானது பெரியவா?

'' ருத்ராக்ஷம்  என்றால்  பரமேஸ்வரன்  கண்  என்று அர்த்தம்.  ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷம்  சிவனுடைய அடையாளம் என்று சொன்னேனே. ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது.

7.    ஆமாம் பெரியவா, ஓம்  நமசிவாய' ன்னு சொல்றது கூட  சக்தி வாய்ந்த பஞ்சாக்ஷரம் அல்லவா?''

''அறுபத்தி நான்கு கலைகள், பதினான்கு வித்தைகள்,  இதிலே  நாலு  வேதங்கள். நான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவை.  சாமவேதம், யஜுர் வேதம், ரிக் வேதம் னு பேர்.  மூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் முக்கியமானது.  மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது. பஞ்சாக்ஷரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்கள். பஞ்சாக்ஷர உபதேசம் நாவுக்கு ஆபரணமாக இருப்பது.  இப்போ  ஓம் நமசிவாய: என்பது எவ்வளவு மஹோன்னதமானது என்று புரியறதா?

8. ''ஹோமாக்னி என்கிறார்களே,  அது அவ்வளவு விசேஷமா பெரியவா ?''

''உலகத்திலுள்ள எல்லாருமே சிவபெருமானுடைய  பிரஜைகள் தான்.  குடிமக்கள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிக  மதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டு. வைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும். சப்த   த்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். 

நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம்   விடாமல் சரிவர பின் பற்ற வேண்டும்
 வைதிகமதம் முன்போலவே எல்லா இடங்களிலும்  பரவ வேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். வளர வேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவஸ்வரூபம்.   நீரில்லா நெற்றிப் பாழ் என்று சொல்லி இருக்கு.  கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷ  தாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம், வில்வ அர்ச்சனை இவைஎல்லாம்  மிக அவசியம்.

9. 'பெரியவா, அப்படின்னா  நாம்  அணியும் சின்னங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததா?''

'பெரியவர்கள் தங்களுடைய அனுபவ த்தின் மூலம்  இதெல்லாம்  பண்ணி வைத்திருக்கிறார்கள்.  வெளியே சிவ   காரியங்களைச் செய்து, உள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் மிலிட்டரிக்காரன் யூனிபாஃரம் போட்டால் வீரத்தன்மை வருகிறது என்று சொல்லுகிறான்.  அது போல  தான்  நமக்கு பக்தி வரவேண்டும், சாந்தம் வர வேண்டும், சத்யம் வர வேண்டும் என்றால் ‘சிவ’ சின்னங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். 

வெளியில் நாம் செய்கின்ற சில சம்ஸ்காரங்களினாலே உள்ளே சில நன்மைகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் வெளிவேஷம் என்று நினைத்தால் வெறும் வேஷமாகவே போய்விடும்.  ஆத்மார்த்தமாக ஜீவனை பரிசுத்தம் பண்ணிக் கொள்வதற்காகச் சின்னங்களை அணிகிறேன் என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம் ஏற்படும்.   புறத்திலே தரிக்கும் சின்னங்கள் ஆத்மாவுக்கு உபயோகப்படுகின்றன.  

10. ' அம்பாளை  காசியிலே அன்ன  பூரணி என்கிறோம்,  பரமேஸ்வரனை எதனாலே  அன்னதாதா என்று  போற்றுகிறோம். கொஞ்சம் புரியவையுங்கோ பெரியவா?'

'' நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக் கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்ரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக் கிறார்.   இதுக்கு மேலே  அன்னதாதா' வுக்கு  வேறே அர்த்தம் வேணுமா உனக்கு?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...