தாமோதர மாதம். #நங்கநல்லூர்_J_K_SIVAN
பிருந்தாவனத்தில் கண்ணனைக் கட்டிப்போட்ட உரலை பார்த்து நமஸ்கரித்தேன். கண்ணனின் அற்புத லீலைகளை விடாமல் தினமும் எழுதி வருகிறேன். சதா அவன் நினைவாகவே இருந்து வருகிறேன். எனக்கு தாமோதர வருஷம், மாதமோ, நாளோ இல்லையே.
இன்று முதல் தாமோதர மாதம். வருஷத்தில் இப்படி ஒரு மாதமா? ஏன் காலண்டரில் காட்டவில்லை? என்று தேடவேண்டாம். அவன் அடிக்கும் லூட்டி, விஷமங்கள் தாங்க முடியாமல் அம்மா யசோதை கோபம் கொண்டு, கிருஷ்ணனின் வயிற்றை உரலோடு சேர்த்து மணிக்கயிற்றால் கட்டி '' கட்டிப் போட்டால் தான் நீ வழிக்கு வருவாய். இங்கேயே கிட' என்று கொல்லையில் விட, அவன் நளகூபரன், மணிக்ரீவன் என்ற குபேரன் புத்திரர்களை சாபத்தின் தொல்லையில் இருந்து விடுவித்த லீலைகளை நினைவூட்ட இந்த மாதம்.
அவனை வேண்டிக்கொண்டு தினமும் நெய் தீபங்கள் எல்லா வைஷ்ணவ கோவில்களிலும் இல்லங்களிலும் ஞான ஒளி வீச ஏற்றுவார்கள்.
சைவர்களுக்கான திருவண்ணாமலை தீபம் அடுத்த கார்த்திகை மாதம் வர கொஞ்சம் காத்திருப்போம். தீபாவளிக்கு அப்புறம் அது.
கிருஷ்ணனின் வயிற்றை சுற்றி தாம்புக்கயிற்றில் உரலோடு சேர்த்து யசோதை கட்டியதை மதுரகவி ஆழ்வார் எவ்வளவு அழகாக ரசித்து ஆனந்தக் கண்ணீர் மல்கி கண்ணினுட் சிறு தாம்பாக பாடுகிறார்!'
கண்ணினுட் சிறு தாம்பு'' பாசுரங்களைப் படித்து புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அந்த தமிழ் நமக்கு புதியது. மதுர கவி ஆழ்வார் வேறே லெவல். நாலைந்து முறை படித்தபின் சற்று புரிந்தார்.. ஆழ்வாரை படித்து ரசித்ததில் பரம சந்தோஷம். கடினம் தமிழில் இல்லை என்று அப்புறம் தான் புரிந்தது. பாசுரத்தில் உட்பொருளை புரிந்துகொள்ள கொஞ்சம் பக்குவம் தேவைப்பட்டது. பொதுவாகவே ஆழ்வார்களின் பாசுரங்கள்அழகு தமிழில் சமைக்கப் பட்டு மணம் வீசுபவை. எளிமையானவை. இனிய தமிழ்ச் சுவை கொண்டவை. அதிலும் நம்மாழ்வார் பாசுரங்கள் நெஞ்சை அள்ளுபவை. நம்மாழ்வாருக்கே தன்னை அர்பணித்துக் கொண்டவர் மதுர கவி ஆழ்வார். இந்த ஆழ்வாரின் கண்ணினுட் சிறு தாம்பு பத்தே பாசுரங்கள் ஆனாலும் கண்ணனை எப்படி சிறு தாம்புக் கயிறு கட்டுண்ணப் பண்ணியதோ, அதே போல் நம் நெஞ்சை கட்டிப் போடும் அழகிய தெய்வீக பாசுரங்கள்.
எல்லாம் குரு பக்தி ஒன்றிலேயே கட்டுப்பட்டவை. ஆசார்யன் தான் முழு முதல் தெய்வம் என்ற கோட்பாட்டை அழகிய தமிழில் காட்டுபவை. ஆச்சார்ய பக்தி பிரதானமானது என்பதை பிரபன்ன ஜன கூடஸ்தர் நம்மாழ்வாரின் மேல் பாடிய பாசுரங்கள்.
கண்ணினுட் சிறு தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன், என்னப்பனில்
நண்னித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே
''நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கும் தான் தெரியுமே, அந்த கண்ணன் சிறு பயல் எவ்வளவு விஷமம் செய்பவன். வெண்ணைய் திருடி, வகையாக மாட்டிக்கொண்டு அம்மா யசோதை அவனை ஒரு சிறு மணிக்கயிற்றால் அவன் வயிற்றை சுற்றி கட்டி மறு முனையை ஒரு பெரிய கல் உரலில் கட்டி அவனை நகர விடாமல் பண்ணினாளே. சகடாசுரனையே சிறு காலால் உதைத்து கொன்றவன், மூவுலகையும் ஈரடியால் அளந்தவன்; அவனால் அந்த மணிக்கயிற்றை அறுத்தெறிய முடியாதா?. வேஷக்காரன், மாயாஜாலன் , சும்மா.... பாவம் அவள் தன்னைக்கட்ட சிரமப்படு கிறாளே என்று இரக்கம் கொண்டு, தாய்ப் பாசத்தால் தன்னை கட்ட வைத்துக் கொண்டவன்.
எங்கெங்கோ இருந்தெல்லாம் கிருஷ்ண பக்தர்கள் யசோதைக்கும் அவள் இடுப்பில் கிருஷ்ணனுக்கும் நெய் தீபங்கள் ஏற்றும் வைபவம் நிறைந்த மாதம். அவ்வளவு புண்யம் நெய்தீபம் இந்த மாதம் கிருஷ்ண னுக்கு ஏற்றி வழிபட்டால் என்று ரூப கோஸ்வாமி ''மதுர மகாத்மிய''த்தில் குறிப்பிடுகிறார்.
இந்த மாதம் கிருஷ்ணன் அருள் ரொம்ப சுலபமாக கிடைக்கும் என்று வேதங்கள் பாடுகிறது. விரதம், அனுஷ்டானம், நிறைய நேரம் பஜனை, கீர்த்தனங் களில் செலவு செய்யும் மாதம். துளசிக்கும் பசுக்களுக்கும் வழிபாடு செய்வது அதிகம் இந்த மாதத்தில். இரண்டுமே கிருஷ்ணன் சம்பந்தப்பட்டது இல்லையா. தாமோதராஷ்டகம் தினமும் சாயந்திரம் சொல்லலாம்:
கிருஷ்ணன் படத்துக்கு, நெய் தீபம், தூபம், ஏற்றலாம். புஷ்பம், நைவேத்யம், அளிக்கலாம்.
சாத்விக உணவு, உபவாசம். உத்தமம்
முடிந்த அளவு எளிய தான தர்மம்.
துளசிக்கு நமஸ்காரம்.
அவ்வளவே போதுமே. இதற்கு நேரம் சற்று கிடைக்காமால் போகுமா? டீவியை சற்று மூடினால் தேவையான நேரம் கிடைக்கும். வாட்ஸாப்ப் பார்க்கா மல் மொபைல் மூடிவிட்டால் முழு சாயந்திரமும் நமக்கு தானே.
இந்த தாமோதர மாதத்தில் எவன் கிருஷ்ணனுக்கு நெய் தீபம் ஏற்றி வழி படுகிறானோ அவன் கிருஷ்ணனை அடைகிறான். அவன் எண்ணற்ற கல்பமாக செய்த பாபம் விலகுகிறது. இந்த மாதம் முழுதும் ஒரு வேளை உணவு கொள்பவன் சர்வ சக்தியும் புகழும் மேன்மையும் பெறுகிறான்.
''ஒ நாரதா, இந்த தாமோதர மாதத்தில் தினமும் பகவத் கீதை படிப்பவன் ஜனனம் மரணம் இல்லாதவன்''
“இந்த மாதம் விளக்கு தீபம் தானம் செய்வது சிறந்த தானம். இணையற்றது'' என்கிறது ஒரு ஸ்லோகம்.
No comments:
Post a Comment