ஒரு வீரனின் நினைவு - #நங்கநல்லூர்_J_K_SIVAN
இன்று கட்டபொம்மன் நினைவு நாள். 18ம் நூற்றாண்டு திருநெல்வேலி பாஞ்சாலங்குறிச்சி பாளையக்கார தலைவன் கட்டபொம்மன். கிழக்கிந்திய கம்பனி
ஆட்சிக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்த்து போரிட்டவன். பிறந்தது 3.1.1760 அன்று. அப்பா அம்மா: ஓட்ட பிடாரத்தை ஆண்ட ஜெகவீர கட்டபொம்மன், அறுமுகத்தம்மாள். ராஜ கம்பள நாயக்கர் வம்சம். தெலுங்கு தாய் மொழி.
மதுரை நாயக்க வம்சத்துக்கு பின்னர் ஆற்காட் நவாப்கள் வசம் மதுரை மற்றும் பல பகுதிகள் வந்து, அவர்கள் கிழக்கிந்திய கம்பனியிடம் கடன் பெற்று பாதுகாப்பு ஆதரவு பெற்று அவர்களுக்கு வரி வசூலிக்கும் அதிகாரத்தை கொடுத்ததால் 72 பாளையக் காரர்களும் கப்பம் கட்டவேண்டியதாயிற்று. 42வது பாளையக்காரன் கட்டபொம்மன் கப்பம் கட்ட மறுத்தான்.
1797-இல் முதன் முதலில் ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797/1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்ம னிடம் ஆலன் துரை தோற்று ஓடினார்.
அடுத்து கம்பெனி கலெக்டர் ஜாக்ஸனுக்கு வரி, கப்பம் கட்ட மறுத்தான். ராமநாதபுரம் சேதுபதி அரண்மனை யில் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்தபோது அவனை கைது செய்ய முயன்றனர். கட்டபொம்மன் தயார் நிலையில் வந்ததால் அங்கு ஏற்பட்ட கலவரத்தில் க்ளார்க் எனற கலெக்டரின் உதவியாளன் கொல்லப் பட்டான். கட்டபொம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றான். கம்பெனி ஜாக்ஸனை கலெக்டர் பதவியிலிருந்து மாற்றியது. புது கலெக்டர் வரி பாக்கி, கப்பம் கட்ட வற்புத்தினான். கட்டபொம்மன் மறுக்கவே, யுத்தம் தொடங்கியது. கம்பெனியின் போர் தளபதி மேஜர் பானெர்மன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நாலு பக்கமும் வளைத்து சூழ்ந்து தாக்கினான். தெற்கு வாசலில் நடந்த மும்முரமான யுத்தத்தில் கம்பெனி அதிகாரி கர்னல் காலின்ஸ் கொல்லப்பட்டான். கோட்டை தகர்ந்த தால் கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறி தப்பினான். திருமயம், வீரச்சிலை, என்று பல இடங்களில் மறைந்து இருந்து கோலார் பட்டி ராஜகோபால நாயக்கர் இல்லத்தில் மறைந்திருந்த கட்டபொம்மனை கம்பெனி படை தாக்கியது.
அங்கிருந்து தப்பி கட்டபொம்மன் புதுக்கோட்டையை அடுத்த திருக்களம்பூர் காட்டில் ஒளிந்து கொண்டான். புதுக்கோட்டை ராஜாவுக்கு கம்பெனி தளபதி பானர் மேன் கட்டளையிட்டு புதுக்கோட்டை ராஜாவின் வீரர்களிடம் கட்டபொம்மன் பிடிபட்டான்.
16ம் தேதி அக்டோபர் 1799 அன்று ஒரு புளியமரத்தில், கயத்தாறு என்ற இடத்தில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
கட்டபொம்மன் முருக பக்தர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரசாதம் நைவேத்தியம் ஆனபிறகு, அடிக்கும் மணி ஓசை கேட்ட பிறகு தான் உணவு உண்பார். இந்திய சுதந்திர தாகத்துக்கும், கிளர்ச்சிக்கு முன்னோடி வீர பாண்டிய கட்டபொம்மன்.
No comments:
Post a Comment