உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல. - நங்கநல்லூர் J K SIVAN
ஸூர்தாஸை சில நாட்களாக அணுகாதது பிசகு. இன்று அவர் பாடல் ஒன்றின் ஆங்கில மொழி பெயர்ப்பு கண்ணில் பட்டது. அது பற்றி எழுத தோன்றியது.
பிருந்தாவனத்தில் பிச்சியாக ராதை உலவுகிறாள். அவள் ஒரே நாளில் இவ்வளவு தள்ளாமை கொண்ட முதியவளாகி விட்டாள் . கலகலவென்று சிரித்து ஓடி யாடும் ராதாவா இது? கண்களில் சோகம், கண்ணீர், ராதையை அடையாளமே தெரியவில்லை. அலங்காரப் பிரியை இப்படி அலங்கோலமாக நிற்கிறாளே . வெறித்த பார்வை, உஷ்ண பெருமூச்சு. எதிலும் பற்றற்ற விரக்தி.
''பண்டீரவனத்தில் மது வனத்தில், எங்கு சென்றாலும் நேற்றுவரை சொர்க்கலோகமாக இருந்தவை எல்லாம் பாலைவனத்து கள்ளிச்செடியாக எனக்கு காண்கிறதே. எனக்கு பிடித்தவை செடி, கொடி , விருக்ஷங்கள், புல் தரைகள், யமுனை ஆறு, எல்லாமே என் எதிரியாகி விட்டதே. நறுமணம் கலந்த தென்றல் கோடை வெயில் உஷ்ண காற்றாக தஹிக்கிறதே. கொடிகளில் மலர்கள் தீயை உமிழ்கிறதே. பறவைகள் அத்தனையும் ஊமையாகி விட்டனவே. வெறுமை, மௌனம் என்னை கொல்கிறதே . கிருஷ்ணா உன் பிறிவுக்கு இவ்வளவு சக்தியா? தாமரைகள் மலர மறந்து போய்விட்டதா? வண்டுகள் தேனை வெறுத்துவிட்டனவா. உபவாசமா?''
ராதையால் உணர்ச்சிகளை மறைக்க முடியவில்லை. அவளால் கண்ணன் பிரிவைத் தாங்கமுடியவில்லை.
மறக்க, மறைக்க முயன்றாலும் தோற்றுப்போகிறாள். அடக்க அடக்க மேலே சுனாமியாக துக்கம், பொங்கி எழுகிறது. வெளிக்காட்டிக்கொள்ளாமல் மறைக்க முயல்கிறாள். தோழிகள் சூழ்ந்து கொண்டனர்.
''ராதா, என் தோழி, கண்ணன் மேலுள்ள ப்ரேமையை உன்னால் மறைக்க முடியவில்லையடி''
''கண்ணனா , யார் அவன், கருப்பா, சிவப்பா? எங்கே இருப்பவன்?'' என்கிறாள் ராதை.
''என்னடி ராதா, இப்படிப் பேசுகிறாய்?
'' சகி,உண்மையைத் தான் பேசுகிறேன், யார் பிள்ளை நீ சொல்லும் அந்த கிருஷ்ணன் என்பவன்?''
''என்னடி ராதா உளறுகிறாய்? நந்த கோப மஹாராஜா பிள்ளை, உன் உயிர் நண்பன்?''
''தெரியவில்லையே, அவன் என்ன சிறுவனா, பெரியவனா, குழந்தையா, யார் அது?''
”தோழிகளே, பார்த்தீர்களா, ராதை எப்படி ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறாள்'' என்னிடமே
கேட்கிறாள் யார் அந்த ஷ்யாம், எப்படி இருப்பான்? என்று''
ராதைக்கு மற்ற தோழிகளைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. கோபம் கோபமாக வருகிறது. இந்த கிருஷ்ணன் அவர்களோடு கூட சரி சமமாக விளையாடுகிறவன் அல்லவா? தேன் வண்டு எல்லா மலர்களையும் நாடுவது போல''
' ஹே , கரு வண்டே , எதற்கு என்னை சுற்றி சுற்றி வருகிறாய்? நான் என்ன தேன் கொண்ட மலரா? நேற்று ராத்திரி நீ சுற்றி சுற்றி வந்து தேன் தேடி குடித்தாயே நான் அந்த மஞ்சள் மல்லிகை மலரல்ல. போ போ எங்காவது அல்லி மலர் இருக்கும், குளத்தில் போய் தேடு. உன் முகம், உன் உடம்பு, சிறகுகள், அங்கங்கள் எல்லாம் வித வித வாசனையோடு, வண்ணத்தோடு பல மலர்களிடமிருந்து பெற்றவையாக காட்சி அளிப்பதை நான் அறிவேன். நீயும் அந்த கிருஷ்ணன் பயல் போலவே தான். அவனுக்கு எப்போதும் பல கோபியரோடு விளையாட வேண்டும், ஆட வேண்டும் பாடவேண்டும்.'
''கிருஷ்ணா, நான் உன்னை விரும்பி உனக்காக காத்திருப்பதை நீ அறியவே இல்லை. நீ என்னை லக்ஷியம் பண்ணாமல் எங்கே வேண்டுமானாலும் சுற்ற முடிகிறது. எனக்கு உன் பிரிவு தாங்க முடியாத நிலை. ஏற முடியாத உயர்ந்த சிகரம் கிருஷ்ணன். உன் பிரிவால் ஒவ்வொரு கணமும் நான் இளைத்துக் கொண்டே
வருகிறேன்.
ஒரு புஷ்பமாக தன்னை பாவித்து ஒரு கருவண்டுடன் பேசுகிற ராதை, அடுத்த கணமே தான் ஏதாவது தவறு செய்து விட்டதால் தன்னை விட்டு கண்ணன் போய்விட்டானோ என்று அஞ்சுகிறாள்,கை கூப்பி கெஞ்சுகி
றாள்.
''என் ப்ரபு , எஜமானே , என் தவறை மன்னித்து விடுங்கள், அவற்றை லக்ஷியம் பண்ணாதீர்கள். எல்லோரையும் சமமாக பாவிக்கும் தெய்வமே என்னை மன்னித்து என்னையும் ரக்ஷிக்கவேண்டும். இரும்பு ஒன்றுதான், ஒன்று சூலாயுதமாக, வேலாயுதமாக கோவிலில் வணங்கப்பட்டு நமஸ்கரிக்கப்பட்டு பெருமை கொண்டது. மற்றது கசாப்பு கடைக்காரன் கத்தியாக உயிர்களை பலி வாங்குகிறது. ரெண்டுமே ஒரே கொல்லன் தயார் செய்த இரும்பு துண்டு தான். கிருஷ்ணா, நீ பக்தவத்சலன் . என்னையும் ரக்ஷி.
சூர் தாஸ் கிருஷ்ணன் கொடுத்த வாக்கை நினைவு கூர்கிறார்.
''5நான் பக்தர்களின் உடைமை , அடிமை. அவர்கள் எனக்கும் நான் அவர்களுக்கும் சொந்தம். அர்ஜுனா, இது உனக்கு அறிவிக்கும் அளிக்கும் வாக்குறுதி. என்றும் மீறாத ஒன்று. எப்போது எந்தநேரம் எங்கே என் பக்தர்களுக்கு என் உதவி தேவையோ, வெறுங்காலுடனே கூட அப்போது அவர்களுக்கு உதவ ஓடுபவன் நான். அவர்களின் எதிரி என் எதிரி. இந்த மஹாபாரத போரில் குருக்ஷேத்ரத்தில், உனக்கு நான் தேர் ஓட்டுவது கூட உன் எதிரிகளை என் எதிரியாக கொண்டு நீ அவர்களை வெல்ல உதவுவதற்காகத்தான். நீ ஜெயித்தால் நான் ஜெயித்தவன். நீ தோற்றால், அது என் தோல்வி.
No comments:
Post a Comment