Monday, October 31, 2022

MY ANCESTORS

என் முன்னோர் பழங்கதை   --   #நங்கநல்லூர்_j_k_SIVAN
 
தமிழ் பண்டிதர்  அறிமுகம் -  

என்  அம்மா வழி தாத்தாவுக்கு   ஏழு, எட்டு வயதிருக் கலாம்.  தஞ்சாவூர்  கருத்தட்டான் குடி (இப்போது கரந்தை)யில் வெள்ளைக்கார அரசாங்க  முனிசிபாலிடி பள்ளிக்கூடம் இருந்தது. அதில் ரெண்டாவது வகுப்பில்  சேர்த்து விட்டார்கள்.இங்கிலிஷ், தவிர  நன்னெறி, நல்வழி, போப்  ஐயர்  இலக்கணம் சொல்லிக்  கொடுத்தார்கள்.  மற்ற மாணவர்களுக்கு இது கடுமையாக இருந்தாலும் தாத்தாவுக்கு ஈசியாக இருந்தது. அவர் தான் ஏற்கனவே  தமிழ் நூல்கள் கற்றிருந்தாரே. பள்ளிக்கூடத்துக்கு எதிரே ஒரு வீடு. அதில் இருந்த பையன் தாத்தா நண்பன். 

ஒரு நாள்  அவன் வீட்டுத் திண்ணையில் அவனுக்கு தமிழ் இலக்கணம்  கஷ்டமாக இருந்ததால்  தாத்தா அவனுக்கு சொல்லிக்  கொடுத்துக் கொண்டிருந்தார். வாசலில் அப்போது ஒரு ஒற்றை மாட்டு வண்டி வந்து நின்றது. அதில் நிறைய  புத்தகங்கள். வீட்டுக்குள்ளே இருந்து  தடியாக, கருப்பாக,  வாட்ட சாட்டமாக,   நீளமான  கோட்டு , தலைப்பாகை  அணிந்து, நரைத்த மீசை,  கையில் சில புத்தகங்களுமாக ஒருவர்  வெளியே வந்தார்.  வாசலில் திண்ணையில்  தாத்தா  பாடம்  சொல்லிக்  கொடுப்பதை  சற்று நின்று கவனித்தார். முகத்தில் புன் சிரிப்பு.  தாத்தாவின் நண்பன்  பயபக்தியுடன், கையைக் கட்டிக்கொண்டு  வாய் பொத்தி அவரைக்  கண்டதும் எழுந்து நின்றான். 

''டேய் ,குமாரசாமி, அந்த  ஐயிரு  பையன் சொல்லிக் கொடுக்கிறதை கவனமாகக் கேள்'' என்றார்.   தாத்தா எழுந்து நின்றதை கவனித்து,  கை  ஜாடை காட்டி  உட்காரு என்றவர் , 

''நீ  எங்கே படிக்கிறே?'' என்று கேட்டார்.

''இதோ எதிர்த்த முனிசிபாலிடி பள்ளிக்கூடத்தில்  இந்த பையனோடு படிக்கிறேன்''

''நீ  நாளைக்கு காலை 7 மணிக்கு இங்கே வந்து  என்னைப் பார்''

அந்த பெரியமனிதர்  வாசலில் மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து, கையில் இருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார்.   வண்டி புறப்பட்டது.''நான் இவரை  கருத்தட்டான் குடி  தெருவில்   வரும்போது போகும் போதெல்லாம்  இந்த மாட்டு வண்டியில் போவதைப்  பார்த்திருக்கிறேனே , எப்போதும் கையில் ஏதோ ஒரு புத்தகத்தை பிரித்து படித்துக்கொண்டே வண்டியில் போவார்.  இவர் இந்த வீட்டில் இருப்பவர் என்று இப்போது தான் தெரிகிறது''   என்று தாத்தா நினைத்தார். நண்பனைக்  கேட்டார்.

''குமாரசாமி, இந்த பெரியவர் யார்?''
''எங்க   ஆஞா (தந்தையார் ) அப்பாரு,  கும்பகோணம் காலேஜிலே  இலக்கண வாத்யார்''  என்றான். 

எதிரில் பள்ளிக்கூட மணி  டாங் டாங்  என்று சப்தம் எழுப்ப ரெண்டு பேரும்  பள்ளிக்கூடத்துக்கு ஓடினார்கள். சாயந்திரம் பள்ளி விட்டதும் தாத்தா வீட்டுக்கு போய் அண்ணா சீதாராம பாகவதரிடம்  நடந்ததை சொன்னார்.

''உனக்கு எப்படி  காலேஜ்  தமிழ் வாத்யாரை தெரியும்?'

'''என் சிநேகிதன் குமாரசாமியின் அப்பா'

'''உன்னை  நாளை  காலை 7 மணிக்கு வரச்சொன்னார் என்றால் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கும். நானும் உன் கூட வருகிறேன்.  
அவர்   திரிசிரபுரம்  மஹா வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணாக்கர். காலேஜில் பிரதம தமிழ் பண்டிதர்.''வசிஷ்டா, நீ சொல்கிற  தமிழ்  பண்டிதர்   நம்ம வீடு பக்கம் இருக்கும்  காலேஜ் ப்ரபசர் ரங்கசாமி ஐயர் அம்மான்சேய்க்கு (அம்மாஞ்சி)  வேண்டியவர். ஐயாசாமி  பிள்ளை என்று பெயர்''  என்றார். 
தாத்தாவின் அண்ணா  சீதாராம பாகவதருக்கு  பிள்ளை  பரிச்சயமானவர்.  மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு அநேக  மாணாக்கர்கள் (ஒருவர்  உ.வே. சா)  அவர்களில் ஒருவர் மாயவரம் சுவாமிநாத கவிராயர்.

கவிராயர் தஞ்சாவூர்  கீழக்கோட்டை வாசல் வெள்ளைப் பிள்ளையார் கோவிலில்  கம்ப ராமாயணம் பிரசங்கம் செய்வார்.  எப்படியும் ஆயிரம் பேர் வருவார்கள். அவருக்கு நடுநடுவே  ராமாயண பாடல்களை ராகமாக பாட  சீதாராம பாகவதர் உதவுவார்.  இந்த பிரசங்கத்தை கேட்க வருபவர்களில் ஒருவர்  தான் மேலே சொன்ன  குமாரசாமியின் அப்பா ஐயாசாமி  பிள்ளை. அப்படி தான்  பாகவதருக்கு பழக்கம்.


ஆகவே மறுநாள்  வீட்டில் தாத்தாவோடு அவரைப் பார்த்ததும் பிள்ளைக்கு ஆச்சர்யம்.

''அட  பாகவதர் வாள்,  நீங்களா, இந்த பையன் யார்'' என்று தாத்தாவைப் பார்த்து பிள்ளை கேட்டார்

.''என் தம்பி'''

'இந்த பையன்  ரொம்ப கெட்டிக்காரனாக இருக்கிறான்.  இலக்கணம் நன்றாக தெரிகிறது. இலக்கியமும் கற்றுக்  கொள்ளவேண்டும்.  இவன் பேசுவதைக் கேட்டேன் நன்றாக  இயல்பாக இருக்கிறது.  பிள்ளை  ஒரு புத்தகத்தை எடுத்து தாத்தாவிடம் நீட்டினார்

'இந்தாடா,  இதைப் படித்துக் கொண்டு வா ''  

பிள்ளை கொடுத்த புத்தகம்  அதிவீர ராம பாண்டியன் எழுதிய நைடதம். தாத்தா அதை ஒரு மாச காலத்தில் படித்து மனப்பாடம் பண்ணிவிட்டார்.

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம் - #நங்கநல்லூர்_J_K_SIVAN


தெய்வ குத்தம்.

இது தான் நம் குணம். குடும்பத்தில் எப்போதாவது நல்லது ஏதாவது நடந்தால், காரியம் வெற்றிபெற்றால் அதற்கு நாம் தான் காரணம். தடங்கல் வந்தால், தோல்வியுற்றால், அதற்கு காரணம், சிலருடைய பொறாமை, வயிற் றெரிச்சல், துரோகம், குடும்ப சாமி குத்தம்.திருஷ்டி. இப்படிப்பட்ட மனப்பான்மை அன்றிலிருந்து இன்றும் தொடர்வது. இப்படி நினைக்காத குடும்பங்கள் உண்டா என்பது அதிசயம்.

சொந்த விஷயத்தில் தான் இது என்பதல்ல. பொது விஷயத்திலும் சாமி குத்தம் மிக முக்யமானதாகும்.

மஹா பெரியவா கிட்டே இப்படி ஒரு வந்தது

மாயூரத்திலிருந்து சீர்காழி செல்லும் பாதையில் அஞ்சு ஆறு கி.மீ தூரத்தில் ஒரு கிராமம் நாகங்குடி. சீர்காழி பாதை யிலிருந்து உள்ளே அரைமணி நேரம் நடந்தால் வரும். ஊரில் எங்கும் பச்சைப் பசேல் என நெல் வயல். எங்கும் மரங்கள், வரப்பு மேல் நடந்து சுருக்கு வழியில் செல்வது ஊரார் வழக்கம். ஒத்தை மாட்டு வண்டி வழியாக ஊர்ப் பாதையில் சென்றால் அடையவும் வழியுண்டு. அது சுற்று வழி. 60 அல்லது 65 வருஷங்களுக்கு முன்பு இந்த ஊரில் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்.

ஊர்க்கரர்களிடையே நல்ல ஒற்றுமை. பக்தி. எல்லோருமாக ஒன்று சேர்ந்து கும்பாபிஷேகத்துக்கு நிதி திரட்டியபோது ஒரு ஷாக். நிதி வசூல், புனருத்தாரண கும்பாபிஷேக வேலைகள் ஜரூராக நடக்கையில் முக்யமான நபர் கமிட்டி தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தாராம். வேலை அப்படியே நின்றது. என்ன செய்வது?

சில மாதங்கள் கழித்து மீண்டும் திருப்பணி ஆரம்பித்தார்கள். என்ன துரத்ரிஷ்டமோ, வேறொரு அறங்காவலராக நியமிக்கப்பட்டு பணி மீண்டும் துவங்கியது. அவரும் திடீரெனெ போய் சேர்ந்துவிட்டார்.

சின்ன ஊர். யாரோ கொளுத்திப் போட்ட பட்டாசு படால் என வெடித்தது ''இது ஏதோ சாமி குத்தம்'' தக்க பரிஹாரம் பண்ணாமல் வேலை நடக்காது'

கிராமமே கலங்கி முழங்கால் மேல் தலையை வைத்துக்கொண்டு நடுங்கிப் போய் யோசித்தது.

'கோவில் வேலையா, ஐயோ, எனக்கு வேண்டாமப்பா' என்று எல்லோரும் உதறிக்கொண்டு சென்றால் வேலை எப்படி தொடரும்? கோவில் வேலை பாதியில் அப்படியே நின்றது.

அந்த கிராமம் கதி மோக்ஷம் அடைய வேண்டும் என்பதற்காகவே ஒரு மகான் அங்கே விஜயம் செய்தார்.
ஈஸ்வரனே அங்கே நடமாடும் தெய்வமாக மஹா பெரியவாளாக அந்த கிராமத்திற்கு விஜயம் செய்து சில நாட்கள் தங்கினார்கள்.

கிராமத்தார் பெரியவாவிடம் ஓடினார்கள்.
“சாமி…. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ தெரியலே… அடுத்தடுத்து இந்த மாதிரி நடந்துடுச்சு… கோவில் திருப்பணியும் நின்னு போச்சு… சாமி தான் ஏதாவது வழி காட்டணும்”
பெரியவா காலில் விழுந்து வணங்கி கிராம மக்கள் வேண்டினார்கள்.
பெரியவா கோவிலை சென்று பார்த்தார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை…
“கோவிலை சுற்றி முதலில் அகழி வெட்டுங்கள். அப்புறம் திருப்பணியை துவக்கலாம்!” என்றார்.
பெரியவாவின் உத்தரவை அடுத்து கோவிலை சுற்றி உடனடியாக பெரிய அகழி வெட்டப்பட்டது.

ஏன் அகழி? கோபம் என்பது உஷ்ணம். சூடானது அல்லவா. அதைத் தணிக்க நீர் தானே அவசியம்? ஏதோ தேவதையின் கோபத்துக்கு ஆளான அந்த கிராமம் பெரியவா சொல்லி கட்டிய அகழிக்குப் வெகு விரைவில் திருப்பணி நிறைவு பெற்று கும்பாபிஷேகமும் நிறைவு பெற்றது. மக்களின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.கோவில் கிராமத்திலிருந்து துண்டிக்கப் பட்டு ஒரு தனித் தீவு போல காட்சியளித்தது. இன்றும் நாகங்குடி செல்பவர்கள் கைலாசநாதரையும், சௌந்தர்ய நாயகியையும் தரிசிக்க அகழியைக் கடக்க போட்டிருக்கும் பாலம் மூலமாக செல்லலாம் என்று தெரிகிறது. அதற்கு பின்னர் சில கும்பாபிஷேகங்களும் நடைபெற்றிருக்கிறது.

இந்த கோவிலைப் பற்றி rightmantra.com என்ற வலையகத்தில் உள்ளதாக ஒரூ நண்பர் சொல்லி அந்த கோவிலின் படத்தை மட்டும் அதிலிருந்து எடுத்து உங்களுக்கு காட்டுகிறேன்.

அது சரி…பெரியவா ஏன் அகழி வெட்டச் சொன்னார்கள்? என்ன தோஷம்? எந்த தேவதைக்கு கோபம்?
தேவ ரகசியத்தை என்னிடம் கேட்டால் நான் எப்படி சொல்லமுடியும்.!

Sunday, October 30, 2022

MAN AND MIND

 மனசும் மனிதனும்  -   நங்கநல்லூர்  J K  SIVAN   


மனித மனம் அதி அற்புதமானது.  எண்ணற்ற சிந்தனைகள் அதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.  ஒருவர் எண்ணம் போல் மற்றவர்க்கு இல்லை. எண்ண ஓட்டத்துக்கு  எல்லையே இல்லை.  அது இருபக்கமும்  கூரான கத்தி.  நல்லதும் எண்ணும் , தீயதும் எண்ணும் . ஆசை, பேராசை, கோபம், அஹங்காரம் சகலமும் உருவாவதற்கு அதுவே  ஆதாரம். அதைக்   என்று பல  மஹான்கள் சொன்னாலும், கீதை திருப்பி திருப்பி சொன்னாலும் நமக்கு  அது ஒன்று மட்டும்  முடிவதே இல்லை.  ஒரு சின்ன கதை.

ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்தோடு உன்னிப்பாக  கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனருகில் வந்தார்.

''என்னடா  ஏதோ ஒரு  கற்பனை உலகத்தில் இருக்கிறாய் ?''
''பையன் தலையாட்டினான்,  இல்லை என்கிறானா,  ஆமாம் என்கிறானா ? அவருக்கு புரியவில்லை.
''உன் மனதில் என்ன எண்ணம்?  எந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்?
''ஐயா,  எங்கள் வீட்டில்   ஒரு அழகிய காளை  இருக்கிறது.  அதன் நினைவே எனக்கு எப்போதும் இருக்கிறது''
''ஓஹோ  அப்படியா  நீ எழுந்திரு அதோ தெரிகிறது பார்  ஒரு சிறு மேடு  அதன் மேல் போய் உட்கார்ந்து கொண்டு   உன் அழகிய காளையைப் பற்றி யோசித்துக் கொண்டிரு''  என்று அவனை வகுப்பை விட்டு அனுப்பினார் ஆசிரியர்.
அந்த  மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் தினமும் அந்த  மணல் மேட்டின் மேல் அமர்ந்து  தந்து வீட்டு காளையைப்  பற்றியே   எண்ணியபடி இருந்தான். நல்ல  ஆழ்ந்த  எண்ணம். 
எட்டாம் நாள்  ஆசிரியருக்கு  அவன் மேல்  பரிதாபம் வந்து அவனைக் கூப்பிட்டார்  
 மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.
பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் உள்ளே  நுழையாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான். 
''என்னடா சோமு,  இப்போதும்  நீ உன் காளையைப் பற்றிய  தியானத்தில் தான் இருக்கிறாயா?  இல்லையென்றால் உள்ளே வா வந்து மற்ற பிள்ளைகளுடன் நீயும் பாடம் கற்கலாமே''
"ஐயா  இனிமேல் நான் அந்த மணல் மேட்டுக்குப்  போக மாட்டேன், காளையைப்  பற்றியும்  நினைக்கமாட்டேன், ஆனால் வகுப்பறைக்குள் நுழைய முடியாது''
 "ஏன்டா  இப்படிச் சொல்கிறாய் சோமு?''
''ஐயா  நான் என்ன செய்வேன்.  எனது தலையின் ரெண்டு பக்கமும் நீளமாக  கூரான  கொம்புகள் வளர்ந்திருக்கிறதே.  வாசலை  இடிக்குமே, உள்ளே வரமுடியாமல் தடுக்குமே/''  என்றான் பையன்.

விடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே மனதளவில் மாற்றி விட்டது. 
ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை.  

மனதை  தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம். தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அதனால்  அழிவு நிச்சயம்.இதைத் தான் கிருஷ்ணனும் கீதையில் சொன்னான். நீ எதை நினைக்கிறாயோ அதற்காக ஆகிவிடுவாய்.  மனசு தான் மனுசன் .

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் -  #நங்கநல்லூர்_J_K_SIVAN


 
மஹா பெரியவாளிடம் 100 கேள்விகள்.

நான்  தயங்கி தயங்கி  நிற்பதைப்  பார்த்தவுடன்  அவருக்கு  முகத்தில்  புன்  சிரிப்பு.

''என்னடா தயக்கம்,  நீ எதுக்கு வந்திருக்கேன்னு எனக்கு தெரியுமே.  மீதி கேள்வி கேட்கத்தானே. போகட்டும் போ. நல்ல விஷயங்களை நாலு பேருக்கு சொல்லணும்னு நீ நினைக்கிறதாலே உனக்கு ஓப்லைஜ்  OBLIGE  பண்றேன்.  என்ன கேக்கணுமோ சீக்கிரம் கேளு.  பூஜைக்கு நேரமாச்சு.  இன்னிக்கு அரைமணி நேரம் தான் உனக்கு.''

''பரம சந்தோஷம் பெரியவா. ஒரு வினாடி கூட  வேஸ்ட் பண்ணாம  கேட்டுடறேன். உங்க பதிலை எழுதிக்கறேன்''

11.  ''பெரியவா,    அறிவை  வளர்த்துக்கொள்வதற்கு  என்ன செய்யவேண்டும்?

''முதல்லே  மனசு என்று ஒன்று  பகவான் கொடுத்தி
ருக்கார் என்று புரியணும். அதால் தான் அறிவு ஞானம் எல்லாமே  வளரமுடியும். அந்த மனசு அசுத்தமா இருந்தால்  அறிவாலே  ஒரு பிரயோஜனமம் இல்லை.   மனசை சுத்தமாக்க  அதை கட்டுப்பாட்டில் வைக்க ணும். அதற்கு  ஒழுக்கம் ரொம்ப அவசியம். ஒழுக்கம் இல்லாவிட்டால் மனசு கட்டுப்பாடு இல்லாமல் தறி கெட்டு  அலையும். செய்யற காரியம் எல்லாம் தப்பாக முடியும். அறிவு இருந்தும் ஒன்னும் உபயோக மில்லாதபடி ஆகிவிடும்.

12.  தியாகம், தர்மம், புண்யம் என்று சொல்றோமே  அதைப்  பத்தி  கொஞ்சம் புரிய வையுங்கோ?

குறைச்சலான வசதியைக் கூட பெற முடியாமல்   இருக்கிறவர்களுக்கு முடிந்தவரை மற்றவர்கள் சமூகத்தில்  உதவணும்.  அது தான் தியாகம், தர்மம், புண்யம் எல்லாமே. இந்த  குணம் வந்துட்டாலே மத்ததெல்லாம்  தானே வரும்.

13.  நிறைய  சம்பாதித்தால் தான்   வாழ்க்கையிலே  வசதியோடு சந்தோஷமா இருக்கலாம்  என்கிற எண்ணம் அநேகருக்கு மனதில் இருக்கிறதே சுவாமி?

''தப்பு,    வெளியே  இருந்து நிறைய  பொருள்களைத் தேடி குவிக்கிறதாலே வாழ்க்கைத் தரம் உயரும் என்ற எண்ணமே தப்பு. தரமான  வாழ்க்கை  என்பது இருப் பதை வைத்து திருப்தியோடு மன நிறைவோடு வாழ் வது.  அது வேண்டும்  இது வேண்டும் என்ற  அரிப்பு இருக்கிற  வரையில் நாம் தரித்ரர்கள் தான்.   வெளியுலக  பொருள்கள் மேல் ஆசையை  வளரவிட்டு அதால் அவதிப்படுபவர்கள் தான் ஜாஸ்தி.  ஆசை நிறைவேறாத  போது  கோபம் பொறாமை வளருகிறது. சுவற்றிலடித்த பந்து திரும்பி முகத்தில் வந்து விழுவது போல  நிறைவேறாத ஆசை ஒருவனை நிலை தவறச்  செய்கிறது. பாப கார்யங்கள் செய்யத்  தூண்டு கிறது''

14. அப்படி என்றால் பணம் சேர்ப்பது தவறோ?

தேவைக்கு மேல் பணம் எதற்கு? தேவை அத்தியாவசி யமாக இருக்க வேண்டும். ஓடி ஓடி சம்பாதிக்கும் காசு கூட வரப்போவதில்லை. அவசியமில்லாமல்  ஏராளமாக சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் காசை  செலவழித் து  விரயம் செய்வதும் வீண். பூதம் காத்த  புதையலாக  பாங்கில்  போட்டு பயத்தோடு வாழ்வது எதற்கு? அடுத்த உலகத்தில் செல்லக்கூடிய செலாவணி  பகவன் நாமா ஒன்று தான்''

15. குரு என்பது  யார்,  எவரை  குருவாக ஏற்றுக் கொள் வது என்று பெரியவா சொல்ல வேண்டும்?

'' குரு என்றால் கனமானது, பெரியது என்று ஒரு அர்த்தம்.அதாவது குரு என்பவர்  பெருமையுடையவர், மஹிமை  பொருந்தியவர் என்று அர்த்தம். ரொம்ப பெரியவர்களை ''மஹா கனம்  பொருந்திய...'' என்று சொல்வது அக்கால வழக்கம்.  கனம்  என்றால் குண்டு, வெயிட் WEIGHT என்று அர்த்தமில்லை.  அருளாலும், அறிவாலும், அனுபவத்தாலும் பெரியவர் என்று அர்த்தம். ஆசார்யன் என்றால்  தான் நல்வழியில் நடந்து காட்டி சிஷ்யர்களுக்கு அவ்வாரே  நடக்க  வழிகாட்டுபவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்றும் அர்த்தம்.  அறியாமை, அஞ்ஞானம் என்பது தான் இருட்டு.  அதைப் போக்குபவர் தான் குரு. 

தீக்ஷை என்பது குருவிடமிருந்து புறப்பட்டு சிஷ்ய னைச் சேரும் அவரது சக்தி. அது கண்ணாலும், ஸ்பரிசத்தாலும் , குருவின் எண்ணத்தாலும், சங்கல்பத்தாலும் நிகழ்வது'' 
16.  ரொம்ப சந்தோஷம் பெரியவா. கடைசியா ஒரு கேள்வி.    மௌன விரதம் அவசியமா?
நமது வாக்கில்  ஸரஸ்வதி  தேவி இருக்கிறாள். வாக் தேவி என்று அவளுக்கு அதனால் தான்  பெயர்.  நாம் பேசும் பேச்சுக்கள் அநேகமாக யாரைப்பற்றியாவது விமர்சனம் பண்ணுவதாக இருக்கிறது.  பிறரைப் புண் படுத்துவதாக, தீமை விளைவிப் பதாக இருக்கிறது. இது  ஸரஸ்வதி தேவிக்கு நாம் செய்யும் அபசாரம்.  சோமவாரம் எனும் திங்கள், குருவாரம் எனும் வியாழன், ஏகாதசி எனும் நாட்களி லாவது  கொஞ்சம்  பேசாமல்  மௌனமாக இருக்க லாமே.  ஆபிஸ் போகிறவர்கள் ஞாயிற்றுக் கிழமை யாவது ஒரு அரைமணி நேரமாவது மெளனமாக
இருக்கலாமே. நல்ல எண்ணங்களை மனதில் அப்போது வளர்க்கலாம்.   மனத்தை   ஏதாவது ஒரு திருப்பணியில்  ஈடுபடுத்தவேண்டும். இது தினம் செய்யும் தர்மம்.  அணில் எப்படி ராமருக்கு  சேது  பாலம் கட்ட உதவியதோ அதுபோல் ஒரு சின்ன சேவை. 
நமது குறைகளை கண்டவர்களிடம் சொல்வதை விட மனதாலேயே பகவானுக்கு தெரியப்படுத்தினால் போதும். அவனுக்குத் தெரியும். உதவுவான்''

சரி போய்ட்டு அப்புறம் வா.

Saturday, October 29, 2022

KARTIK SWAMI TEMPLE



 மலை உச்சி முருகன்   -  #நங்கநல்லூர்_J_K_SIVAN


 
இது  கந்தனுக்குகந்த  சஷ்டி உள்ள   ஐப்பசி மாதம்.  ஆகவே  ஷண்முகனைப் பற்றிய இன்னொரு தகவல்.முருகன்  மலை வாசஸ்தலம் செய்பவன்.  அவன் அறுபடை வீடுகளில் சில மலைகள், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி பழமுதிர் சோலை,  சுவாமிமலை  போன்றவை, மற்றது கடல்  அருகே. திருச்செந்தூர்.

மேலே சொன்ன மலைகளை விட மிகவும், அதுவும், உலகிலேயே மிக உயரமான ஒரு  மலையில் கந்தன் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. வடக்கே  ஹிமாலய
 குன்றுகளில்  ருத்ரப்ரயாக்  கிராமத்தில், உத்தரகாண்ட்  மாநிலத்தில்  கார்திகேயனைக் காண எல்லா பக்தர்களாலும்   முடியாது. 10000 அடி  உயரம். என் போன்றோர் நினைத்துக் கூட பார்க்க முடியாத  குமாரசாமி கோவில். 

இதில் அற்புதம் என்னவென்றால்  கார்த்திகேயன் இருக்கும் ஆலயம்  இயற்கையிலேயே  அமைந்த சலவைக்கல், ஸ்படிக,  பாறை மீது.  அங்கிருந்து பார்த்தால்  அரைவட்டமாக  எங்கும்  ஹிமாலய  பனி சிகரங்கள். 

கனக சவுரி என்கிற  மலைமேல் உள்ள அதிக  ஆட்கள் இல்லாத குட்டியூண்டு கிராமத்தில் கார்த்திகேய
னின் ஆலயம் அமைந்துள்ளது.  இந்த கிராமத்திலிருந்து  3 கி.மீ.  பனி மலை  மேலே  ஏறவேண்டும்  சிரமமில் லாமல்  ரெண்டு மூணு மணி நேரத்தில்  ஏறிவிடலாம். எங்கும்  பூவரசம்பூ  செக்கச் செவேலென்று கண்ணைப் பறிக்கும். சுற்றிலும் வெள்ளை வெளேரென்று ஹிமாலய பனி மலைத்தொடர்கள். மேகமில்லாத நீல வானம்.  மேகங்கள் கூட்டமாக  சக்கரமில்லாத தேர்கள் போல் அசைந்து நகருவது அற்புதமான காட்சி. 

இவ்வளவு உயரமான  மலை  மீது எப்படியோ சென்று  ரெண்டு கோவில்கள் கட்டி இருக்கிறார்கள். தாய்க்கு ஒன்று, சேய்க்கு ஒன்று. அம்பாளை தரிசித்து விட்டு கார்த்திகேயனை தரிசிப்பது வழக்கம்.  அவ்வளவு உச்சியிலிருந்து விடிகாலை சூர்யா உதயம்   பனிமலை  சிகரங்களிலிருந்து எழும்புவது  எழுத்தில் வர்ணிக்கமுடியாத ஆனந்த அனுபவம்.

ஹோட்டல்கள் அங்கே அந்த உயரத்தில் எதிர்பார்க்க முடியாது. பூசாரிகள் சிலர் வசிப்பதால் அவர்கள் வீட்டிலேயே இடம் கொடுக்கிறார்கள். 

Friday, October 28, 2022

LORD SANEESWARA


ஒரு நேர்மையான நல்ல க்ரஹம் :
#நங்கநல்லூர்_j_k_SIVAN


இன்று சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்த நாள்.அவனைப்பற்றி சிறிது சிந்திப்போம்.

யாரையாவது பற்றி கோபமாகவோ, பிடிக்காமலோ பேசும்போது ''அது ஒரு சனி'' என்கிறோமே யார் அந்த சனி என்று தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கிறது.

சூர்ய பகவான் பிள்ளை தான் சனி. அம்மா சாயா. நிழல் என்ற பொருள். சனீஸ்வரன் ஒரு சாயா க்ரஹம் என்று நவகிரஹங்களில் அடையாளம் காண்கிறோம். நவகிரஹங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது நெடுநாள் நம்மை பாதிப்பது சனீஸ்வரன் தான். ஏழரை ஆண்டுகள். ஏழரை நாட்டு சனி அதனால் தான். இன்னொரு விஷயம், சனீஸ்வரனின் சகோதரன் தான் யமதர்மன். சிவ பக்தன். அவன் ஒருவனுக்கு தான் ஈஸ்வரன் என்ற பட்டப்பெயர். மற்ற நவகிரஹ தேவதைகளுக்கு இந்த பட்டம் கிடையாது. ஒருவனுடைய நல்ல காலம் கெட்ட காலம் ரெண்டுக்குமே பொறுப்பானவன் சனீஸ்வரன்.

நவகிரஹத்தில் எல்லாமே சூரியனைச் சுற்றி வருபவை தான். சிலது வேகமாக, சிலது மெதுவாக. சனீஸ்வரன் ஒரு தடவை சூரியனைச் சுற்றி வர 29.5 வருஷங்கள் என்றால் எவ்வளவு மெதுவாக என்று புரியும். சூரியன் அதற்குள் பல ராசிகளுக்கும் நுழைந்து வெளிப்படுகிறான். சனீஸ்வரன் சௌகர்யமாக ஒவ்வொரு ராசியிலும் ரெண்டரை வருஷம் தங்குகிறான்.மூன்று மடங்கு தங்குவதும் உண்டு அது தான் ஏழரை நாட்டான்.

சனீஸ்வரன் குழந்தைப் பருவத்தில் தாய் உணவு ஊட்டும்போது ஒரு காலால் உதைத்து சண்டித்தனம் பண்ணியதால் ஒரு கால் ஊனமாகியது என்று ஒரு கதை. அதன் விளைவாக நமது ஜாதகத்தில் சனி துரிதமாக நகரமாட்டேன் என்று ஏழரை வருஷம் உட்கார்ந்து கொள்கிறான். என்ன செய்வது? மந்த கிரஹம் என்று அவனுக்கு பெயராச்சே. சனீஸ்வரன் மனைவி பெயரும் மந்தா தேவி.

சனீஸ்வரனை தங்க நிறத்தில் பார்க்க முடியாது. கருப்பு. அவன் வாகனம் வேறு கருப்பு நிற காக்கை. காரணம்? சூரியன் அப்பா உஷ்ணமாச்சே. அப்பா அருகில் சனி அடிக்கடி சென்று சூடு அவன் மேனியை கருக்கி விட்டது.
சனீஸ்வரன் ஆடை, வஸ்திரம் கூட கருப்பு நிறம், அல்லது கரு நீல நிறம்.

சனி பாரபக்ஷம் அற்றவன். நாம் செய்யும் தவறுகளுக்கு தக்க தண்டனை தருபவன். நமது நல்ல செயல்கள் எண்ணங்கள் அவனை நமக்கு பொங்கு சனியாக அளிக்கிறது. எல்லோர் வாழ்க்கையிலும் இது சகஜம். சனீஸ்வரன் நல்லவர்களுக்கு நல்லவன், தீயவர்களுக்கு கொடியவன். தர்மராஜன் சகோதரன் அல்லவா. சனியின் பார்வையே நம் மேல் படக்கூடாது என்பார்கள். சனீஸ்வரன் சந்நிதியில் தரிசனம் பண்ணுபவர்கள் பக்கத்தில் நின்று தான் அவனை தரிசிக்கவேண்டும் நேரே நின்று பார்க்க கூடாது என்று சொல்வதுண்டு.

ராவணன் எல்லா தேவர்களையும் கிரஹங்களையும் சிறையில் அடித்தபோது சனீஸ்வரனையும் விடவில்லை. ஹனுமான் தான் சனீஸ்வரனை விடுவித்தான் என்று ஒரு கதை.

சனி தோஷம் நீங்க உச்சரிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம் இது: விடாமல் 108 தடவை சொல்வதால் சனீஸ்வரன் பாதிப்பு இருக்காது என்பது முன்னோர்கள் அனுபவம்.

ॐ नीलांजनसमाभासं रविपुत्रं यमाग्रजम।
छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् ||

Om Nilanjana Samabhasam Ravi Putram Yamagrajam |
Chhaya Martanda Samhubhutam Tama Namami Shanescharam ||

''கரு முகில், நீல மேகம் போன்றவனே, சூரிய குமாரனே, கட்டி ஆள்பவர்களில் முக்கியமானவனே , சூரியனையே தன்னுடைய நிழலால் மறைக்கக்கூடியவனே, ஹே, சர்வ வல்லமை கொண்ட சனீஸ்வரபகவானே, உன்னை பரம பக்தியோடு சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.''

சனீஸ்வரனுக்கு எள்ளை முடிந்து வைப்பதும், நல்லெண்ணெய் தீபம் ஏறுவதும் வழிபாடு. கருப்பு, கருநீல ஆடைகள் அணிவதும் ஒரு வித பக்தி. ஷீர்டி செல்லும் வழியில் சனி சிங்கணாபுர் என்கிற கிராமமே சனீஸ்வர க்ஷேத்திரம். தெற்கே பாண்டிச்சேரியில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் சனீஸ்வர நவகிரஹ க்ஷேத்திரம். இது பற்றி நிறைய எழுதி இருக்கிறேன்.

 

KANDHA PURANAM

 ஸ்கந்த புராண சுருக்கம்  -  #நங்கநல்லூர்_j_k_SIVAN

 
வியாசர் அளித்தது 18 புராணங்கள். அதில் ஒன்று ஸ்கந்த புராணம்.   காஸ்யப ரிஷி, அதிதி  தம்பதியருக்கு பிறந்தவன் அசுரேந்திரன். அவன் மகள் சுரஸை எனும் மாயா. அவளுக்கு பிறந்தவர்கள்,  பத்மாசூரன்  எனும் சூரபத்மன், சிங்கமுகன், யானைமுகம் கொண்ட  கஜமுகன் எனும்  தாரகாசுரன். அஜமுகி என்ற ஆடு முகம் கொண்ட பெண். 

மாயா  முதல் மகன்  சூரபத்மனை அழைத்து  ''சூரா, நீ பரமேஸ்வரனை துதித்து தவமிருந்து யாகம் செய்ய வேண்டும். வடல்லே  வாடா த்வீபம் எனும்  தீவு   நீ யாகம் செய்ய தகுந்தது. அங்கே போ.  நான் உன் யாகத்துக் கான திரவியங்களை கொண்டு தருவேன். நீ யாகம் செயது ஈஸ்வரன் வரம் பெற்று மூவுலகும் ஆள வேண் டும். தேவர்கள் உன்னடிமையாகி  அசுரர் குலம்  தழைக்க  வேண்டும்'' என்கிறாள்.

வழியில் அசுரகுரு  சுக்ராச்சாரியாரின்  ஆசி பெற்று, வட த்வீபத்தில்  பிரம்மாண்டமான யாகசாலை அமைத்தான் சூரபத்மன்.  10000 யோஜனை பரப்பளவு!(28000 சதுர கி.மீ!)  அதன் நடுவே  1000 யோஜனை  நீள அகல ஆழம் கொண்ட  யாக குண்டம். 3000 யோஜனை பரப்பளவு  ஹோம திரவியங்கள் மலை போல். யாகம் 10,000 வருஷங்கள் நடந்ததாம். யாக முடிவில் சூரன் தன் சிரத்தை கொய்து  தானே  பலிகொடுத்து ரத்தத்தை  யாக குண்டத்தில் கொட்டினான். அப்படியே  தாரகாசுரன், சிங்கமுகனும் செய்தார்கள். யாகத்தில் சூரா பத்மன் அவன் சகோதரர்கள் யாவரும் உயிர்பலி கொடுத்தார்கள்.

பரமசிவன்  ப்ரத்யக்ஷமாகி  சிரத்தில் இருந்த கங்கை யால் யாகத்தீயை அணைத்து  '' சூரா பத்மா, நீ கேட்கும் வரம் என்ன சொல். அளிக்கிறேன்'' என்கிறார்  

'பரமேசா, ஸகல  அண்டங்களும் என் வசமாக வேண் டும். ப்ரம்மா விஷ்ணு தேவர்கள் எவராலும் எனக்கு  தோல்வியோ அழிவோ கூடாது.  தேவர்கள் ஆயுதங்கள் எதாலும் எங்களுக்கு மரணம் கூடாது.ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும்.

''சூரபத்மா, நீயும் உன் சகோதரர்களும்  புரிந்த  கடின  தவத்தால், தியாகத்தால், யாகத்தால், நீ கேட்கும் வரம்  பெற்றாய். ஆனால் நீ  கேட்கும் அத்தனையும்  108 யுக காலம் தான். பிறகு நீ  மரணம் எய்துவாய்'' என்று வரமளித்தார் சிவன்.

''ஈஸ்வரா,  அப்படியென்றால் தங்களைத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது.''

''சூர பத்மா,என்னால்  உனக்கு மரணமில்லை''.   சிவன் மறைந்தார்.
அசுரர் குலம்  தழைக்க சூரன் பெற்ற வரம் கேட்டு அசுரர்  குரு  சுக்ராச்சாரியார் மகிழ்ந்தார்.  சூரன்  தனது பலத்தை, அதிகாரத்தை பிரயோகித்து குபேரனை அடிமையாக்கினான். ஈசானன் சரணடைந்தான்.   கிழக்கு திசையில் இந்திரலோகம் சென்று  இந்திரன் அக்னி போன்றவர்களை வென்று சூரபத்மன்  இந்திர லோக  அரசனானான். தெற்கே  எமலோகம் சூரன் வசமாயிற்று. யமதர்மன் அடிமையானான். இவ்வாறே  நிருதி, வாயு,  வருணன் அனைவரும்  சூரன் கட்டளைப் படி இயங்கலானார்கள்.
சூரன்  வைகுண்டத்தை நோக்கி நகர்ந்தான்.    நடந்தது அனைத்தும்  நாராயணன் அறிவான். காக்கும் கடவுளாக இருந்தும் தன்னால் சூரனை எதிர்க்க முடியாதபடி சர்வேஸ்வரனிடம் வரம் பெற்றவன் என்றும்  தெரியும்.  தனது சக்ராயுதத்தை  தாரகனுக்கு அளித்து  வைகுண்டத்துக்கும் சூரன்  அதிபதியானான்.
சூரன்  வீர மஹேந்திராபுரத்தை நிர்மாணித்து அங்கே பலமான ஒரு கோட்டை கட்டினான். ப்ரம்மா சூர பத்மனுக்கு முடி சூட்டினார்.  இந்திராதி தேவர்கள்  சூரனின்  பணியாட்களானார்கள். மஹேந்திர புரத்தை உருவாக்கிய  விஸ்வகர்மாவின் மகள் பத்ம கோமளை யை  சூரபத்மன் மணந்தான்.  அவர்களுக்கு பானு கோபன், அக்னிமுகன், இரண்யன், வஜ்ரபாகு என நான்கு மகன்கள்.

அஜமுகிக்கு  வாதாபி, இல்வலன் எனும்  அசுரர்கள் பிறந்து தேவர்கள், முனிவர்களை வதைத்தனர். எதிர்த்தவர்களை கொன்றனர், சிறையிலடைத்தனர். அவஸ்தியரை  ஏமாற்றி  கொல்ல  வாதாபி முயன்ற போது அவரால் வாதாபி மாண்டான்.

அசுரர்களின்  அக்கிரமத்தை,  சூரனின்  கொடிய செயல்களை  தாங்கமுடியாத  தேவர்கள்  மஹாவிஷ்ணு வோடு சேர்ந்து பரமேஸ்வரனை சந்தித்து முறையிட் டனர். அசுரனின் கொடுமைக்கு முடிவு தேடினர்.

''விஷ்ணு முதலான  தேவர்களே, என் சக்தியால் தான் சூரனுக்கு முடிவு. இதை நிறைவேற்றுகிறேன்''.   

சிவனின் நெற்றியிலிருந்து   திகு திகு வென்று  உஷ்ணமயமாக  ஒரு   அக்னி பிழம்பு ஆறு நெருப்பு பந்தங்களாக, பெரும் பொறிகளாக, வெளிப்பட்டு  ஹிமாலயத்தில் உள்ள சரவணப் பொய்கையில் இறங்கியது. 
''ஆறு ரிஷி பத்னிகள்  சரவணப் பொய்கைக்கு  சென்று  கார்த்திகைப் பெண்களாக அந்த ஆறு  தீப்பிழம்பு, பொறிகளை ஆறு முகங்களாக கொண்ட  என் மகனாக  வளர்ப்பார்கள். அவன் மூலம் சூரனது வம்சம் முடிவு பெறும்''  என்று  அருளினார் பரமேஸ்வரன்.

சிவனருளால் அந்த  கார்திகைப் பெண்கள் ஒன்பது காளிகளை ஈன்றனர். அவர்களே நவகாளிகள். ரக்தவல்லி என்பவளுக்கு  வீரபாகு என்ற வீரன் பிறந்தான். 

''வீரபாகு, நீயும்  உன்னோடு பிறந்த மற்ற வீரர்களும் இனி சரவணன், ஆறுமுகனுக்கு  உதவியாளர்களாக  பணி புரிந்து தக்க சமயத்தில் சூரனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அழிப்பீர்களாக'  என்று சிவன் ஆசிர்வதித்தார்.

பார்வதி தேவி  ''கார்த்திகைப் பெண்களே,உங்களால் வளர்ந்த என் மகன்  இந்த ஆறுமுகம் கொண்டவன் இனி  கார்த்தி கேயன் என்ற பெயரோடு ஒருவனாக  என்னி டம் வளர்வான். உங்கள் திருநக்ஷமான கார்த்தி கையில் இந்த ஸ்கந்தனை வணங்குவோர்  கல்வி வீரம் முதலான சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்'' என்று அருளினாள் .

பால முருகன் ஆறு முகம், பன்னிரு கரம் கொண்ட  எண்ணற்ற பலம் கொண்டவன், சர்வ சக்தி கொண்ட வன். அவனது பால்ய லீலைகள் கணக்கிலடங்காது. மேருமலையையே கிள்ளி எறிந்தவன்.

சிவன் அருளிய கால அளவு நெருங்கியது.  ஆறுமுகன் எனும்  ஷண்முகன்,   வீரபாகு முதலிய தேவ சேனை யோடுபுறப்பட்டான்.  சிக்கல் சிங்காரவேலனுக்கு  அம்பாள் வேலாயுதம் அளித்தாள் . சக்தியின் ஆசியோடு வேலாயுதன்  தேவ சேனாபதியாக  சூரனை அழிக்கப்  புறப்பட்டான்.   வழியில் கிரவுஞ்சமலையை  பிளந்து  அதன் அதிபதி தாரகாசுரனை வதம் செய்தார்.  திருச் செந்தூரில் ஷண்முகன்  பாசறை அமைத்தான்.  ஆறுநாட்கள் யுத்தம் நடந்தது. 
சூர பத்மன் மகன் பானுகோபன்  ஷண்முகனை  பெரும்படையுடன் எதிர்த்தான்.  மூன்று நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுகா சூரன் எதிர்த்தான். வேலாயுதம் அவனை பிளந்து கொன்றது.  அவனைத் தொடர்ந்து  சூரபத்மனின் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மன் மக்கள் மூவாயிரம் பேரும்  அடுத்ததாக  கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபத்மன் மட்டுமே.

சூரன் மாயை  அம்சமாதலால்  மறைந்து நின்று  மாயப் போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி உருவெடுத்தான். முருகனின் சக்தி வேல் திருச்செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மாமரமாக மறைந்திருந்த சூரப த்மனை இருகூறாக பிளந்து சம்ஹாரம் செய் தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழி ந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகப்பெருமான் கொடியாகவும் வாகனமாகவும் மாறியது.சூரனை சம்ஹாரம் செய்த முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது.
அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் திருசெண்டூர் ஆலயத்தில் உள்ள  நாழிக்கிணறு நீரானது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவ லிங்கம் செய்து முருகன் பூஜை செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் என்ற தலத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர் களுக்கு திருவருள் புரிந்தார்.  ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்ச னால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர்.  தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை  கந்தனுக்கு மணமுடித்தான் .

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட்களிலும்  சைவர்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிக்கிறது.  ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர ஸம்ஹாரம் .
 ஷண்முகனுக்கு பிரியமான ராகம்  ஷண்முகப்ரியா.  இதில் சதா நின் பாதமே... என்ற  மஹாராஜபுரம் சந்தானம்  இயற்றிய சொந்த சாஹித்யம்  அற்புதமாக இருக்கிறது கேட்பதற்கு.செவிக்கு  கந்தன் தரும் விருந்து.  நான் கேட்டு அடைந்த மகிழ்ச்சியை நீங்களும் அனுபவியுங்கள் 
 

https://youtu.be/s6BDueSF7Ug

Thursday, October 27, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  - #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
செய்ய வேண்டிய கடமை.

ஒரு  காலத்தில்திருவல்லிக்கேணி  நாகப்பய்யர் தெருவிலிருந்து  குடுவாஞ்சேரி  காயரம்பேடு கிராமம் வரை பச்சை கலர்  லேடிஸ் சைக்கிளில்  பறந்தவன், முழு குடும்பம்  4 பேரோடும் அதில் சென்னையில் பல இடங்களில் பயணித்தவன் இப்போது சைக்கிளில்   ஏற  பயப்படுகிறேன். விழுந்துவிடுவேனோ?  இந்த ஜென் மத்தில் இனி  லாகவமாக   வலது காலைத் தூக்கி சைக்கிளின் மறுபுறம் போட முடியாதோ?  ஸ்கூட்டர் பல வருஷங்களாக   ஒட்டி  எங்கும் சர்வ வியாபியாக இருந்தவன் இப்போது அதைத் தொட  யோசிக்கிறேன்.  தெருக்களில் ட்ராபிக்  அதிகரித்துவிட்டது.  ஹெல்மெட் போட்டால் கண் மறைக்கிறதோ?  84ல் பிராண பயம்.  கால் நடையாகிவிட்டேன். ஆனால் மைல் கணக்காக நடக்க முடியாது.

எங்கள் தெருவில்   எதிர் சாரியில்  ரெண்டு  வீடுகள் தள்ளி  ஒரு பழைய  அழுக்கு  அடுக்கு வீடு.  ஆறு ஆறு  குடும்பங்களாக  ரெண்டு வரிசையிலும்  நிறைய  தண்ணீருக்கும் , கரண்டுக்கும்  குப்பை  கூடைகளுக் கும்  பொது   இட  உபயோகத்துக்கும் , வாசலில்  பெருக்குவதற்கும்  விடாது தினமும்  சண்டை  போடும் ஜனங்கள்.  விடியற்காலையிலே   கெட்ட வார்த்தை காதில் தவறாமல்  கேட்கும்.  அதற்கு  அடுத்த  வீட்டு மாடியில்  தான்  பையா குட்டி  அய்யர் வாடகைக்கு  வசித்து வந்தார்.

 நாலரை அடி உயரம்.  முன் வழுக்கை பின்னாலே  MKT   ஜில்பா.  காதில்  கடுக்கன்.   முகத்தில்  கத்தி.   ஏறக் குறைய  பத்து நாளைக்கு ஒரு தடவை உறவாடும் என்பதால்  உப்பும்  மிளகும்  கலந்த  வளர்ச்சி.   அரைக்கை   காலரில்லாத  கதர்  காவி  ஜிப்பா  வயிற்றை இழுத்து பிடித்துக்கொண்டு  இருக்கும்.  தொப்பை பெரிதாயிற்றே. அழுக்கு வேஷ்டி.

காஞ்சி பெரியவா கிட்டே  அமோக  பக்தி.  எப்போதும அவரைப் பற்றியே  பேசுவார்.  ஒருநாள்  காலை அவரோடு தான்  பிரஹலாதன் பற்றி பேசிக்கொண் டிருந்தேன்.

''இதோ பாருங்கோ மாமா. சுவாமி எங்கும் தான் இருக்கிறார்.  எனக்கு தெரியும்'' --  பையா குட்டி.
ஆச்சர்யமாக  பார்த்தேன் அவரை.

''எப்படி  அவ்வளவு கச்சிதமாக  உறுதியாக சொல்ல  முடிகிறது உங்களால். ஒருவேளை சொந்த அனுபவமோ?''

''என் அனுபவம் எதற்கு?  மஹா பெரியவா  அனுபவம் இருந்தாலே  அது  எல்லோருடைய அனுபவம் ஆகுமே.
''பையா குட்டி,  நீங்க நிறைய பெரியவா பத்தி  தெரிஞ்சவர். நான் உங்க கிட்டே தெரிஞ்சிக்கணும். பெரியவா சுவாமி பத்தி என்ன சொல்லியிருக்கிறார். சொல்லுங்கள்''

இது தான்  பெரியவா  வாக்கு:
''வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் – என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு சென்று நமஸ்காரம் செய்கிறோம்.
ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம்செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று வைஷ்ணவர்கள் சொல்வது  போல் கைலாஸத் தில் இருக்கிறார் என்றும்,  சைவப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வைகுண்டம் என்பது பரமபதம்.    ''தத் விஷ்ணோ; பரமம் பதம்'' என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகிவிட்டால்   ‘ பரம பதத்திற்கு ஏகி விட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார், வைகுண்ட பிராப்தி  என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு. ‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் தான்  ‘பெருமாள்’ என  அவர் பெயர்.  புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; ''புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன்'' பெருமாள்.

வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள். மற்றவர்கள்  ஸ்வாமி என்றே சொல் லுகிறார்கள்;   ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடை மை என்று இலக்கணமாகச் சொல்லலாம். 'ஸ்வம்' உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம் தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத் தாக உடையவர்’ என்று அர்த்தம்.

சொந்தமாக  சம்பாதித்தது  தான் ''ஸ்வ ஆர்ஜிதம்''   முன்னோர் மூலம் அடைந்த சொத்து  ''பித்ரு ஆர்ஜிதம்'' அதனால் தான் ''ஏண்டா கோபு  உன் வீடு ஸ்வாயார் ஜிதமா பிதுரார்ஜிதமா''  என்று கேட்கிறோம்.  

''போங்கோ அண்ணா, இது நான் எல் ஐ சிஇலே லோன் போட்டு  அங்கே இங்கே கடன் வாங்கி கட்டினது.  பிதுரார்ஜித சொத்து  மாந்தோப்பு மேலே இருக்கிற கடன் மூவாயிரம்  சொச்சம்  தான். நாலு வட்டி.. அண்ணாவும்,  அக்காவும்  கட்ட மாட்டேங்கிறா. என் தலை எழுத்து.''

மனித அறிவின் எல்லையை மீறி அகண்டமாக (எல்லையற்றவர்களாக) ஆனவர்களே மஹரிஷிகள்.  உலகத்திற்கு அவர்கள் மூலமே வேதமந்திரங்கள்  வந்திருக்கின்றன.

நல்ல எண்ணங்கள் மக்களுக்கு உண்டாகிறது என்றால், அதை உண்டாக்குகின்ற சலனங்கள் (நுண் செயல்கள்) இருக்க வேண்டும்.  அவற்றிற்கான சப்தங்களும் இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட சப்தங்களை   VIBRATIONS   நாம் உண்டாக்க முடியுமானால் உலகத்தில் உள்ள மக்களுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.  அதன் மூலமாக சாதனைகளும், வெற்றி களும், மனசாந்திகளும் பெருகிக்கொண்டே இருக்கும். இதைவிட உலகத்திற்கு பெரிய க்ஷேமம் என்ன இருக்கிறது ?  அப்படி எண்ணுவதற்கு அவர்களை தூண்டுகிற சக்தியை பெற்ற சப்தங்கள் தான் வேதமந்திரங்கள்.  இந்த வேத மந்திரங்களில் விசேஷம் என்னவென்றால்,  அர்த்தம் இல்லாமல், வெறும் சப்தரூபத்திலேயே அவை உலகத்திற்கு க்ஷேமத்தைச் செய்கின்றன.  இது மட்டுமில்லை,  அவற்றிற்கு உயர்ந்த அர்த்தமும் இருக்கிறது.   சகல வேதங்களும், பரம தாத்பர்யமாக, “ஒரே சத்யம் தான் இத்தனையாகவும் தோன்றியிருக்கிறது” என்று சொல்கின்றன.  இது தவிர, அவை சப்தங்களாக இருக்கும்போதே அந்தந்த சப்தத்திற்குறிய தேவதா ரூபங்களாகவும் இருந்து அந்தந்த தேவதையின் சாக்ஷாத்காரத்தையும் அநுக்ரஹத்தையும் நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றன.    அப்படிப்பட்ட வேதங்களை (மந்திரங்களை) உலகத்தில் நிலைத்திருக்கும்படியாகச்   செய்வதில் எல்லோரும் இதயபூர்வமாக முனைந்து செயலில் இறங்க வேண்டும்.  இது இப்போதுள்ள ஜன சமூகம் முழுவதற்கும்,  பிராம் மண ஜாதிக்கு மட்டுமல்ல,  சமஸ்த லோகத்திலும் உள்ள அதனை கோடி ஜீவராசிகளுக்கும் க்ஷேமம் உண்டா வதற்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமை.   தெய்வத்தால் விதிக்கப்பட்ட கடமை.  அதுவே தெய்வீகமான கடமையும் (Divine Duty) ஆகும்.

அப்படிப்பட்ட வேதத்தை அழிய விடக் கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேத ரக்ஷணத்திற்கு  எதாவது ஏற்பாடு பண்ணுமாறு செய்ய வேண்டும் என்று தான் உங்களைக் கேட்க வந்திருக்கின்றேன்.  எனக்காக, உங்களுக்காக என்று வித்யாசம் எதற்கு?  நான், நீங்கள் எல்லாம் ஒன்றுதான்.  என் கார்யம் உங்கள் கார்யம். “வேதத்தை ரக்ஷித்து விட்டால்”அதுதான் எல்லோருக்கும் பரம ஸ்ரேயஸ்ஸை தருகிற ஒரே கார்யம். இதை செய்வதால் க்ஷேமம் உங்களுக்கு.  பெயர் எனக்கு.  –காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா  பரமாச்சார்ய ஸ்வாமிகள்

MYLAPORE

 


மயிலையே கயிலை.  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

இப்போதெல்லாம்  விஷய தானத்துக்கு பஞ்சமே இல்லை. எப்போது  மொபைல்  டெலிபோன்  நம்மை நெருங்கி விட்டதோ அன்று பிடித்தது சனி.   நேரடி உறவுகள், சந்திப்பு, பேச்சு எல்லாம் மறைந்து  அடுத்த அறையில் மனைவியோடு கூட   டெலிபோனில் தான்  வாட்டசாப்ப் செய்தி அனுப்பும் அளவுக்கு  எல்லோரிடமிருந்தும் தனித்து விலகி விட்டோம். மனிதம் மறைந்து மெஷின்களாகி விட்டோம்.  இது ஒரு புறம் இருக்க, சில நல்ல விஷயங்களையும் நாம்  மொபைல் மூலம்  அறிய வாய்ப்பு இருந்தும்  அவற்றால்  ஒரு சிலர் மட்டுமே பயன் பெறுகிறார்கள்.

நவக்கிரஹங்கள்  நமது அன்றாட வாழ்வை பெரிதும் பாதிக்கின்றவை. நல்லது   கெட்டது எல்லாமே  நமது கர்ம பலன். ஜென்ம லக்கினத்தில், ராசியில்  எங்கே  சில  நவக்ரஹங்கள் சேர்கின்றன என்பதைப் பொறுத்து இருக்கிறது.  கெடுதல்கள் நேராமல் அதற்கென சில பரிஹாரங்கள்  இருப்பதால்  நவக்ரஹ ஆலயங்களுக்கு செல்கிறோம். சோழ நாட்டில் நவக்கிரஹ  ஸ்தலங்கள் இருப்பதை எல்லோரும் அறிவார்கள்.  தொண்டைமண்டலத்தில், அதாவது சென்னையை ஒட்டி சில நவகிரஹ ஸ்தலங்கள் உள்ளன.  இதுவும்  அநேகருக்கு தெரியும்.  நிறைய அது பற்றி எழுதி இருக்கிறேன். 

நமது சென்னைப் பட்டணத்திலேயே  மயிலாப்பூரை ஒட்டி  நவக்ரஹ  ஸ்தலங்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?  இதுவும்  வாட்சப்பில் தான் பரவியது.  இது போன்ற  விஷயங்கள் கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதால் இந்த பதிவின் மூலம்  விவரங்களைத் தர எண்ணினேன்.

மயிலாப்பூர் என்றாலே  கபாலீஸ்வரரின் கம்பீர  ஆலயம்  குளத்தை ஒட்டி அற்புதமாக  கண்முன்  நிற்கிறது.  மிகப் பழைமையான  பாடல் பெற்ற ஸ்தலம். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே,மேலும் சில  பழமையான  ஆயிரம்  வருஷ கால  சிவ ஸ்தலங்கள் இருக்கிறதே  தெரியுமா?  சென்னையில் உள்ளவர்களுக்கே எத்தனையோ முறை மயிலாப்பூர்  சென்றாலும் இவற்றை தெரிந்து கொள்ளாதது  ரொம்ப வருத்தம் தருகிறது. 

ஒரே நாளில்  இங்குள்ள  ஒன்பது  நவக்ரஹ ஆலயங்களை  சுலபமாக தரிசித்து  அருள் பெறலாம்   இவை அத்தனையும் சப்த ரிஷிகளால் தொழப்பட்ட ஸ்தலங்கள்.

1 . முதலில்  தரிசிக்க வேண்டிய   சூரிய ஸ்தலம்  ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்கோயில். மைலாப்பூர் பஜார் சாலையில் உள்ளது.  விசாலாக்ஷி  அம்பாள்    சமேதராக  விருபாக்ஷீஸ்வரர் குடி கொண்டிருக்கும் இந்த  ஆலயம் புராதனமானது.   விசாலாக்ஷி  அம்மன் சன்னிதிக்கு எதிரே உள்ள  பலிபீடம் பிரசித்தி பெற்றது.  பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தபோது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாகத் திகழ்கிறார்.

2  அடுத்தது  ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில்.  மைலாப்பூரிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் மார்கத்தில்  நடேசன் சாலையில் உள்ள சந்திரன் ஸ்தலம்.  மாசி  மாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் மூழ்கிய ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.   அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட ஆலயம்.  இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயில். ஒரு காலத்தில்  இங்கே  64 வகையான   தெய்வீக சக்தி வாய்ந்த தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாம்.  நீருக்கு  அதிபதி  சந்திரன்.  

3. ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில்   எனும்   அங்காரக க்ஷேத்ரம்,  செவ்வாய் ஸ்தலம்  மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது.  மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றார் என்பது ஐதீகம்.   

4. ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில்  மைலாப்பூரில்  பஜார் ரோடு  பகுதியில்  காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது.  இது  தான் புதன் க்ஷேத்திரம்.   ஒரு காலத்தில் இங்கே  எங்கு பார்த்தாலும்  கமகம வென்று  மணம் வீசும்  மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்ததால் இந்த  ஆலய  சிவனுக்கு  மல்லீஸ்வரர் என்ற திருநாமம்.  அம்பாள் பெயர்  ஸ்ரீ  மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட ஸ்தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீ  மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும்.
 
5. ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் ஒரு குரு ஸ்தலம்.  மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது.    ரிஷி  வசிஷ்ட ர் வழிபட்ட க்ஷேத்ரம். பிரபஞ்சத்தில்  எல்லாம்  இயங்குவதற்கு  காரணம்  ஈஸ்வரனே  என்பதால்  சிவனே   சர்வ காரணம் என்ற  அர்த்தத்தில்   இங்கே  சிவனுக்கு  ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற  பெயர் நிலவுகிறது.  அம்பாள் ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த  ஆலய தர்சனம் பெற்றவர்கள் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.   குரு  நவகிரஹங்களில்  தன காரகன் மற்றும் புத்திர காரகன்.  ஆகவே  இந்த  ஆலயத்துக்கு  குருவாரம் ,  வியாழன் அன்று  அநேக  பக்தர்கள் தரிசனம் பெற  வருகிறார்கள். திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்க செல்வச் செழிப்பு பெறுவதில் சந்தேகமே  இல்லை. 
சுந்தரமூர்த்தி நாயனார்  மைலாப்பூரில் இந்த  ஆலயங்களை தரிசித்தவர்.  

ஆறாவதாக  நாம் தரிசிக்கப்போவது ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம். பெயரிலிருந்து இது சுக்ர  ஸ்தலம் என்று புரியும்.  கபாலீஸ்வரர் ஆலயம் அருகிலேயே  இந்த  சிவன் கோவிலும் உள்ளது. சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய  சிவ ஸ்தலம்.  ஆங்கீரச முனிவர் வழிபட்ட  க்ஷேத்ரம்.  மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு 3 அடி  நில தானம் கேட்டார் அல்லவா?  அப்போது,   'மஹா பலி, தானம் தராதே,  தானம் கேட்க  வந்திருப்பது மஹா விஷ்ணு'' என்று எச்சரித்து  அசுரர்  குரு சுக்ராச்சாரியார் தடுத்துவிட்டார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழியில்லாமல் சுக்ராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்தார். தடுத்தார்.  க் தை  அறிந்த  வாமனனாக வந்த  மஹா விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்ராச்சாரியாரின் கண்  குருடாகியது.  சுக்ராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக  இந்த ஸ்தல  வரலாறு.  கண் தொடர்பான நோய்கள் இங்கு சிவனை வணங்கினால் நீங்கும்.  வெள்ளீஸ்வரனை தரிசிக்க  வெள்ளிக்கிழமைகளில்  எண்ணற்ற பக்தர்கள் இங்கே வந்து   களத்திர தோஷம்,  திருமணத் தடைகள்  நீங்கப்  பெறுகிறார்கள்.

முதலில்  சொன்ன  ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் ஒரு சனி பகவான் ஸ்தலம் என்பது நம்மில் அநேகருக்கு  தெரியாது.  மயிலாப்பூர் சப்த சிவ  ஸ்தலங்களில் அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயம்  மிகவும்  புராதனமான  அழகிய  ஆலயம். காஸ்யப முனிவர் வழிபட்ட க்ஷேத்ரம்.  திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்றது. மேற்கு பார்த்த  கபாலீஸ்வரர்.  முதன் முதலில்   இந்த  கபாலீஸ்வரர் கோயில்  கடற்கரையில் இருந்து  மூழ்கி விட்டதாகவும், 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாக  சரித்ர  பக்கங்கள் கூறுகிறது. 
புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளிள்ள இறைவனை, அம்பாள்  பார்வதி தேவி மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்த ஊர்  மயிலாப்பூர் ஆகியது.   நவக்ரஹங்களில்  சக்தி மிக்க ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சம் தான்  கபாலீஸ்வரர்.   மண்டை  ஓடு, எலும்பு,  கபாலம் எனப்படும்.  எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான்.  எலும்பு துண்டுகள், சாம்பல் (அஸ்தி). இதிலிருந்து பூம்பாவையை  சம்பந்தருக்காக  இறைவன் மீட்ட ஸ்தலம்.  சென்னை மாநகரின் ஒரு முக்கிய  ஸ்தலம் மைலாப்பூர்.இந்த தலத்தை சனி கிழமைகளில் வணங்கி வந்தால்  ஆயுள்  தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும்.

எட்டாவது நவக்கிரஹ  ஆலயம்  ஸ்ரீ   முண்டக கண்ணியம்மன்  ஆலயம். முண்டகம் என்பது  தாமரை  மொட்டு, மலர். இது ஒரு  ராகு ஸ்தலம்.   மைலாப்பூரில்  அனைவரையும் காக்கும்  டாக்டரம்மா,  மருத்துவச்சி  என்று  போற்றப்படுபவள்  இந்த  ஆலய பிரதான அம்பாள்  முண்டக கண்ணியம்மன்.  ராகு அம்சமாக திகழ்பவள் .கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு  புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது.  எந்த  வியாதியும் குணமாக  ராகுவின் அருள் தேவை.  இந்த டாக்டரம்மா தீராத நோய்களை  தீர்ப்பவள் . 

ஒன்பதாவது நவக்ரஹ  கோயில் அருள்மிகு கோலவிழியம்மன்   ஆலயம்.  இது தான்  மைலாப்பூரில் கேது ஸ்தலம்.  துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் சொல்வது வழக்கம்.  எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சம். 
  புத்ர தோஷம், திருமண தோஷம்,  தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும். மைலாப்பூரின்  காவல் தெய்வம்.

ஒரு போனஸாக  இன்னொரு அற்புத கோவில் இருக்கிறது. அது தான்  பத்தாவது க்ஷேத்ரமான   அருள்மிகு அப்பர் ஸ்வாமி கோவில். இது   மைலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில்  இருக்கிறது.  ஞான தெளிவு பெறுவது அனைவருக்குமே அவசியம்.  ஞான  வைராக்யம் பெற  சித்தர்களை வழிபடுகிறோம்.  சிவனடியார்களின்  சிறந்த  ஒருவர்  அப்பர் சுவாமிகள் எனப்படும் திருநாவுக்கரசர்.  1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில்  பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான  திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பின்னர் அது  ஆலயமாகியது. 

ஜீவ சமாதிகள் பிரம்ம ஞானிகளின் சமாதிகள்  பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் விக்ரஹங்கள்  விஸ்வநாதர்  எனப்படுகிறார். அம்பாள் விஸாலாக்ஷி. காசியைப் போலவே  இங்கேயும்  பைரவர் வழிபாடு  ரொம்ப பிரசித்தி.   மைலாப்பூர்  உண்மையில் ஒரு சிவபுரி. 
மயிலையே கயிலை.   இனிமேல் மைலாப்பூர் செல்பவர்கள்  ஒரே நாளில் இவை அத்தனையும் தரிசிக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா?




Wednesday, October 26, 2022

kurukshethra





 குருக்ஷேத்திர  நீதி  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


குருக்ஷேத்ரம்  ஒரு பெரிய  யுத்த பூமியா,  இல்லை துவாபர யுகத்தில் மிகப்பெரிய  மயான பூமியா?  
எங்கும் ரத்த வெள்ளம், உயிரற்ற உடல்கள், சேதமான ஆயுதங்கள், தேர்கள், ......  18 நாள் யுத்தம் பல உயிர்களைக்  குடித்து விட்டதே. எங்கும்  அரைகுறை உயிர்களின்  ஈனஸ்வரங்கள் ஓய்ந்து போய்விட்டன. காக்கை, கழுகு, பிணந்தின்னி மிருகங்களின்  அசைவைத்தவிர  வேறெந்த நடமாட்டமும் இல்லை.  இந்த அமைதி தான் மயான அமைதியோ?  அத்தனை பிணங்களும்  சில நாட்களுக்கு முன்பு எவ்வளவு,  அகம்பாவத்தோடு பேசிய. எவ்வளவு வீரமான சொற்கள். படைகள், பலசாலிகள்.  இதோ  இப்போது காக்கை நரி கழுகு ஓநாய் தான் அவற்றை சுற்றி.   மற்ற உறவினர்கள் வீராதி வீர பணியாட்கள், நாடு நகரம், யானை குதிரை  எங்கே அவை எல்லாம்?

சஞ்சயன் சுற்றிலும் பார்த்தான்.   அவனுக்கு தெரிந்த உலகத்தில் இருந்த எல்லோருமே  காணாமல் போன இடமல்லவா இந்த  குருக்ஷேத்ரம். இங்கே தான் கிருஷ்ணனும் அர்ஜுனனும்  வாழைக்காய் சீவுவது போல் எண்ணற்ற   உ   யிர்களை சூறையாடி னார்களோ?   எறும்பு புற்றை  மிதித்து நசுக்கிய  யானையாக பீமன் கௌரவ சேனையை அழித்தானோ?   ஓஹோ , இது தான் 'உலகே  மாயம்  வாழ்வே மாயம் '' பாடவேண்டிய இடமோ? 
''சஞ்சயா  என்ன புரிந்து கொண்டாய்?என்றது ஒரு குரல்.
''யார்  பேசுவது?  என்று திரும்பிப்  பார்த்த  சஞ்சயன் முன் ஒரு காவி அணிந்த  முதியவன்.
''ஐயா நீங்கள் யார்?  என்ன செய்கிறீர்கள் இங்கே?- சஞ்சயன் கேட்டான்.
''நீ என்ன செய்கிறாய் நினைக்கிறாய்  சொல். ....உனக்கு உண்மையிலேயே  இங்கே நடந்தது   என்ன என்று புரிகிறதா சரி? அப்போது தான் குருக்ஷேத்ர அர்த்தம் புரியும் ''
'' சுவாமி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.  எனக்கு   மஹாபாரதம் ஒரு கதையல்ல,  ஒரு தத்துவம் என்றஅளவு தான் புரிகிறது''
“நீ கெட்டிக்காரன்.  ஆமாம் மஹாபாரத யுத்தம்  ஒரு  தத்துவம் தான். உன் மனதில் எழுகிற சந்தேகங்கள்  எனக்கு புரிகிறது சொல்கிறேன் கேள்.  சஞ்சயா  நீ  இருந்த இடத்திலிருந்தே  குருக்ஷேத்திர  மஹா பாரத  யுத்தத்தை முழுதும்  திவ்ய தரிசனம் பெற்று  திருத ராஷ்டிரனுக்கு எடுத்துச்  சொன்னவன்.  நான் கேட்பதற்கு பதில் சொல். பாண்டவர் யார்?
''நீங்களே  சொல்லுங்கள்''
''உன்னுள்ளே  இருக்கும் ஐந்து புலன்கள் .
''கௌரவர்கள் யார் தெரியுமா?
''தெரியவில்லை, சொல்லுங்கள் சுவாமி''
 “உனக்கு உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் நூறு தப்பிதங்கள். ஒவ்வொருநாளும் உன்னுடைய ஐந்து புலன்கள் அவற்றோடு போராடுகிறதே.  எப்படி என்று தெரியுமோ?''
'சத்தியமாக  என்னால்  உணர முடியவில்லை சுவாமி சொல்லுங்கள் ''
“ கிருஷ்ணன் குதிரைகளை   ஓட்டினானே , அந்த குதிரைகள் தான் உன் மனம், ஐம் புலன்கள். ஒ குதிரைகளை அடக்கி  ஓட்டியவன் தான் உன் உள்ளே இருக்கும் ஆத்மா, அந்தர்யாமி. மனசாக்ஷி.  வழி காட்டி.  அவன் உன்னை செலுத்தும்போது வாழ்க்கை குதிரை ஜோராக ஓடும்..''
''சுவாமி, ஒரு சந்தேகம்?கெட்டவர்கள் என்று தெரிந்தும் ஏன்  பீஷ்மாச்சார்யார், த்ரோணர்  போன்றவர்கள் கௌரவர்களுக்கு உதவி யுத்தம் புரிந்தார்கள்?''
'சஞ்சயா, வயதானால் மட்டும் ஒருவன் பெரியவன் இல்லை.  தவறு செய்வது எல்லோர்க்கும் சகஜம். தெரிந்து செய்வது தான் குற்றம்.  அதற்கு எல்லோரும் தண்டனை பெற்று  பலனை அனுபவிக்கவேண்டும்.  பாண்டவர்கள்  அவர்களையும் போரிட்டு அழிக்கத்தான் வேண்டியிருந்தது.  அது புரிய  கீதை  சொல்வது உனக்கு புரிய வேண்டும். கிருஷ்ணன்  கீதையை நமக்கு அதற்காகத் தான்  உபதேசித்தான்.”
''கர்ணன்  என்பது...."
'கர்ணன் என்பது உனது புலன்களோடு ஒட்டிய உறவு. சகோதரன் மாதிரி. அதன் பெயர்  ஆசை. ஆசையால் தான் எல்லா துன்பங்களும் விளையும். திருமூலர் சொன்னது நினைவிருக்கிறதா.  ஆசை படப்பட  ஆகி வரும் துன்பங்கள். ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்.''    தவறுகளை  செய்ய தூண்டிவிடுவது தான் ஆசை. கௌரவர்களுக்கு கர்ணன் போல...''
சஞ்சயன்  மனதில் எண்ணங்கள் சுழன்றன. நடந்ததை எல்லாம் ஆரம்பத்திலிருந்து  மீண்டும்  சினிமாவை ரீ வைண்ட்  REWIND  பார்ப்பது போல்  கவனித்தான். குருக்ஷேத்திர பூமியை மீண்டும் சுற்றி முற்றிலும் பார்த்தான். 
''ஆஹா, ஆசையால் விளைந்த  பலன் இது தான்.. பேராசை பெரு நஷ்டம்..பொறாமை...... புரிந்துவிட்டது.    
சஞ்சயன்  முகம் வியர்த்தது.  நெஞ்சம் படபடத்தது. சத்யம் வெல்லும். பொறுத்தார் பூமி ஆழ்வார்....  பாண்டவர்கள் வென்று பூமி ஆண்டார்கள்... உண்மை புலப்பட்டது.   

கிழவரை வேறு ஏதோ கேட்க  திரும்பினான்..  எங்கே  அந்த  துறவி.....  வாழ்க்கை தத்துவம் தான்  இத்தனை நேரம்  உருவமெடுத்து என் முன் தோன்றியதோ??.

SAINT THIYAGARAJA

மோக்ஷம்  சும்மா கிடைக்குமா?  -   நங்கநல்லூர் J K  SIVAN


'சிவா,  நீ   நன்றாக ஒரு  பாட்டை  யோசித்து  எழுதி,  மெட்டு போட்டு, அதை நீயே பாடு. ''
இப்படி ஒரு கட்டளை , அதிகாரமாகவோ  அன்பாகவோ எனக்கு போட்டால் எனக்கு என்ன ஆகும்?  யோசிக்கிறேன். 

​​
முதலாவது எனது தலை  உடனே, பெரிசாக கர்வத்தில்  வீங்கி விடும். ஒன்று  நான் எழுதும் பாட்டு அதி அற்புதமாக இருக்கவேண்டும், எல்லோரையும் கவரும் ஜனரஞ்சகமான மெட்டு, அதற்கு போடவேண்டும், பாட்டு  அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்.  இதை பாடினால் எனக்கு பேரும்  புகழும் வரவேண்டும். காசு நிறைய  கிடைக்கட்டும்,  இது என்னால் தான் முடியும்  என்ற அகம்பாவம் கண்ணை, அறிவை மறைக்கும்.   ஏதோ  நான்  எவரெஸ்ட் மீதில் இருப்பது போலவும்  எல்லோரையும்  கீழே இருப்பதாகவும்  பார்க்க வைக்கும்.

நான் எழுதப்போவதோ ஒரே ஒரு பாட்டு. அதற்காக பல நாள்  இரவும் பகலும் யோசனை, எப்படி ஆரம்பிப்பது, முடிப்பது?"  எவ்வளவு நிமிஷம் ? என்ன ராகம்?  எத்தனை வார்த்தைகளில் எளிய, சந்தம் அழகாக உள்ள  வார்த்தைகள்.  ஒருவர் தொந்தரவும் இல்லாமல்  ஏதோ ஒரு  ஊரில் ஓட்டல் அறையில் உட்கார்ந்து காகிதங்களை கிறுக்கி கிறுக்கி  வீசி எறிந்து ..... என்னுடைய இயலாமையில்  எல்லோர் மேலும் கோபம் வந்து, கடைசியில் என்னால் எழுதவே முடியாமல் பல வாரங்கள் மாதங்கள் ஆனாலும் வெளியே தலை காட்ட முடியாமல்  போய்விடும். இப்படிப் பல பேருக்கு நடந்திருப்பதால்  இப்படி ஒரு ஜோசியம் சொன்னேன்.

இதெல்லாம் துளியும் இல்லாமல்  ஒரு மஹான்  வேறே லெவலில் இருந்தவர்..என் போல் இல்லை.  பாட்டு பிறர் சொல்லிப் பாடாதவர். தன் மனதில் ராமனைத்  தவிர வேறு யாருக்கும் எதற்கும்  இடம் தராதவர்.  உலக வாழ்வின்  வசதிகள் சுகங்களை  மனதாலும்  நெருங்காத  எளிய  பக்தர். 

ராம நாமமே  பலகோடி மூச்சாக நாம ஸ்மரணையில் உயிர் வாழ்ந்தவர். ராமனை நினைத்து மனதால் அவனோடு வாழ்ந்து,ஒவ்வொரு ணமும் அவனுடைய உணர்வில் திளைத்து மகிழ்ந்து அவனையே ரசித்து ருசித்துப்  பல்லாயிரம் பாட்டு பாடியவர். அவர்  இந்த ராகம் தான் போடவேண்டும் என்று யோசித்து போடாதவர்.  பாடல்களில் வார்த்தைகள் மனதில் பக்தியால் உருவானவை. அதற்கான ராகமும் தானாகவே பொருத்தமாக முளைத்தது.

ராமனே தன்னைப் பற்றிய  அவர்  கீர்த்தனைகளுக்கு   தானாகவே   தகுந்த, பொருத்த மான ராகங்களை ப்ரயோகப்படுத்தி அவரைப் பாட வைத்தான். தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகளின் பதங்கள்,  வார்த்தைகள் அவர் யோசித்து எழுதவில்லை. உள்ளத்தில் பொங்கிய அபரிமிதமான பக்தியில் விளைந்த ஸ்வயம்பு.   ஆற்றில் வெள்ளம் நதியைக்  கேட்டுக் கொண்டா, முன்னேற்பாட்டுடனா ஓடுகிறது?  அது போல் லக்ஷக் கணக்கான  பாடல்கள் ராமன் மேல் தானாகவே  அவர் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டன.  எதையும் எழுதி மனப்பாடம் பண்ணவில்லை,  ராமன் எதிரே  தீபமேற்றி அதன் ஒளியில் அவன் திருமுகத்தை பார்த்தவாறு  தம்புராவை மீட்டி  கண் மூடி  தியானத்தில்  பாவம் (bhavam ) உணர்ச்சிப் பெருக்கோடு புறப்பட்டது. வார்த்தைகள்  தானாக வரிசையாக விழுந்து  ராகத்தில்  நுழைந்து  கீர்த்தனையாக வெளிவந்தது. அப்படி அவர் பாடியது  எண்ணற்ற பாடல்கள், நமக்கு கிடைத்ததோ ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே. 

அவர் ஒரு கருவி.. ஹார்மோனியம், வயலின் வீணை மாதிரி.   தம்புராவை மீட்டியவுடன் கண்ணை மூடிக்  கொண்டு தேவகானம்  புறப்பட்டது. அப்படி ஒரு பாடல் இது:   பல நூறு ஆண்டுகள் ஆகியும் கேட்க திகட்டாதது.  பலமுறை கேட்டிருந்தும் இன்றும்   நான் கேட்டது..

பல்லவி  
மோக்ஷமு கலதா புவிலோ
ஜீவன்முக்துலு கானி வாரலகு
அனுபல்லவி
ஸாக்ஷாத்கார நீ ஸத்- பக்தி
ஸங்கீத ஞான விஹீனுலகு (மோ)
சரணம்
ப்ரா(ணா)னல ஸம்யோகமு வல்ல
ப்ரணவ நாத ஸப்த-ஸ்வரமுலை பரக
வீணா வாதன லோலுடௌ ஸிவ மனோ-
வித(மெ)ருகரு த்யாகராஜ வினுத (மோ)

திருவையாற்றில் காவேரி பெருக்கெடுத்து ஓடுகிறது.  அதன் கரையில் எளிய தனது இல்லத்தில்  தியாகராஜ ஸ்வாமிகள் எதிரே பட்டாபிஷேக ராம விக்ரஹத்தின் எதிரே அதற்கு பூஜை பண்ணி, நைவேத்தியம் படைத்து, ஆனந்தமாக அதை மகிழ்விக்க  திடீரென்று தோன்றிய ஒரு  கீர்த்தனையைப்  பாடுகிறார். 

ஹே, ஸாக்ஷாத்கார ஓம்கார நாதமே, இந்த பூமியில் ஜீவன் முக்தன் ஆகாமல் எவனாவது மோக்ஷம் அடைய முடியுமா? உன்னுடைய திவ்ய  புனித சரணாரவிந்தங்களில் பக்தி இல்லாமல், அதை இசையோடு கலந்து உன்னை மகிழ்விக்காமல் சங்கீத ஞானம் இல்லாமல் எவராவது முக்தி பெறமுடியுமா?

சங்கீதம் ஜீவன் உள்ளது, உயிர் மூச்சுள்ளது, உடல் பக்தியால் உஷ்ணமடைந்து, உஷ்ணம்  உயிரின் வெம்மையான  மூச்சு கலந்தால் அல்லவோ அளவான  பிரணவ நாதம் சேர்ந்த பக்தி ஓங்காரநாதம் கிடைக்கும். அதுவே  ப்ரணவநாதமாக  ஏழிசையாகி  வீணாகானமாக நாத ஓங்காரமாக சிவனை உணர்விக்கும்.    இந்த  அருமையான  பாடல்  சாரமதி என்ற  மதிமயக்கும்  ராகத்தில் பாடப்பட்டுள்ளது. 

சிவன் சாம கானப்ரியன் . ராவணேஸ்வரன் தனது இசையால் வீணை மீட்டி சிவனை  மகிழ்வித்து வரம் பெற்றவன் என்று தெரியுமல்லவா?

இந்த பாடலை இன்று  ஸ்வாதி திருநாள் என்ற மலையாள படத்தில்  சாரமதியில்  ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா  சிம்பிளாக  பாடுவதை நான் கேட்டதை நீங்களும் கேளுங்கள் 

 
https://youtu.be/aclRf3p-B4I

river krishna

 நமஸ்காரம் கிருஷ்ணா...   நங்கநல்லூர்  J K  SIVAN


எதுவுமே  பெரிதாக  இருந்தால்  பார்க்கும்போது ஒரு பிரமிப்பு.  ஹா என்று வாயைப் பிளக்கிறோம்.  இமயமலை, கடல்,யானை,  பிரகதீஸ்வரர் கோவில்  இன்னும் எத்தனையோ... கிருஷ்ணா  நதியில்  விடிகாலை   இடுப்பு வரை நீரில் நின்றேன். யாருமே இல்லை.   எல்லாம்  கருப்பாக இருக்கிறது. '' கிருஷ்ணா'' என்று  கிருஷ்ணா  நீரில் மூழ்கி எழுந்தபோது காதில் ஒரு குரல்.

''என்ன யோசிக்கிறாய்?''
''உன் பெயர்  கிருஷ்ணா என்று இருக்கிறதே?  நீ ஆணா ?''
''பெண்ணுக்கும் கிருஷ்ணா என்று பெயர் உண்டே,  என் கலர் என்ன பார்த்தாயா?''
''கருப்பு''
''அதற்கும் கிருஷ்ணா என்று தான் பெயர் உனக்கு தெரியாதா?''
''நீ  பெண்  என்கிறாயே?''
''உனக்கு பாரதமே தெரியாது போல் இருக்கிறது.  திரௌபதிக்கும்  கிருஷ்ணா என்று தான் பெயர்''
'' நீ  நதியாயிற்றே?
'' முட்டாளே,  ஹிந்துக்களுக்கு  நதிகள் எல்லாம்  பெண்  என்பது உனக்கு தெரியாதோ?
'' நீ சொன்னபிறகு  தான் கிருஷ்ணா புரிகிறது.  இவ்வளவு அழகா இருக்கிறாயே உன்  உன் வயதென்ன கிருஷ்ணா?''
''
என் அக்காக்கள்  நிறைய பேர் இருக்கிறார்கள்,   கங்கா,  யமுனா, நர்மதா, காவேரி  இன்னொருத்தி   கோதாவரி,  என் பெரிய அக்கா  ஸரஸ்வதி , பூமிக்குள் போய்விட்டாள். அவளை மட்டும்  பார்க்க முடியாது.  நாங்கள் கிழங்கள்.  ஐந்தாயிரம் வருஷத்துக்கு மேலே  என் வயசு.   என்னை கிருஷ்ணவேணி என்பார்கள். நான் பார்க்காத ஊர் இல்லை.  மராத்தி, தெலுங்கு, கன்னடம்  எல்லாமே தெரியும். அங்கெல்லாம்  கூட  நான் செல்கிறேன். உன்னை மாதிரி ஆட்கள் தமிழ்ப்பேசினாலும் புரியும். எனக்கு கிருஷ்ணனையும் பிடிக்கும்,  சிவனையும்  பிடிக்கும்.  மஹாபலேஸ்வர் என்கிற ஊரில் நான் பிறந்ததே   கிருஷ்ணா பாய் என்ற   க்ஷேத்ரத்தில் தான். அதுவும் ஒரு சிவன் கோவில் தான்.பஞ்சகங்கா என்று இன்னொரு சிவ க்ஷேத்திரமும் அங்கே இருக்கு.
''எங்கே ஓடுகிறாய் அம்மா  நீ    கிருஷ்ணா?''
என் சகோதரிகள் போல நானும் சமுத்திர ஸ்னானம் செய்பவள். ஹம்சளாதேவி என்ற பெயரோடு நான் சமுத்திரத்தில் ஐக்யமாகிறேன்.  ஆனால் முடியவில்லை. எனக்கு முடிவு கிடையாது ஏன் தெரியுமா?
''சொல்லம்மா  கேட்கிறேன்?''
எவ்வளவோ பேர்கள் என்னிடம்  அவர்கள்  பாபத்தை தொலைத்து என்னிடமிருந்து புண்யம் பெற நாங்கள் கொடுத்து வைத்தவரகள்.  
என் அக்கா  கங்கா  அப்படிப்பட்டவள்  தான்.  எல்லோருக்கும் உணவளிப்பதில் நாங்கள் பெருமைப் படுபவர்கள். தாகம் தீர்ப்பவர்கள். எவ்வளவோ பேரை சுமந்து பல இடங்கள் கொண்டு சேர்ப்பவர்கள்.  எத்தனையோ  ஆலயங்களை  நாங்கள் தொட்டுக்கொண்டு  வணங்குகிறோம். நான்  இருக்கும் இடங்கள்  பல க்ஷேத்ரங்கள்.  சங்கமேஸ்வரம், ஸ்ரீ சைலம், கனக துர்கா  இந்த  பேர் எல்லாம் கேள்விப்பட்டதுண்டா?
''ஆஹா,  கிருஷ்ணா, நீ தனி ஒருத்தியா, உனக்கு யாரும் இல்லையா?"'
''ஏன் இப்படி கேட்டு விட்டாய். என் சகோதரிகளை பற்றி சொன்னேனே.   தவிர  இன்னும் சிலர்  என்னோடு இருப்பவர்கள்,  ஒன்றிரண்டு  பேர்  சொல்கிறேன் கேள்.  கட ப்ரபா, மலப்ரபா ,பீமா, துங்கபத்திரா, மூசி, போறுமா?  

இந்த பாரத தேசத்தின் பெருமைக்கு நாங்களும் காரணம் என்று பெருமை கொண்டவர்கள். எத்தனை உயிர்கள் என்னால் பிறந்தவை, வாழ்பவை என்ற கணக்கு எனக்கு தெரியாத அளவு நான் பரோபகாரி.  லக்ஷோப லக்ஷம் மக்கள் என்னை வணங்கும்போது நான் எவ்வளவு ஆனந்தம் ஒரு தாயாக நான் அடைகிறேன் தெரியுமா? கிருஷ்ணா என்று என்னை கூப்பிடும்போது எனக்கு  பிடித்த  அந்த  கருப்பன்  கிருஷ்ணனை நினைத்து என்னை தலை வணங்க செய்கிறது.

''கிருஷ்ணாம்மா,   எனக்கும் கிருஷ்ணனை பிடிக்கும். தினமும் ஒரு முறையாவது அவனைப் பற்றி நினைப்பேன், எழுதுவேன்.

''தெரியும்டா  சிவா,   அதனால் தான் உன்னோடு பேசினேன். எத்தனையோ வெள்ளைக்காரனை எல்லாம் கூட பார்த்திருக் கிறேன் பேசினேனா?
வெகுநேரம்  கிருஷ்ணா நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தவன்  என்னோடு வந்தவர்கள் கரையேறி காத்திருந்ததால் மனமின்றி  மெதுவாக  கனத்த இதயத்தோடு கரையேறினேன். ஆந்திராவில் பல க்ஷேத்ரங்களை தரிசிக்க  ஒரு யாத்திரை போனோமே .

 

 

 

Tuesday, October 25, 2022

krishna story

 


நான்  வந்தேனே.....நங்கநல்லூர்  J.K. SIVAN

 பரந்தாமன் என்ற கிருஷ்ண பக்தன் பேசுகிறான்: கேட்போம்: 

பல மாதங்களாக  ஆவலுடன், ஆர்வமுடன் காத்திருந்த தீபாவளி இதோ வந்து ஒரே  ராத்திரி, ரெண்டே நாளில் வேகமாக ஓடிப்போய்விட்டது. போகும்போது வழக்கம்போல்  பலத்த  வெடி, பளிச்சென்று சீறி  வானத்தில் சென்று பட்டென்று வெடித்து பல வர்ணப்பூக்களாக சிதறும்  வானங்கள், நடுநடுவே  மழையோடு,தெருவெங்கும் குப்பையோடும்  சென்று விட்டது.  ஆனாலும்  தீபாவளியின் மகிழ்ச்சியும் , குதூகலத்தோடும் தான் இருக்கிறது. இருக்கும் இன்னும்  சில  நாள்  இப்படி.   தீபாவளி அன்று நடந்த ஒரு சம்பவத்தை நினைக்கிறேன்.

விடிகாலை வெந்நீரில் தான் எனக்கு கங்கா ஸ்னானம்.  ஒரு புது வேஷ்டி துண்டு. நிறைய  டெலிபோன் கால்.  பாதிக்கு மேல் புது குரல்கள். நேரில் பார்க்காத மனதில் அன்பு நிறைந்த  முகநூல்  வாட்ஸாப்ப் நண்பர்களின் வாழ்த்து.  எங்கேயோ இருக்கும் சிலர் என்னை நினைத்ததை உணரும்போது கிருஷ்ணா,உன்னால் சேர்ந்த நண்பர்கள் இவர்கள் என்று அவனுக்கு மனதார  நன்றி தெரிவித்தேன்.

எண்பத்து மூன்று  தீபாவளி பார்த்தாச்சு. (ஓஹோ  என்  வயதோ?) கிருஷ்ணா உன்னை மட்டும் தான் இன்னும் பார்க்கலே.  படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே? ''

எனக்கு கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணா கிருஷ்ணா என்று தான் வாய் எந்த பையனைப் பார்த்தாலும் கூப்பிடும்.    என்னை  எல்லோரும் என்னை கூப்பிடுவதே  ''கிருஷ்ணா மாமா''.  வீட்டில் ஒவ்வொரு கிருஷ்ணன் பொம்மைக்கும், படத்திற்கும்,  ஏதாவது ஒரு பெயர் உண்டு.  சிலது ஆசையோடு இப்படி கூட  இருக்கும்:  கருப்பண்ணன், குண்டு கோபு , கிட்டு, சுட்டி, கள்ளப்பயல், ப்ளூட்டுக்காரன், வெண்ணை திருடன், புளுகாண்டி என்னும் எத்தனையோ செல்லப்  பெயர்கள்.

கிருஷ்ணன் பேசுவானோ? பதில் சொல்வானோ? ஹுஹும் அதெல்லாம் சும்மா என்று தானே என் காது கேட்க பலர்  சொல்கிறார்கள்.  சொல்லிட்டு போகட்டுமே. ஆஹா,  அந்தப்பயல் கேட்டதெல்லாம் கொடுப்பவன் மட்டுமில்லே. கேட்டதுக்கு பதில் கொடுப்பவனும் கூட ''.

''கிருஷ்ணா உன்னை நான் பார்க்கணும். படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே? ''
 
" பரந்தாமா,  இன்னிக்கு தீபாவளி. இன்றே  உன் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்.காத்திரு. இதோ வருகிறேன்''-  கிருஷ்ணனின் பதில்  காதில்  விழுந்தது.

வீட்டில் ஒரே சத்தம். நிறைய  உறவினர்கள், நண்பர்கள் மாமிகள் கூட்டம்.  தீபாவளி கும்பல்.  பக்ஷண பைகள்  கை மாறியது. 
எனக்கு  கிருஷ்ணனைத்   தனியே காண விருப்பம். வீட்டின் பின் கொல்லைப்பக்கம்  சென்றேன்.  எப்போதோ எங்கப்பா கட்டிய  பெரிய பழைய  தனி வீடு. கொல்லையில் பச்சென்று செடி கொடி மரங்கள். துணி தோய்க்கும் கல் (பல வருஷங்களாகிறது. இப்போது யாரு துணியைக் கல்லில் அடித்து தோய்க்கிறார்கள்?. பழைய கிணற்றில் இன்னும் தண்ணீர் வற்றவில்லை. அமைதியாக காத்திருந்தேன். என்னைத் தவிர  அங்கே யாருமில்லை.  நிசப்தம்.
''கிருஷ்ணா.. முகுந்தா......'' என்று ஹரிதாசில் MKT பாடின பாட்டை  என்னையறியாமல் வாய்  முணுமுணுத்தது. 

ஒரு குயில் எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்து  எதிரே மாமரத்தில் ஒரு கிளையில்  கண்ணெதிரே உட்கார்ந்தது. பார்க்க அழகாக சின்னதாக கருப்பாக இருந்தது. மதுர குரலில் அது சில நிமிஷங்கள் ஏதோ இனிமையாக ஒரு ட்யூன் (tune) 
கூவிவிட்டு  என்ன தோன்றியதோ சட்டென்று பறந்தும் போயிற்று.  கிருஷ்ணன் எப்போ வருவான்??

பிசு பிசுவென்று  மழைத்தூத்தல்.  வானில்  சூரியனைக் காணோம்.  பனி மூட்டம் மாதிரி கருப்பு மேகங்களும்  எங்கோ ஒரு பேரிடி முழக்கமும். உள்ளே டிவியில்  காலையிலேயே  ''மழை பெய்யலாம்.  சில பகுதிகளில் கனத்த மழையாகவும் இருக்கலாம்''  வழக்கமாக ஆரூடம்  கேட்டு சிரிப்பு வந்தது. 

மழை பெய்தாலும் வீட்டுக்குள்  போகமாட்டேன். கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு தான் எல்லாம். மழையில் நனைந்தால் என்ன பரவாயில்லை.  வரேன் என்றவன்  இன்னும் ஏன் வரவில்லை?''  கிருஷ்ணா, உன்னைப் பார்க்க, கேட்க ஏன் தொட கூட முடியுமாமே? எங்கோ புஸ்தகத்தில்  எழுதி இருந்ததை படித்திருக்கிறேன். 

''ஐயா உங்களை எங்கே ல்லாம் தேடறது. இங்கே வந்து தனிச்சு  குந்திக்கிட்டிருக்கீங்க?
''யாரு?''   திரும்பிப்பார்த்தேன்.  பல வருஷங்களாக  வீட்டில் வேலை செய்யும் பெரியாயி ஒரு சிறு குழந்தையை பொட்டலமாக  மடியில்  அணைத்துக்கொண்டு அருகில் வந்தாள்.
''என்னம்மா வேணும் ?''
'' அம்மா கிட்டே புதுசா பொறந்த என் பேரனை த்தூக்கி யாந்து காட்டி ஆசீர்வாதம் கேட்டேன். ஐயா தோட்டத்திலே இருக்கார் அவர் கிட்டேயும் காட்டு ன்னு சொன்னாங்க.''

''ஆஹா! பேஷ் பேஷ். ஜாக்ரதையா சீக்ரம் உள்ளே எடுத்துண்டு போ. மழை வரும்போல இருக்கு..''  வாய் மட்டும் பேசியதே தவிர  மனம் கவனம் எல்லாம்  இன்னும் வராத கிருஷ்ணனின்  மேல்.  துணிப் பொட்டலத்தில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை  பார்க்கவே இல்லை. 

''எங்கிருந்தோ ஒருபாதி அணில் கடித்த கொய்யா பழம்  வலது தோளின்  மேல்   தொப்பென்று மரத்தின் மீதிலிருந்து விழுந்தது.  மேலே பார்த்தார். எப்படி காலம் ஓடறது?  இப்போது தான் செடி வைச்சமாதிரி இருக்கு  பதினைந்து 
வருஷத்தில் எப்படி கொய்யா மரம்  வளர்ந்துட்டுது.  

இன்னும்  வராத கிருஷ்ணன் மீது கொஞ்சம் கோபமும் வந்தது.வெகு நேரம் ஆகியும் ஏன் கிருஷ்ணன் வரவில்லை?  மஞ்சள் கருப்பு  புள்ளிகளோடு ஒரு பட்டாம்பூச்சி  முகத்திற்கு நேரே பறந்து வந்தது வந்தத. என்ன தையமோ?   ரெக்கையை அடித்துக்கொண்டு  வலது  கைமேல் வந்து உட்கார்ந்தது.   ஐ ஐ என்று  என்று அதை விரட்டி வெடுக்கென்று கையை உதறினேன்.  மழை சிறு தூற்றல் இப்போது பெரிய மழையாக வலுத்தது.  
மழை தூற்றல் ஆரம்பிக்கவே வீட்டுக்குள் சென்றார்.
பெரும் ஏமாற்றம்.''வரேன்'' என்று சொன்ன கிருஷ்ணன் வராவிட்டால் சந்தோஷமாகவா இருக்கும்?
உள்ளே இன்னும் கும்பல் . சிலர்  பாடினார்கள்  எதிரே  பெரிய ராதா கிருஷ்ணன் படம். நிறைய அலங்காரம் செய்து, மலர் மாலைகள் சூட்டி தூப தீபங்களோடு காட்சியளித்தது. தீபாவளி அல்லவா எதிரே தட்டுகளில் பக்ஷணங்கள் பழங்கள், நைவேத்யம். புல்லாங்குழல் ஊதிக்கொண்டு புன்னகைத்த கிருஷ்ணன் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
'' கிருஷ்ணா நீ இப்படி பண்ணலாமா? 'வரேன் என்று சொல்லி ஏன் வரவில்லை. எத்தனை நேரம் காத்திருந்தேன்? இவ்வளவு யுகம் ஆகியும் இன்னும் பொய் சொல்ற பழக்கம் உனக்கு போகலையா?''
கிருஷ்ணன் பேசாமல் சிரித்தான்
''கிருஷ்ணா , மாயாவி, என்னை ஏமாற்றியதில் உனக்கு இத்தனை சந்தோஷமா?''
கிருஷ்ணன் பேசினது காதில் விழுந்தது.
'என்னையா பொய் சொல்றவன் என்கிறாய் நீ . உன் கிட்ட உடனே வரேன் என்று சொல்லி விட்டு தான் நான் உடனேயே வந்தேனே.''
''ஹாஹாஹா... இது தான்டா  கிருஷ்ணா,   நீ சொன்னதில் எல்லாம் ரொம்ப பெரிய அண்ட புளுகு, ஆகாச புளுகு. எப்போது வந்தாய் நீ? நான் உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா ? உடனே ன்னா என்ன அர்த்தம் தெரியாதா உனக்கு?
''நான் தான் வந்தேனே . நீ என்னைப்  பார்த்தாய். என் குரல் கேட்டாய். நான்தான் அந்த கருப்பு சின்ன குயிலாய் வந்து உனக்கருகிலேயே அமர்ந்து பாடினேன். நீ கேட்கவில்லை.
''சரி ஒருவேளை காது கேட்கவில்லையோ என்று ஒரு பேரிடியாக சத்தம் போட்டேன். உன் டமார காதில் விழலியா? நீ எங்கே கேட்டாய்?
'' சரி,  அப்படி என்றால் ஒருவேளை என்னைப் பார்க்க மட்டும் தான் விருப்பமோ என்று ஒரு குழந்தையாய் உன்னிடம் வந்தேன். துளிக்கூட என்னை பார்க்க வில்லை நீ. தொடக்கூட இல்லை நீ. விரட்டி விட்டாய்.
''ஓஹோ,  நீ என்னைத் தொட விரும்பவில்லை நானாவது உன்னை தொடறேனே என்று தான் ஒரு அழகிய பட்டாம்பூச்சியாய் உன் கையைத் தொட்டேன். வெடுக்கென்று உதறி தள்ளிட்டியே என்னை.இவ்வளவையும் நீ செய்து விட்டு என்னை குறை சொல்கிறாயே? ஞாயமா பரந்தாமா?'
என் கண்களில்  குளம். கண்ணன் எங்கும் எதிலும் உள்ளான். அவனைக் காணலாமே, கேட்கலாமே, உணரலாமே!!  இது ஏன் புரியவில்லை?  வாயினால் மட்டும் He is omnipresent ,omniscient , omnipotent என்று சொல்லி படித்து என்ன லாபம்?  என்னுள்ளே காணாமல் வெளியே  தேடி என்ன பயன்? என்று புரிந்தது.
தீபாவளி வாழ்த்துக்கள் .

RASA NISHYANDHINI

 ரஸ ஆஸ்வாத தரங்கிணி  நங்கநல்லூர்  J  K  SIVAN                                                          

 ஸ்ரீ  ராம பிரசாதம்...

தனது வாழ்நாளில்  நூற்றுக்கு மேலான  ஸ்ரீ ராம பட்டாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தியவரும்  பருத்தியூர் பெரியவா என்று போற்றப்பட்டவருமானவர்    ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள்.  மக்கள்  அவரை
 ராமாயண  சாஸ்திரிகள் என்றே அறிவார்கள்.  சிறந்த சங்கீத ஞானம். ஹரிகதா  காலக்ஷேபங்கள் நிறைய  நடத்தியவர்.  சமஸ்க்ரிதம்  தமிழ்  தெலுங்கு போன்ற  பாஷைகள் அக்காலத்தில் வித்வான்கள்  அறிந்திருந் தனர்.    சாஸ்திரிகள்  ராமாயணம் தவிர  பாகவதம், உபநிஷத், கீதை, புராணங்களில் ஈடற்ற உபன்யா சங்கள் நிகழ்த்தியவர் . பல  ஜமீன்கள்,  ஆதீனங்கள், சமஸ்தானங்களில் வரவேற்கப்பட்டு கௌரவம், நிறைய பொன்னும், வெள்ளி, நவரத்தினங்கள், பட்டு வஸ்திரங்கள் என்று எண்ணற்ற பரிசுகள் பெற்றவர். அப்படியே  எல்லாவற்றையும்  வாரி வழங்கிவிடுவார்.  ஒவ்வொரு  உபன்யாசம் கடைசியிலும் அவரை
 ரசிகர்கள் சூழ்ந்து சந்தேகங்கள் விளக்கங்கள் கேட்பார்கள். நிதி பொருள் உதவி கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை  இயன்றவரை வழங்குவார். 

சென்னையில்  நடந்த ஒரு சம்பவம் சொல்கிறேன். நெல்லூர் வெங்கடாசலம்  கடினமான உழைப்பாளி, சாது, ஏழை பிராமணன். ராம பக்தன்.   அவன்  பெண்ணுக்கு  சரியான வரன் அமைந்து   கல்யாணம் நிச்சயமாகி விட்டது. பிள்ளை   வீட்டார்  அடுத்த வாரம் ஏற்பாடுகள் பற்றி பேச வரப்போகிறார்கள். கையில் காலணா இல்லை. கவலை அவனைத்  தின்றது. 
அவன் வீட்டுக்கு அருகே கோவிலில் யாரோ ஒருவர் ராமாயண பிரசங்கம் என்று அறிந்து கிருஷ்ண சாஸ்திரிகள் உபன்யாசத்தை  கேட்டான்.  ராமர் மஹிமையில்  தன்னை மறந்தான். பிரசங்க முடிவில்  சிலர் அவரை அணுகி  உதவிகள் பெறுவதை பார்த்து  தானும்  பெண் கல்யாணத்திற்கு உதவி கேட்கலாமா என்று எண்ணம்.  ஆனால்  அருகில் சென்றும் வார்த்தை வரவில்லை. தினமும் கால்  அவரை கேட்க இழுத்தது. அற்புதமாக பிரசங்கங்கள் கேட்டான். அருகில் சென்று  வணங்கினான்.  ஆசி பெற்றானே தவிர   கூச்சமாக இருந்ததால்  அவரிடம்  நிதி உதவி கேட்கவில்லை.

ஆச்சு  இன்னும்  ரெண்டே நாள். பிள்ளை வீ ட்டார் வரப் போகிறார்களே  எப்படி சமாளிப்பது?  ராம ப்ரபோ.  அன்றும்  சாஸ்திரிகள் ராமாயண உபன்யாசம் கேட்டான்.  

 கண்களில் நீர் மல்க  அன்று ப்ரவசன முடிவில் அவர் எதிரே நின்றான். அவர் பார்வை அவன் மேல் விழ  அவரை நமஸ்கரித்தான். வாய்  பேச வரவில்லை.  எதிரே தட்டில் இருந்த ஒரு பழத்தை அவன்  கையில் கொடுத்து சாஸ்திரிகள் ஆசிர்வதித்தார்.  அன்றோடு கோவில்  உபன்யாச நிகழ்ச்சி நிறைவேறி  சாஸ்திரிகள்  வேறு இடம் சென்றுவிட்டார்.  வெங்கடாசலம் வீடு  திரும்பினான். 

மறுநாள் காலை யாரோ ஒரு பையன்  வாசல்  கதவை தட்டினான். 

''யாரப்பா நீ  என்ன வேண்டும்?'

'''வெங்கடாச்சலம் அய்யர்   என்று இங்கே...

.''''நான் தான் பா. என்ன விஷயம் சொல்லு?''

''ராமாயண சாஸ்திரி  இதை உங்க கிட்டே கொடுக்க சொல்லி அனுப்பினார்''    

தனது  இடுப்பு வேஷ்டியிலிருந்து ஒரு பிரவுன்  கவரை 
எடுத்து  பிரசாதம் புஷ்பம் மேலே வைத்து நீட்டினான் அந்த பையன்

''யார்  இவன் ? சாஸ்திரிகளுக்கு  எனது வீட்டு விலாசம் எப்படி தெரிந்தது. அவர் கேட்கவும் இல்லை, நான் சொல்லவும் இல்லை. அவரிடம்   நான் கேட்கவில் லையே.? என்ன  பிரசாதம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.?

தன் கண்களை நம்பவே முடியாமல்  வெங்கடாசலம்  அந்த ப்ரவுன் கவரை  முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார்.  கோந்து  போட்டு ஓட்டிய கனமான பிரவுன் கவர். உள்ளே என்ன என்று பிரித்து பார்க்கும்போதே  ''நான் வருகிறேன்'' என்று பையன் வேகமாக  கிளம்பிவிட்டான்.

கவர் உள்ளே 2500 ரூபாய்கள். நூறு வருஷங்களுக்கு முன்பு அது பல லக்ஷங்களுக்கு சமம். ஐந்து  நாள்  ஜாம் ஜாம் என்று கல்யாணம் பண்ணி ஊர் கூட்டி சாப்பாடு போடலாமே.  எல்லாம் பண்ணியும்  கையில்  மிச்சம் கூட  மீறும்.  

''ஸ்ரீ ராமா''  என்று அடிவயிற்றிலிருந்து குரல் எழும் பியது.  அவன்  தன்னுடைய பெண் கல்யாணத் துக்கு மொத்த செலவு 1500 ரூபாய்க்கு என்ன வழி என்று தேடும் நேரத்தில் இப்படி ஒரு  பரிசா?

 பிள்ளை வீட்டார்கள் வந்து'பேசி,  குறித்த நாளில்  பெண்ணின்  கல்யாணம்  ஜாம் ஜாம் என்று நடந்தது.   கல்யாணம் முடிந்த கையோடு  வெங்கடாசலம்  சாஸ்திரிகள் இருந்த அக்ரஹாரம் தேடி சென்று பலர் சூழ்ந்திருக்க,  அவரை நமஸ்கரித்து அவர் செய்த எதிர்பாராத பெரிய  உதவிக்கு  நன்றி கூறினான்.

'' நான் எத்தனையோ நாள்  எதிரே நின்றும்  வாய் திறந்து உங்களை என் பெண் கல்யாணத்துக்கு ஏதாவது பொன் பொருள்  யாசகம் கேட்க  விரும்பி தயக்கத் தோடு கேட்காமலேயே இருந்தும், என் நிலைமை புரிந்து என் மனதில் உள்ளதை  சொல்லாமலேயே  அறிந்து  சரியான சமயத்தில் நீங்கள் செய்த உதவிக்கு என் ஜென்மம் பூரா, என் குடும்பம் முழுக்க உங்களுக்கு கடன் பட்டு இருக்கிறோம்.'' 

 தட்டு தடுமாறி  வார்த்தைகள் விழ   அவரை கீழே விழுந்து நமஸ்கரித்தான். கண்களில் நன்றிக் கண்ணீர். 
கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.  

''என்னப்பா சொல்கிறாய் நீ.?  யார்  நான் அனுப்பின பையனா.? நான்  2500 ரூபாய்  கொடுத்தனுப் பினே னா???  உங்க ஊரில்  எந்த பையனையும் எனக்கு தெரியாதே,  உன்னையும்  தெரியாதே?  பணம் கொடுத்து எதுவும் யாரிடமும் உனக்கு அனுப்பவில் லையே அப்பா?''
இந்த  நிகழ்ச்சி சாஸ்திரிகள் மீது பக்தி பரவசத்தை 
மேலும் அதிகரிக்க வைத்து  வெங்கடாசலம்  அவர் குடும்பத்தில் ஒருவனானான்.  மீதி பணத்தில் ஏதோ சில வியாபாரங்கள் பண்ணி பணக்காரனான். அவரை அழைத்து ஊரில்  நிறைய   ப்ரவசனங்கள் ஏற்பாடு செய்தான். 

எத்தனையோ அதிசயங்கள் ஸ்ரீ கிருஷ்ண  சாஸ்த்ரி கள்  வாழ்வில் நடந்திருக்கிறது என்று படித்தேன். அவரது வம்சாவளியினர்கள்  நிறைய புத்தகங்கள் போட்டிருக்கி றார்கள்.  அவருடைய  கொள்ளுப்பேரன் ஒருவர் எனது நண்பர். சமீபத்தில் காலமான  வித்வான், ஸ்ரீ  சுந்தர ராம
மூர்த்தி  கொள்ளு தாத்தா பற்றி எனக்கு அவர்  நிறைய சொல்லி இருக்கிறார். மனது உங்களோடு  பகிர்ந்து
கொள்ள துடித்ததால் இந்த கட்டுரை.. அப்பப்போ  நடு நடுவே  ருசிகர தகவல் உங்களைத் தேடி வரும்.
இனி கொஞ்சம் கொஞ்சமாக   சாஸ்திரிகளின்  ''ரஸ  நிஷ்யந்தினி'' க் குள்ளும் செல்வோம்.   ரஸம்  என்ல் தெரியுமே.  சுவை,  ருசி.  டேஸ்ட் .   நிஷ்யந் தினி என்றால்  ஊற்று. ராமனின் பெயர் அளவில்லாத  அம்ரித  ஊற்று. அதன் ருசியைப்பற்றி சொல்லமுடியாது. அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.  அருமையான  பெயர்  வைத்திருக்கிறார்  சாஸ்திரிகள்.



Monday, October 24, 2022

VALLALAR

 அடித்தது போதும் -  #நங்கநல்லூர்_J_K_SIVAN


 நாம்  குடும்பஸ்தர்கள். சகல உணர்ச்சிகளுக்கும்  அடிமை.      கோபம், தாபம்,   சுகம், துக்கம்,  இன்பம் துன்பம், சந்தோஷம், துயரம்  எல்லாம் கலந்து கட்டியாக  அனுபவிப்பவர்கள்,.

குப்பண்ணா  அரசாங்க அலுவலக குமாஸ்தா.  பட்ஜட் வருமானத்தில் வாழ்பவன். அவன் பெரிய பிள்ளை  ராமு  சரியாக படிக்கவில்லை,  கணக்கில்  20/100  வாங்கினான்  என்று அன்று காலை  பிள்ளை முதுகில்   தவில் வாசித்தான்.   ''ஐயோ அப்பா அம்மா;; என்று  ராமு கத்த  சமையல் கட்டிலிருந்து   ஓடி வந்து   அம்மாக்காரி  ''இப்படியா  குழந்தையை அடிப்பே, மனுசனா நீ''   என்று கணவனைத் தள்ளி விட்டு  பையனை அணைக்கிறாள்.   இது தான் தாய்ப் பாசம்.  
ஒருநாள்  சாயந்திரம்  பக்கத்து வீட்டு பையனுடன் விளையாடி அவன் சைக்கிளை ராமு கீழே தள்ளி பக்கத்து வீட்டுக்காரி அவள் பையன் முழங்காலில் ரத்தம் பார்த்துவிட்டு  ஒரே ரகளை .  ராமுவின் அம்மா ''எப்பவும் ஊர் வம்பை ஏன் விலைக்கு வாங்கறே''  என்று ராமுவை  மொத்தினாள் . அவன் கத்தினான்.  பிள்ளை அழுகுரல் கேட்டு குப்பண்ணா ஓடிவந்து ''ஏ பிள்ளை,   நீ  என்ன பிசாசு பிடிச்சவளா, இப்படி போட்டு  அந்த குளந்தையை   சாத்தறியே'' என்று  அவளை விலக்கி  ராமுவை  தன்னோடு அணைத்து   அழைத்துக் கொண்டான். இது தந்தைப் பாசம்.  

இதெல்லாம் நமக்கு உண்டு.  சந்நியாசிக்கு உண்டா?  துறவிக்குத் தெரியுமா?தெரிந்து தான்  பாடுகிறார் அற்புதமாக  சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்னும் ராமலிங்க வள்ளல் பெருமான்.
'
'தடித்த ஓர் மகனைத்
தந்தை ஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்
தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்கு பேசிய
தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத்தாடும்
புனித நீ ஆதலால்
என்னைஅடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்'' 

''அம்பலவாணா, தேனே அருமருந்தே, உன்னை விட்டால் எனக்கு யார்?   எத்தனையோ தவறுகள், பிழைகள் செய்தவன் நான்.  ஒரு வீட்டில் தாய் அடித்தால் தந்தை வந்து அணைப்பார்,  தந்தை அடித்தால்  தாய் வந்து அணைப்பாள் , எனக்கு தந்தையும் நீ தான் தாயும்  நீ தான்.  சகலமும் நீ தானே.  இதுவரை என்னை  வெளுத்து வாங்கி விட்டாய்.   போதும் போதும்,  இனி  தாள முடியாது,  அடிக்கிற கை தானே அணைக்கும். வா வந்து என்னை தடுத்தாட் கொண்டு  அணைத்து   அருள் புரிவாய்,  என உருகுகிறார்.

Sunday, October 23, 2022

CHIDAMBARAM NATARAJAA

 


நடராஜா....     நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு அற்புத  பழம் பாடல்  இன்று கேட்டேன். ஆஹா யதுகுல காம்போதி எனும்  மனதை மயிலிறகால்  வருடும் இனியும் ராகத்தில் ஒரு சிவ பக்தன்  மூடிய  தனது கண் திரையில் பளிச்சென்று  கால் தண்டை,  சதங்கை, சிலம்பொலிக்க  சிதம்பரத்தில்  ஆடலரசன் நடராஜன் ஆடிய காட்சியை கண்டு அப்படியே எழுத்தில் படம் பிடித்த அருமையை  ஒரு  தேவ கான  இசையில் ரசித்தேன். அதைக்  கொஞ்சம் சொல்கிறேன்.

கர்நாடக  கச்சேரிகளில் அபூர்வமாக பாடப்படும் பாடல் இது.  அதை  எழுதியவரை  தமிழுலகம் நினைவில் கொள்ளாததால் அநேகர்  மாரிமுத்தா பிள்ளையை அறிய வாய்ப்பில்லை.

மாரிமுத்தாபிள்ளை சிதம்பரம் நடராஜா மேல் பல  கிருதிகளை  இயற்றியுள்ளார். தெலுங்கில் தியாகராஜர்.
கன்னடத்தில் புரந்தர தாசர் போல் தமிழிலும்  சில அற்புத  கவிராயர் இருந்திருக்கிறார்கள்.  மூன்று பேர் நினைவுக்கு வருகிறார்கள். அதில்  ரெண்டு பேர் சம காலத்தவர் கள்.  மாரிமுத்தாபிள்ளையும் அருணாசலக் கவிராயரும்  தான்  அது.

மாரிமுத்தாபிள்ளை கி.பி. 1712 ஆம் ஆண்டு தில்லைவிடங்கன் என்னும் ஊரில் பிறந்தார். சைவ வேளாளர் குலம்.  தந்தையார்  தெய்வப் பெருமாள் பிள்ளை. சிறுவயதில் தமிழ்க் கல்வியும் சமயக் கல்வியும் முறையாகப் பெற்றதுடன் சமய தீட்சையும் பெற்றவர். இசையில் சிறந்த பயிற்சியும் தேர்ச்சியும் கொண்டு  புலமைகள் அனைத்தும் ஒருங்கே  அவரை சென்றடைந்தது. இயல்பாகவே  பரமேஸ்வரன் போல் பல கீர்த்தனைகள் இயற்றினார்.

மாரிமுத்தாபிள்ளையின் மூத்த மகன் ஒரு தடவை மதிமயக்கத்தால் தன் நினைவிழந்தான். இதைக் கண்டு வருந்திய  மாரிமுத்தாபிள்ளை  "புலியூர் வெண்பா" என்னும் நூலைப் பாடினார். அதைத் தொடர்ந்து பல நூல்களும் கீர்த்தனைகளும் வெளிப்பட்டன. . தமது 75 வது வயதில் கி.பி.1787ஆம் ஆண்டு பிள்ளை காலமானார்.

மாரிமுத்தாபிள்ளை  எழுகூதியவற்றில் சில: புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதி மூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு தவிர  25 கீர்த்தனைகள் .

தில்லை நடராசப் பெருமான் மேல்   பிள்ளை  இயற்றிய  ''நிந்தாஸ்துதி கீர்த்தனைகள்" பிரபலமானவை. அதிலொன்று தான்  காலைத்தூக்கி நின்று ....எனும் முதல் பாராவில் நான் சொன்ன யதுகுல காம்போதி கீர்த்தனை.  அவர் கண்ட காட்சி கண்முன்னால் தெரியும்: 

சிதம்பரத்தில்  ஆனந்தக்  கூத்தன் நடராஜன் ஆடுகிறான். வலதுகாலை தரையில் ஊன்றி இடது பாதம் தூக்கி  ஆடுகிறான்.   ரொம்ப பயிற்சி இருந்தால் தான் நிலையாக இதை ஆட முடியும். அவன் ஆடலரசன் . அவனால் முடியும். அண்ட சராசர அசைவு அவனால் நடைபெறுகிறது.  '' நான் அசைந்தால் அசையும்  உலகமெல்லாமே ...' என்று திருவிளையாடலில் TMS   பாடியதும்   சிவாஜி கணேசன் பெரிய விழிகளை  உருட்டி  அதை  வெள்ளித்திரை முழுதும் பெரிதாக  காட்டியது  நினைவுக்கு வருகிறது. '.  சிவனின்  ஆட்டம் நின்று விட்டால் அண்டமும் பிண்டமும் அகில சராசரமும்  நின்று விடும்.எனவே  நடராஜந்தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கிறான். 

''ஐயா,  இடது பதம் தூக்கி ஆடும் தெய்வமே உமது அருள் நிரம்பிய  கருணைக்கரத்தால் என்னையும் கொஞ்சம் தூக்கி விடக்கூடாதா?    நீர்  பெற்ற  உமது  இளைய பிள்ளை  வேலாண்டி, வேலைத்தூக்கி  அவுணரைக் கொன்று அன்பரை ஆதரிப்பவன் ஆயிற்றே.  இந்த பொன்னம்பலம்  சலங் சலங் என்று உமது தண்டைக் கால் ஒலியால்  மனதை கொள்ளை கொண்டு எங்கும் ஞானஒளி வீசுகிறதே .  நீர் காலை மட்டுமா  தூக்குகிறீர்.  நீர் தூக்கு தூக்கி.   ஒரு சிவந்த கரத்தில்  மான்,ஒருகரத்தில்  மழு, இது போதாதென்று உம்மோடு சேர்த்து   உண்மை என்ற ஒரு பெண்ணையும் பாதி உடம்பில் தூக்கிக்கொண்டு ஆடுகிறீர்.  தலையிலும்  கங்கை என்று ஒரு பெண்.  ஒளி மிகுந்த சந்திரனைப் பிடித்தும் தலையில் செருகிக்கொண்டு அவனையும் தூக்கி க்கொண்டு நிற்கிறீர்கள்.  என்ன அழகு அந்த பிரச்சந்திரன் சிரத்தில்.  சந்திரசேகரா, உமது தலை எங்கே கால் எங்கே  என்று ஓடி ஓடி தேடி தேடி   காணமுடியாமல்,  பிரம்மாவும் விஷ்ணுவும் களைத்து நிற்கிறார்களே . எங்கிருந்து பிடித்தீர் இந்த நந்தி தேவனை?  உமது தாண்டவத்துக்கு ஏற்ப  தாளம்  அற்புதமாக வாசிக்கிறாரே. கலகம் செய்யும் நாரதரும் அதை மறந்து  மஹதி  யாழ் வாசித்து உமது ஆட்டத்துக்கு நந்தியின் தாளத்துக்கு  இசை கூட்டுகிறாரே. பிரமன்  தோம் தோம் என்று இசைத்து ஆடுகிறான். 
எல்லாம் தூக்கிக்கொண்டு நிற்கும்   உமது காலைத் தூக்கிக் கொண்டு முயலகன் நகரமுடியாமல்  படுத்துக்க கிடக்கிறான்.
 இது தான் அந்த பாட்டு.  M S  S  அற்புதமாக இதை பாடி இருக்கிறார் கேளுங்கள்   https://youtu.be/aS7T7c_PGKQ


ராகம் : யதுகுலகாம்போதி தாளம் : ஆதி
பல்லவி
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - என்னைக்
கைதூக்கியாள் தெய்வமே

பல்லவி
காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்னைக்                                                                        
கை தூக்கியாள் தெய்வமே                                                                
அனுபல்லவி
வேலைத்  தூக்கும் பிள்ளை தனைப்  பெற்ற தெய்வமே                                
மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு                    (காலை)
சரணம்1
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி                                                        
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையைத் திங்களை தரித்த சடைமேல் தூக்கி                                                              
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத                          (காலை)
சரணம்2
நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்றயன் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க                      (காலை)

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...