ஹல்லோ.......நான் யார்? J K SIVAN
மணி என்ன காலை ஐந்தா ஆறா? நான் எப்படி உயரே .? ..... எனக்கு இன்னும் விடியவில்லையா? தூக்கமும் இல்லை விழிப்பும் இல்லையா? குளிர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. மகிழ மரத்திலிருந்து கம்மென்று வாசனை காற்றோடு கலந்து என்னை எங்கேயோ கொண்டு போகிறது. நான் எங்கே இருக்கிறேன். எப்படி வாய் ஓயாமல் சில பேர் தெரியாத பறவைகள் அவ்வளவு அழகாக ஸ்ருதியோடு, ரம்மியமாக பாடுகிறது.
ஆமாம் நான் எங்கே இப்போது? ஆகாயத்தில் பறந்து கொண்டா?. என் வழக்கமான அடுக்கு மாடி ஒன்றில் முதல் மாடி, ஒரு சின்ன புறா கூண்டிலா? 2BRBHK எல்லாமே சேர்ந்து 700 சதுர அடிக்குள்.
'சொத்'' என்று என்மீது பால்கனி வழியாக வந்து விழுந்த காலை பத்திரிகையை எடுத்து ஆவலாக பார்க்க ஆசை.
நேற்று எத்தனை எங்கே எவரை தொற்றிக்கொண்டது. உலகளவில் எவ்வளவு கேஸ்? எல்லாவற்றிலும் போல் இதிலும் அமெரிக்கா முதலிடமா? இப்போது எங்கே யார் கொலை? பேங்க் கொள்ளை, வேகமாக வண்டி ஒட்டி மோதல், சினிமா கொட்டகையில் பெண் மீது காதல் ....ஹோட்டலில் கும்பல்,கல்யாணம், பார்ட்டி.... மாலில் பிக் பாக்கெட். செயின் பறித்து ....ஓட்டம் ...இதெல்லாம் சேதிகள் இல்லை...செயதித்தாள் துரும்பாக இளைத்து விட்டதே? தெரு முனை பொதுக் கூட்டத்தில் கெட்ட வார்த்தை பேச ஆளில்லையா, கேட்க எவருமில்லையா ? இதெல்லாம் தான் அந்த பேப்பரில் வழக்கமாக வரும்.
ஆனால் இன்று .... ஐயோ !!..
“அட, இதென்ன ஆச்சர்யம்? எதற்கு நான் சிரித்துகொண்டிருக்கும்போட்டோ??? (மைசூரில் பல வருஷங் களுக்கு முன்னே முரளியோடு போன போது- என் கல்யாணத்துக்கு முன்னால் - சேகருடைய ஜானவாச கோட்டை கடன் வாங்கிபோட்டுகொண்டு நான்- ) இந்த போட்டோ தான் என் பர்சில் நான் எப்போதும் வைத்துக் கொண்டிருப்பது.
''ஐயோ ... இது என்ன என் படத்தின் கீழே ??
" தோற்றம் - மறைவு'' தேதிகளோடு நானா?"
இரவு படுக்கப் போகுமுன் மார்பில் தாங்க முடியாத வலி இருந்ததே.! ஆஸ்பத்திரிக்கு தூக்கி போகபட்டேனா . அங்கு அசந்து தூங்கிவிட்டேனா?
பொழுது விடிந்து காலை பத்து மணியும் ஆகிவிட்டது. ஏன் காபி இன்னும் கொடுக்க வில்லை?
ஆபிசில் டீம் ஹெட் நரஹரி ராவ், இன்று என்னை காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சப் போகிறான்.
ஏன் இங்கே யாருமே காணோம்?
எதுக்காக ஹால் தாண்டி என் அறையின் வெளியே வாசலில் சத்தம்??.
அங்கே நிறைய பேர் இருக்கிறார்களே. ஏன் அழுகிறார்கள்? ஏன் நான் இங்கே வந்து தரையில் படுத்து கொண்டிருக் கிறேன் ?
யோவ்.! என்னய்யா நடக்குது? ஏன் என்னை ஒத்தருமே பார்க்கவில்லை???--- என்னைப்பற்றி என்னென்னமோ பேசுகிறார்களே.
நான் கத்தினேன்.
எல்லாரும் என் உடம்பையே ஏன் இப்படிபார்க்கிறார்கள்? ஒருவேளை நான் செத்து விட்டேனோ??? எங்கே என் மனைவி கமலா? பசங்க, நண்பர்கள் எல்லாம் கூட எங்கே தொலைந்தார்கள் ? இதோ இருக்காளே அவள் அடுத்த ரூம்லே - அது சரி ஏன் அவங்களும் அழறாங்க? என் மாமியார் காவேரி கண்ணிலே எதுக்கு இன்னொரு காவேரி? “
”ஏய் கமலா, அடி அழகி!! என் உலகமே நீதானே!!!. நான் கத்தறது ஏன் அவங்க யாருமே கேக்க மாட்டேங்
கிறாங்க? உங்களை விட்டு நான் எங்கே எப்படி போகமுடியும்.??
இதோ என் பால்ய சிநேகிதன் சங்கரன், இவன் எங்க இங்கே வந்தான்? டேய் !!ஸ்கூலிலே கணக்கு வாத்யார் பார்க்காமே ஒண்ணா சிகரெட் பிடிச்சது மறந்துட்டியா? ---
மாதவன் - என் மச்சினன் இப்போ எதுக்கு இங்கே வரான்??.போன மாதம் 7ம் தேதி என் கிட்ட வாங்கின கடன் ஆயிரம் ரூபாய் திருப்பி தருவதாக எல்லா சாமி மேலும் சத்யம் செய்துவிட்டு காணாம போனவன் ஆச்சே ?
ஒரு நிமிஷம். .சைலன்ஸ்.....எல்லாருமே கேளுங்கோ, நான் உங்களுக்கு எத்தனையோ கெடுதல் செய்திருக் கேன். கோவபட்டிருக்கேன். மனசை ஓடைச்சிருக்கேன் .எல்லாத்துக்கும் பெரிய " சாரி" சாரி சாரி - நான் உரக்க கத்தறது ஏன் உங்க ஒருத்தர் காதிலேயும் விழலை. திடீர்னு நீங்க எல்லாருமே செவிடா? நான் உங்க முன்னாலே இப்படி கதறுகிறேன்-- ஒருஜீவனும் என்னை பாக்காமே ஏன் உடம்பையே ஏன் பாக்கறீங்க.?நிஜமாவே நான் இல்லையா? போய்ட்டேனா ? என்னுடைய உடம்பை நான் கிள்ளி பாக்கறேன்.
கடவுளே ப்ளீஸ் என்னை வுட்டுடு. கொஞ்ச நாள் மறுபடியும் கொடேன். நான் பண்ண தப்பையெல்லாம் அழிச்சுட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு என் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் பக்கத்துக்கு வீட்டு பார்த்தசாரதி குடும்பம் எல்லாத்து கிட்டையும் நல்ல பேர் வாங்கணும். இதோ என் கமலா -- அடியே, நான் எங்கும் போகல்லேடி இங்கேயே உன் முன்னாலேயே இருக்கேனே. நான் அடிக்கடி சொல்வேனே " " உலகத்துக்கு நீ ஒருத்தியாகஇறந்தாலும் எனக்கு நீதான் அந்த உலகமே?ன்னு " இந்த டயலாக் காது புளிச்சுப்போச்சு என்று சொல்வியே.- மறந்துட்டியா? -- எதுக்கு குடுமி வச்ச இத்தனை வாத்தியார்கள் கூட்டமா இங்கே ஏன்?.. ரெண்டாம் நாள், பத்தாம் நாள், பண்ணீரெண்டு.... என்ன பேச்சு இது.. .காசு பத்தி ஏதோ பேசறாளே.
''கடவுளே, கடவுளே ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு இன்னுமொரு சான்ஸ் குடு . இந்த தடவை எந்த தப்பும் பண்ண மாட்டேன் எல்லார் கிட்டேயும் அன்பாக நடப்பேன் ப்ளீஸ்''
நான் உரக்க கத்தினேன். !!!
”ஏன் தூக்கத்திலே இப்படி கத்தறீங்க? எதாவது கனவா? ஏன் உங்க உடம்பெல்லாம் தொப்பமா வேர்த்து விட்டிருக்கு - நடுங்குது ?" -- கமலா என்னை எழுப்பினாள்.
எனக்கு பேச்சு வரலை.
கமலாவை இருக்க கட்டிகொண்டேன். இனிமேஉன்கிட்ட நான் கோவமா பேசவே மாட்டேன். ஐ லவ் யு ? கடவுளே உனக்கு நன்றி எப்படி சொல்வேன். இனி என் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷமும் அன்பிலும் பரோபகாரதிலும் தான். இது நிச்சயம் –--இது என் புது வாழ்வு.
எதிர் சுவற்றில் அப்பா சுப்ரமணியின் படம்.:
ரொம்ப சாரி அப்பா நீ வச்ச பேரு ரொம்ப கரக்டு - நான் இத்தனை நாள் தண்டம் தான். இனிமே பாரு நான் கோதண்டம். !!!!
ராமர் கை வில்லு மாதிரியே நல்ல காரியம் செய்து நல்ல பேர் எடுப்பேன். ஒரு கனவு என்னை அடியோடு மாற்றி விட்டதே.!!! நான் யார்? அப்போ யார்? இப்போ யார்?
பகவான் ஸ்ரீ ரமணர் மரண அனுபவத்தை உயிரோடு சிறுவயதிலேயே பெற்றவர் அது அவரை ''நான் யார்'' கேட்க வைத்து அந்த கேள்விக்கு இன்னும் நாமெல்லாம் பதில் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்ன கற்பனைக் கதை நம்மை இன்னும் கொஞ்சம் நன்றாக வாழ்க்கையின் அநித்தியத்தை உணர வைத்தால் உபயோகப்படாதா.?
No comments:
Post a Comment