காலபைரவாஷ்டகம் J K SIVAN
ஆதி சங்கரர்
கால பைரவர் முக்தி அருள்பவர்.
இந்த பதிவோடு ஆதி சங்கரர் இயற்றிய கால பைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களையும் படித்து கொஞ்சம் புரிந்து கொண்டோம். என்னாலியன்றதை நான் புரிந்து கொண்டதை எடுத்து சொல்ல முடிந்தால் அது பரமேஸ்வரன் க்ருபை என்று நம்புகிறேன். தவறுகள் இருந்தால் அது அத்தனையும் என் பாபமூட்டையை இன்னும் சுமக்கமுடியாத அளவு பெரிதாக்கி பளுவாக்கும் .
நான் சாதா சிவன். அவன் சதாசிவன். கால பைரவாஷ்டகம் முடிவடைந்தாலும் ஆதி சங்கரரின் எழுத்தில், வாக் வன்மையில் இந்த ஸ்லோக நாயகன், லோக நாயகன் சர்வேஸ்வரனை தொடர்ந்து பாடும் எண்ணற்ற எத்தனையோ ஸ்லோகங்களையும் காண முயல்வோம்.
பொருளைத் தேடும் நாம் அருளைத்தேட அவகாசம் இல்லை என்று இருப்பதால் அவ்வுலகம் நிச்சயம் இல்லை. அன்பில்லாத இடத்தில் சிவம் இல்லை. அவன் அருளாலே தான் அவன் தாள் வணங்க முடியும். நம்மை மற்றதில், மற்றோரில், காணும் பயிற்சி தான் பூரண அன்பு. அப்பாலுக்கு அப்பால் சிந்தனை போக வேண்டுமானால் உள்ளே ஆழமாக போகவேண்டும். அது ஆழ்கடல். வெளியே காணப்படும் சமுத்ரங்களைஎல்லாம் விட ஆழமானது. பல ஜன்மங்களையும் தாண்டி உள்ளடக்கியது. அப்படி உள்வாங்கி நிமிர்ந்தவர்களின் நிலையே சமாதி நிலை. இத்தகைய யோகிகளால் மட்டுமே விழிப்பு, தூக்கம், ஆழ்ந்த உறக்கம் நிலைகளை கடந்து துரீயம் என்கிற நான்காவது விசேஷ நிலை அடைய முடியும். இதில் கடந்த, நிகழ், எதிர் கால (முக்கால) அனுபவமும் எளிதில் அறிவார்கள்.
சிவராத்திரி கண் விழிப்பு வ்ரதத்தால் நான்கு கால (3மணி நேரம் x 4) இரவு 12 மணி நேரத்தில் சித்தத்தை சிவன் பாலே வைத்தவர்க்கு திரி குணாதீதன் திரு மூர்த்தி கிருபையால் தமோ, ரஜோ குணங்கள் நீங்கி சத்வ குணம் பாலிக்கும்.
சிவன் அபிஷேகப்ரியன். வெறும் ஜலம். ரெண்டு வில்வ இலை. பஸ்மம் போதும்.
ரிஷி கேஷில் சிவானந்த ஆஸ்ரமத்தில் சென்று தரிசிக்கும் பாக்யம் வெகு காலம் முன்பு இளம் வயதில் கிட்டியபோது பக்தியை உணரும் பக்குவம் எனக்கு இல்லை. பின்னர் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.
அங்கே அனைவரும் சிவராத்திரி கொண்டாடுவது எப்படி தெரியுமா?. ஒரு ஸ்பூன் நீர் கூட பருகாது நாள் முழுதும் உபவாசம். லோக க்ஷேமத்துக்காக, உலக அமைதிக்காக, ஹோமம். நாள் முழுதும் ஓம் நமசிவாய பஞ்சாக்ஷர ஜபம். தியானம். பகல் இரவு நான்கு காலத்திலும் சிவன் சந்நிதியில் நாம ஜபம். அபிஷேகம். யார் யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு சன்யாச தீக்ஷை.
அடுத்ததாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் மிக விசாலமானது. புராதனமான புனிதமான அக்னி க்ஷேத்ரம். பஞ்சபூத ஸ்தலம். அந்த பிரம்மாண்ட ஆலயத்தில் நான்காவது பிரகாரத்தில் காலபைரவர் சந்நிதி இருக்கிறது. அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பாதுகாவல் இந்த காலபைரவரின் பொறுப்பு. அங்கே எப்போதும் மணியடிக்கும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த மணி ஓசை துர் தேவதைகளை விரட்டும் சக்தி வாய்ந்தது. பாபத்தை போக்கவல்லது என்பார்கள். வல்லாள மஹாராஜா கோபுரத்துக்கு தென் மேற்கில் ப்ரம்ம தீர்த்தத்தின் கரையில் வடகிழக்கில் இந்த கால பைரவர் சந்நிதி உள்ளது.
ஆரம்ப காலத்தில் ரெண்டாம் பிரகாரத்தில் பள்ளியறை அருகே இருந்த இந்த காலபைரவர் எப்படி நான்காம் பிரஹாரத்துக்கு சென்றார்?
ஒரு பக்தை தன்னுடைய குழந்தையோடு ஆலயத்தில் நுழைந்தவள் ரெண்டாம் பிரகாரத்தில் கால பைரவர் சந்நிதியில் குழந்தையை பிரிந்து வெளியே வந்துவிட்டாள் . குழந்தையை தேடி காலபைரவர் சந்நிதி சென்றபோது சந்நிதி மூடிவிட்டார்கள்.
''என் குழந்தை வேண்டுமே என்று கத்துகிறாள். ஒரு அசரீரி குரல் கேட்கிறது. ''திரும்பி போ, உன் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை, காலை சந்நிதி திறந்தபிறகு வந்து குழந்தையை ஜாக்கிரதையாக அழைத்துச் செல்''
''இல்லை, முடியாது என் குழந்தை இப்போதே வேண்டும் '' என்று அடம் பிடித்த தாய்க்கு கோபமாக காலபைரவர் குரல் கேட்டது. ''உன் குழந்தை இந்தா எடுத்துக் கொண்டு போ '' அதை தொடர்ந்து பொத்தென்று கை கால்கள் பிய்ந்து போன குழந்தையின் உடல் வெளியே எறியப்பட்டது. இதற்கு காரணம் காரியம் எதுவும் கேட்கவேண்டாம். காலபைரவர் மேல் நம்பிக்கை இல்லாத தாய் குழந்தையை இழந்தாள், ஏதோ முன்வினை பாப கர்மம் செய்த பலன் அடுத்த குழந்தை ஜென்மத்தில் காலபைரவரால் தண்டிக்கப்பட்டது என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இது நடந்ததாக அருணாச்சல ஆலய நூலில் இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு காலபைரவர் சந்நிதி வெளியே நாலாம் பிரஹாரத்துக்கு மாற்றப்பட்டதாம்.
உக்கிரமான காலபைரவருக்கு குளிர சந்தனம், பன்னீர், பால், இளநீர் பழரச அபிஷேகம் நடக்கிறது. புராண சித்திரங்கள் வண்ணத்தில் தீட்டப்பட்டு பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கிறது. பிரமன் ஐந்து தலைகளுடன், கர்வத்தால் சிவன் கோபத்தை சம்பாதித்துக் கொள்வது. சிவன் காலபைரவனை தோற்றுவிப்பது. காலபைரவர் பிரமனின் ஐந்தாவது தலையை கொய்வது போன்ற காட்சிகள்.
ஒரு எளிய பிரார்த்தனை :
''மகாதேவா, நானே நீ. என் மனமே பார்வதி. என் பிராணன் உன் கணங்கள். என்னுடம்பே உனது கைலாசம். என் ஒவ்வொரு செயலும் உன்னை வழிபடுதல். என் உறக்கமே சமாதி நிலை. என் நடை உன்னை வலம் வருதல். என் வார்த்தை உனக்குண்டான பிரார்த்தனை. எனவே எனது என்று ஒன்றில்லை அது உன்னைத்தவிர.''
கால பைரவேஸ்வர மகா பிரபு, நீ பூத நாயகன், கணேஸ்வரன், ஆத்மநாதன், காசி நாதன், பாப நாசன். புண்ய தாயகன். மார்க்க பந்து. ஆதி காரணன். சர்வ லோகேசன். எனக்கு சொல்லத்தெரியாத இன்னும் என்னவெல்லாமோ. உனக்கு நமஸ்காரங்கள்.
ஆதிசங்கரரின் காலபைரவ அஷ்டகத்தில் கடைசி எட்டாவது ஸ்லோகம்;
8. भूतसंघनायकं विशालकीर्तिदायकं
काशिवासलोकपुण्यपापशोधकं विभुम् ।
नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥८॥
काशिवासलोकपुण्यपापशोधकं विभुम् ।
नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥८॥
பூத சங்க நாயகம் விசால கீர்த்தி தாயகம்
காசி வாச லோக புண்ய பாப சோதகம் விபும்
நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிக்கப்புராதி நாத காலபைரவம் பஜே:
கால பைரவேஸ்வர மகா பிரபு, நீ சகல தேவைதைகள், பைசாசங்கள், பூதங்களுக்கும் நாயகன், கணேஸ்வரன், எங்கள் ஆத்மாவை அறியச் செய்து ஞானம் அளிக்கும் குருநாதன். காசியில் வாசம் செய்வோரின் பாப நாசன். புண்ய தாயகன். ஞான மார்க்க பந்து. ஆதி பிரபஞ்ச காரணன். சர்வ லோகேசன். காசி மாநகர் சிறக்கச்செய்யும் அதிபதியே , கால பைரவா எனக்கு சொல்லத்தெரியாத இன்னும் என்னவெல்லாமோ சக்தி கொண்ட காக்கும் தெய்வமே,. உனக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
9. कालभैरवाष्टकं पठंति ये मनोहरं
ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनम् ।
शोकमोहदैन्यलोभकोपतापनाशनं
प्रयान्ति कालभैरवांघ्रिसन्निधिं नरा ध्रुवम् ॥९॥
மனதை வருடும் காலபைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களும் ஞானம் தருபவை. நல்மார்க்கத்திற்கு வழி காட்டுபவை. புண்ய பலன் தருபவை. பாபங்களை, துன்பங்களை, வறுமையை, இச்சைகளை, கோபத்தை, தீர்ப்பவை. படிக்கும் நம்மை உயர்விப்பவை. शोकमोहदैन्यलोभकोपतापनाशनं
प्रयान्ति कालभैरवांघ्रिसन्निधिं नरा ध्रुवम् ॥९॥
மனதை கவரும் புண்ய க்ஷேத்ரபாலகன் காலபைரவர் தரிசனம் கடாக்ஷம் அருள்பவை என்கிற பல ஸ்ருதியோடு நிறைவு பெறுகிறது.
No comments:
Post a Comment