பேசும் தெய்வம் J K SIVAN
புஸ்தக வெளியீடு
மஹா பெரியவாளின் நிழலாக சில அணுக்கத் தொண்டர்கள் உண்டு. அவர்களை அருகில் வைத்துக் கொண்டு தான் பக்தர்களுக்கு தரிசனம் பிரசாதம் எல்லாம் தருவார். பக்தர்களை அணுகி அவர்கள் விஷயங்களை க்ரஹித்துக் கொண்டு சுருக்கமாக பெரியவாளுக்கு ஏற்றபடி சொல்வது, அவரது பதில்களை புரியும்படியாக பக்தர்களுக்கு எடுத்துச் சொல்வது ரொம்ப முக்கியமான விஷயம் அல்லவா?
பெரியவாளை நேருக்கு நேர் பார்க்கும் பக்தர்கள் பலருக்கு என்ன பேசுவது என்றே முடியாமல் போய்விடும். சொல்ல வந்த விஷயம், கேட்க வந்த விஷயம் சொல்லாமலே நேரம் ஓடிவிடும், சரியாக சொல்லமுடியாமல் திணறும். ஆகவே இந்த அரேஞ்ஜ்மென்ட் அற்புதமாக நடந்தது. அப்படி மஹா பெரியவர் கூட இருந்தவர் பட்டாபி என்று ஒருவர். அவர் சொன்னதாக ஒரு சம்பவம் படித்தேன். அதன் சாராம்சம்:
வழக்கமாக மஹா பெரியவா காஞ்சிபுர மடத்தில் பிக்ஷை பண்ணும் நேரம் நிச்சயமாக சொல்ல முடியாது. சில சமயம் பகல் ஒரு மணி ஆகலாம், சில நேரம் அது மதியம் ரெண்டு ரெண்டரை வரை கூட ஆகலாம். அப்படி பிக்ஷை ஆனவுடன் ஒரு அரை மணி, முக்கால்மணி நேரம் சிரம பரிகாரம் பண்ணிவிட்டு பக்தர்களை தரிசிக்க வந்துவிடுவார். ஒரு பக்தர் பெரிய வாளை சந்தித்த விஷயம் மட்டும் இந்த கட்டுரை.
பட்டாபி பக்தரை ''நீங்க யாரு?'' ன்னு கேட்டார். பக்தர் மஹா பெரியவா சந்நிதியில் பக்தியாலும் அளவு கடந்த மரியாதையாலும் பேசமுடியாமல் குழறினார். ஆகவே பட்டாபி அவரிடம் விஷயத்தை கிரஹித்தார்.
பக்தர் திருநெல்வேலி ஜில்லா இலஞ்சி கிராமத்தவர். 65 வயசு இருக்கலாம். இரண்டு சாகுபடி பண்ற அளவுக்கு நிலபுலங்கள் உள்ளவர். தமிழ் மேல அலாதிப் பிரியம், சம்ஸ்கிருதமும் அறிந்தவர்.
பகவத் கீதை, உபநிஷத், வேதம் இந்த மூன்றையும் ரொம்ப முக்கியமான '' பிரஸ்தான த்ரயம் '' என்கிறோம். ஆதி சங்கர பகவத்பாதர் இதற்கு பாஷ்யம் பண்ணியவர். நமது தி\ருநெல்வேலி பக்தர் ஆதி சங்கரரின் அத்வைதக் கருத்துக்களை கொண்ட அந்த பாஷ்யத்தை தமிழில் கவிதையாக எழுதி புத்தகமாக அச்சடித்து முதல் சில காப்பிகளை கையில் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.
ஆகவே பெரியவாளை நமஸ்காரம் பண்ணிட்டு ஓரமாக நின்று கொண்டு இந்தப் புஸ்தகத்தை பெரியவா முன் வைத்து
''ஐயா தான் இந்த புஸ்தகத்தை வெளியிடணுமுங்க'' என்கிறார்.
பெரியவா புஸ்தகத்தை எடுத்து புரட்டி பார்த்து விட்டு ஒருநொடியில் அதில் உள்ள விஷயத்தை கிரஹித்தார்.
''அவரை இங்கே என் முன்னாலே வரச்சொல்லுடா ''
பக்தர் கைகட்டிக்கொண்டு வந்து நின்றார்.
‘ஏ.சி. பண்ணின ஹால்ல பெரிய பெரிய மினிஸ்டர்ஸ் எல்லாரையும் கூப்புட்டுன்னா புஸ்தகத்தை வெளியிடணும்? எங்கிட்ட என்ன இருக்கு? அவர் கிட்ட சொல்லுடா பட்டாபி''
பக்தர் விடவில்லை
‘ ஐயா அதென்னங்க அப்படிச் சொல்லிட்டீங்க..! ஐயா கிட்ட தான் எல்லாம் இருக்கு. எனக்கு ஐயா என் இந்த புஸ்தகத்தை இப்போ வெளியிட்டாப் போதும் வேறெதுவும் வேண்டாம் ''
பெரியவா லேசா சிரிச்சுண்டார்.
''இந்த புஸ்தகத்தை என்ன பண்ணப் போறீங்க?
''எல்லா காப்பியையும் இங்கே மடத்துலே கொடுத்துட்டா, ஐயாவைப் பார்க்க வர்றவங்க வட்டத்துல… தெரிஞ்சவங்க கிட்ட கொடுக்கணும்னு ஆசை. அது தான் அச்சுப் போட்டேன்.''
''புஸ்தகத்துக்கு அப்போ விலை இல்லையா?''
''போடலை''
''புஸ்தகத்துக்கு விலைன்னு ஒண்ணு வைக்க வேணாமா? பத்து ரூபானு விலை வைச்சிடுங்கோ! ''
பக்தருக்கு பரம சந்தோஷம். பெரியவா இப்படி சொன்னா புஸ்தகத்தை அப்ரூவ் பண்ணி ஏத்துண்ட மாதிரிதானே'' என்கிற பூரிப்பு .
இன்னொரு நகலையும் எடுத்து மஹா பெரியவா திருப்பாதத்துல சமர்ப்பிச்சார்.
‘ஒரு பத்து ரூபா இருந்தா குடுடா பட்டாபி!’
பக்தர் இதைக்கேட்டு பதறினார்.
‘ஐயா கிட்டேர்ந்து பணம் வாங்கறதா? அது மகா பாபம். வேணாம்… வேணாம் ஐயா. பணம் எனக்கு வேணாம் ஐயா''
பெரியவா சிரித்துக்கொண்டே ‘பட்டாபி உங்கிட்டே ஏதுடா பணம்? அதுவும் உன்னண்டை போய்க் கேட்டேனே! நான் தானே உனக்கே சம்பளம் தர வேண்டியிருக்கு!’ -
மஹா பெரியவா சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவர் பார்வை அங்கிருந்த மற்றவர்கள் மேல் நகர்ந்தது. எதிரில் பொள்ளாச்சி ஜெயம்னு ஒரு மாமி கண்ணில் பட்டாள் . முக்கால் வாசி நாள் அந்த மாமி மடத்துலதான் இருப்பார்.
‘நான் தானே பத்து ரூபாய் தரதாக வார்த்தை கொடுத்தேன். நான் சொன்ன வார்த்தையை காப்பாத்த வேண்டாமா? நீ எனக்கு ஒரு பத்து ரூபா கொடு '' -- மாமியை பார்த்து தலை ஆட்டினார் பெரியவா.
மாமிக்கு ஸ்வர்கத்திற்கு போனமாதிரி சந்தோஷம். உடனே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து பவ்யமாக பெரியவா எதிரில் இருந்த தட்டில் வைத்தாள் . மஹா பெரியவா கேட்டு தான் கொடுப்பது எத்தனை பெரிய பாக்கியம்னு பூரிச்சுப் போயிட்டா மாமி. பட்
டாபி அந்த ரூபாயை தட்டோடு எடுத்து பெரியவாகிட்ட கொடுக்க… பெரியவா அந்த பத்து ரூபாயை திருநெல்வேலி பக்தர் கிட்டே தந்தார்.
டாபி அந்த ரூபாயை தட்டோடு எடுத்து பெரியவாகிட்ட கொடுக்க… பெரியவா அந்த பத்து ரூபாயை திருநெல்வேலி பக்தர் கிட்டே தந்தார்.
அவர் சாஷ்டாங்கமா விழுந்து பெரியவா ளை நமஸ்காரம் பண்ணினார். ரூபாயை வாங்கிக் கண்ல ஒத்திண்டார். அவர் முகம் முழுக்க சந்தோஷக்களை!
திருநெல்வேலி பக்தர் பண்ணியது ரொம்பப் பெரிய காரியம் உன்னதமான செயல். அத்தனை கர்ம சிரத்தையா அதைப் பண்ணி முடிச்சதோட இல்லாம அவ்வளவு தூரத்துலே இருக்கிற இலஞ்சி கிராமத்துலேருந்து பெரியவா கிட்ட காண்பிச்சு ஆசீர்வாதம் வாங்கணும்னு சிரமம் பாக்காம வந்திருக்கார்!
'ஐயாட்டதான் எல்லாம் இருக்கு'' என்பது எவ்வளவு வாஸ்தவம். ரொம்ப தெளிவா காஞ்சி மகானை நம்பி தேடி வந்தார்! ஒருவேளை அன்றைக்கு பெரியவாளைப் பார்க்க முடியாம போயிருந்தா அந்த பக்தர் மனசு எவ்வளவு கஷ்டப்பட் டிருக்கும்?!
ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை அப்படியே பாட்டா தமிழ்ல எழுதி புஸ்தகமா பண்ணி எடுத்துண்டு வந்தது மஹா பெரியவாளை ரொம்பவே மனசு நெகிழப் பண்ணிடுத்து. புஸ்தகத்தை இனாமா கொடுத்தா வாங்கிக்கிறவா அதைப் படிக்காம அலட்சியமா வைச்சுடுவானு பெரியவாளுக்குத் தோணியிருக்கணும். அதே நேரம் இலஞ்சி கிராமத் தாருக்கு பண நஷ்டமும் ஆயிடக்கூடாதுன்னு பெரியவாளுக்கு அக்கறை . எல்லாம் க்ஷண நேரத்தில். இது தான் மஹா பெரியவா. இல்லேன்னா அந்த பேர் கிடைக்குமா?
இலஞ்சி பக்தர் காமாக்ஷிஅம்பாள், ஏகாம்பரேஸ்வரர் கோயில் எல்லாம் போய் தரிசித்து விட்டு வந்தார்.
மறுநாள் மறுபடியும் மஹா பெரியவாளை தரிசனம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிண்டு இலஞ்சி கிராமத்துக்குக் திரும்பும்போது அவர் நடையிலும் முகத்திலும் தெரிஞ்சது பரிபூரணமான சந்தோஷம்!
No comments:
Post a Comment