ஸ்ரீ P.B . ஸ்ரீனிவாஸ் குரலை கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது .. A .M . ராஜா முடிசூடா மன்னனாக ஜெமினி கணேசனுக்கு திரைக் குரலாக ஒலித்ததை மாற்றி ஜெமினியின் பின்னணி குரலாக மாறியவர் PBS. ஒன்றா இரண்டா எத்தனை பாடல்கள், எத்தனை மொழிகளில். கர்நாடக இசையும் அறிந்தவர், மேல்நாட்டு சங்கீதம், வடக்கத்திய GAZAL சகலமும் தெரியும். நான் அவரை முதலில் தெரிந்துகொண்டது சைதாப்பேட்டையில் நூர்ஜஹான் தியேட்டரில் ஒரு காலத்தில் ஓடிய ஜாதகம் என்ற தமிழ் படத்தில், அதில் ஒரு வித்த்யாசமான குரல் என்னை கவர்ந்தது. அப்போது நான் 13-15 வயதிற்குள் இருந்ததால் அது அதிகம் பாதிக்கவில்லை. அடுத்தது நான் அவர் அடிமையானது அடுத்த வீட்டு பெண் படத்தை பார்த்தபோது. அது தி.நகர் ராஜகுமாரி டாக்கீஸில். அப்போது எனக்கு 18 வயது இருக்கும். அதில் இருந்து எங்கெங்கெல்லாம் அவர் கேட்டாலும் நின்று கேட்டு விட்டு தான் நகர்வேன். கூடவே அவர் பாட்டுகளை பாட பிடித்தது.
கொஞ்சம் ,கண்டசாலா, கொஞ்சம் AM ராஜா கொஞ்சம் தலத் மஹ்மூத் மிக்ஸ் பண்ணி கலவை தான் ஸ்ரீனிவாஸ்.
அடுத்தது நேரில் பார்த்தது CIT நகர் தி.நகரில். என் உறவினர் வீட்டுக்கு மூன்று வீடு தள்ளி. அப்போது மணமானவன். கப்பல் கம்பெனியில் உத்யோகம். .வீட்டு வாசலில் நின்று கொன்டு இருந்தவரை பார்த்து சிரித்தேன் . சிரித்து கையாட்டினார்.
''யாரு நீங்கோ?' தெலுங்கு கலந்த தமிழ் ஜாடை. '
''மூணாவது வீடு.''
''உள்ளே வாங்கோ....
''காப்பி டீ மோர் ஏதாவது சாப்பிடுறீங்களா?..''
''இல்லே உங்கள பார்த்த திருப்தி வயிறு மனசு எல்லாம் .நிறைஞ்சு போச்சு. ''
அதற்கப்புறம் அவரை நான் பேசவிடவில்லை. நான் கேட்ட பாடல் பெயர்கள் எல்லாம் சொல்லினேன். அவர், கண்டசாலா, பாலமுரளி, மற்றும் ஒரிசா காரர் பாணிக்ரஹி எல்லோரும் சேர்ந்து பாடிய ''மதி சாரதாம் தேவி'' பாட்டு பற்றி சொன்னதும் ரொம்ப குஷி . ''பொன்னென்பேன் சிறு பூ வென்பேன்'' ரெண்டு அடி பாடி காட்டினார்.
அடுத்தது சில வருஷங்கள் கழித்து டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஒரு ஓரமாக ஒரு மேஜையில் ஏதோ டைரியில் எழுதிக்கொண்டு இருந்தார். அருகே சென்று வணங்கினேன். புரிந்து கொண்டார். பாக்கெட்டில் பல கலர் பேனாக்கள்.
என்ன எழுதுகிறீர்கள் ?
ஒரு உருது கவிதை....''என்கிறார்.
இன்றைய விஷயத்துக்கு வருவோம். பக்த கும்பரா என்கிற கன்னட படம். பாண்டுரங்க பக்தர்களில் முக்கியமான ஒருவர் கோரா கும்பர். மண்பாண்டம் செய்யும் குயவர். கையும் காலும் தான் மண்ணில் இருந்ததே தவிர மனமெல்லாம் கண்ணனாகிய பாண்டுரங்க விட்டலினிடம்.
ஒரு நாள் மண் பிசைந்து குழியில் மிதித்து குழைவாக்குகிறார். மனம் விட்டலின் மேல். அவர் மனைவி ஒன்று ஒன்றரை வயது குழந்தை தூளியில் தூங்குகிறது. குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று அவள் எங்கோ அவசரமாக போகிறாள். விட்டலா விட்டலா என்று பாடிக்கொண்டே குழியில் மண்ணை மிதித்துக்கொண்டு கண் மூடி விட்டலனை நினைத்து ஆடுகிறார். குழந்தை தோழியை விட்டு இறங்கி தவழ்ந்து தாயைத் தேடி, காணாமல், தந்தை வாசலில் குழியில் ஆடுவதை பார்த்து நெருங்கி குழியில் இறங்குகிறது. களிமண்ணோடு சேர்த்து அதையும் மிதித்து குழந்தை மறைகிறது. கதை நீள்கிறது. சொல்ல இங்கே நேரமோ இடமோ இல்லை. என்னுடைய ''தெவிட்டாத விட்டலன்'' புத்தகத்தை படியுங்கள் . விறுவிறுப்பாக 100 .விட்டலன் கதைகள். ஆங்கிலத்தில் VITOBA THE NECTAR ....எழுதி இருக்கிறேன். அதிலும் ஆங்கிலத்தில் இதே 100 கதைகள்.
இந்த கோரா கும்பர் கதை பக்த கும்பரா என்று சக்கை போடு போட்டது கன்னடத்தில். சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கோரா கும்பர். PBS பாடல்கள் சூப்பர் ஹீட் . அதில் ஒரு பாடலை நான் இன்று பாடிப்பார்த்தேன்.
No comments:
Post a Comment