பெரிய கோவில் ரஹஸ்யங்கள்... J K SIVAN .
நமது ஆட்கள் ஸ்பெசிபிகேஷன் specification அனுப்பி, டெண்டர் எடுத்து கட்டின பாலம் ஐம்பது வருஷங்க ளுக்குள் அல்பாயுசாக விரிசல் விட்டு உடைகிறதே. சிமெண்ட், காங்கிறீட் தெரியாத சுண்ணாம்பு களிமண் மட்டுமே கலந்து கட்டிய காரைக் கோவில்கள், கற்கோயில்கள் ஆயிரம் வருஷமாக கூட அப்படியே நேற்று கட்டினது போல் நிற்கிறதே. தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் கோவிலைத்தான் சொல்கிறேன்.
ராஜராஜன் காட்டியது வெறும் சிவன் கோயில் மட்டுமல்ல. சோழ சாம்ராஜ்ய முக்ய நகரங்களுடன் தொடர்பு கொள்ள ரகசிய சுரங்க வழிகள் கொண்ட கோட்டை. கோயிலை சுற்றி ஆறுகள் அகழிபோல் என்றும் நீரோடு ஆழமாக அகலமாக இருப்பதால் எதிரிகள் நெருங்க வழியில்லை. நிறைய முதலைகள் அகழிகளில் இறங்குவோரை சாப்பிட அலைந்தன.
பெரிய கற்பாறைகள் ஒன்றோடொன்று உள்ளே சேர்க்கப்பட்டு , செருகப்பட்டு, சங்கிலி போல் இணைந்திருக்கிறது. கோவில் விமானம், மற்றும் கட்டிடம் துளியும் அசைந்து கொடுக்க வில்லை யே. எத்தனை பேரிடிகள், மழைகள், வெள்ளங்கள் , மின்னல்கள் கொளுத்தும் வெயில் எல்லாம் பார்த்திருக்கிறது. 13 நிலை கோபுரம். நிழல் கூட கீழே விழாது. ரெட்டை அடுக்கு விமானம். செங்கல் சுண்ணாம்பு, களிமண் சுவர்கள். கருங்கல் தூண்கள் உத்தரம், ஒன்றை ஒன்று தாங்கி நிலை குலையாமல் நிற்கிறது.இரு சுவர்களுக்கு இடையே ப்ரதக்ஷிணம் வரலாம். கோவில் விமானம் எத்தனை பூகம்பங்களை பார்த்திருக்கிறது தெரியுமா. ஆச்சரியப்படுவீர்கள். 1807, 1816, 1866, 1823, 1864 1900.... அதற்கு முன்னால் எத்தனையோ யாருக்கு தெரியும்? இத்தாலியில் ஒரு கோபுரம் கட்டினாலும் கட்டினான். பொதுக்கென்று ஒருபக்கம் சாய்ந்து விட்டது. டக்கென்று அதை உலக அதிசயமாக்கி விட்டார்கள். இந்த பெரிய கோவில் கண்ணுக்கே தெரியவில்லையா உலக அதிசயமாக்க? நம் ஆட்கள் விழித்துக் கொள்ளவேண்டும்.
விமானத்திற்கு அடியில் மூல தளத்தில் ராஜராஜன் கல்வெட்டில் நான் தான் இந்த கல் கோயில் எழுப்பினேன், நான், எனது அக்கா, என் ராணிகள் கொடுத்த தானங்களை சொல்கிறேன் என்று நீள பட்டியல் கொடுக்கிறான்.
நான் ஒவ்வொரு முறையும் அந்த கோவிலில் பிரகதீஸ்வரர் முன்னால் நிற்கும்போது எனக்கு புல்லரிக்கும் , ஒரு அதிர்வு உண்டாகும். எத்தனை மகாராஜாக்கள், மஹான்கள், பண்டிதர்கள், சித்தர்கள் எல்லாம் அங்கே எனக்கு முன்பு நின்ற இடம் இந்த தஞ்சை ராஜராஜேஸ்வரம் எனும் பெரிய கோவில்!! இந்த ஆலயம் ஒரு அற்புத அமைப்பு கொண்டது. தமிழை உருவாக்கப்படுத்தினமாதி ரி அமைந்திருக்கிறதே தெரியுமா?
கோபுரம் உயரம் 216 அடிகள். தமிழில் உயிர் மெய் எழுத்துக்கள் 216 தானே.
உள்ளே ப்ரஹதீஸ்வரர் லிங்கத்தின் உயரம் என்ன தெரியுமா ? 12 அடி . 12 உயிர் எழுத்துக்கள்.
சிவலிங்கத்தின் ஆவுடையார் பீடம் உயரம் எவ்வளவு தெரியுமா? 18 அடி . மெய்யெழுத்துகள் 18 தானே.
ராஜராஜன் இந்த கோவிலை பாதுகாக்க அன்றாட வேலைகளை கவனிக்க எவ்வளவு பேரை வேலைக்கு வைத்தான் தெரியுமா 1000 ஆசாமிகளை. அதில் கோவில் நர்த்தகிகள் 400 பேர் குடும்பத்தோடு.
ராஜராஜன் கட்டிய எத்தனையோ கோவில்களில் பிரதானமானதும் உலகப்புகழ் பெற்றதும் இந்த ஆச்சர்யமான தெய்வீக படைப்பு. 10ம் நூற்றாண்டு கோவில், சாமா வர்மா என்பவன் தான் பிரதம சிற்பி. கோவிலுக்கு வடிவம் தந்தவன். எந்தப் போரிலும் வெற்றி கண்ட ஒரே தமிழ் அரசன் ராஜராஜன். மும்முடி சோழன். இலங்கைப் போரில் வெற்றி பெற்று, அங்கு கைதான சிறைக்கைதிகள், அடிமைகளை கொண்டு எழுப்பின கோவில். அவர்களை கருத்தட்டான் குடி , இப்போது கரந்தை எனும் ஊரில் வெண்ணாற்றங் கரையில் தங்க வைத்து வேலை வாங்கினான்.
அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை ராஜேந்திர சோழன். அப்பாவைப் போலவே தானும் ஒரு அருமையான கோவிலை நமக்கு தந்தவன். கங்கை கொண்டசோழ புரத்தில் இன்னொரு ப்ரஹதீஸ்வரர். ஒரு சிவராத்திரியில் அங்கே நள்ளிரவு அன்னாபிஷேகம் பார்த்தது மனதில் படமாக இடம் பிடித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற அரசர்கள் அலெக்சாண்டர், அசோகர், வரிசையில் ராஜராஜனும் ஒரு அமரன்.
சோழர்கள் தமிழினம் இல்லை. நாகர்கள், வடகிழக்கிலிருந்து வந்தவர்கள், வங்காளிகள், சாளுக்கியர்கள் என்று எல்லாம் கூட சொல்கிறார்கள். வங்காளத்திலிருந்து வந்ததால் தான் அவர்களுக்கு புலிக்கொடி. தமிழகத்தில் புலி ஏது என்பார்கள்.
பழைய சோழ கல்வெட்டுகள் ப்ராக்ரித மொழியில் இருப்பதால் சோழர்கள் தமிழர் அல்லர் என்றும் ஒரு கூற்று. ராஜராஜனின் இயற்பெயர் பெயர் அருள்மொழி வர்மன், சிவபாத சேகரன். அவனது அண்ணன் ஆதித்ய கரிகாலன் சேர நாட்டு சதிகாரர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டதால் சேரநாட்டின் மேல் படையெடுத்தான். வென்றான். காந்தளூர் சாலை போர் வெற்றி சரித்ரம் வாய்ந்தது. ப்ரஹதீஸ்வரர் என்கிற பெயர் மராத்தியர்களால் பெற்றது ஆகும். தஞ்சாவூர் கோவில் சிவனுக்கு பெயர் பெருவுடையார்.
தஞ்சை பெரிய கோவில் கட்ட 130,000 டன் எடை கொண்ட கருங்கல் பாறைகள் தேவைப்பட்டது. ஆலயத்திலிருந்து பாதாள சுரங்க வழிகள் ராஜாவின் அந்தப்புரம் வரை செல்லுகிறதாம். கோபுரம் உச்சியில் உள்ள விமானம் ஒரே கல்லில் ஆனது அதன் எடை 80 டன் . எவ்வாறு அவ்வளவு எடையுள்ள கல் மேலே விமானத்துக்கு 200 அடி உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது? ஆச்சர்யமான கேள்விக்குறி? சாரம் கட்டி , யானைகளை உபயோகித்து, மந்திரங்களால் கல்லின் எடை தக்கையாக குறைந்து என்றெல்லாம் பேச்சு.
இந்த ஆச்சர்யம் தீர்வதற்கு முன் இன்னொன்று. ஆமாம், தஞ்சாவூருக்கு 100 கி.மீ. தூரத்துக்கு எங்குமே கிரானைட் கல் கண்ணில் தென்படவில்லையே, எங்கிருந்து 1,30,000 டன் கிரானைட் கல் பாறைகள் இங்கே வந்தது? ராஜராஜா என்னென்ன ரகசியங்கள் உன்னிடம் இருக்கிறது சொல்லப்பா? அதிலும் இந்த ப்ரஹதீஸ்வரரின் நந்திக்கான ஒரு சிங்கிள் SINGLE பெரிய பாறை எப்படி அங்கே வந்தது? கல்லை காளை யாக்கிய உன் சிற்பி யாரப்பா?
அதெப்படி ஆயிரம் வருஷமாகியும் உன் கோவிலில் உள்ள வண்ண ஓவியங்கள் அப்படியே வண்ணம் கரையாமல், குறையாமல், அப்படியே இருக்கிறது? எத்தனை ஆபத்துக்களை தாண்டி ஜீவித்திருக்கிறது?
நாட்டிய, நடன, பாரத சாஸ்திரத்தின் 108 கரணங்களில் 81 பக்காவாக நாட்ய தோற்றங்களில் சிலையாக செதுக்கப்பட்டது எப்படி? அவ்வளவு நாட்ய ஞானமா? யார் ஐடியா கொடுத்தது, நீயா? அப்படியென்றால் ஆச்சர்யமே இல்லை. அத்தனையும் அடவு பிடித்தது ந்ருத்யம் செய்த நர்த்தகிகள்
உன்னிடம் இருந்தார்களா? கோவிலில் அடிக்கடி ஆடுவார்களாமே? . எல்லா நிகழ்ச்சிகளும் தஞ்சாவூர் காரர்களுக்கு இலவசமா?
ராஜராஜா, உன் மரணமும் ஒரு ரகசியமா? இன்று வரை உன் முடிவு எப்படி என்று சரித்திரக்கார்களுக்கு தெரியவில்லையாமே? உனக்கு என்று ஒரு நினைவு மண்டபம் கூட உன் காலத்திலேயே இல்லையே? என்ன ஆயிற்று? கோவில் கட்டின பிள்ளை ஏன் அப்பாவுக்கு மெமோரியல் எழுப்பவில்லை? தஞ்சாவூரில் இல்லாமல் உடையாளூரில் எங்கோ ஒரு சிறிய நினைவு மண்டபமா? உன் பிள்ளை ராஜேந்திரன் நிறைய கல்லில் விஷயங்கள் பொறித்து வைத்திருந்தும் உன் மறைவு பற்றி சேதி மறைக்கப்பட்டிருக்கிறதே? ஏன்? உடையாளூரில் ஏன் புதைக்கப்பட்டாய்? ப்ரஹதீஸ்வரனை கட்டிய உனக்கு சிவலிங்கம் தான் ஞாபக சின்னமா? பராபரியாக காதில் விழும் செய்தி, இலங்கை ராஜா 5ம் மஹிந்தன் ஒரு பெண்ணை அனுப்பி போரில் நீ வென்றதால் பழி வாங்க உன்னை தீர்த்து கட்டினானாமே? பெரியகோவில் 8வது நிலை கட்டுவதை நீ அருகில் நின்று பார்க்கும்போது உன்னை அவள் கீழே தள்ளி கொன்று விட்டாளாமே? அவளோடு அவ்வளவு நெருக்கமா? நீ 67 வயது வரை வாழ்ந்து இயற்கையாக மறைந்ததாகவும் சொல்கிறார்கள்.. எதப்பா சரி ? அப்படியென்றால் உன் காலத்தில் பெரிய கோவில் கட்டி முடிக்கப் படவில்லையா? உன் பிள்ளை ராஜேந்திர சோழன் கட்டி முடித்தானா? இதனால் தலைநகரை தஞ்சாவூரிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிவிட்டானாம்? உன் மரணத்துக்கு பழி வாங்க கப்பல் படை அனுப்பி மஹிந்தனை சிறைப்படுத்தி அவன் சாகும் வரை சிறையிலாமே? ஐயோ, ராஜராஜா நீ உருவாக்கிய பெரிய கோவிலை நீ கும்பாபிஷேகம் செய்து கண்ணால் பார்க்காமலேயே போய்விட்டாயா?
ப்ரஹதீஸ்வரர் மேல் சொந்த சாஹித்யமாக ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடியதை உன் நினைவாக நானும் பாடிப் பார்த்தேன், கானடா ராகத்தை நான் பாடுவதை நீயும் காணடா ராஜராஜா!
No comments:
Post a Comment