Sunday, April 26, 2020

GEETHA STORIES




கீதை கதைகள் J K SIVAN
 ரெண்டாம் அத்யாயம் 
                                                                   

     இது தான்  ரகசியம்.

ஸ்ரீமத்  பகவத்  கீதையின்  ரெண்டாவது அத்யாயம்  சாங்க்ய  யோகம்.  சாங்க்யா,  ஸங்க்யை எனும்  வார்த்தை   '' எண் '' பற்றியது. யோகம்  என்றால் இணைவது. சேர்வது.  ஆகவே  சாங்க்ய யோகம்  மொத்தத்தில்  எண்களின் சேர்க்கை. அதாவது எண்ணற்ற  மறைவாக உள்ள உண்மைகளின் வெளிப்பாடு.

வைகுண்டத்துக்கு மீண்டும்  செல்கிறோம். அதோ  பாற்கடலில் ஸ்ரீமன் நாராயணனாகிய  கிருஷ்ணன் பள்ளி கொண்டிருப்பதை பார்க்கிறோம். ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஏதோ கேட்போது நமது காதிலும் விழுகிறதே .

''நீங்கள் சொல்லும்  கீதை மஹிமை  விஷயங்கள்
ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறதே. மேலும்  கிருஷ்ண அவதாரம், பகவத் கீதை பற்றி சொல்லுங்கள் ப்ரபோ';

''லக்ஷ்மி , எனது  வாக்கான  பகவத் கீதையின்  முதல் அத்யாயம் பற்றிய மஹிமையை உனக்கு எடுத்துச் சொன்னேன். இப்போது  பகவத் கீதையின்  ரெண்டாவது அத்யாயத்தின்  உன்னதத்தை மஹிமையை எடுத்துச் சொல்கிறேன். கேள்.

பாரத தேசத்தில்  தெற்கு பகுதியில்  பந்தர்பூர்  என்கிற க்ஷேத்ரம் இருக்கிறதே,  அதில்  ஒரு பிராமணனை பற்றியது இது.  அவன் பெயர்  தேவ ஷ்யாமா. என்னிடம் ரொம்ப  பிரேமை உள்ளவன். விடாமல்  யாகங்கள் ஹோமங்கள் பண்ணுவான். ரொம்ப பக்திமான்.  பிராமணர்களை, அதிதிகளை உபசரித்து அவர்களுக்கு திருப்தியாக தான தர்மங்கள் மரியாதைகள் செய்பவன். எல்லா தேவதை களுக்கும் இவ்வாறு பக்தி ஸ்ர  த்தையாக  பூஜைகள்  செய்பவன்.   இவ்வளவு தூரம்  பக்தி சிரத்தையாக செயல் புரிந்தாலும் அவன் மனதில் அமைதி இல்லை. சந்தோஷமே  இல்லை.  என்ன  காரணம்?   நமக்குள்ளே  ஒரு ஆத்மா என்று ஒன்று இருக்கிறதே, அதற்கும்  பரமாத்மாவுக்கும்  என்ன உறவு,  சம்பந்தம். அதை புரிந்து  கொள்ளவேண்டும். இதற்காக அவன் யோகிகள், ரிஷிகள்  முனிவர்களை எல்லாம் நாடி  பணிவிடை  செய்தான்.  உண்மையை எப்படியாவது கண்டறிய  வேண்டும் என்று பலவருஷங்களாக  அலைகிறான்.

ஒருநாள்  எதேச்சையாக, எங்கோ போகும்போது வழியில் ஒரு யோகியை சந்திக்கிறான்.  அவர்  ஒரு  சிறு குன்றின் மேல் சிலை போல் பத்மாசனம்  இட்டு அமர்ந்து  இரு விழிகளும்  நாசி நுனியில்  ஆணி அடித்தது போல் செலுத்தி தியானத்தில் இருந்தார்.  தேவ ஷ்யாமா அவரை உற்று நோக்கினான்.  இந்த  உலக சம்பந்தமே இல்லாமல் பூரண அமைதியாக இருக்கிறார் என்று உணர்ந்தான்.

தேவ ஷ்யாமா அவர் எதிரே நின்றவன்  அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி விட்டு அவர்  பேச காத்திருந்தான்.  

 கண் விழித்த யோகி, ''யார் நீ ? என்ன வேண்டும் உனக்கு?' என்பது போல் அவனை பார்த்தார்.

''குருநாதா, எனக்கு தாங்கள்  எப்படி  மனத்தினுள் அமைதி பெறுவது என்று உபதேசிக்க வேண்டும்.நீங்கள் தான் எனக்கு வழி காட்டவேண்டும் '' என்று வேண்டினான்.

''தேவ ஷ்யாமா  நான் சொல்வதைக் கேள். இங்கிருந்தே வடக்கே சென்றால்  சௌப்பூர்  என்று ஒரு கிராமம் வரும். அங்கே மித்ரவான்  எனும்  ஆடு மேய்ப்பவன்  யார் என்று விசாரித்து   அவனிடம் இந்த கேள்வியைக் கேள்.''

''ஆஹா  அப்படியே  என்று  அவரை பலமுறை  வணங்கி விட்டு  உடனே  சௌப்பூர்  எங்கே  என்று தேடி சென்றான்.  அந்த கிராமத்தின் வடக்கே  ஒரு சிறிய காடு  இருக்கிறது  அங்கே  சென்று விசாரி என்று ஊர் மக்கள் அனுப்பினார்கள். காட்டின் ஓரம் ஒரு ஆறு. அதன் அருகே ஒரு சிறு பாறை. அதன் மேல் மித்ரவான்  அமர்ந்திருப்பதை சிலர் காட்டினார்கள்.

மித்ரவான் அழகாக அமைதியாக  இருந்தான். சுகமான  தென்றல் காற்றில் வீச, அதிலிருந்து வரும் நறுமணத்தை ஸ்வாசித்தவாறு  ஆனந்தமாக உட்கார்ந்திருந்தான்.   எதிரே சில  ஆடுகள்  வயலில் மேய்ந்து கொண்டிருக்க  ஆச்சர்யமாக  சில  ஆடுகள்  அங்கே புலிகள் மற்றும் சில கொடிய மிருகங்கள் அருகே  பயம் சிறிதுமில்லாமல்  உலவிக்கொண்டும்  உட்கார்ந்துகொண்டும் இருந்தன. தேவ ஷ்யாமாவுக்கு தனது  கண்களை நம்பவே முடியவில்லை.  இது அதிசயம் இல்லையா? அவன்  மனதில் இதுவரை காணாத ஒரு அமைதி ஒன்று உணர்ந்தான். மெதுவாக மித்ரவான் அருகே சென்றான்.  எதிரே அமர்ந்தான்.
மித்ரவான்  இயற்கையோடு ஒன்றி  கண்களை மூடி த்யானத்தில் இருந்தான்.

சிறிது நேரத்தில் அவனை கண்விழித்துப் பார்த்த மித்ரவானிடம் '' சுவாமி  தாங்கள் சிறந்த கிருஷ்ண பக்தர் என அறிந்தேன். எனக்கு மனதில்  அமைதி பெற   ஆத்ம  ஞானம் பெற  என்ன வழி?  உபதேசிக்கவேண்டும்''
என்றான். 
'' நீ தான் சொல்லி விட்டாயே  கிருஷ்ண பக்தி என்று அது இருந்தால் எல்லாம் தானாகவே வந்துவிடும்.  வெகுநாட்களுக்கு முன்பு  நான் இந்த காட்டில் என் ஆடுகளோடு  மேய்ச்சலுக்கு வந்தபோது  ஒரு பெரிய  வேங்கைப் புலி இங்கே  வந்தது. அதனிடமிருந்து  தப்ப  நானும் ஆடுகளும் இங்கே வந்தோம்.  என்ன ஆச்சர்யம்  இந்த  ஆற்றின் கரை அருகே வந்ததும் துரத்தி  ஒரு  ஆட்டை கவ்விய அந்த புலி   இங்கு ஆற்றங்கரையில்  வந்ததும்  அதை கடிக்காமல்  ஆட்டை விட்டு  விட்டது.   ஆடு தான் இன்னும் உயிரோடு இருப்பதால் ஆச்சர்யமடைந்து

''ஏ, புலியே,  நான் உன் ஆகாரம் எப்படி என்னை கொல்லாமல்  விட்டாய்?  என்ன  காரணம் சொல் ?'' என்று கேட்டது ஆடு.

''' ஆடே, எனக்கே  ஏன் இப்படி செய்தேன்  என்று  தெரியவில்லை. எனக்கு இங்கே வந்ததும் பசியே போய்விட்டது. உன்னை கொல்லும்  எண்ணமும் இல்லை. ''

'' வாஸ்தவம் புலியே, எனக்கும் உன்னைப்பார்த்ததும் இப்போது உயிர் பிழைத்து ஓடவேண்டும் என்ற பயம் இல்லை. ஏதோ இங்கே மர்மம் இருக்கிறது?  என்ன என்று கண்டுபிடித்தால்  எனக்கும் சொல்லு'''

''ஆம் ,  நீயும் வா  அதோ இருக்கிறானே அவனிடம் கேட்போம் என்று  என்னிடம் இரண்டும்  வந்தன.  இதைப் பார்த்து எனக்கும் ஒரே ஆச்சர்யம்.  பேச்சு வரவே இல்லை.  அங்குமிங்கும் பார்த்தேன். தூரத்தில் ஒரு மரத்தில் ஒரு குரங்கு  இருப்பதை பார்த்து  நாங்கள் அதனிடம்  போனோம்.   நான் குரங்கிடம்    நடந்தை எடுத்துச் சொல்லி  குணம் இப்படி மாற என்ன காரணம் என்று  கேட்டேன்.   குரங்கு  பதில் சொல்லியது.
''நண்பா  எதிரே பார்   ஒரு பழைய  பெரிய கோயில் தெரிகிறதே,  அதில் இருக்கும்  சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தது யார் தெரியுமா,  பிரம்மதேவன்.  வெகுகாலம்  ஒரு முனிவர்  சுகர்மா  என்று பேர்  அவர் அங்கே பூஜை பண்ணி கொண்டு இருந்தார். தியானம் ஜபம் எல்லாம் அங்கேயே தான். இந்த  ஆற்றிலிருந்து ஜலம் , இங்குள்ள  செடிகளில் மலர்கள் எடுத்து அபிஷேகம் பூஜை எல்லாம் தினமும் நடக்கும்.  இங்கிருக்கும் பழங்கள் தான் சிவலிங்கத்துக்கு நைவேத்யம். 
ஒரு துறவி  இங்கே ஒருநாள் வந்தார். சுகர்மா அவருக்கு உபசாரங்கள் செய்து  பழங்கள் எல்லாம் கொடுத்து  அவர் ஓய்வெடுக்கும் போது ''முனி சிரேஷ்டரே இங்கே  பலகாலம்  அடியேன் ஸ்ரீ கிருஷ்ணரை அறிந்துகொள்ள, அனுபவிக்க தியானம் ஜபம்  பூஜை எல்லாம் செய்து  வருகிறேன்.அதன் பலன்  இதோ நீங்கள் வந்துள்ளீர்கள் '' என்றான். 
அந்த முனிவர்   சந்தோஷமடைந்தவராக   அருகே  இருந்த  ஒரு பெரிய  கல்லை எடுத்து அதில் பகவத் கீதையின்  ரெண்டாம் அத்தியாயத்தை எழுதினார். அப்பனே, இதை இந்த கோவிலில் வை.   விடாமல் நீ தினமும்  பாராயணம் செய்து வா. உன் எண்ணம் நிறைவேறும்.''    முனிவரை வணங்கி எழுந்தான் சுகர்மா. அதற்குள்  அவர் மறைந்துவிட்டார். அன்றிலிருந்து  தினமும்  விடாமல்  சுகர்மா  கீதை  ரெண்டாம் அத்தியாயத்தை பாராயணம் செய்தான்.  அவனுக்கு அப்புறம் பசியோ தாகமோ இல்லை.  அந்த சக்தி இங்கே காற்றில் கலந்திருப்பதால் இங்கே யாருக்குமே  பயமோ, பசியோ தாகமோ  இருப்பதில்லை. எங்கும் அமைதியும்,ஆனந்தமும் ஒன்றே தான். 
மித்ரவான் இந்த கதையை சொல்லிவிட்டு,  தேவ ஷ்யாமா, குரங்கு இந்த விஷயத்தை சொன்னதும்  நான், புலி, ஆடு  மூன்று பேரும்  அந்த சிவன் கோவில் சென்றோம். அந்த கோவிலில்  சுவற்றின் கல்லில் கீதை ரெண்டாம் அத்யாயம் எழுதி இருந்தது. தினமும்  அங்கே சென்று படித்து பாராயணம் செய்தோம்.  அதன்பிறகு இங்கு யாவருக்கும்  பசியோ தாகமோ பயமோ  இல்லை. கிருஷ்ணன்  மீது மனம் எளிதாக சென்றது. பாசமும் நேசமும் பக்தியும் கலந்தது.  நீயும்  கீதையின் ரெண்டாம் அத்யாயம் படித்து பாராயணம் செய்து  இந்த அனுபவம்  பெறலாம். கிருஷ்ணன் உன் மனதில்  குடியிருப்பார்.அமைதி தோன்றும்''  என்றான் மித்ரவான்.
''ஆஹா  என்ன  ஆச்சர்யம் என்று  வியந்தாள்  மஹாலக்ஷ்மி  இதை மஹா விஷ்ணுவிடமிருந்து அறிந்தது போல் நாமும்   கீதை ரெண்டாம் அத்யாயம் இப்போது பாராயணம் செய்வோம். கிருஷ்ணனை அனுபவிப்போம்.  யு ட்யூப் லிங்க்  https://youtu.be/C2zmwLhYtUM ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...