திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
53 காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே
ராமாயணம் தெரியாத ஹிந்து இருக்க முடியாது. தெரியவில்லை என்றால் அவன் நிச்சயம் இந்த காலத்து பள்ளிச் சிறுவனாக மார்க்கு வாங்க மட்டும் பள்ளியில் படிப்பவனாக இருக்கலாம்.
சுருக்கமாக சொன்னால், ராமரைப்பற்றிய விஷயம் ராமாயணம். ராமர் தசரதரின் நான்கு பிள்ளைகளில் முதல்வர். யாகத்தில் கிடைத்த பாயசத்தால் உருவானவன். ராவணாதி ராக்ஷஸர்களை அழிக்க ராமன் மனிதனாக பிறந்த மஹா விஷ்ணு அவதாரம். தசரதனின் மூன்று மனைவியரில் ராமன் முதல் மனைவி கோசலை புதல்வன். மூன்றாம் மனைவி கைகேயியின் பிள்ளை பரதன். கைகேயி கேகய நாட்டு இளவரசி, அழகி, நல்லவள். ராமனிடம் அன்பும் பாசமும் கொண்டவள். அவளுக்கு ஒரு அந்தரங்க தாதி மந்தரை.
ஒருநாள் தசரத சக்ரவர்த்தி, ராமனுக்கு அடுத்த அரசனாக முடிசூட்ட ஏற்பாடு செயகிறார். பட்டாபிஷேக நாள் குறித்தாகிவிட்டது. வீடும் நாடும் மகிழ்ந்தது. எங்கும் விழாக்கோலம். அதிகம் மகிழ்ந்தவள் பரதன் தாய் கைகேயி. ராமன் மேல் அவ்வளவு அன்பு.
ஆனால், விதி வேறுவிதமாக வேலை செய்தது. மந்தரை ராமனை வெறுத்தாள்.கெடுமதி கொண்ட கூனி அவள் மெதுவாக கைகேயியின் மதியை கெடுக்கிறாள்.
''இந்தா மந்தரை உனக்கு என்னுடைய விலையுயர்ந்த மாலை?
''எதற்கு அம்மா இந்த பரிசு?
''என் ஆசை மகன் ராமன் அடுத்த ராஜா என்று பட்டாபி ஷேகம் முடிவான சந்தோஷமான செய்தியை எனக்கு முதலில் நீ சொன்னதற்கு''
''நீ பைத்தியம் என்று நிருபித்து விட்டாய் அம்மா. ராமன் அரசனானால் விளைவு என்ன என்று தெரியாதா உனக்கு?
''என்ன உளறுகிறாய், என்ன விளைவு?
'உன் மகன் பரதன் அரசனாக முடியாது மட்டுமல்ல, ராமனுக்கு பணிவிடை செய்யவேண்டும். ஒருவேளை காட்டுக்கு அனுப்பப்பட்டாலும் ஆச்சர்யமில்லை''
''என்ன சொல்கிறாய் மந்தரை, ஒன்றுமே புரியவில்லை. ஏதோ சதி திட்டம் என்பது போல் அல்லவா சொல்கிறாய்''
''அம்மா உண்மை கசக்கும். கெட்டிக்காரியாக இருந்தால் இந்த நேரத்தில் நீ விழித்துக்கொண்டு உன் மகனை காக்க வேண்டும். உன் மகன் கேகய நாட்டுக்கு சென்ற நேரம் பார்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
''மந்தரை....... என்ன சொல்கிறாய். எனக்கு இந்த மாளிகை சுழல்கிறது. உடல் நடுங்குகிறது நீ சொல்வதை கேட்டு''
''எல்லாம் முடிவாகி விட்டாலும் கடைசியாக ஒரே ஒரு வழி உனக்கு இருக்கிறது. முன்பு உனக்கு தசரதன் கொடுத்த 2 வரத்தை இப்போது கேட்டு பெற்றுக் கொள்.. உடனே நிலைமையை சரி செய்.''
''என்ன கேட்கவேண்டும் நான்...சொல் மந்தரை ''
''ராமன் மரவுரி தரித்து, 14 வருஷம் வனவாசம்
செல்லவேண்டும். பரதன் இந்த நாட்டை அரசாள வேண்டும். அவ்வளவே. நேரத்தை வீணாக்காமல் இன்றே வரத்தை பெற்று பரதனை ராஜாவாக்கு. ராமன் காட்டுக்கு போகட்டும்''
விதிவசமாக தசரதன் கொடுத்த வாக்கில் இருந்து மீள முடியாமல் கைகேயி கேட்ட வரத்தை கொடுத்தார். கைகேயி ராமனை அழைக்கிறாள். ராமர் கைகேயி அம்மாவின் மாளிகைக்கு செல்கிறான்.
''அம்மா எனக்கு பட்டாபிஷேகம். உங்களை நமஸ்கரித்து ஆசி வாங்க வந்தேன்.''
''அதற்கு முன், ராமா, உனக்கு உன் தந்தை ஒரு கட்டளை இட்டிருக்கிறார் அதை மதித்து பின் பற்றவேண்டாமா?''
''சொல்லுங்கள் தாயே, உடனே நிறைவேற்றுகிறேன்''
''ராமா, உன் தந்தை உன்னிடம் தெரிவிக்க சொன்னதை தான் நான் சொல்கிறேன். நீ மரவுரி தரித்து உடனே கானகம் செல்லவேண்டும். 14 வருஷங்கள் வனவாசம் முடிந்தபிறகு அயோத்தி திரும்பலாம். ராஜ்யபாரத்தை அரசனாக பரதன் ஏற்று நாட்டை ஆள்வான்.''
ராமன் அதிர்ச்சி அடையவில்லை, சந்தோஷமாக
''அம்மா உங்களை வணங்குகிறேன், தந்தை சொல் மந்திரம் அம்மா எனக்கு. அவர் சொன்னால் என்ன தாய் நீங்கள் சொன்னால் என்ன. இரண்டும் ஒன்றே எனக்கு. அவர் ஆணைப்படியே, நீங்கள் சொல்லிய படி மரவுரி தரித்து 14 வருஷம் கானகம் செல்கிறேன் அம்மா. என் அருமைத் தம்பி நாட்டை ஆளட்டும் அம்மா . என்னை ஆசீர்வதியுங்கள் அம்மா ''
தசரதனிடம் வணங்கி விடைபெற ராமன் செல்கிறான். ஒன்றும் சொல்லமுடியாமல் கண்களில் நீர் வழிய குற்றவாளி போல் தசரதன் பார்க்கிறான்.
''ராமா, நான் கொடுத்த வாக்கினால் செயலிழந்து விட்டேன். நீ எதிர்த்து என் கட்டளையை மீறி இந்த நாட்டின் அரசை கைப்பற்றி இருக்கலாமே. உனக்கு பலம் உண்டே. செயகிறாயா?''
''அப்பா, என் எண்ணம் அதில்லை அப்பா. உங்கள் வாக்கை தெய்வ வாக்காக மதித்து அதில் இருந்து மீறமாட்டேன் அப்பா. பதினான்கு ஆண்டுகள் சீக்கிரமே முடிந்துவிடும் அப்பா. என்னை ஆசிர்வதியுங்கள். பரதன் வேறு நான் வேறு இல்லை அப்பா. அவன் என்னைவிட பொறுப்பாக நாட்டை ஆளும் தகுதி சக்தி கொண்டவன். கவலை விடுங்கள் ''
ராமன் கானகம் செல்கிறான். தசரன் உயிர் துறக்கிறான். சில நாள் கழித்து பரதன் அயோத்தி திரும்பி விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைகிறான். 14 வருஷம் ராமன் வரும்வரை அயோத்தியை விட்டு ஊர் கோடியில் நந்திக்ராமத்தில் தானும் மரவுரி அணிந்து நாட்டை பொறுப்பாக ராமனின் பாதுகை ஆள அதன் பணியாளனாக 14 வருஷம் பணிபுரிகிறான்.ராமன் வருகைக்கு காத்திருக்கிறான்.
இந்த கதையை நான் திடீரென்று நினைவு கொள்ள வில்லை. எனக்கு முன்பு ஒரு புத்திசாலி பெண்மணி திருக்கோளூரில் நினைவு கூர்ந்து ஸ்ரீ ராமானுஜர் கேட்ட ஒரு சிறு கேள்விக்கு 81 கதைகள், நிகழ்வுகள் காரணம் கூறி தான் திருக்கோளூரில் வாசம் செய்ய தகுதி யற்றவள் என்று சொல்கிறாள்.
''ராமானுஜ ஸ்வாமி , தந்தை கூறியதாக சொன்ன தாயின் வார்த்தைக்கு அங்கீகாரம், மதிப்பு தந்து, ஒருவார்த்தை எதிர்த்து பேசாமல், சந்தோஷத்தோடு இதய பூர்வமாக, வளர்த்த தாய் கைகேயியையும்
தந்தையையும் வணங்கி ஸ்ரீ ராமன் 14 வருஷ வனவாசத்தை மேற்கொள்கிறார்.
அதுபோல் இல்லாவிட்டாலும் அதில் கொஞ்சம் அளவாவது நான் தெளிவோடு பெருமாளிடம் நான் என்றாவது பக்தி கொண்டதுண்டா சொல்லுங்கள்? எனக்கு இங்கே வசிக்க என்ன தகுதி? என்கிறாள்.
No comments:
Post a Comment