Tuesday, April 21, 2020

KALAMEGAM


                    கவிக்கோர்  காளமேகம்  J K SIVAN 

நமது நாட்டில்  குசும்புக்கு  எப்போதும்  பஞ்சமே  இல்லை.  அந்த காலத்தில்  சிலர்  இப்படி இருந்தார்கள்.
ஒரே நாள்  இரவில்  படிக்காத மடப்பள்ளி சமையல் ஆசாமி  வரதன் திருவானைக்கா  ஆலய மண்டபத்தில் சரஸ்வதி தேவி அருளால்  அருள்கவி ஆனான்.  காளமேகப்புலவர் நமக்கு கிடைத்தார். அவரது வாக் சாதுர்யம், புலமை சொல்லில் அடங்காது.   எத்தனையோ சம்பவங்களில்  அவர்  சாதுர்யம்  சுடர் விட்டு பிராகாசிக்கிறது. இதோ ஒன்று.

ஒவ்வொரு ஊராக சென்று தனது பாண்டித்யத்தை  அந்தந்த  ஊர்  ராஜாக்கள், சிற்றரசர்கள்,பிரபுக்களிடம்  தெரிவித்து பரிசுகள் பெற்று, பலரை போட்டியில் வென்று புகழ் பெற்றவர் காளமேகம். இவரது புலமையைக் கண்டு வியந்தோர் பலர்.  பொறாமை கொண்ட கவிஞர்கள், புலவர்களும் அநேகம்.  அவரை எப்படியாவது மடக்கி  கஷ்டமான கவி இயற்றவைத்து  முடியாமல் அவர்  தோல்வியுறச் செய்ய  எண்ணற்ற  பிரயத்தனங்கள். ஒன்றும் பலனளிக்கவில்லை.

ஒரு  ஊர்  சிற்றரசன்  சபைக்கு  காளமேகம் அழைக்கப்பட்டு கௌரவிக்கப் படுகிறார்.  அங்கிருந்த புலவர்களில் ஒருவன் அவரை போட்டிக்கு அழைக்கிறான்.  அரசன் எதிரில் காளமேகத்தை மடக்க கேள்வி கேட்கிறான்

''புலவரே உங்களுக்கு  காளமேகப் புலவரிடம் என்ன கேட்க வேண்டுமோ கேளுங்கள் அவர் பதிலளிக்கட்டும் ' என்றான் சிற்றரசன்.

புலவர்  சபையோரை  அரசனை வணங்கி  காளமேகத்தை  ஏற  இறங்க பார்த்தார்.

''ஓஹோ  நீர் தான் காளமேகமோ.  நீர்  பெரிய  புலவர் என்று  காற்றில் சேதி பரவுகிறதே.  நான் உம்மை ஒரு கேள்வி கேட்கலாமா? பதில் சொல்ல முடியுமா?''
''கேளுங்கள் முயற்சி செய்கிறேன்''
''உம்மால் இக்கணமே  முருகனை புகழ்ந்து பாட முடியுமா?
''ஆஹா  தமிழ் கடவுள் முருகனை வணங்கி அவன் அருளால் பாடுகிறேன்,  வெளிலிருந்து  துவங்கவா, மயிலிலிருந்து துவங்கட்டுமா? சொல்லுங்கள்''
''ரெண்டும் வேண்டாமய்யா.  செருப்பில் தொடங்கி  விளக்குமாறில்  முடிகிறமாதிரி பாடும் ''
''தங்கள் உத்தரவுப்படியே  ஆகட்டும்''
புலவர்  குஸும்பை  காளமேகம் கவனிக்க தவறவில்லை. மனது வாடியது.  முருகனை  தமிழ் தெய்வத்தை, வெற்றிவேல் முருகனை இப்படியா அவமதிப்பது.  செருப்பில்  ஆரம்பித்து  விளக்குமாறில்  முடியவேண்டுமாம்... என்ன அக்கிரமம் இது. இருக்கட்டும். அவன் அருளால் அதை அழகாக பாடி முடிக்கிறேன்.
எல்லோரையும் வணங்கிவிட்டு  கண்களை மூடி  முருகனை தியானித்து  காளமேகம் உரத்த குரலில் பாட ஆரம்பித்தார். கேளுங்கள்.

*"செருப்புக்கு வீரா்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல – மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே"*

அர்த்தம்  சொன்னால்  நன்றாக விளங்கும்:   செரு :  யுத்தகளம் . புக்கு:  புகுந்து.  செருப்புக்கு:  போர்க்களம் புகுந்து அசுரர்களை  கொன்று வென்று ஜெயிக்கும் தேவசேனாபதி முருகனை
அப்படியே  வாரி அனைத்து கொஞ்ச  உள்ளம் துடிக்கிறது.
தண் தேன் :  குளிா்ந்த தேன் நிறைந்த தாமரை மலா் மேல் வீற்றிருக்கும்   ஏ,   வண்டே., அந்த அழகன் முருகன் இருக்கும் இடத்தை எனக்கு  விளக்கமாக  சொல்ளும்படியாக  ''விளக்குமாறு ''உன்னைக் கேட்கிறேன்.....என்கிறார்.

பலத்த கரகோஷத்தில் சபை மெச்ச, கேள்வி கேட்ட புலவன் அவமதிப்புக்குள்ளாகி  சபையை விட்டுமல்ல, அந்த  ஊரை விட்டே  அகன்றான்.

மற்றுமொரு  சந்தர்ப்பத்தில் ஒரு புலவன் கேட்ட கேள்வி என்ன தெரியுமா ? 


''காளமேக கவிராயரே ,  புரியாத வார்த்தை அலங்காரத்தால்  ககர வரிசையில் ஒரு கவி உடனே இயற்ற உம்மால்  முடியுமா "

''தேவி அருளால்  முயற்சி செய்கிறேன்.  கவி காளமேகம்  எல்லோரையும் வணங்கிவிட்டு,  வாக்தேவியை
 மனதில் தியானித்து  பாடுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

இப்போதுள்ள  சில  கவிராயர்களின்  உளறல் போல்  இருக்கிறதா? மேலோட்டமாக  பார்த்தால் அப்படியே தான். 
 
சொற்களை பதம் பிரித்து பார்த்தால்  பலாச்சக்கைக்குள்  தேன் சுவைப்  பலா  வெளிவரும்: 

காக்கைக்கு ஆகா கூகை – காகத்திற்கு  என்றும்   கூகை  எனும்  ஆந்தையை  வெல்ல முடியாது.
கூகைக்கு ஆகா காக்கை - கூகைக்கும்  அப்படித்தான்.  சில நேரங்களில்  அதனால்  காகத்தை வெல்ல முடியாது.
கோக்கு கூ காக்கைக்கு – அரசன் தன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பதற்கு
கொக்கொக்க – கொக்கைப் போல
கைக்கைக்கு – பகையை எதிர்த்து
காக்கைக்கு:   நாட்டைக் காப்பதற்கு
கைக்கு ஐக்கு ஆகா – சிறந்த அரசனாலும் முடியாமல் போய்விடும்.

காகத்தினால் கூகையை இரவில் வெல்ல  முடியாது. ராத்திரி  காகத்திற்கு கண் தெரியாது. கூகையால்
காகத்தைப் பகலில் வெல்ல முடியாது ஏனென்றால் கூகைக்குப் பகலில் கண்தெரியாது. அதே போல, ஓர் அரசன் தன் நாட்டைப் பகைவரிடமிருந்து காக்கவேண்டுமென்றால் ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். சாதகமான சமயம் வரும்வரை பொறுத்தி


ருக்க வேண்டும். இல்லையென்றால், பலம்பொருந்திய அரசனாலும்  எதிரி, பகைவனை  எதிர்த்துத் தன் நாட்டைக் காக்க முடியாமல் போய்விடும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...